நானறிந்தவரையில் எஸ்.பி.பி – ஷைலஜா தவிர்த்த மற்ற ஒரே அண்ணன் – தங்கை இணை  எஸ். என். சுரேந்தர் – ஷோபா சுரேந்தர் மட்டுமே.    ஷோபா சந்திரசேகர் இரு மலர்கள் படத்தில் மகராஜா… ஒரு மகராணி இந்த இருவருக்கும் ஒரு குட்டிராணி பாடல் மூலம் எம்.எஸ்.விஸ்வநாதனால்  1967-ல் அறிமுகம் செய்யப்ப்டார்.  அதன்பின் பத்துவருடங்கள் கழித்து  இளையராஜாவின் இந்தப்பாடல்தான், ஆனாலும் இதுவே ஒரு நீண்ட பயணத்தைத் தொடக்கியது. பின்னர் தேவா, ஶ்ரீகாந்த் தேவா, மணிசர்மா உட்பட பல இசையமைப்பாளர்களுக்குப் பாடியிருக்கிறார்.   எஸ்.என். சந்திரசேகரை மணந்தபின் கதாசிரியராக மாறினார்.  பின்னர் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பலபடங்களை உருவாக்கியிருக்கிறார்.   நடிகர் விஜய் ஷோபா-சந்திரசேகர் தம்பதியின் மகன். 

ஷோபாவைப் போல இல்லாமல் சுரேந்தர் பாடகராக நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறார்.  இருந்தபோதும் இவர் பெரிதும் அறியப்படுவது ‘மைக்’ மோகனின் குரலாகத்தான். கிட்டத்தட்ட 75 படங்களில் மோகனுக்குப் பிண்ணனிக் குரல் தந்திருக்கிறார்.  ஒரு கட்டத்தில் இவருக்குப் பதிலாக மோகன் தன் சொந்தக் குரலில் பேசியபோது எழுந்த பலத்த விமர்சனத்தின் காரணமாக மோகன் இவர் குரலுக்குப் பின்னால் பதுங்க வேண்டியிருந்தது. 

பின்எழுபதுகளில் விவிதபாரதி, இலங்கை சேவை 2 வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட பாடல்.  இந்தப்பாடலில் ஷோபாவின் குரல் மெலிதான எல்.ஆர்.ஈஸ்வரின் குரலை நினைவுபடுத்தும்.  சுரேந்தரின் குரலில் கட்டாயம் மைக் மோகன் தெரிவார்.  இனிமையான துவக்க இசையைத் தவிர இசையமைப்பில் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லாத பாடல். ‘ராஜா பீச்சாங்கையால் போட்ட ட்யூன்’ என்ற போதும் ஷோபா, சுரேந்தர் என்று இரண்டு முக்கிய திரை ஆளுமைகளை உருவாக்கிய பாடல் இது. 

பாடல்: மாலை, இளமனதில் படம்: அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978) பாடியவர்கள்: எஸ்.என். சுரேந்தர் – ஷோபா சுரேந்தர் இசை: இளையராஜா பாடல் : கங்கை அமரன்