எந்த மின்விளக்கை வாங்கலாம்?

நான் Solid State Lighting,  (LED, Organic LED), Lighting, Photometry துறைகளில் ஆராய்ச்சியாளன். எனவே என் நண்பர்கள் பலரும் என்னிடம் என்ன மாதிரியான மின்சார விளக்குகளை வீடுகளுக்கு வாங்கலாம் என்று கேட்கிறார்கள்.  இன்று நண்பர் இலவசக் கொத்தனார்  இந்தச் சுட்டியைக் காட்டி இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்றார். எனவே, அந்த உந்துதலில்:

முதலில் தன்னிலை விளக்கங்கள் சில: 1. நான் பன்னாட்டு   ஒளியூட்டல் கழகத்திற்கான ( International Commission on Illumination, CIE)  கனேடிய தேசியக் குழுவின் தலைவராகச் சென்ற வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு  பொறுப்பு வகிக்கிறேன். ஒளியூட்டல் துறை பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கியது ( Incandescent, Fluorescent, LED...) எனவே பொதுவில் பல்வேறு தொழில்நுட்பங்களின் சாதக பாதகங்களைப் பொதுவில் விவாதிக்கவும் ஒரு நுட்பத்தைத் தாழ்த்திச் சொல்லவும் தயக்கம்.  குறிப்பாக தற்சமயம் மிகவும் சூடாக விவாதிக்கப்படும் கருத்துகள் சில :  1. மின்னிழை பல்புகளைத் (Incandescent Bulbs)  தடைசெய்ய வேண்டுமா? 2. குறு-மின்னொளிர் விளக்குகள் (Compact Fluorescent Lamps) ஆபத்தானவையா? 3-ஒளியுமிழ் இருவாய் (Light Emitting Diode, LED) விளக்குகளில் அதீத ஊதா/நீலக் கதிர்களால் நீண்டகால ஆபத்துகள் உண்டா? இவற்றையெல்லாம் குறித்த விவாதிக்க கொஞ்சம் ஆழமாக அறிவியலில் இறங்கவேண்டும். அதற்கு இப்பொழுது நேரமில்லை.  என்வே, சுருக்கமாக சில (இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்);

0. கட்டாயம் மின்னிழை விளக்குகளைத் தவிருங்கள்.  அவை பயன்படுத்தும் மின்சக்தியில் 5-8% மட்டுமே ஒளியாக வெளிவருகிறது. 90%-க்குமேல் விரயம்.

1. கோவை செல்வன் எழுதியிருப்பவை பெரும்பாலும் சரி.

2. சி.எஃப்.எல் உடைந்தால் அதிலிருந்து சிந்தும் பாதரசத்தை எப்படிச் சுத்தம் செய்வது என்பது குறித்த எங்க ஊர் விளக்கம் இங்கே.

3. பொதுவாக சில நொடிகளே பயன்படுத்தப்படும் இடங்களில் (கராஜ், இல்லக்கழிவறை) CFL ஆல் பெரிதும் சக்தி சேமிப்பு கிடைக்காது.

4.   CFL பொதுவில் Dimmer களுடன் பயன்படுத்த ஏற்றனவல்ல.

5. 80%-க்கும் மேலான CFL களில் அவற்றின் ஆயுள் மிகைப்படுத்தி விளம்பரிக்கப்படுகின்றது. Philips, Osram, GE போன்ற முதல்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் பொதுவில் நம்பகமானவை.

6. CFL விரைவாகக் காலாவதியாகிவரும் ஒரு நுட்பம், இவற்றுக்கு அரசாங்க மானியம் தருவது எந்த வகையிலும் நியாமானதல்ல.

இனி, LED   குறித்த சில தகவல்கள்:

1. LED வருங்காலத்திற்கான நுட்பம். 2030 வாக்கில் பொதுப்பயனில் LED-கள்தான் காணப்படும் என அமெரிக்க சத்தி அமைச்சகம் கணிக்கிறது.  இதன்மூலம் ஒளியூட்டலின் சக்தி தேவையை 70% குறைக்கலாம். (சூடேற்றத் தடுப்பு, கார்பன் சேமிப்பு, இத்யாதி...)

(அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கட்டிடங்களில் குளிரூட்டல்/சூடாக்கல் தவிர்த்த இரண்டாவது பெரிய சக்திப்பயன்பாடு ஒளியூட்டலுக்குத்தான். இது பலருக்கும் தெரியாது.  கட்டிடங்களில் சாராசரியாக 30%  சக்தி விளக்குகளுக்காகவே செலவழிக்கப்படுகிறது.)

cree_LED2. இந்த வருடத்தின் துவக்கத்தில் முதன்முறையாக என்னுடைய தனிக்கணிப்பின்படி LED-கள் பொருளாதார ரீதியாக முதன்மைத் தீர்வாக முன்னேறிவிட்டன.  இதற்கு கடந்த ஐந்து வருடங்களாக பல்கலைக்கழகங்களில் நடந்துவரும் உன்னத ஆய்வுகளும், CREE, Philips, Osram, Nichia, Seoul Semi போன்ற முதன்மை நிறுவனங்களின் கடுமையான போட்டியும் காரணம்.  முதன்முறையாக $10-க்குள்ளாக LED  இந்தவருடம் சந்தைக்கு வந்தது. இனியும் இவை விலை அதிகம் என்று சொல்ல வாய்ப்பில்லை.

3. LED,  CFL பல்புகளைப் போல பத்து மடங்கு ஆயுள் கொண்டவை.  முதன்முறையாக ஒரு நிறுவனம் CREE தன் தயாரிப்புக்கு 10 வருட உத்தரவாதம் தருகிறது. (சென்ற பத்தியில் இருக்கும் $10 பல்பு).  மின்விளக்குகளின் வரலாற்றில் 10 வருட உத்தரவாதம் இதுவே முதன்முறை.

4. சக்தி சேமிப்பு.  சூழியல் காரணிகள் இவற்றைக் கணக்கில் கொண்டால் இப்பொழுது தயக்கமில்லாமல் இவற்றை வாங்கலாம்.

5. இருந்தும், ஆரம்பச் செலவு இவற்றில் அதிகம் நல்ல CFL பல்பை $2க்குள் வாங்கலாம். எனவே LED அதைவிட ஐந்து மடங்கு விலை அதிகம், ஆனால், சக்தி சேமிப்பு, ஆயுள் இவற்றைக் கணக்கில் கொண்டால் ஆயுட்கால செலவு (Total Cost of Ownership) குறைவானது.

6.  மட்டமான தயாரிப்புகள் எல்லாத் துறைகளிலும் உண்டு.  இதில் LED விலக்கல்ல. என்னுடைய ஆய்வகத்தில் பரவலாகக் கிடைக்கும்  LED தயாரிப்புகளைப் பாரபட்சமில்லாமல் சோதித்து அதன் முடிவுகளைப் பலரும் அறியப் பொதுவில் வெளியிட்டு வருகிறோம். கனேடிய அராசங்க மானியம் பெற்ற இந்தத் திட்டத்தில் எந்த விதமான பரிந்துரைகளும் கிடையாது. இதில் தயாரிப்பாளர் விளம்பரிப்பது என்ன உண்மையில் அதன் தரம் என்ன என்பதுதான் வெளியிடப்படுகிறது. These reports are technical.  No simple recommendations are made.

7.  LED பிற கட்டுப்படுத்திகளுடன் மிக அற்புதமாகச் செயல்படும். Dimmer, Occupancy Sensor, Timer, Colour Temperature Control போன்றவை மிக அற்புதமாக இயங்கும்.  எனவே இது வருங்காலத்திற்கான நுட்பம். இதில் செலவிடப்படும் உங்கள் காசு விணாகாது.

8.  LED-களில் இருக்கும் அதிகமான நீல/ஊதா நிறங்களால் நெடுங்காலப் பாதிப்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்துவருகிறது. ஆனால் இது (சராசரி பயன்பாடுகளில்) தேவையற்ற ஒன்று என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. எனினும், இன்னும் மேலதிகமான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

9. சூழியல் நுட்பத்தில் Cradle-to-grave Environmental Footprint என்று ஒரு கணக்கீடு உண்டு. ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆகும் சக்தி மற்றும் பயன்பாட்டுச் சக்திச்செலவு  மாத்திரமல்ல, துணைப்பொருட்களின் உற்பத்தி, ஆலைகளிலிருந்து பயனர்களைச் சென்றடைய ஆகும் சக்தி, இறுதியாகக் கழிவுப் பொருட்களின் மறுபயன்பாடு அல்லது விரயம் போன்ற அனைத்தும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்தக் கணக்கீட்டில் LED நுட்பம் சூழியல் ரீதியாக மிகவும் நல்ல தெரிவு என்று பல்வேறு ஆய்வுகள் முடிவுகூறுகின்றன.

இது குறித்து கேள்விகள் இருந்தால் பதிலளிக்க முயல்கிறேன். ஆனால் வரும் சில நாட்களில் நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றுகிறேன். எனவே, பதில்களை உடனுக்குடன் எழுத முடியாது.  நீங்கள் மின்னஞ்சல் இணைத்திருந்தால் (பொதுவில் தெரியாது) அல்லது ட்விட்டர் பெயர் சொன்னால்.  நான் பதிலிட்டவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

ஜொள்ளெனப்படுவது யாதெனின்

பலருக்கும் பாவ்லோவ் நாய் சோதனைபற்றி தெரிந்திருக்கும். நாய்களில் உணவுக்கு எச்சில் ஊறலெடுப்பதன் மேலாக உணவைக் கொண்டுவரும் ஆளைப் பார்த்தவுடனேயே ஜொள்விடத் துவங்குவதை பாவ்லோவ் கண்டறிந்தார். இதேபோல மனிதனுக்கும் எச்சில் ஊறுகிறதா என்று இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சோதித்திருக்கிறார்கள்.

... salivas were collected over 5 min in response to olfactory, mechanical, gustatory, visual (images of foods only) stimuli and compared to unstimulated period. The images shown to subjects included pizza, hot dogs, Thai curry, stir fry, strawberries, cake, lemons, pasta bake, Indian curry, roast beef, sweet trolley and roast chicken. Stimuli were randomized but the gustatory stimuli was always given last as citric acid can have a lasting taste. These experiments were repeated five times, before and after lunch, on two subjects.

முடிவு: மனிதன் சாப்பாட்டின் படத்தைப் பார்த்து ஜொள்விடுவதில்லை.

In agreement with several studies ...there was no statistical increase in... salivary flow rates in response to visual images of food. By using a computer screen to present the images rather than using food, any olfactory component was removed. For the stimuli known to cause secretion, there was no effect of hunger (assessed by using a before-and-after lunch collection) nor was there any effect on the resting saliva flow rates.

ஆனால், வேறொரு விஷயத்திற்கு படத்தைக் கூடப் பார்க்கமலேயே ஜொள்விடுவது மனிதனுக்கு மாத்திரம்தான் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.

நன்றி: Improbable Research

உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது

மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 

Continue reading "உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது"

Photonics in India

Photonics in India
Photonics in India

டிசம்பர் மாத Photonics Spectra சஞ்சிகை Photonics Is Heating Up in Indiaஎன்று ஒரு முகப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எந்த புண்ணியவதியோ தெரியவில்லை, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார்.  கட்டுரையில் கொச்சி பல்கலைக்கழகம், பெங்களூர் ராமன் ஆய்வுக்கூடம், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் இவற்றைப் பற்றி மாத்திரமே எழுதியிருக்கிறார்.

உண்மையில் இவற்றைத் தாண்டி பல விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன. (நான் இந்தியாவை விட்டு அயலகத்தில் குடியேறி பதினைந்து வருடங்களாகிவிட்டன, எனவே இவற்றில் பல விடுபட்டிருக்கலாம்).   முதலில் இந்தியாவில் இந்தத் துறை சார்ந்த மேற்படிப்பு ஐஐடியில் பல வருடங்களாக உண்டு (M.Tech in Optoelectronics), தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 1986-87ல் M.Tech Laser Technology படிப்பை அறிமுகப்படுத்தியது. பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் (சி.வி.ராமன் அறிவுப்பரம்பரை) காலங்காலமாக Optics, Lasers, Spectroscopy, Photonics, Optical metrology, Quantum Optics, Nonlinear Optics என்று பல துறைகளில் முதல்தர ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  ஐஐடி கான்பூரிலும் தொன்னூறுகளில் தொடங்கி M.Tech  Lasers படிப்பு உண்டு.  அதனுடன் பல முதல் தர ஆய்வுக்குழுக்களும் உண்டு. Continue reading "Photonics in India"

அறிவியல் திருவிழா

நேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட முடிந்தது, நேற்று நாள் முழுவதும் பையன்களுடனும் மனைவியுடனும் முழுவதுமாகக் களிக்க முடிந்தது. Continue reading "அறிவியல் திருவிழா"

அன்றாட அறிவியல்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது). Continue reading "அன்றாட அறிவியல்"

மனித மூளை : அமைப்பும் செயற்பாடும்

அறிவுத் தேட்டத்தின் உச்சம் மனிதன் தன்னைக் குறித்தே அறிந்துகொள்வது. மூளையின் செய்ற்பாடுகள் குறித்த புரிதல்கள் மிகவும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றன. மூளையின் அமைப்பை அதன் செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்வது மிக முக்கியமான உத்தி. பேரா. விலயனூர் ராமச்சந்திரன் இந்தத் துறையின் மிக முக்கியமான நிபுணர்களில் ஒருவர். நிழலில் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்; அதே போல நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் பல அற்புதங்களைப் பற்றி நாம் ஒருகணமும் சிந்திப்பதில்லை. உதாரணமாக கண் பார்ப்பதைக் கையால் பிடிப்பது. மிகச் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்ட இந்த திறமையை நீங்கள் ஒரு நாள் இழக்கிறீர்கள் என்றால் அன்றைய தினம் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

குறைப்பாடுள்ள மூளையின் அமைப்பையும் அது இழந்துபோன செயற்பாடுகளையும் குறித்த ராமச்சந்திரனின் ஆராய்ச்சி மனித மூளையின் செயற்பாடுகளை நமக்கு விளக்குகிறது. இவரது Phantoms in the Brain : Probing the Mysteries of the Human Mind, மற்றும் A Brief Tour of Human Consciousness: From Impostor Poodles to Purple Numbers இரண்டு புத்தகங்களும் மிக அற்புதமான, எளிய நடையில் எழுதப்பட்ட, மிக முக்கியமான புத்தகங்கள். மனித மூளையின் செயற்பாட்டைப் பற்றிய ஆர்வம் இருப்பவர்கள் தவறாது படிக்கவேண்டியது A Brief Tour... புத்தகம். ராமச்சந்திரன் ஒரு அற்புதமான ஆசிரியரும்கூட. கவர்ந்திழுக்கும் நடையில் மிகச் சிக்கலான அவரது ஆய்வுகளை எளிமைப்படுத்தி விளக்குகிறார்.

எச்சரிக்கை:
ராமச்சந்திரனின் ஆய்வுகள் மனித மனத்தின் செயற்பாடுகளை தத்துவார்த்த ரீதியிலும், கவர்ச்சியுடனும் (Romantic approach) அனுகுபவர்களுக்கு அதிர்ச்சிகளைத் தரக்கூடும். பல தத்துவக் கேள்விகளைக் கட்டுடைத்து படிப்படியான அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி மனிதனின் செயற்பாடுகளை முழுமையான அறிவியல் கண்ணோட்டத்தில் அறிய முயலும் காலம் துவங்கிவிட்டது. ஜல்லியடிகாரர்களுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.

பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம் - 2008

loreal_2008.jpg
அறிவியலில் சிறப்பான சாதனைகள் புரிந்த பெண் விஞ்ஞானிகளைக் கௌரவிக்கும் முகமாக லேரெல் நிறுவனத்தின் பணவுதவியுடன் வழங்கப்படும் யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன (இது குறித்த என் சென்ற வருடத்திய பதிவு இங்கே).

ஆசியா : பேராசிரியர் லிஹாத் அல்-கஸாலி (Prof. Lihadh Al-Gazali) ஐக்கிய அரபுக் குடியரசு

பேரா. அல்-கஸாலி மரபுவழி நோய்பரவல் குறித்த அவரது ஆராய்ச்சிக்காகப் பரிசு பெருகிறார். நோய்சார் மரபியல் துறை மரபு ரீதியாத் தொடரும் வியாதிகளைப் பற்றியது. இது நோய்களுக்கும் அவற்றைத் தாங்கி சந்ததியாகப் பரவும் மரபணுக்களுக்குமான தொடர்பை ஆராய்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் நெருங்கிய குடும்பங்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்வது மிகப் பரவலான வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் மரபணுக்களால் சந்ததி தோறும் தொடரும் நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. உதடு மற்றும் காதுகளில் வடிவச்சிதைவு நோய் இந்தப் பகுதியில் மிக அதிகம், இதைப்போலவே திராணியற்ற எலும்புகளும் பல சந்ததிகளாகத் தொடர்கின்றன. ஒருபுறம் நோய்ச்செல்களை நுண்ணோக்கிமூலம் ஆராயும் செல்மரபியல் (Cytogenetics) உத்திகளின்மூலம் அறிவியல் ஆய்வுகளை முன்னெடுக்கும் அல்-கஸாலி மறுபுறம் கடந்த பதினேழு வருடங்களாக சமூகத்தில் மரபு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார். Continue reading "பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம் - 2008"

மூளைச் செயலிழப்பு - மருத்துவரின் அனுபவப் பகிர்வு

அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள இயலாது என்று கூச்சலிடுகிறார்கள். காதலையும், காமத்தையும், கருணையையும், வீரத்தையும் ஹார்மோன்களின் கணக்கீட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது இவர்கள் தரப்ப்பு வாதம். ஆனால் நவீன அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக இதனை வெற்றி கொண்டு வருகிறது. இதற்கு அறிவியலுக்குப் பெரிதும் துணை நிற்பது குறைபாடுள்ள மூளையின் அமைப்பும் செயற்பாடும். ஸ்கீட்ஸோஃபெர்னியா, பார்க்கின்ஸன், மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற செயலிழப்புகளைக் கொண்டவர்களை நவீன அறிவியல் கருவிகளான செயல்முறை காந்த ஒத்திசை படக்கருவி (Functional Magnetic Resonance Imaging F-NMR) போன்றவற்றின் உதவியுடன் ஆராய்வது மூளையின் அமைப்பு-செயற்பாடு குறித்த புரிதல்களை உருவாக்கி வருகிறது.

இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிகம் வாய்க்காத ஒரு அனுபவம் டாக்டர் ஜில் டெய்லருக்கு (Dr. Jill Taylor) டிசம்பர் 10, 1996 அன்று கிடைத்தது. அவர் மூளையின் இடதுபுறத்தில் இரத்தநாளம் ஒன்று வெடித்து சிறிய இரத்தக்கட்டி (Hemorrhage) உருவானது. தன்னிலை இழக்கத் தொடங்கிய ஜில் டெய்லர் அசைவு, பேச்சு, ஞாபகம், சுயநினைவு என்று ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கினார். அதிருஷ்டவசமாக, உடனடி மருத்துவ உதவி கிடைத்தது. அடுத்த சில நாட்களில் மூளையில் அறுவைசிகிச்சை மூலம் ஒரு சிறிய பந்தின் அளவிற்குப் பெருத்திருந்த இரத்தக் கட்டி நீக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து முழுக்குணமடைய எட்டு ஆண்டுகளானது.

தன் மூளையின் ஒரு பாகம் செயலிழந்ததையும் அதைத் தொடர்ந்து தன் நினைவுகள், உடற் செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் குறித்த அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் ஜில் டெய்லர்.