அடைப்பு தொடங்கிய கடந்த மூன்று மாதங்களாகப் பல பழைய சிறுகதைகளையும் நாவல்களையும் மீள்வாசித்து வருகிறேன்; கடந்த சில நாட்களாக ஜெயகாந்தன் படைப்புகள். மிகத் துல்லியமான கதைசொல்லியான ஜெயகாந்தனுக்கு காட்சி ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆர்வம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. புதுசெருப்பு கடிக்கும் என்ற அவரது சிறுகதையைப் படமாக்கினார். துரதிருஷ்டவசமாக, முழுவதும் முடிக்கப்பட்டபோதும் அதை ஒரு விநியோகஸ்தரும் வாங்க முன்வராமல் பெட்டியிலேயே அடங்கிப்போனது. இப்பொழுது எஞ்சியிருப்பது இந்தப் பாடல் மட்டும்தான். இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அவருடைய ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலின் ஹென்றியையும பேபியையும உருவகித்துத்தான் இதன் வரிகளை ஜே.கே. எழுதியிருப்பார் என நிச்சயமாக நம்பமுடியும்.

இசைமைப்பாளர் எம்.பி ஶ்ரீனிவாசன் சேர்ந்திசை (chorus/Choral music) என்று சொல்லப்படும் உத்தியை தமிழ் உலகில் பிரபலப்படுத்தினார். தமிழில் மிகச் சிலப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருந்தாலும் மலையாளத்தில் பிரபலமாக இருந்தார். கே.ஜே. யேசுதாஸை முதலில் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் இவர்தான். கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றினார். எஸ்.பி. பியைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. This song shows how subtly can SPB underplay while being exceedingly emotive.

Haunting Melody என்ற வகைக்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் நான் முதலில் இந்தப் பாடலைத்தான் எடுப்பேன். மென்மையான பாடல் என்பதால் மிகக் குறைந்த ஒலியளவில் கேட்காதீர்கள். அமைதியான சூழலில் மிதத்திற்கும் சற்று அதிகமான ஒலியில் கேட்டுப்பாருங்கள்.

பாடல்: சித்திரப்பூ சேலை
படம்: புது செருப்பு கடிக்கும் (வெளியாகவில்லை)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எம்.பி. ஶ்ரீனிவாசன்
பாடல்: ஜெயகாந்தன்