அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உ.யிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

கோபி,
செட்டிப்பாளையம்

என்ற கேள்விக்கு ரைட்டர் பேயோன் எழுதிய பதிலில் விடுபட்டுப் போனவை.  

* * *

இரண்டாம் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைப்பது பேராசை.  நம் சமூகம் சுயமாகத் தனக்குத்தானே வளர்த்தெடுத்த விழுமியங்களை மறந்துவிட்டு ஐரோப்பியர்கள் நம் கலச்சாரத் திரிபாக நம்மிடையே புகுத்தியதை இப்பொழுது நாம் சுமந்து நிற்கிறோம்.  பைபிளில் ஆதிமுதல் இணையான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கேன், ஆபெல் என்று  இருப்பதாக வருகிறது. எனவே இரண்டு குழந்தை என்பது முற்றிலும் ஆபிரகாமிய மரபையொட்டி வருவது. நம்முடைய காப்பியங்களில் எங்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக வரவில்லை. நான்கு (இராமன், பரதன்…),  ஐந்து (பஞ்சபாண்டவர்), நூறு என்றுதான் வருகிறது. நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தசரதனுக்கு மூன்று மனைவியர் தேவைப்பட்டிருக்கிறது.  அந்தக் கணக்கில் பார்த்தால் ஒரு தம்பதிக்கு 1.33 குழந்தைதான் வருகிறது, இது இரண்டைவிடக் குறைவு .  இராமனுக்கு லவன், குசன் என்று இருவர் இருக்கிறார்களே என்று நீங்கள் குதர்க்கம் பேசக்கூடும்.  புறனடைகள் ஒருபோதும் விதியாகது. அவை விதியை மேலும் நிறுவிக்கொண்டேதான் செல்லும். இந்த இயற்கை நியதியை யாராலும் தடுக்கவியலாது.

எனவே நம் கலச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்குக் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் தேவை.  ஒவ்வொரு இசுலாமியரும் நான்கு மனைவிகளை மணந்துகொண்டு கணக்கிலடங்காத குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குரான் விதிக்கிறது.  எனவே கௌரவர்களைப் போல நூறுகுழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் நாம் விரைவாக இழந்துவரும் இந்து-இசுலாமியர் விகிதத்தைச் சரிகட்டமுடியும்.  மறுபுறத்தில் தொடர்ச்சியாக நம் பேலி அறிவுஜீவிகளை பணத்தால் வாங்கி நம் கலாச்சாரம் இழிந்தது என்று நம் தலையில் கட்டி நம் மக்களை கிறிஸ்துவதத்திற்குத் தொடர்ச்சியாக மதம் மாற்றும் நடவடிக்கையையும் கௌரவர்களைப் போல நூறு குழந்தைகளைப் பெறுவது உறுதி செய்யும்.  ஆனாலும் சமகாலத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நூறு குழந்தைகளை வளர்தெடுக்க முடியாது. சற்றும் சமூகவளர்ச்சிக்கு உதவாத, நடைமுறை, யதார்த்தம்சாராத தொழிற்கல்வி சற்றும் இல்லாத கான்வெண்ட் ஒன்றுக்கு நூறு பீஸ் கட்டுவதை யோசித்துப்பாருங்கள்.  எனவே ஒரே குழந்தை என்பதுதான் நம் சமூகத்தின் நடைமுறை யதார்த்தம் சார்ந்த தெளிவு.

இரண்டு குழந்தைகள் என்பது விளைபொருட்களுக்கான சந்தையை இரட்டிக்கும் கார்ப்பரேட் உத்தி.  நீங்கள் ஒரே ஒரு பேஸ்டை குழந்தைகளுக்காக வாங்கி சமாளிக்கலாம். ஆனால், இரண்டு பேருக்கும் வேவ்வேறு பிரஷ்களை வாங்கியாக வேண்டும். இதுதான் சந்தை நிர்ப்பந்தம். வைரஸ்போல் உங்களைப் பீடிக்கும் கார்ப்பரேட் அத்துடன் நிற்காது தொடர்ந்து வெவ்வேறு பேஸ்ட்களுக்கான விளம்பரங்களை உங்கள் தொலைக்காட்சி வழியாக வீட்டுக்குள் நுழைந்து கார்ட்டூன்களுக்கு இடையே அவற்றைக் காட்டி ஐந்து வயது ஆண் குழந்தைக்கு மிண்ட் அடங்கிய வெளிர் ஊதா பேஸ்ட்டும், இரண்டு வயது பெண்ணுக்கு பிங்க் கலரில் டோரா போட்ட பேஸ்ட்டடும் வாங்கும் வரை உங்களை நிறுத்தாது.  இப்படி ஆண்-பெண் பால் மாறுபாட்டுக்கு நுகர்பொருட்களின் தெரிவுகளும் மாறுபடவேண்டும் என்று ஆழ்மனத்தில் நிறுவுவது சந்தை உத்தி. காலப்போக்கில் வெள்ளை பேஸ்ட்தான் அலுவலகத்திற்கு ஏற்றது என்பதாக உங்கள் மனத்தின் ஆழத்தில் நிறுவி மூன்றாவது பேஸ்டும் வாங்கும் நிலைக்கு உங்களைத் தள்ளும்.  பல வண்ணங்களில் நகச்சாயங்களை வாங்கிக் குவிக்கும் உங்கள் மனைவியைப் பற்றி நான் இங்கு பேசப்போவதில்லை.

நாம் முற்றாக கார்ப்பரேட்களுக்கு விலைபோய்விட்டோம்.  யோசித்துப்பாருங்கள் அறுபதுகள்வரை நம் சமூகம் கருவேலம்பட்டையையும் ஆலம், வேலங்குச்சியையும்தான் பல்தேய்க்கப் பயன்படுத்திவந்தது. காந்தியும், காமராஜ நாடாரும், கக்கனும் கருவேலம்பட்டையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். தீவிரமான பல்வலிக்குக்குக்கூட சிகிழ்ச்சைக்கு மேலை மருத்துவத்தை நாடி நின்றதில்லை. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்றைக்கும் ஆலங்குச்சியைத்தான் பயன்படுத்துகிறார். சென்றமுறை ஆழ்வார் திருநகரி (இந்த ஆழ்வாரும் விஞ்ஞானி ஆழ்வாரும் வேவ்வேறு) வந்த ஜப்பானிய சூழியல் நிருபுனர் நிக்காடோ யமனாகா ஆறு கிலே எடையுள்ள ஆலங்குச்சிகளை ஓசாகாவுக்கு பிளேனில் எடுத்துச் சென்றிருக்கிறார்.  இன்னும் ஐந்துவருடங்களுக்குப் பல்தேய்க்க காசு செலவழிப்பதில்லை. நாமோ  மாதம் ஒரு பேஸ்ட் என்று பணத்தைப் பிதுக்கித் தள்ளுகிறோம். என்றைக்கு நாம் இயற்கையை விட்டு விலகத் தொடங்கினோமோ அப்பொழுதே கார்ப்பரேட் மேலைஉலகம் நம் அழிவைக் குறிவைத்து நம்மை நகர்த்தத் தொடங்கிவிட்டது.

இரண்டாம் குழந்தை பெரும்பாலும் சிசேரியன் அறுவைசிகிழ்ச்சையால்தான் வெளியேவருகிறது என்று பாஸ்டனில் உலகவங்கிக்காக வேலைசெய்யும் என் நண்பர் பாஸ்கரன் தரவுகளைக் காட்டுகிறார். சமகால அழுத்தங்களின் காரணமாக பாஸ்டனில் வசிக்க நேரிட்டாலும் பாஸ்கரன் இன்றும் நவீன தமிழ் இலக்கியத்துடன் நெகிழ்ச்சியான தொடர்பை அறுபடாமல் காத்துவருபவர்.  இன்றைய மருத்துவக்கல்லூரி படிப்பு நம் மருத்துவர்களுக்கு சிசேரியன் முறையாகச் செய்யச் சொல்லித்தருகிறதா என்றால் இல்லை என்றுதான் என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்லுவேன். எங்கள் ஊரில் முப்பாத்தா என்ற செவிலிச்சி சிசேரியன் எல்லாம் இல்லாமல் இடதுகையாலேயே அனாயசமாக உருவிப் போடுவார்.  அவர் எந்த புத்தகத்திலும் மருத்துவம் பயின்றதில்லை; காரணம் இயற்கை சார்ந்த நடைமுறைக்கல்வி. அவருடைய அப்பாத்தா வேப்பெண்ணையைக் கையில் தடவிக்கொண்டு அனாசயமாக குழந்தையை வெளியே எடுப்பதை நேரில்கண்ட நடைமுறைக் கல்வி அவருடையது. இன்றைக்கு மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்தாலும் பின்னால் லைட் இல்லாமல் பிலிம் பார்க்கத் தயங்குகிறார்கள்.

ஒரு குழந்தையோ, இரண்டோ அல்லது அரை டஜனோ அது உங்கள் தனிப்பட்ட தெரிவு, இதை நீங்கள் என்னிடம் கேட்டதால் சொல்கிறேன். முடிந்தால் ஒன்றுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது கௌரவர்களைப் போல நூறோ இல்லாவிடில் பாண்டவர்களைப் போல ஐந்தோ என்பதுநான் நம் கலாச்சாரம். நான் என்ன சொன்னாலும் கார்ப்பரேட்களின் சதியைத் தடுப்பது கஷ்டம் என்பது தெரியும். நீங்கள் இரண்டாவது குழந்தையைப் பெறுவது சமூக அழுத்தத்தில் தவிர்க்க முடியாது. வாழ்த்துக்கள்.