எந்த மின்விளக்கை வாங்கலாம்?

நான் Solid State Lighting,  (LED, Organic LED), Lighting, Photometry துறைகளில் ஆராய்ச்சியாளன். எனவே என் நண்பர்கள் பலரும் என்னிடம் என்ன மாதிரியான மின்சார விளக்குகளை வீடுகளுக்கு வாங்கலாம் என்று கேட்கிறார்கள்.  இன்று நண்பர் இலவசக் கொத்தனார்  இந்தச் சுட்டியைக் காட்டி இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்றார். எனவே, அந்த உந்துதலில்:

முதலில் தன்னிலை விளக்கங்கள் சில: 1. நான் பன்னாட்டு   ஒளியூட்டல் கழகத்திற்கான ( International Commission on Illumination, CIE)  கனேடிய தேசியக் குழுவின் தலைவராகச் சென்ற வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு  பொறுப்பு வகிக்கிறேன். ஒளியூட்டல் துறை பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கியது ( Incandescent, Fluorescent, LED...) எனவே பொதுவில் பல்வேறு தொழில்நுட்பங்களின் சாதக பாதகங்களைப் பொதுவில் விவாதிக்கவும் ஒரு நுட்பத்தைத் தாழ்த்திச் சொல்லவும் தயக்கம்.  குறிப்பாக தற்சமயம் மிகவும் சூடாக விவாதிக்கப்படும் கருத்துகள் சில :  1. மின்னிழை பல்புகளைத் (Incandescent Bulbs)  தடைசெய்ய வேண்டுமா? 2. குறு-மின்னொளிர் விளக்குகள் (Compact Fluorescent Lamps) ஆபத்தானவையா? 3-ஒளியுமிழ் இருவாய் (Light Emitting Diode, LED) விளக்குகளில் அதீத ஊதா/நீலக் கதிர்களால் நீண்டகால ஆபத்துகள் உண்டா? இவற்றையெல்லாம் குறித்த விவாதிக்க கொஞ்சம் ஆழமாக அறிவியலில் இறங்கவேண்டும். அதற்கு இப்பொழுது நேரமில்லை.  என்வே, சுருக்கமாக சில (இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்);

0. கட்டாயம் மின்னிழை விளக்குகளைத் தவிருங்கள்.  அவை பயன்படுத்தும் மின்சக்தியில் 5-8% மட்டுமே ஒளியாக வெளிவருகிறது. 90%-க்குமேல் விரயம்.

1. கோவை செல்வன் எழுதியிருப்பவை பெரும்பாலும் சரி.

2. சி.எஃப்.எல் உடைந்தால் அதிலிருந்து சிந்தும் பாதரசத்தை எப்படிச் சுத்தம் செய்வது என்பது குறித்த எங்க ஊர் விளக்கம் இங்கே.

3. பொதுவாக சில நொடிகளே பயன்படுத்தப்படும் இடங்களில் (கராஜ், இல்லக்கழிவறை) CFL ஆல் பெரிதும் சக்தி சேமிப்பு கிடைக்காது.

4.   CFL பொதுவில் Dimmer களுடன் பயன்படுத்த ஏற்றனவல்ல.

5. 80%-க்கும் மேலான CFL களில் அவற்றின் ஆயுள் மிகைப்படுத்தி விளம்பரிக்கப்படுகின்றது. Philips, Osram, GE போன்ற முதல்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் பொதுவில் நம்பகமானவை.

6. CFL விரைவாகக் காலாவதியாகிவரும் ஒரு நுட்பம், இவற்றுக்கு அரசாங்க மானியம் தருவது எந்த வகையிலும் நியாமானதல்ல.

இனி, LED   குறித்த சில தகவல்கள்:

1. LED வருங்காலத்திற்கான நுட்பம். 2030 வாக்கில் பொதுப்பயனில் LED-கள்தான் காணப்படும் என அமெரிக்க சத்தி அமைச்சகம் கணிக்கிறது.  இதன்மூலம் ஒளியூட்டலின் சக்தி தேவையை 70% குறைக்கலாம். (சூடேற்றத் தடுப்பு, கார்பன் சேமிப்பு, இத்யாதி...)

(அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கட்டிடங்களில் குளிரூட்டல்/சூடாக்கல் தவிர்த்த இரண்டாவது பெரிய சக்திப்பயன்பாடு ஒளியூட்டலுக்குத்தான். இது பலருக்கும் தெரியாது.  கட்டிடங்களில் சாராசரியாக 30%  சக்தி விளக்குகளுக்காகவே செலவழிக்கப்படுகிறது.)

cree_LED2. இந்த வருடத்தின் துவக்கத்தில் முதன்முறையாக என்னுடைய தனிக்கணிப்பின்படி LED-கள் பொருளாதார ரீதியாக முதன்மைத் தீர்வாக முன்னேறிவிட்டன.  இதற்கு கடந்த ஐந்து வருடங்களாக பல்கலைக்கழகங்களில் நடந்துவரும் உன்னத ஆய்வுகளும், CREE, Philips, Osram, Nichia, Seoul Semi போன்ற முதன்மை நிறுவனங்களின் கடுமையான போட்டியும் காரணம்.  முதன்முறையாக $10-க்குள்ளாக LED  இந்தவருடம் சந்தைக்கு வந்தது. இனியும் இவை விலை அதிகம் என்று சொல்ல வாய்ப்பில்லை.

3. LED,  CFL பல்புகளைப் போல பத்து மடங்கு ஆயுள் கொண்டவை.  முதன்முறையாக ஒரு நிறுவனம் CREE தன் தயாரிப்புக்கு 10 வருட உத்தரவாதம் தருகிறது. (சென்ற பத்தியில் இருக்கும் $10 பல்பு).  மின்விளக்குகளின் வரலாற்றில் 10 வருட உத்தரவாதம் இதுவே முதன்முறை.

4. சக்தி சேமிப்பு.  சூழியல் காரணிகள் இவற்றைக் கணக்கில் கொண்டால் இப்பொழுது தயக்கமில்லாமல் இவற்றை வாங்கலாம்.

5. இருந்தும், ஆரம்பச் செலவு இவற்றில் அதிகம் நல்ல CFL பல்பை $2க்குள் வாங்கலாம். எனவே LED அதைவிட ஐந்து மடங்கு விலை அதிகம், ஆனால், சக்தி சேமிப்பு, ஆயுள் இவற்றைக் கணக்கில் கொண்டால் ஆயுட்கால செலவு (Total Cost of Ownership) குறைவானது.

6.  மட்டமான தயாரிப்புகள் எல்லாத் துறைகளிலும் உண்டு.  இதில் LED விலக்கல்ல. என்னுடைய ஆய்வகத்தில் பரவலாகக் கிடைக்கும்  LED தயாரிப்புகளைப் பாரபட்சமில்லாமல் சோதித்து அதன் முடிவுகளைப் பலரும் அறியப் பொதுவில் வெளியிட்டு வருகிறோம். கனேடிய அராசங்க மானியம் பெற்ற இந்தத் திட்டத்தில் எந்த விதமான பரிந்துரைகளும் கிடையாது. இதில் தயாரிப்பாளர் விளம்பரிப்பது என்ன உண்மையில் அதன் தரம் என்ன என்பதுதான் வெளியிடப்படுகிறது. These reports are technical.  No simple recommendations are made.

7.  LED பிற கட்டுப்படுத்திகளுடன் மிக அற்புதமாகச் செயல்படும். Dimmer, Occupancy Sensor, Timer, Colour Temperature Control போன்றவை மிக அற்புதமாக இயங்கும்.  எனவே இது வருங்காலத்திற்கான நுட்பம். இதில் செலவிடப்படும் உங்கள் காசு விணாகாது.

8.  LED-களில் இருக்கும் அதிகமான நீல/ஊதா நிறங்களால் நெடுங்காலப் பாதிப்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்துவருகிறது. ஆனால் இது (சராசரி பயன்பாடுகளில்) தேவையற்ற ஒன்று என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. எனினும், இன்னும் மேலதிகமான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

9. சூழியல் நுட்பத்தில் Cradle-to-grave Environmental Footprint என்று ஒரு கணக்கீடு உண்டு. ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆகும் சக்தி மற்றும் பயன்பாட்டுச் சக்திச்செலவு  மாத்திரமல்ல, துணைப்பொருட்களின் உற்பத்தி, ஆலைகளிலிருந்து பயனர்களைச் சென்றடைய ஆகும் சக்தி, இறுதியாகக் கழிவுப் பொருட்களின் மறுபயன்பாடு அல்லது விரயம் போன்ற அனைத்தும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்தக் கணக்கீட்டில் LED நுட்பம் சூழியல் ரீதியாக மிகவும் நல்ல தெரிவு என்று பல்வேறு ஆய்வுகள் முடிவுகூறுகின்றன.

இது குறித்து கேள்விகள் இருந்தால் பதிலளிக்க முயல்கிறேன். ஆனால் வரும் சில நாட்களில் நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றுகிறேன். எனவே, பதில்களை உடனுக்குடன் எழுத முடியாது.  நீங்கள் மின்னஞ்சல் இணைத்திருந்தால் (பொதுவில் தெரியாது) அல்லது ட்விட்டர் பெயர் சொன்னால்.  நான் பதிலிட்டவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

10 Replies to “எந்த மின்விளக்கை வாங்கலாம்?”

 1. நான் கேட்டுக் கொண்டதற்காக நேரம் செலவழித்து இக்கட்டுரையை எழுதியதற்கு நன்றி.

  பழைய மின்னிழை விளக்குகளை விட CFL விளக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. LED இவை இரண்டையும் விட மேல். இதுதான் என் புரிதல் சரியா?

  செல்வனின் பதிவினைப் படிக்கும் பொழுது CFL அபாயகரமானது வேண்டவே வேண்டாம் என்ற எண்ணம் வரும்படி எழுதப்பட்ட பதிவோ எனத் தோன்றியது. Doomsday Prediction மாதிரி எல்லாக் கெட்டதையும் மட்டும் சொல்லி மின்னிழை விளக்குகளே மேல் என நிறுவ முனைகிறார் என்று தோன்றியது.

  அதில் சில தகவல்களைப் படிக்கும் பொழுது குழப்பமே மிஞ்சுகிறது.

  /மெர்க்குரி உருனடையாக மாறி அறையெங்கும் ஓடிவிடும்./
  /துணி மேல் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அந்த துணியை வாசிங் மெஷினில் போட்டால் மெர்க்குரி செப்டிக் டேங்கில் அடைத்துகொள்ளும்.சுத்தம் செய்ய நிரைய செலவு ஆகும்./

  மெர்குரி வேப்பர் வெளி வரும். காற்றில் கலக்கும் சரி. ஆனால் இவை எல்லாம் சரியான தகவலா?

  நம் நாடுகளில் எல்லாவற்றிலும் பொறுப்புத்துறப்பு சம்பந்தப்பட்ட வாசகங்கள் உண்டு. /"homeowners consider not utilizing fluorescent lamps in situations where they could easily be broken, in bedrooms used by infants, small children, or pregnant women, or over carpets in rooms frequented by infants, small children and pregnant women."/ இதுவும் அதைப் போலத்தானே? உடைந்தால் மெர்குரி வேப்பர் வரும் வாய்ப்பு இருப்பதைக் கவனத்தில் கொள்ளச் சொல்கிறார்கள். அவ்வளவுதானே? பயன்படுத்தக் கூடாத அளவு ஆபத்தானவையா இந்த CFL விளக்குகள்?

  மின்னிழை விளக்குகளில் சக்தி விரயம் தவிர வேறு பிரச்னைகள் உண்டா?அவற்றை பொதுவான குப்பையில் சேர்ப்பது சரியா?

  LED - இதில் இந்த பிரச்னைகள் கிடையாதா? மெர்குரி போன்ற பொருட்களைத் தயாரிக்கும் பொழுது பயன்படுத்துவது உண்டா? இவற்றை மற்ற கண்ணாடிப் பொருட்களுடன் சேர்த்து மறுசுழற்சிக்கு விட முடியுமா?

  நேரம் கிடைக்கும் பொழுது மேலும் விளக்கமாகச் சொன்னால் நன்றி!

 2. < பழைய மின்னிழை விளக்குகளை விட CFL விளக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. LED இவை இரண்டையும் விட மேல். இதுதான் என் புரிதல் சரியா?>

  ஆம், ஆரம்ப விலையைத் தவிர.

  < பயன்படுத்தக் கூடாத அளவு ஆபத்தானவையா இந்த CFL விளக்குகள்?>

  இல்லை. அவ்வளவு ஆபத்தானவை என்றால் இல்லப் பயன்பாடுகளுக்கு அனுமதிக்க மாட்டார்கள். பொதுவில் பாதரசத்தின் அளவு நீங்கள் சொல்வதைப் போல குறைவானதுதான். சராசரியாக 5 மி.கிராம் அளவுக்குத்தான் பாதரசம் இருக்கும். பழைய பாதரச வெப்பமானிகளில் இதைக்காட்டிலும் 100 மடங்கு அதிகம் இருக்கக்கூடும். சில வருடங்களுக்கு முன்புவரை குழந்தைகளின் வாயில் வைத்து சுரத்தின் அளவு பார்க்கப் பயன்படுத்தப்பட்ட (கவனிக்கவும் இவை சிறார்களுக்கென பிரத்தியேகமான தயாரிக்கப்பட்டவை/அனுமதிக்கப்பட்டவை) இன்றைய CFL ஐக் காட்டிலும் குறைந்தபட்சம் 20 மடங்கு பாதரசம் உண்டு. இவற்றை நேரடியாகக் குழந்தைகளின் வாயில் வைத்து வெப்பம் அளவிடுவார்கள். எனவே நீங்கள் சொல்வதைப் போல இது ஒரு பெரிய பயங்காட்டல்தான்.

  தனிநபர் ஆபத்துகளைவிட பொதுவில் இவற்றைக் குப்பையில் எறிவதால் ஏற்படும் சூழியல் ஆபத்துதான் முக்கியமானது. அதைத் தவிர்க்க வேண்டியே இந்த அதீத பயமுறுத்தல்கள். என் வீட்டில் இரண்டு CFL கள் உடைந்திருக்கின்றன. முறத்தில் பிரஷ்/காகிதம் கொண்டு திரட்டி பொட்டல்ம் கட்டி எங்கள் பல்கலைக்கழக வேதியியல் தொட்டியில் போட்டேன்.

  நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் என்னிடம் ஒரு குப்பியில் கிட்டத்தட்ட 25 கிராம் அளவுக்குப் பாதரசம் இருந்தது. அதை நிறைய நாட்கள் உள்ளங்கையில் வைத்து விளையாடியிருக்கிறேன். அலோபதியல்லாத பல மாற்று மருத்துவமுறைகளில் ரசக்கலவைகள் (Mercury Amalgams) உள்மருந்துகளாகவும் பூச்சுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

  < மின்னிழை விளக்குகளில் சக்தி விரயம் தவிர வேறு பிரச்னைகள் உண்டா?அவற்றை பொதுவான குப்பையில் சேர்ப்பது சரியா?>

  மின்னிழை விளக்குகளில் சக்தி விரயத்தைத் தவிர வேறு சிக்கல்கள் கிடையாது. இவற்றை பிற கண்ணாடி சாமான்களுடந் மறுசுழற்சித் தொட்டியில் எறியலாம். பல அமெரிக்க நகரங்களைக் காட்டிலும் சூழல் விழிப்புணர்வு அதிகமுள்ள, செயலூக்கமுள்ள டொராண்டோவில்கூட இவற்றைத் தனியாக மறுசுழற்சி செய்வதில்லை. (தொடரும்)

 3. விரிவான விளக்கத்துக்கு நன்றி வெங்கட். இதை நீங்கள் இட தூண்டுதலா இருந்த கொத்தனாருக்கும் நன்றி

  ஒரு சிறு விளக்கம்

  /மெர்க்குரி உருனடையாக மாறி அறையெங்கும் ஓடிவிடும்./
  /துணி மேல் சி.எப்.எல் பல்பு உடைந்தால் அந்த துணியை வாசிங் மெஷினில் போட்டால் மெர்க்குரி செப்டிக் டேங்கில் அடைத்துகொள்ளும்.சுத்தம் செய்ய நிரைய செலவு ஆகும்./

  This is listed in the same website you provided

  http://www.ec.gc.ca/mercure-mercury/default.asp?lang=En&n=D2B2AD47-1

  Do Not Put Contaminated Items in the Washing Machine - mercury may contaminate the machine and pollute the sewage system. See Step 5 for disposal instructions.
  Do Not Vacuum - vacuuming a mercury spill may increase the mercury vapor in the air and increase the risk of inhalation. If used, vacuums may become contaminated and therefore may need to be discarded.
  Do Not Use a Broom or Brush - sweeping or brushing up a spill will scatter mercury droplets, making them harder to find and clean up.
  Do Not Pour Mercury Down the Drain - mercury may settle in the S-trap of your drain and may pollute the sewage system or your septic tank.
  Do Not Throw Mercury or Contaminated Items in the Garbage - mercury may be emitted as a vapour from landfill sites or from waste incinerators.

 4. Saran - இது போல பல செய்தியகள் உலாவுகின்றன. இவற்றை முழுமையாகப் பொய் என்று ஒதுக்கமுடியாது. ஆனால் சராசரி பயன்பாட்டிற்கு இந்த ஐயம் தேவையற்றது என தற்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து விபரமாக எழுதுகிறேன்.

 5. LEDகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றின் ஆதரம் Indium Gallium Nitride (InGaAs semiconductors) குறைகடத்திகள். இவற்றில் ஆர்சனிக் ஆபத்தானது. ஆனால் மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்படுகிறது. இதைப் பிரித்தெடுத்து மறுசுழற்சிக்க முடியாது.

  கூடவே, இவ்வகை விளக்குகளில் அலுமினியம் போன்ற உலோகங்களாலான வெப்ப நீக்கி (heat sink) பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மறுசுழற்சிக்க முடியும். ஆனால் தற்சமயம் இதற்கான தரக்கட்டுப்பாடுகள் உருவாகவில்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆயுள் என்பதால் இவற்றின் இறுதிக்காலம் பற்றி ஒருமித்த விவாதங்களே இன்னும் துவங்கவில்லை.

 6. செல்வன் - என்னை எழுததூண்டியதற்கு நன்றி!

  காட்டப்பட்டிருக்கும் பக்கம் பொதுவில் பாதரசத்தின் ஆபத்துக்களையும் அதைக் கையாளவேண்டிய கவனமான முறைகளையும் குறிப்பிடுகிறது. ஆனால் இவ்வகை விளக்குகளில் 3.5 மி.கிராம் (நான் 5 மி.கிராம் எனத் தாராளமாகவே எழுதியிருந்தேன்) உயர்ந்தபட்சமாக இப்பொழுது கட்டுப்படுத்தப்பட்டிருகிறது. இது மிகக் குறைவான அளவு,

  http://www.ec.gc.ca/mercure-mercury/default.asp?lang=En&n=2486B388-1

  சிதறினால் இவற்றைக் கண்டெடுத்தல் சாத்தியமற்றது. மேலும் அந்த அளவு பாதரசம் எந்தவிதமான உடற்பாதிப்பையும் ஏற்படுத்தச் சாத்தியம் மிகக் குறைவே. உதாரணமாக பாதரச சுரமானிகளில் கிட்டத்தட்ட 3 கிராம் வரை இருக்கும்.

  http://www.ec.gc.ca/mercure-mercury/default.asp?lang=En&n=AFE7D1A3-1

  மெர்க்குரி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் கண்டு மிரளப்பட வேண்டியதில்லை.

 7. 3.5g x xxx என்ற அளவில் பாதரசம் நிலத்தடி நீருடன் கலந்தால் பிரச்சனையில்லையா? சென்னை போன்ற நகரங்களில் இதை முறையாக dispose செய்ய வழி இல்லை என்பதால் இவ்வளவு பாத ரசமும் நிலத்தடிக்கு தானே போகும்?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *