இந்த நூற்றாண்டின் இணையற்ற நுட்பர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று காலமானார். சமகால வாழ்வில் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளுள் ஒன்றைப் பயன்படுத்தியிராதவர்கள் மிகச் சிலர்தான் இருக்கக்கூடும். இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த அஞ்சலிக் கட்டுரையை நான் ஆப்பிள் மாக் புக் ப்ரோ கணியில் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். என் சட்டைப் பையில் ஐபோன் இருக்கிறது. என் முத்த மகன் ஐபாடில் இப்பொழுது பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். இளையவன் ஐபேடில் எதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறான்.  மனைவி மேல் தளத்திலிருக்கும் ஆப்பிள் சர்வர் வழியாகத் தொலைகாட்சியில் ஏதோஒரு பாட்காஸ்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இதுவே என் குடும்பம் ஸ்டீவ்க்குச் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாகத் தெரிகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆப்பிளின் சாதனங்கள் மாறியிருக்கின்றன. 

நான் முதன் முதல் ஆப்பிள் கணினியைப் பயன்படுத்தியது 1999-ல் ஜப்பானில் வசித்தபொழுதுதான். அந்தக் காலங்களில் நான் தீவிர தளையறு மென்கலன் ஆதரவாளன்.  என் ஜப்பானியப் பேராசிரியர் மாக்-கணினிகளைத் தவிர வேறெதையும் பயன்படுத்தமாட்டார். எனக்கும் அவருக்கும் இடையே கோப்புகளைப் பரிமாறிக்கொள்வது சிரமமாக இருக்கவே ஆய்வகத்திற்கு வந்த புதிய ஐ-மாக்கைப் பயன்படுத்தத் துவங்கினேன். எல்லாவற்றையும் திரைக்குப் பின்னாலே உள்ளடக்கி மிட்டாய் பச்சை நிறந்த்தில் இருந்த ஐ-மாக் சில நாட்களிலேயே எனதாகிப் போனது.  பின்னர் தளையறு மென்கலன் இயக்குதளமான பெர்க்லி யுனிக்ஸின் அடிப்படைக்கு மாக் மாறியபின் ஆப்பிள் என்னுடைய முதன்மை கணினியாக மாறிப்போனது.

ஸ்டீவ் ஜாப்ஸின் வரலாறையும் சாதனைகளையும் எழுத ஆரம்பித்தால் மிக எளிதாக ஒரு புத்தகம் நிறைந்துவிடும்.  கணினி நுட்பம் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே கணினி என்றிருந்த காலத்தில் சராசரி இல்லத்திற்கு அதைக் கொண்டுவந்தவர்கள் ஜாப்ஸ்-ம் அவரது தோழர் ஸ்டீவ் வாஸ்நியாக்கும்.  ஆரம்பகாலம் முதற்தொட்டே கணினியின் சகல அங்கங்களையும், அதன் வன்கலன், மென்கலன், வடிவமைப்பு, பயனாக்கம் என் எல்லாவற்றையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருத்தியே வடிவமைத்தார்.    இது இறுதிவரை அவரது சாதனங்கள் எல்லாவற்றிலும் முதன்மையாக மாறிப்போனது.

முதன்முறையாக ஐபாடை சந்தைப்படுத்தியபொழுது அதனுள் பொதிக்கப்பட்ட (சாதாரண பயனர்களால் மாற்ற முடியாத) பாட்டரிக்காகவே அதைத் தவிர்த்தேன். அந்த சமயத்தில் ஜாப்ஸ் “பாட்டரியை மாற்ற வேண்டிய தேவையில்லை, அதற்குள்ளாக ஐபாடின் அடுத்த்த மேம்பட்ட வடிவம் வந்துவிடும். மேம்பட்ட புதுவடிவத்தின் ஈர்ப்பால் எல்லோரும் அடுத்த தலைமுறை ஐபாடுக்கு மாறுவார்கள்” என்று சொன்னபோது அதைக் கேட்டு சிரித்திருக்கிறேன், அது அவரது ஆணவத்தைக்காட்டுகிறது என்று நண்பர்களிடம் ஆத்திரப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் என்னிடம் 2003-ல் வாங்கிய மூன்றாம் தலைமுறை ஐபாட் பேட்டரி தீராமல் பயனில் இருக்கிறது. இதற்கு இடையில் இலவசமாகவும் காசுகொடுத்தும் பெற்ற ஆறு அல்லது ஏழு ஐபாட்/ஐபோன்கள் வீட்டில் கிடக்கின்றன – எல்லாமே முழுமையான செயற்பாட்டில். இருந்தபோதும் நேற்று அறிவிக்கப்பட்ட ஐஃபோன் 4S ஐ வாங்கத்தான் போகிறேன்.  நான் வாங்கும்பொழுது அவர் கல்லறையில் ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டாயம் புரண்டு படுப்பார்.

புரட்டிப் போடுவது ஜாப்ஸின் பிறவித் திறமை. எழுதப்படாத/எழுதப்பட்ட பல விதிகளை அழித்தெழுதியிருக்கிறார். 1984-ல் முதன்முறையாக வரைகலை இடைமுகம் கொண்ட சிறிய கணினியை உலகுக்குத் தந்தார்.  விரைவிலேயே ஆப்பிள் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக விலக வேண்டியிருந்தது. ஜாப்ஸ்-க்குப் பிறகான சரிவைச் சரிகட்ட விரைவிலேயே அவரைத் திரும்ப அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆப்பிள் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது. 1993-ல் மறுவரவிற்குப் பிறகு மரணத்தின்வரைத் தொடர்ச்சியாகப் பல்வேறு மேசைக்கணினி, மடிக்கணிகளை ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்க ஜாப்ஸ் முன்னடத்தியிருக்கிறார்.

இடைப்பட்ட நாட்களில் ஜார்ஸ் லூகாஸின் The Graphics Group  நிறுவனத்தை வாங்கி, அதன் பெயரை பிக்ஸார் என்று மாற்றி அதியற்புத அனிமேஷன் திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறார். Toy Story, A Bug’s Life  தொடங்கி Up, Toy Story 3 வரை பல மாபெரும் வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறது பிக்ஸார் நிறுவனம்.

பயணர்களின் தேவையே முதன்மையானது என்பது ஜாப்ஸின் தாரக ம்ந்திரம். “It’s all about the user, stupid!” என்பது அவர்து மிகப் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று.  இரண்டு அற்புதமான பாடல்கள், இரண்டு சாராசரி பாடல்கள், கூடவே பத்து மோசமானவை என்று பொத்தித்து $15-க்கு சி.டிக்கள் விற்கப்பட்டு வந்தன.  முதிர்ந்த, திறம்பட்ட நுட்பமான எம்பி3 வடிவம் கிடைத்தபோதும் வாடிக்கையாளர்களை முட்டாள்களாகவே தீர்மானித்துவந்த இசைச் சந்தையின் வடிவததை மாற்றி ‘ஒரு பாட்டு – ஒரு டாலர்’ என்று தனக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள ஐ-ட்யூன் சந்தையை உருவாக்கினார்.  மிக எளிமையாக, கவர்ச்சியாக ஒரு சாதனம், மிக எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஐ-ட்யூன் சந்தை இரண்டையும் ஒன்றிணைத்து இசைவணிகத்தின் போக்கை மாற்றியமைத்தார்.

அற்பதமான பேச்சாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். முக்கியமான செய்திகளையும் எண்களையும் மாத்திரமே கொண்டு வடிவமைக்கப்பட்ட திரைகளைக் கொண்டு துல்லியமான நிறுத்தங்களுடனும், ஏற்ற இறக்கங்களுடனும் தன் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்த ஜாப்ஸ் ஆற்றிய உரைகள் மிகவும் அற்புதமானவை.  ஒரு ஆசிரியனாகக், கேட்பவர்களுடன் எப்படி உரையாடுவது, அவர்களின் கவனத்தை எப்படி நம்மீது நிறுத்திவைப்பது போன்ற நுட்பங்களைக் கற்க நான் பல முறை அவரது பேச்சுகளின் வீடியோக்களைத் திரும்பக் கேட்டிருக்கிறேன்.  கேட்பவர்களை வசியப்படுத்தி திரித்தலை மெய்யாக்குபவர் (Reality Distortion Field) என்று சில உளவியலாளர் குற்றம் சொல்லும் அளவிற்குக் கிறங்கவைக்கும் பேச்சாளார்.   MacWorld, Worldwide Developer’s Conference போன்றவற்றில் ஸ்டீவ்ஸ் பேச்சைக் கேட்பதற்கு, கிட்டத்தட்ட முதல் தர ராக் இசைக்குழுவுக்கு இருக்கும் இரசிகர் கூட்டம்போல அடிமைக்கூட்டம் உண்டு.

வாடிக்கையாளர்களின் நாடியை நுட்பமாக அறிந்திருந்தது ஜாப்ஸின் மாபெரும் மேதைமைக்ளுள் ஒன்று.  திறமைகளைக் கொண்டிருத்தலுக்கு மேலாகத் தன் திறமைகளின் உச்ச எல்லையை அறிந்து தன்னம்பிக்கையே உருவானவர் ஜாப்ஸ். சென்ற வருடம் முதன்முறையாக ஐபேட் சாதனத்தை அறிமுகம் செய்த பொழுது ஒரு பத்திரிக்கையாளர் “இது எந்த அளவு வெற்றிபெரும் என்று உங்கள் சந்தைக் கணிப்புகள் காட்டுகின்றன?” என்று கேட்டார். அதற்கு ஜாப்ஸ் “இல்லை, தங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்திருப்பது வாடிக்கையாளர்களின் வேலையில்லை” என்று சொன்னார். சமீபத்திய கணிப்புகளின்படி ஐபேட் அட்டைக்கணிகளில் சந்தையில் 84 சதவீததைப் பிடித்திருக்கிறது.  சந்தையை வழிநடத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ் – தனி நபருக்கான மாக் கணினி, வரைகலை இடைமுகம் கொண்ட மேசைக்கணினி, அழகுணர்வுடன் கூடிய மாக்புக் மடிக்கணினிகள், ஐபாட், ஐஃபோன், ஐபேட் என்று புதிய சந்தைகளைத் தொடர்ச்சியாக உருவாக்கியவர் அவர்.

எழுபதுகளில் கணினித் துறைக்கு வந்த பல திறமைசாலிகளுள் முதன்மையானவர் ஜாப்ஸ் என்று சொன்னால் அது மிகையில்லை. உண்மையில் சொல்லப்போனால் ஜாப்ஸ் ஒரு தொழில்நுட்பரே கிடையாது. அவருக்கு வன்கலன் வடிவமைக்கத் தெரிந்ததில்லை; மென்கலன் எழுதத் தெரியாது. ஆனால் எந்த வேலையை யாரைக்கொண்டு அற்புதமாகச் சாதிக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருந்தது.

Hardware Technologist, Software Engineer, Design Engineer, Manager, Chief Technology Officer, Chief Executive Officer, President என்று எந்த அடையாளமும் தனக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்பது ஜாப்ஸின் கருத்து. தொழில்நுட்பத் தலைவர் (Technology Leader) என்று தன்னை விளித்துக் கொண்டவர் ஜாப்ஸ்.

ஆம், உண்மைதான்! இன்னொரு தன்னிகரில்லாத தொழில்நுட்பத் தலைவர் நாம் எளிதில் காணமுடியாது என்றுதான் தோன்றுகிறது.