ஸ்கோ-ஐபிஎம் லினக்ஸ் வழக்க

"என்னப்பா, blog எழுது ஆரம்பிச்சு பத்து நாளாப்போது, இன்னும் லினக்ஸ் பத்தி எழுதல நீ?", என்று நண்பர் ஒரு அங்கலாய்த்துவிட்டார். அதனால் இதோ;

இப்பொழுது தகவல் நுட்ப வியாபார உலகம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பது ஸ்கோ நிறுவனம், ஐபிஎம் மீது தொடுத்திருக்கும் நம்பிக்கை விரோதக் குற்றச்சாட்டு. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. முதலில் ஸ்கோ என்பது யார் என்று பார்க்கலாம். ஸ்கோ யுனிக்ஸ் இயக்குதளத்திற்கு சட்டபூர்வ சொந்தக்காரர். யுனிக்ஸ்தான் முன்னோடி. பல்பயணர் (multiuser), பல்செயல்பாடு (multitasking) இயக்குதளம். இணையத்தின் ஆதாரமான மின்னஞ்சல், வலை அரட்டை, ஊடுவலை போன்றவை யுனிக்ஸின் அடிப்படையிலேயே பின்னப்பட்டவை. இன்றைக்கு பிரபலமாக இருக்கும் மைக்ரோசாப்ட் (2000, XP), ஆப்பிள் (OS-X), மற்றும் லினக்ஸ் - அடிப்படையில் யுனிக்ஸ் இயக்குதளத்தின்மீது அமைக்கப்பட்டவை. சிலிக்கன் கிராபிக்ஸ், ஐபிஎம், ஹெச்.பி போன்ற நிறுவனங்கள் தங்கள் சக்தி வாய்ந்த கணினிகளில் யுனிக்ஸ் இயக்குதளத்தை நேரடியாகப் பயன்படுத்துகின்றன. சக்தி வாய்ந்த நுண்செயலிகளில் மாத்திரமே செயல்பட்டுக்கொண்டிருந்த யுனிக்ஸ் இயக்குதளத்தை, விலை குறைந்த, பிரபலமான இன்டெல் நுண்செயலிகளுக்கும் ஏற்றவகையில் மாற்றியமைத்து விற்கும் நிறுவனம் ஸ்கோ. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் முற்றிலும் இலவசமாகவும், முன்னேறிய தொழில்நுட்பமும் கொண்ட லினக்ஸின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்கோ இப்பொழுது சந்தைக்குச் சம்பந்தமில்லாத ஒரு நிறுவனம் ஆகிவிட்டிருக்கிறது. தங்கள் வியாபார நிர்பந்தங்களுக்காக, லினக்ஸ் வர்த்தக நிறுவனமான கால்டெராவைக் இணைத்துக் கொண்டதன் மூலம். ஸ்கோவும் லினக்ஸ் புரட்சி என்ற பெருங்கடலில் கரையத் தொடங்கியது. கடந்த ஆண்டு, சுசி லினக்ஸ், கனெக்டிவா லினக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்கோ யுனைட்டெட் லினக்ஸ் எனும் இயக்குதளத்தை வெளியிட்டது. எனினும், ரெட் ஹாட், சுசி போன்ற லினக்ஸ் வர்த்தகர்களுடனும், டிபியன் போன்ற முற்றிலும் வணிகத் தொடர்பற்ற லினக்ஸ் வெளியீடுகளுடனும் போட்டியிட முடியாமல் ஸ்கோ ஒரு முடமாக்கப்பட்ட நிறுவனமாக மாறிப்போனது. சுருக்கமாகச் சொல்லப்போனல் 40 வருட வரலாற்றைக்கொண்ட யுனிக்ஸ் வர்த்தக உரிமைகளை AT&T நிறுவனத்திடமிருந்து வாங்கியவர், அதன் தற்சமய வணிகச் சொந்தக்காரர் என்பதைத் தவிர ஸ்கோவிற்குச் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பெருமையும் இல்லை.

இதே நேரத்தில் ஐபிஎம், ஹெச்.பி போன்ற நிறுவனங்கள் நேரடியாக லினக்ஸின் தொழில்நுட்பப் புகழைப் பாடத்தொடங்கின. தற்சமயம் ஸ்கோவிடமிருந்து விலை கொடுத்து வாங்கிய யுனிக்ஸ் இரகசியங்களில் அமைக்கப்பட்ட தனது இயக்குதளத்தை தனது இயக்குதள வணிகத்திற்கு முற்றிலுமாக லினக்ஸை நம்புவது என்று ஐபிஎம் முடிவெடுத்தது. தன்னுடைய கணினி நிபுணர்களை திறந்த ஆணைமூலச் செயலிகள் எழுத ஊக்குவிக்கத் தொடங்கியது. ஒரு காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னனியில் இருந்து பின்னர் மைக்ரோஸாப்ட் மற்றும் சில நிறுவனங்களின் வளர்ச்சியால் பின்தங்கிப் போய்விட்ட ஐபிஎம்-மின் வர்த்தகம் லினக்ஸ் தொடர்பால் விரைவாக வளரத் தொடங்கியது. இழந்து போன தனது கடந்தகாலப் பெருமைகளை மீட்டெடுக்கும் பாதையில் ஐபிஎம் நடைபோடத் தொடங்கியது.

இந்த நிலையில் தன்னிடமிருந்து உரிமைபெற்ற யுனிக்ஸ் இரகசியங்களை லினக்ஸ் தன்னார்வ கணினி நிபுணர்களுக்குத் தனது ஊழியர்கள் மூலம் திறந்து காட்டிய குற்றச்சாட்டிற்காக ஸ்கோ தற்பொழுது ஐபிஎம் பல மில்லியன் இழப்பீடு தரவேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளது. அறிவுச் சொத்துரிமை என்று அறியப்படும் Intellectual Property Rights விதிகளின்படி இரண்டு நிறுவன்ங்கள் தங்களுக்கு இடையே ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் கண்டுபிடிப்பு உண்மைகளை மற்றவருக்குத் திறந்து காட்டுவது வழக்கம்தான். அவ்வாறு தான் அறிந்துகொண்ட யுனிக்ஸ் கண்டுபிடிப்புகளை மற்றவருக்கு வெளியிடாமல் காப்பாற்றும் கடமையும் சட்டபூர்வக் கட்டுப்பாடு ஐபிஎம்மிற்குக் கட்டாயம் உண்டு. அதற்கு மாறாக அது திருட்டுத் தானமாக இரகசியங்களை வெளியிட்டிருந்தால் அது கட்டாயம் இழப்பீடு கொடுத்தாக வேண்டும்.

ஐபிஎம்முடன் ஒப்புநோக்கையில் ஸ்கோ மிகவும் சிறிய நிறுவனம். ஐபிஎம்மின் நெடிய தொழில்நுட்ப வரலாறோ, தற்கால சந்தைப் பங்குவீதமோ சற்றும் இல்லாத ஸ்கோ இந்த வழக்கைத் தொடுக்கையில் முக்கியமாக கவனித்திருக்கக்கூடிய விஷயம் இது. தனது சட்ட வல்லுநர்களின் திறமை மற்றும் தனது பணபலத்தைப் பயன்படுத்தி ஐபிஎம் ஸ்கோவை ஒழித்துக்கட்ட முடியும். கசப்பான இந்த உண்மை ஸ்கோ நன்கு அறிந்ததுதான். இருந்தும் தைரியமாக நீதிமன்றத்திற்கு அழைத்திருப்பதன்மூலம் தன்னிடம் அசைக்க முடியாத ஆதரங்கள் இருப்பதாகவும், உண்மையின் தார்மீக பலம் இருப்பதாகவும் ஸ்கோ நம்புகிறது. அல்லது மற்றவர்களை நம்பவைக்கிறது.

ஒருக்கால் ஐபிஎம்மின் மீது தான் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டுகளை ஸ்கோ உண்மை என்று நிருபிக்குமானால் அதனால் ஏற்படும் இழப்பு ஐபிஎம்மிற்கு மாத்திரமல்ல. இன்றைக்கு இணையத்தின் ஆதாரத் தூணாக இருக்கும் லினக்ஸ் இயக்குதளத்திற்குத் தான் அதைவிட அதிகம். ஒப்பீடு இல்லாத தார்மீக நெறிகளின் மீது கட்டப்பட்ட கோபுரம் லினக்ஸ் இயக்குதளம். திருட்டத்தனமான அறிவைக் கொண்டு வளர்க்கப்பட்டதாக நிருபணமானால் அது மணல் கோபுரமாகச் சரிந்து போகும். ஐபிஎம்-மைத் தொடர்ந்து பல நிறுவங்களும் ஸ்கோவிற்குக் கப்பம் கட்ட வேண்டியிருக்கும். லினக்ஸையே வியாபாரமாக கொண்ட ரெட் ஹாட் போன்ற நிறுவனங்கள் முற்றாகச் சரிந்துபோகக் கூடும். இணையத்தின் வரலாறு மாற்றி எழுதப்படும்.

ஆனால் உண்மை என்ன? ஸ்கோவிடம் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றனவா? அவை தரும் உண்மையின் தார்மீக பலம் இருக்கிறாதா? இவை எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஐபிஎம் வாய்மூடியிருக்கக் காரணம் என்ன? குழம்பும் இந்தக் குட்டையில் மைரோஸாப்ட் எப்படி மீன் பிடிக்கிறது. வரும் நாளில் தொடர்ந்து எழுதுகிறேன்.

A Melody Regained

cilappathikaaram (Epic of the Anklet) - kANalvari
IllangovadikaL

For no reasons, some music get etched in memory. Some melodies keep haunting every now and then, even though it is ages since last listened. One of those rare gems is a movie song "thingaL malai veNkudaiyAn". I remember vividly that I first listened this song when I was about 13 years old, in Srilanka Broadcasting Corporation, Tamil Service 2. I do not know why/how I remember these trivial details. It was a weekend; I was sitting down on the floor and doing my history homework. It should be between 4:00 and 5:00 pm. My world stopped. I put the pen down and concentrated on the song. All that I could comprehend at that age was that the singer is K.J. Yesudoss. I froze that moment in my memory (to the mind numbing details of the evening and my history lessons). I might have listened to this song few more times, every time only from Tamil Service 2. I never could listen this song after 1982. This is the time the Tamil services of SLBC were downsized following the ethnic conflicts.

I came back to this song in 1991, when I was a student at the Indian Institute of Science. This was during a casual conversation with my friend Ujjwal Das about composer Salil Chowdhury. He was surprised when I informed that his favourite Salilda has scored music to a handful of Tamil movies (thUraththu idi muzhakkam, azhiyaatha kOlangaL, karumbu). He wanted to listen to those songs, I had the first two and my incessant quest to acquire the third began then. It is about 12 years since then, I finally have a copy of the songs from karumbu; thanks to the Internet.

This song was recorded for Karumbu in 1973. The movie was never released and was supposed to be directed by Ramu Kariat of chemmeen (malayalam) fame. There is also a P Susheela version of this song.

Since 1999, with the advent of the Forumhub, I intensified the search. There were a few others who reminisced about this song, but none of them had a copy of it. When I moved to Toronto, I used to seek this song with all my Srilankan friends. Movie songs were (are?) never broadcast in All India Radio before the movie itself was released. However, SLBC never had any qualms about pre-screen broadcasting. In fact, several movies became instant hits as the songs had already become popular thorough SLBC-TS2.

By now, my interest in this song has grown many fold as I started developing a passion for Tamil literature. I was involved in e-texting the first part (pukaark kANtam) of cilappathikaaram for Project Madurai and had the pleasure in contributing this great epic. I Started sending emails to everyone whom I thought may have a copy of this song. This is strange for someone who is no big fan of KJ Yesudoss and who despises his Tamil pronunciations in songs.

Finally, I had my luck when I visited a site devoted to Salil Chowdhury. I overcame my initial reservation in asking someone whom I never knew, gathered enough courage to write to Gautam, who developed this excellent site. Within a day, he replied. For the first time I heard from someone who has a copy of this record!! He was willing to send me a copy of those songs once his PC is back in action. Yes, he did. Within a week, I had the copies of both the versions of this song. I did some noise editing and tagging so that I could propagate its glory.

* * *

cilappathikaaram and kANalvari are the beginnings of what we consider as the early Tamilisai (the roots of Carnatic music). The exact date of cilampu is not known but is rated between 400-700 AD. The work has 6 chapters on music: aRangetRukAthai, kaNalvari, vEnirkAthai, vEttuvavari, kunRakuRavai and aychiyarkuRavai. It also talks extensively about instruments, song structures, meters, stage dimensions and settings. There is no other Indian work that is so descriptive of the day's music and dance. Illango adikaL also used kalippA extensively and very imaginatively. KalippA (with its tharvu, koccakam, thaazicai...) is what metamorphosed into the classical raaga structure. In more than one sense cilampu was a trendsetter of the day (it is an epic about ordinary folks, not about a king). It has very well developed dramatic elements. cilampu may also be one of the highly misunderstood epics in Indian literature. Prof. Indira Parthasarathy argues that it was not the intent of illango adikaL to glorify kaNNaki and goes on to prove how ordinary, unimaginative, self-centered she was (to the extent of using her chastity as a currency for her fame).

That is how kOvalan finds mAthavi - not only stunningly beautiful and talented but also capable of intelligent conversation, something kaNNaki was incapable of. The passages in kANalvari best exemplify this. It all start as simple verbal play between the pair that is enjoying itself in the festive atmosphere in the beach. Soon, kOvalan comes out, unable to hide his inferiority in front of the femme royale mAdhavi. Words stretch and kOvalan misinterprets mAdhavi’s simple playfulness (in the light of his inferiority) and leaves her company. Cilampu enters its second chapter, where the travails of the human life take the centerstage.

* * *

Salil has tuned several great songs. I am sure this lesser known is one of his great contributions to the Indian Film Music. Here is a song, supposed to be for a movie in Tamil, and one of the oldest lyric ever tuned for a motion picture. The singer is KJ Yesudoss (MalayAlee), the other version is sung by P Susheela (Telugu) tuned by Salil (Bengali), for a movie to be directed by Ramu Kariat (a MalayAlee). Yet, the song has perfectly captured the forlorn spirit of kANalvari and the grandeur of the epic. Yesudoss has come up with an impeccable rendition. The song is loosely based in chakravaaham (one the generic carnatic raaga).

The variation of this by P Susheela is missing the emotional undercurrent of kANalvari and has a more celebratory mood to it, with chorus in the interludes. I guess Salil should have been briefed about kANalvari, that it takes places in a beach and during a carnival atmosphere. He has attempted two variations, one manifesting the emotions and the other the locale. But kANalvari lyrics have more emotive desolateness to them and Yesudoss’ version stands out easily, bringing out the emptiness of kOvaln’s heart.

* * *

I must conclude this by thanking Gautam again for preserving this song and willing to share it with someone who is interested in it.

* * *

Listen to the songs

KJ Yesudoss version

P Susheela version

Here is the lyric

7. கானல்வரி
1
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

2
 மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோ லதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பென்
றறிந்தேன் வாழி காவேரி.

3
உழவ ரோதை மதகோதை
உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவ ரோதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவ ரோதை வளவன்றன்
வளனே வாழி காவேரி.

* * *

கனடாவின் இரத்ததானக் கொள்

சில நாட்களுக்கு முன் டொராண்டோ பல்கலையில் நடந்த இரத்ததான முகாமிற்கு தானமளிக்கச் சென்றிருந்தேன். 1990 முதல் 1996 வரை, இந்தியாவில் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இரத்ததானம் செய்துவந்தேன். இதுதவிர IISc-ல் படிக்கும் பொழுது அவரசங்களுக்கு இரத்ததானிகளை ஏற்பாடு செய்து உதவும் அமைப்பில் முக்கிய அங்கத்தினனாகவும் இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் இரத்தமளித்ததே இல்லை. பொதுவில் யாரைச் சென்றுபார்ப்பது, முகாம் எங்கே நடக்கும் போன்ற விபரங்கள் உள்ளூர் மொழி தெரியாததால் மத்தியப் பிரதேஷிலும், ஜப்பானிலும், போர்த்துகலிலும் சாத்தியமின்றிப் போனது. இங்கே கூப்பிடு தூரத்தில் இரத்ததான முகாம் வருகிறது என்று தெரிந்து, நேரத்தைத் தயாராக வைத்துக்கொண்டேன்.

மதிய உணவு இடைவேளையில் முகாமிற்குச் சென்றேன். மிகவும் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல்கலை மாணவ, மாணவியர் விசேட டி.சர்ட்களை அணிந்துகொண்டு பளிச்சென்றிருந்தனர். (ஒரு முறை பெங்களூர் இராமையா மருத்துவக் கல்லூரியில் இரத்தமளித்துக் கொண்டிருந்த பொழுது கட்டிலுக்கு அடியிலிருந்து ஒரு நாய்க்குட்டி செல்வதைப் பார்த்தபின் அடுத்த பலவாரங்கள் தூக்கமின்றித் தவித்தது நினைவுக்கு வருகிறது). பழரசம் வேண்டுமா? என்று அன்போடு உபசரிக்கப்பட்டேன்.

பிறகு வழக்கமான, கேள்விகள். குறிப்பாக "முன்னர் இரத்ததானம் அளித்ததுண்டா?" என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலையைப் பலமாக ஆட்டிவைத்தேன். அப்படியென்றால் தங்கள் தானமளிப்பவர் அடையாள அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை, இதுவரை நான் தானமளித்ததெல்லாம் இந்தியாவில்தான் என்று சொன்னேன். அப்படியென்றால் அது கணக்கில் வராது என்று சொன்னார்கள். கேள்வித்தாளில் "Never Donated Blood" என்று எழுதிக் கொண்டார்கள். இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் "கனேடிய முன் அனுபவம்" தேவை. (அது இல்லாத காரணத்தால் ஒரு முறை லினஸ் டோட்வால்ட்-க்கு Linux System Administrator வேலை மறுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்).

பிறகு விரைவான இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நான் இந்தியா (மற்றும் பிற நாடுகளின்) சோதனைகளில் அறிந்திருந்தவகையில் என்னுடைய இரத்தம் பி-குருப் என்றுதான் உறுதி செய்யப்பட்டது. என்னுடைய இரத்தத்துளி காப்பர் சல்பேட் கரைசலில் மிதக்காது முழுகிப்போனபின், முதல்கட்ட சோதனைகள் முடிந்து நான் காத்திருக்கப் பணிக்கப்பட்டேன். கிட்டத் தட்ட ஒன்றரை மணிநேரக் காஆஆ...த்திருப்பிற்குப் பின், ஒரு நர்ஸ் என்னைக் கேள்விகள் கேட்கத் தொடங்கினார். கேள்விகள் வழக்கமானவைதான். தாங்கள் நல்ல உடல்/மன நிலையில் இருக்கிறீர்களா எனத் தொடங்கி, போதைப் பழக்கம், பச்சைக் குத்தல், ஒருபால்/பலர்பால்/ஒன்றன்பால் சேர்க்கை விருப்பங்கள்/வரலாறுகள் போன்றவை பற்றிய கேள்விகள். கேள்வித்தாள்என்னமோ நான் இதுவரை பார்த்திருந்தவைகளைவிட நீளமானதுதான்.

பிறகு நான் இரத்ததானம் அளிக்க அருகதையில்லாதவன் என்று வருத்தத்துடன் தெரிவிக்கப்பட்டேன். காரணம்: நான் 1980 க்குப் பிறகு மொத்தத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக பிரிட்டனில் வசித்திருந்தது. பைத்தியப்பசு வியாதியின் எதிரொலிதான் இது. அதாவது, பல நாட்கள் பிரிட்டனிலோ அல்லது பிரான்சிலோ வசித்திருந்தால் என் இரத்ததில் பைத்தியப்பசு வியாதி இருப்பதாக கனேடிய அரசாங்கம் தீர்மானிக்கிறது/சந்தேகப்படுகிறது. பிறப்பிலிருந்து மாமிசங்களை முற்றாகத் தவிர்த்துவரும் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

பைத்தியப்பசு வியாதி தொற்றுவியாதியல்ல. ஆனால், மாறுகாரணி குருட்ஸ்பெல்ட் யாகோப் வியாதி (Variant Creutzfeldt Jakob Disease (vCJD) ) என்று அறியப்படும் அதன் தொடர்பான வியாதி இரத்தத்தால் பரவச் சாத்தியங்கள் இருப்பதாக (சோதனைகள் மூலம் நிருபிக்கப்படவில்லை) கனேடிய அரசாங்கம் நம்புகிறது. ஆனால் குருட்ஸ்பெல்ட் யாகோப் வியாதி 30 வயதுக்கு உட்பட்டவர்களையே பாதிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்தபடியால் எப்படியாவது என்னுடைய இரத்தத்தைத் தானம் செய்துவிட்டு வரலாம் என்று முயற்சித்தேன். பின்வரும் காரணங்களைச் சொல்லி வாதிட்டுப் பார்த்தேன்.

1. நான் பிறவி தாவரபட்சினி
2. நான் மாட்டிறைச்சியை ஒருபோதும் தொட்டதில்லை
3. நான் பிரிட்டனில் இருந்த சமயம் மாட்டுப்பண்ணைகளுக்குச் சென்றதில்லை
4. கு.யா வியாதி - முப்பது வயதுக்கு உட்பட்டவர்களைத்தான் பாதிக்கிறது
5. கு.யா வியாதி இரத்தவழி பரவுதல் சோதனை ரீதியாக நிருபிக்கப்படவில்லை

இல்லை... நர்ஸ் மிகவும் உறுதியாகத்தான் இருந்தார். அவர் இந்த முடிவு ஆட்டாவா-வில் இருக்கும் அரசியல்வாதிகளால் முன்மொழியப்பட்டது என்று சொன்னார். அப்படியானால் அவர்களாக மனமிரங்கி vCJD Deferral என்று அழைக்கப்படும் இந்த மடத்தனத்தை மாற்றியமைக்கும்வரை என்னைப் போன்றவர்கள் இரத்ததானம் அளிப்பது சாத்தியமில்லை.

மிகவும் நீளமான இந்த கேள்வித்தாள் கிட்டத்தட்ட இரண்டில் ஒருவரை திருப்பியனுப்புகிறது என்றும், நான் தனியன் அல்லன் என்றும் நர்ஸ் தேற்றத் தொடங்கினார். அப்படியானால், கனடாவில் அவசர இரத்தத் தேவைகளுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் தேவையில் நாலில் ஒருபங்குதான் இரத்த வங்கியில் இருப்பதாகவும், இது அவர்களுக்கு சிரமத்தை உண்டுபண்ணுவதாகவும் வருத்தப்பட்டார். அதைத் தவிர்க்க, தகுதியானவர்களை ஒவ்வொரு 56 நாட்களுக்கும் தானமளிக்க ஊக்குவிப்பதாகச் சொன்னார்.

முகாமிலிருந்து வெளியே செல்பவர்களுக்கு வழங்கப்படும் பழரசத்தையும் குக்கிகளையும் தானமளிக்கத் தகுதியற்றவனுக்கு எதற்கு என்று மறுத்தேன். அந்த மாணவி வலிந்து உபசரித்து, "தானமளிக்க்கவிட்டாலும் பரவாயில்லை, முன்வந்த உங்கள் குணத்திற்கு எங்கள் நன்றியாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொன்னாள். 56 நாட்களில் திரும்பவரப்போகும் நண்பருக்காக அவற்றை விட்டுவிட்டு வந்தேன்.

படிக்கும் யாரவது ஒரு கனடாவாசி நிலையுணர்ந்து அடுத்த முகாமிற்குச் சென்றதாகச் சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவேன். போவதற்கு முன்னால் தகுதியை உறுதி செய்துகொள்ளவும்.

ஒற்றைத் தொலையியக்கி உலகம

குருண்டிக், சோனி, பானாஸோனிக், ஷார்ப், டெக்ஸாஸ் இன்ஸ்ருமென்ட்ஸ் உள்ளிட்ட எட்டு மாபெரும் நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Home Audio Video Interoperability (HAVi) protocol ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு சாதனங்கள் தயாரிப்பாளர்களால் அவர்களின் வேறுபட்ட தயாரிப்புகள் ஒன்றிணைந்து இயங்க வழிவகுக்கும். உதாரணமாக, என்னுடைய வீட்டில், தொஷீபா தொலைக்காட்சி, பானஸோனிக் இல்லரங்கு (home theatre), JVC ஒலிக்கருவி இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. சில சமயங்களில் இவற்றுடன் நான் என்னுடைய மடிக்கணினியை இணைப்பதும் உண்டு (MP3 பாடல்களை சக்திவாய்ந்த இல்லரங்கில் கேட்க). இதுபோல பலர் வீடுகளில் பலவாறான மின்னணுச் சாதங்கள் பிணைக்கப்பட்டுச் செயல்படுகின்றன. இவற்றின் பின்னால் சென்று பார்த்தால் இருக்கும் கம்பி இணைப்புகள் மிகவும் குழப்பமாக இருக்கும். இதுதவிர இல்லரங்குச் சாதனம் போன்றவற்றில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட இணைப்புகள் இருக்கும். இவற்றை முறையாகச் இணைப்பதும் சரியான முறையில் பாவிப்பதும் சிக்கலான ஒன்று. பலர் சக்திவாய்ந்த மின்னணுச் சாதனங்களை அதிக விலை கொடுத்துவாங்கி முறையாகப் பாவிக்கத் தெரியாமல் வெறும் அலங்காரச் சாதனமாக இருத்தியிருப்பார்கள். மேலும் இவற்றையெல்லாம் இயக்க ஒன்றொன்றுக்கும் தனித்தனி தொலையியக்கிகளும் தேவை.

வரவிருக்கும் HAVi-Compliant சாதனங்கள் FireWire என்று அழைக்கப்படும் IEEE1394 இணைப்புகளைக் கொண்டிருக்கும். சாதனங்கள் HAVi நடைவரை (protocol)யைப் பயன்படுத்துவதால் அவற்றால் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ள முடியும். எனவே, உங்கள் இல்லரங்கிலிருது இருபது சோடி இணைப்புகள் தேவையாக இருக்காது. ஒரே ஒரு 1394 கம்பி அதற்கு அடுத்த சாதனத்துடன் அதனை இணைக்கும். இதனால் அணைத்து சாதனங்களையும் ஒருமித்த வகையில் (ஒரே தொலையியக்கி கொண்டு) இயக்க முடியும். விரைவிலேயே, இந்தத் தயாரிப்பாளர்களின் அணைத்து கருவிகளும் ஒன்றுடன் ஒன்று இணைய முடியும். திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது உங்கள் வாசல் கதவை ஒருவர் தட்டினால், அது திரைப்படத்தைத் உறையவைத்து விட்டு, வீட்டுக்கு வெளியே இருக்கும் பாதுகாப்பு காமெராவைத் தொலைக்காட்சிக்கு இணைக்கும். இரு வேறு சாதனங்களை எந்தவிதக் குழப்பமும் தயக்கமும் இல்லாமல் ஒருசேரப் பாவிக்க முடியும்.

இவ்வாறான இல்லவலையமைப்பில் உங்கள் கணினியும் இணைந்து கொள்ளும். எனவே, உங்கள் கணினியில் சேமிக்கப்பட்ட படங்களைத் தொலைக்காட்சியில் பார்க்க முடியும்; MP3 இசையை வரவேற்பரை ஒலிப்பெருக்கியில் கேட்கமுடியும்.

எல்லா தொழில்நுட்பச் சாதனங்களையும் போல இதற்கும் முக்கிய எதிர்ப்பும் இருக்கும். உதாரணமாக, இவ்வாறு சாதனங்கள் இணைக்கப்பட்டால் தொலைக்காட்சியில் வரும் டிஜிட்டல் திரைப்படத்தை, DVD recorderல் துல்லியமாக டிஜிட்டல் பதிவு செய்ய முடியும். இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தூக்கம் போக்கக்கூடும். MP3 பிரபலமாவதற்கு முன்னரே, சோனி Adapttive TRansform Acoustic Coding (ATRAC ) எனும் நடைவரையைத் தயாரித்து, என்றாலும், ATRAC பயன்படுத்தும் சோனியின் MiniDisc சாதனத்தில் பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் பாடல்களை மீண்டும் டிஜிட்டல் முறையில் பிற சாதனங்களில் (உதாரணமாக கணினியில் அல்லது CD Writerல்) நகலெடுக்க முடியாது. இவ்வாறு கட்டுப்படுத்த முக்கிய காரணம், ATRAC அளவுக்குறைப்பு நடைவரையைக் கண்டுபிடித்த சோனியின் முக்கிய வியாபாரங்களில் ஒன்று இசைத்தட்டு விற்பனை. துல்லியமான நகலாக்கம் அனுமதிக்கப்பட்டால் சோனியின் minidisc வியாபாரம் பெருகும், ஆனால் சோனியின் தயாரிப்பில் வெளிவரும் புது இசைத்தட்டுகளின் வியாபாரம் குறையும். சோனியின் கணக்குப்படி நாளாவட்டத்தில் அதற்கு இலாபத்தைவிட நஷ்டமே அதிகம். எனவே, அதனுடைய கண்டுபிடிப்பையே அது குறைப்பிரசவமாக்கித்தான் வெளியிட்டது. இது நடப்பின் சோகமான உண்மை.

இப்படி இசைவணிகர்கள் மற்றும் ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி HAVi சாதனங்கள் பெருகினால் அது சராசரி நுகர்வோருக்குத்தான் நன்மை. எனக்கென்னவோ, அணைத்துச் சாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் அது உங்கள் வீட்டில் திரைப்படம் ஓடும்பொழுது உங்கள் MP3-playerஐச் செயலிழக்கச் செய்யுமாறுதான் அமைக்கப்படும் என்று தோன்றுகிறது, இதன்மூலம் பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பாடலை மாத்திரம் திரும்பக் கேட்கப் பதிவு செய்துகொள்ளூம் உரிமையும், திறமையும் உங்களிடமிருந்து பறிக்கப்படும்.

வழக்கமான முத்தாய்ப்புத்தான் - காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

* * *
Protocol - நடைமுறைக்கு வரையறை எனவே நடைவரை என அழைக்கலாம்.

* * *
சென்ற வாரம் எழுதிய MP3 is no Sin கருத்தின் எதிர்வினைக்கும், மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் தேவை/தேவையின்மை பற்றி விரைவில் பதில் எழுதுகிறேன்.

* * *

புலிச்சவத்தில் கால்பதிகĮ

ஈராக் கொடுங்கோலர் சதாம் உசேனின் வாரிசுகள் அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டனர். வீழ்ச்சி சாதாரணமாக ஓடி ஒளிபவர்களுக்கு நேர்வதுபோலத்தான் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதங்கள் கொண்டு அழித்தொழித்திருக்கிறார்கள்.

அழித்தொழித்த அடுத்த நிமிடமே அச்சவங்களின்மீது ஏறி நின்று நர்த்தனமாடியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட உதய், குவெஸேய் உசேன்களின் புகைப்படங்கள் அமெரிக்க அரசாங்க செய்தி நிறுவனத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தின் தொழில்நுட்ப வேகத்துடன் அடுத்த நொடியிலேயே அவை பாக்தாத், பாக்கிஸ்தான், பஹ்ரைன், பாஸ்டன் போன்ற இடங்களில் சராசரி குடிமகன்களின் இல்லத்து வரவேற்பரைகளில் தொலைக்காட்சிகளிலும், கணினித் திரைகளிலும் பளிச்சிட்டிருக்கிறன.

ஜமீன்தார் பலருடைய துணையுடன் அடிபட்ட புலியைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். அண்டையில் போய்பார்த்து மூச்சில்லை என்று தெரிந்தவுடன் புகைப்படக்காரர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். புலிச்சவம் படமெடுக்கப்பட்டு, இடமும் வலமும் மான்கொம்புகள் அலங்காரத்துடன் வரவேற்பரையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான், வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் புலித்தலையில் கால்பதித்து நிற்கும் ஜமீன்தாரை என் வீட்டு வரவேற்பரைக்கும் அனுப்பியிருகிறது. ஒன்றை அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும், இடுப்பிற்குமேல் சட்டையின்றி இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்த சர்வாதிகார வாரிசுகளின் பிணம் அப்படியன்றும் பார்ப்பதற்கு அழகாக இல்லை.

அழகோ, இல்லையோ, பிணத்தின்மீது நடனமாடுவது காலமும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. மஹிஷனை வதம் செய்த காளி ஆட்டமாடியபின்தான் போரை முடித்திருக்கிறாள். கௌரவர்களைக் கொல்வதுமாத்திரம் பாஞ்சாலிக்குப் போதுமானதாக இருக்கவில்லை, அவளது கூந்தல் முடிக்க அவர்களது உதிரமும் தேவையாக இருந்திருக்கிறது. போருக்குப் பின் அழுத அசோகர்களின் எண்ணிக்கை வரலாற்றில் குறைவாகத்தான் இருந்திருக்கிறது.

தற்காலத்தில் போர் என்பது பொருளாதார நிர்பந்தம் மாத்திரம் அல்ல. இரைக்குக் கொல்லுதல் இறந்தகாலம் ஆகிவிட்டிருக்கிறது. இந்தப் போர்கள் முற்றிலும் குறியீடுகள் சார்ந்தவை. எதிரி நாட்டிலேயே உயரமான இரட்டைக் கட்டிடங்களை நோக்கி விமானத்தில் தற்கொலை வீரர்களைச் செலுத்திய தீவிரவாதிகளின் இலக்கு குறியீடன்றி வேறென்ன? உலகின் தனிப்பெரும் வல்லரசு பாலைவனத்தில் தன் இளைய வீரர்களை பலிகொடுப்பதை பின் எவ்வாறு நெறிப்படுத்த முடியும்? இரத்தம் தோய்ந்த அந்தச் சவங்களைக் குறியீட்டாக்கி தனது தனிப்பேராண்மையை அமெரிக்கா உலகிற்கு இன்னமொருமுறை பறைசாற்றியிருக்கிறது. இந்தக் குறியீடுகள் சந்தேகமின்றி போர்க்களம் நகரம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் போர்நெறிகள் குறித்து அணைத்து நாடுகளாலும் கைச்சாற்றிடப்பட்ட ஜெனிவா ஒப்பந்ததை அமெரிக்கா முற்றிலுமாக மீறுகிறது. அது வென்றவன் தோற்றவனை வெற்றிச்சின்னமாக்குவதையும், சூரையாடுவதையும் எதிர்க்கிறது. ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவது ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதியதல்ல. அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம், கன்னிவெடித் தடுப்பு ஒப்பந்தம், கியோத்தோ சுற்றுச் சூழல் ஒப்பந்தம் - இவையெல்லாம ஜமீன்தார் கால்பதித்துக் கெக்கலிக்கும் புலிச்சவங்கள்தானே.

இதே அமெரிக்காதான் இந்தப் பாலைவனப் போர்த் துவக்கத்தில் இராக்கியர்களால் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கைதிகளை அல்-ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியதை வன்மையாகக் கண்டித்தது. தனக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொன்று என்று வல்லான் வகுப்பதற்கு வரலாற்றில் ஒரு பெயர் உண்டு - பாசிசம். வீழ்ச்சிக்கு முந்தைய பாசிச வரலாற்றுப் போக்குகளை இம்மி பிசகாமல் அமெரிக்கா மறு அரங்கேற்றம் செய்து வருகிறது.

கவிஞர் மாலதி மைத்ரி

சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரியின் சங்கராபரணி எனும் கவிதைத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது. இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் ஒன்று;

சங்கராபணி - மாலதி மைத்ரி

அதனதன் உலகம்

நினைவுகளை கொத்திக் கொத்தி
தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய்
மரங்கொத்தியின் அலகில்
சிக்கித் தவித்து
சிறு காற்று கிளை அசைக்க
பிடிநழுவி பட்டாம் பூச்சியாய்
திசைவிலகும் நீ

தழும்பாய் வளர்கிறது மரம்
இரை ஏமாற்றிய பசியுடன் பறவை
வானத்தை தன் சிறகுகளில்
சுருட்டி அமர்ந்திருக்கிறது
நீ எங்கு போய்விடுவாய் என்று

பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்குள் விரிகிறது
தேரையின் இன்னும் ஒர் உலகம்

* * *

முழு கவிதைத் தொகுதியையும் குறித்த என்னுடைய விமர்சனைத்தை இன்னொரு நாள் எழுதுவேன். என்றாலும் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது மனதில் நெருடிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஒற்றெழுத்துக்களின் தேவை முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. சமகாலக் கவிஞர்களுக்கும் கதையாசிரியர்களுக்கும் இலக்கணம் முற்றிலும் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டிருப்பது சோகமான உண்மை. இவர்களிடமிருந்துதான் இது இறங்கி வெகுஜன எழுத்தாளர்களையும், தொடர்ந்து சராசரி மனிதர்களையும் ஆட்டுவிக்கிறது.

எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் பொழுது அதை முடிந்தவரைப் பிழையின்றி முடிக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். அரைகுறைக் காரியங்கள் சான்றான்மைக்கு உகந்தன அல்ல. இவர்கள் எல்லோரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது; அடிப்படை இலக்கணப்பிழைகளுடன் எழுதி உங்களால் ஆங்கிலத்தில் (உதாரணத்திற்கு தி ஹிந்துவில் ஆசிரியருக்குக் கடிதம்) பதிப்பிக்க முடியுமா? ஏன் தமிழ் தாழ்ந்து போக வேண்டும். இவர்களில் பலருக்கு இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவர்கள் படைப்பாளியின் அடிமடியில் கைவைப்பதாகச் சீறி எழுவார்கள். தங்கள் சிறுமையை வீறு கொண்டு எழுந்து நியாயப்படுத்தும் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போவதைத் தவிர வேறு விடிவு இல்லை.

* * *

"It's quicker, easier, and involves less licking." (1994, Douglas Adams, on the benefits of speaking to his fans via e-mail)

* * *

MP3 is No Sin

உலகெங்கும் இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்; இணையத்தின் வழியே பாடல்களைப் பகிர்ந்து கொள்வது. MP3 - தொழில்நுட்பம் வளர்ந்த உடன், கிட்டத்தட்ட 460 மெகாபைட் தேவையாக இருந்த ஒரு பாடலுக்கு 4 மெகாபைட் போதுமானதாக மாறிவிட்டது. இதனுடன் கூடவே, அதிவேக வலை இணைப்புகளும் பெருகியது, குறுவட்டுகளின் விலை வீழ்ச்சியடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களிடமுள்ள பாடல்களைப் பகிர்ந்து கொள்வது பெருகிவிட்டது. இதன் வேகத்தை Napster, Kazza, DC++ போன்ற நேரடிப் பரிமாறிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இது இசைத்தட்டுக்கள் விற்பனை இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.

இந்தப் பன்னாட்டு சமாச்சாரங்களை வேறு மூலையில் போட்டுவிட்டு, நம் நாட்டு நிலைக்கு இதைப் பொருத்திப் பார்த்தால் இந்த MP3 ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். நம்மூரில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட திரையிசைக்கு எந்தவிதமான வணிகச் சாத்தியக்கூறுகளும் இல்லை. இருபது வருடங்களுக்கு மேற்பட்ட பாடல்கள் முற்றிலுமாக இழந்து போய்விடவேண்டிய நிலையில்தான் இருக்கின்றன. அந்த நாட்களில் பலருக்கும் இசைத்தட்டுக்களோ, ஒலிநாடாக்களோ வாங்கும் சக்தி இல்லை. பாடல்கள் பெரும்பாலும் வானொலியிலேயே அனுபவிக்கப்பட்டன. இந்த நிலையில் சில நல்ல பாடல்கள் இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களிடம்தான் இருக்கின்றன. இவற்றில் சில இப்பொழுது MP3 ஆகப் புணர்ஜென்மம் எடுத்திருக்கின்றன.

இந்த வழியில் சமீபத்தில் கேட்கக் கிடைத்த ஒரு பாடல் "மங்கை ஒரு திங்கள்". இது வெளியாகாத முன் ஒரு காலத்திலே என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பதிவான அருமையான பாடல். இதுபோல முற்றிலுமாக இழந்து போய்விடக்கூடிய பாடல்களைப் பாதுகாக்க MP3 வடிவத்தில் அவற்றை மாற்றி, kazza, DC++, FTP, இன்னும் எந்த வடிவத்திலாவது அவற்றை பலரிடமும் பரப்புவதுதான் ஒரே வழி. இது இசைவணிகர்கள் சொல்வதைப்போல் பாவமான காரியம் அல்ல; புண்ணியம் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

Tamil Unicode Test

தமிழில் எழுத முடிகிறது. இது தலையைச் சுற்றிக் காதைத் தொடும் முயற்சி. முதலில் சுவடியில் தகுதரத்தில் எழுதி, அதை வெட்டி ஜாவா யுனிகோட் மாற்றியில் ஒட்டி மாற்றினேன். பின், யுனிகோட் செய்தியை வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். விரைவில் இதற்கு ஒரு நேரடி வழி கண்டுபிடிக்கவேண்டும். ஜாவா-வில் யுனிகோட் தமிழை நேரடியாக எழுதுவது சிரமம். (சிரமம் என்று இல்லை, அந்தச் செயலி அமைந்த முறை செவ்வனே இல்லை).

Blog-கிற்குத் தமிழில் வலைப்பூ என்று பெயரிடலாம் என்று சொல்கிறார்கள். வலை+பதிப்பு - வின் கவித்துவமான மரூஉவாம். இடிக்கிறது. கவித்துவம் சரிதான் - தொழில்நுட்பம் எங்கே? அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான சொற்களைத் தமிழாக்கம் மொழிமாற்றம் செய்கையில் அது ஆதார அறிவியல்(தொழில்நுட்பக்) கருத்தைச் சுட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கவிநயம் தமிழைக் குழிதோண்டிப் புதைக்காமல் விடாது போலிருக்கிறது. சீக்கிரம் இதற்கு வேறு பெயரிட வேண்டும். இல்லாவிட்டால் இணையம் (Web) என்பதைப் போல் அங்கிங்கெனாதபடி எங்குமாய் வியாபிக்கத் தொடங்கிவிடும். 1998-ல் Internet-க்கு ஊடுவலை என்று முன்மொழிந்தேன், அது web (User Interface) என்பதிலிருந்து Internet (Worldwide Network infrastructure) என்பதைப் பிரித்துக்காட்ட உதவும் என்று நம்பினேன். ஆனால் கேட்பாரில்லாமல் போயிற்று.