திரையிசையில் இராகங்கள் - கல்யாணி

கல்யாணி   மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று.  கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது.  ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை மேளகர்த்தா இராகம் அல்லது ஜனன இராகம் என்று அழைப்பார்கள். நாம் சென்ற வாரம் பார்த்த மோகனம் அப்படியல்ல அது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது.  இராகங்களின் வரிசையில் கல்யாணி 65-வது மேளகர்த்தா இராகம்.  இதன் ஏறு/இறங்கு ஸ்வர வரிசைகள்

ஆரோகணம் : ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ

அவரோகணம் : ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ

கல்யாணியின் ஸ்வரங்களை பாடகி சாருலதா மணி பாடக் கேட்கலாம்.
[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/04/kalyani.mp3|titles=kalyani]

Continue reading "திரையிசையில் இராகங்கள் - கல்யாணி"

திரையிசையில் இராகங்கள் - மத்யமாவதி

திரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது.   22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம் பார்த்த மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இந்த இராகத்தின் ஏறு/இறங்கு வரிசைகள் :

ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ
அவரோகணம் : ஸ நி2 ப ம1 ரி2 ஸ
Continue reading "திரையிசையில் இராகங்கள் - மத்யமாவதி"

திரையிசையில் இராகங்கள் - ஹிந்தோளம்

ஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு;

ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ
அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ

Continue reading "திரையிசையில் இராகங்கள் - ஹிந்தோளம்"

திரையிசையில் இராகங்கள் - மோகனம்

மோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும்.  சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு முகங்களில் (ஆரோகண அவரோகணத்தில்) கொண்டது என்று சொன்னோம். அப்படிப்பட்ட இராகங்களுக்கு சம்பூர்ணராகம் என்று பெயர். மோகனம் ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது. ஐந்து ஸ்வரங்களைக்கொண்ட இராகங்களை ஔடவ இராகம் என்று அழைப்பார்கள்.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

மோகனத்தின் வடிவத்தைப் பாடுகிறார் திரையிசைப் பாடகி கே. சித்ரா.

[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/01/mohanam_swaram.mp3|titles=mohanam_swaram]

மோகனம் ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் ராக் தூப் என்று அழைக்கப்படுகிறது.  எந்த வேளைகளிலும் பாடுவதற்கு ஏற்றது மோகன இராகம். Continue reading "திரையிசையில் இராகங்கள் - மோகனம்"

திரையிசையில் இராகங்கள் - மாயாமாளவ கௌவ்ள

இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது.  மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு கர்நாடக இசையோ அராபிய இசையோ உடனடியாக இரசிக்கும்படியாக இருப்பதில்லை.  காரணம் இரண்டு வேறு செவ்வியல் இசைகளுக்குகிடையே ஒலியிலான அடிப்படை வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் குறித்து பின்னர் ஒரு நாள் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட வகையான இசையை இரசிக்க ஏற்ற உடற்கூறுகளுடன் நாம் பிறப்பதில்லை.  எனவேதான் பள்ளியில் இசை கற்கும் என் மகனுக்கு மேற்கத்திய இசை கர்நாடக இசையைக் காட்டிலும் விருப்பமானதாக இருக்கிறது. Continue reading "திரையிசையில் இராகங்கள் - மாயாமாளவ கௌவ்ள"

திரையில் கர்நாடக இசை இராகங்கள்

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்ற தொடரை நிறைவு செய்தேன். பதினெட்டு பாகங்களாக ஒலிபரப்பப்பட்ட இந்தத் தொடர் ஏற்கனவே நான் வலைப்பதிவில் எழுதியவற்றைச் சற்றே விரிவுபடுத்தி வழங்கப்பட்டது. ஜாஸ் இசையைப் பற்றி நம்மவர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்காது என்ற காரணத்தால் நிறைய விளக்கங்களையும் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு பாடல்களை மட்டுமே ஒவ்வொரு பகுதியிலும் வழங்கினேன். இம்முறை மாறாக அதிகம் பாடல்களையும் மிகக் குறைந்த அளவில் இசைக்குறிப்புகளையும் விளக்கங்களையும் தரவிருக்கிறேன். இதற்கு இன்னொரு (முக்கிய) காரணமும் உண்டு. நான் கர்நாடக இசையை முறையாகக் கற்கவில்லை. எனவே இதைப் பற்றி அதிகம் பேச என்னிடம் சரக்கில்லை. எனவே நிகழ்ச்சியில் பேச்சைக் குறைத்துக் கொண்டு பாடல்களை அதிகம் தரவிருக்கிறேன்.

இப்படிச் சொல்வதால் நான் ஜாஸ் இசையை முறையாகக் கற்றுக்கொண்டவன் என்றோ அல்லது அதில் கரைகண்டவன் எனவே அதிகம் பேசினேன் என்றோ அர்த்தமில்லை.  ஒரு பழைய படத்தில் சோவை நாகேஷ் "நீ அமெரிக்கா போயிருக்கிறாயா?" என்று கேட்பார். உடனே சோ "நீ போயிருக்கிறாயா?" என்று திருப்பிப் கேட்பார். நாகேஷ் இல்லை என்று சொல்ல உடனே அடுத்த நொடியில் "அப்ப நான் போயிருக்கேன்" என்பார்.  இதைப் போலத்தான் இங்கே மற்றவர்களுக்கு ஜாஸ் அடிப்படைகளைப் பற்றியோ, வரலாறோ தெரியாது என்பதால் நானே ஆலையில்லா ஊரூக்கான இலுப்பைப்பூ சர்க்கரையானேன்.  மற்றபடி இங்கே கர்நாடக இசையில் கரைகண்ட நண்பர்கள் நிறைய இருக்க அடக்கி வாசிப்பது நல்லது.

நான் ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது கற்றுக் கொள்வதில் ஒரு புதிய உத்தியைக் கைகொள்ளத் தொடங்கினேன். ஏதாவது ஒன்று நமக்குத் தெரியாது ஆனால் கற்றுக் கொள்ள விருப்பம் இருக்கிறது அல்லது அவசியம் கற்றுக் கொண்டாக வேண்டும் என்று வந்தால் உடனடியாக அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதாக அறிவித்துவிடுவேன்.  இது முதன் முதல் நான் ஆராய்ச்சிக்கு மேற்கொண்ட  Nonlinear Optics என்ற துறையில் தொடங்கியது. ஆய்வகத்தில் முதல் வருட மாணவனாக இருந்த நான் என் பேராசிரியர், ஐந்தாம் வருட மூத்தவர், இன்னும் பி.ஹெச்.டி முடித்து ரிசர்ச் அசோஸியேட்டாக இருந்தவர் எல்லாரையும் சனிக்கிழமைகளில் உட்கார வைத்து பாடம் எடுத்தேன். (காரணம் என்னைப் போலவே இவர்களும் அப்பொழுதுதான் முதன்முறையாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள்). நமக்கு ஒன்றுமே தெரியாது என்று தொடங்கும்பொழுது எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தப்பாகக் கூடச் சொல்லலாம். பேசுபவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் கேட்பவர்கள் அவனிடம் குறைகாண்பதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்கள் தவறைக் கண்டுபிடித்துச் சொன்னவுடன் "ஆமாம், நல்லது. நான் தப்பாப் புரிஞ்சுகிட்டேன்" என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மாறாக எல்லாம் தெரியும் என்ற பாவனையைக் காட்டி பயிற்றுவிக்கத் தொடங்கினால் நம் தவறை பிறர் சொல்லும்பொழுது பூசி மொழுகத்தான் முயற்சிப்போம். அதுவே நாம் கற்றுக் கொள்வதற்குத் தடையாக மாறிவிடும்.  இந்த உத்தி LaTeX, C++, Linux, என்று தொடங்கி ஃபோரம்ஹப்பில் தமிழ் செய்யுள் இலக்கணம், இன்னும் ஜாஸ் அடிப்படை என்று பல விஷயங்களிலும் பயன்பட்டிருக்கிறது.  அதே உத்திதான் இங்கும் ஒன்றுமே தெரியாத நான் வியாக்யானம் செய்ய வந்திருக்கிறேன்.

பெரும்பாலான நேரங்களில் நான் எதை எழுதத் தொடங்கினாலும் எனக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களாகவே வரித்துக் கொண்டு என்னைக் கிழித்துக் குதறியெடுக்கிறார்கள்.  (ஒருவகையில் நானே கூட இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.)  இந்தத் தொடரில் கட்டாயமாக கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. என் மனதுக்குப் பிடித்த பல பாடல்களை, குறிப்பாக இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களை, இந்தத் தொடரில் பிறரிடம் முன்வைக்க முடியும் அதை வைத்து கொஞ்சம் கதைக்கவும் முடியும். வாராவாரம் வானொலியில் போடும் பாடல்களை இங்கே வலைப்பதிவிலும் எழுத உத்தேசம்.  வாரந்தோறும் ஒரு இராகத்தை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அமைந்த மூன்று அல்லது நான்கு பாடல்களைப் பற்றி பேச உத்தேசம்.  இராகங்களைத் தெரிந்தெடுக்க எந்தவிதமான வரிசையையும் நான் மேற்கொள்ளப் போவதில்லை. வானொலியில் ஒலிபரப்புவதற்கு மேலதிகமாக அந்த இராகத்தின் அடிப்படையில் அமைந்த பிற பாடல்களையும் தெரிந்த அளவுக்கு இங்கே பட்டியலிட உத்தேசம்.  இது இராகத்தைக் குறித்த கூடுதல் புரிதலுக்கு உதவக்கூடும்.

இந்தத் தொடரில் கர்நாடக இசையின் அடிப்படைகளைப் பற்றி விவாதிக்கவும் (எனக்கு) விளக்கவும் நண்பர்களை அழைக்கிறேன்.  அப்புறம் வழக்கமான இளையராஜா-ரஹ்மான் சண்டையையும் அவ்வப்போது போடலாம்.  ஆனால் இதற்கு நான் எடுத்துவரப் போவது அட்டைக்கத்திதான் எனவே உங்களுக்கு அட்டைக்கத்தியா பட்டாக்கத்தியா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நாளை இரவு மாயாமாளவ கௌவ்ளை