திரையில் கர்நாடக இசை இராகங்கள்

நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்ற தொடரை நிறைவு செய்தேன். பதினெட்டு பாகங்களாக ஒலிபரப்பப்பட்ட இந்தத் தொடர் ஏற்கனவே நான் வலைப்பதிவில் எழுதியவற்றைச் சற்றே விரிவுபடுத்தி வழங்கப்பட்டது. ஜாஸ் இசையைப் பற்றி நம்மவர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்காது என்ற காரணத்தால் நிறைய விளக்கங்களையும் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு பாடல்களை மட்டுமே ஒவ்வொரு பகுதியிலும் வழங்கினேன். இம்முறை மாறாக அதிகம் பாடல்களையும் மிகக் குறைந்த அளவில் இசைக்குறிப்புகளையும் விளக்கங்களையும் தரவிருக்கிறேன். இதற்கு இன்னொரு (முக்கிய) காரணமும் உண்டு. நான் கர்நாடக இசையை முறையாகக் கற்கவில்லை. எனவே இதைப் பற்றி அதிகம் பேச என்னிடம் சரக்கில்லை. எனவே நிகழ்ச்சியில் பேச்சைக் குறைத்துக் கொண்டு பாடல்களை அதிகம் தரவிருக்கிறேன்.

இப்படிச் சொல்வதால் நான் ஜாஸ் இசையை முறையாகக் கற்றுக்கொண்டவன் என்றோ அல்லது அதில் கரைகண்டவன் எனவே அதிகம் பேசினேன் என்றோ அர்த்தமில்லை.  ஒரு பழைய படத்தில் சோவை நாகேஷ் "நீ அமெரிக்கா போயிருக்கிறாயா?" என்று கேட்பார். உடனே சோ "நீ போயிருக்கிறாயா?" என்று திருப்பிப் கேட்பார். நாகேஷ் இல்லை என்று சொல்ல உடனே அடுத்த நொடியில் "அப்ப நான் போயிருக்கேன்" என்பார்.  இதைப் போலத்தான் இங்கே மற்றவர்களுக்கு ஜாஸ் அடிப்படைகளைப் பற்றியோ, வரலாறோ தெரியாது என்பதால் நானே ஆலையில்லா ஊரூக்கான இலுப்பைப்பூ சர்க்கரையானேன்.  மற்றபடி இங்கே கர்நாடக இசையில் கரைகண்ட நண்பர்கள் நிறைய இருக்க அடக்கி வாசிப்பது நல்லது.

நான் ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது கற்றுக் கொள்வதில் ஒரு புதிய உத்தியைக் கைகொள்ளத் தொடங்கினேன். ஏதாவது ஒன்று நமக்குத் தெரியாது ஆனால் கற்றுக் கொள்ள விருப்பம் இருக்கிறது அல்லது அவசியம் கற்றுக் கொண்டாக வேண்டும் என்று வந்தால் உடனடியாக அதை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதாக அறிவித்துவிடுவேன்.  இது முதன் முதல் நான் ஆராய்ச்சிக்கு மேற்கொண்ட  Nonlinear Optics என்ற துறையில் தொடங்கியது. ஆய்வகத்தில் முதல் வருட மாணவனாக இருந்த நான் என் பேராசிரியர், ஐந்தாம் வருட மூத்தவர், இன்னும் பி.ஹெச்.டி முடித்து ரிசர்ச் அசோஸியேட்டாக இருந்தவர் எல்லாரையும் சனிக்கிழமைகளில் உட்கார வைத்து பாடம் எடுத்தேன். (காரணம் என்னைப் போலவே இவர்களும் அப்பொழுதுதான் முதன்முறையாகக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள்). நமக்கு ஒன்றுமே தெரியாது என்று தொடங்கும்பொழுது எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தப்பாகக் கூடச் சொல்லலாம். பேசுபவனுக்கு ஒன்றும் தெரியாது என்பதால் கேட்பவர்கள் அவனிடம் குறைகாண்பதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்கள் தவறைக் கண்டுபிடித்துச் சொன்னவுடன் "ஆமாம், நல்லது. நான் தப்பாப் புரிஞ்சுகிட்டேன்" என்று தயக்கமில்லாமல் சொல்லிவிடலாம். மாறாக எல்லாம் தெரியும் என்ற பாவனையைக் காட்டி பயிற்றுவிக்கத் தொடங்கினால் நம் தவறை பிறர் சொல்லும்பொழுது பூசி மொழுகத்தான் முயற்சிப்போம். அதுவே நாம் கற்றுக் கொள்வதற்குத் தடையாக மாறிவிடும்.  இந்த உத்தி LaTeX, C++, Linux, என்று தொடங்கி ஃபோரம்ஹப்பில் தமிழ் செய்யுள் இலக்கணம், இன்னும் ஜாஸ் அடிப்படை என்று பல விஷயங்களிலும் பயன்பட்டிருக்கிறது.  அதே உத்திதான் இங்கும் ஒன்றுமே தெரியாத நான் வியாக்யானம் செய்ய வந்திருக்கிறேன்.

பெரும்பாலான நேரங்களில் நான் எதை எழுதத் தொடங்கினாலும் எனக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களாகவே வரித்துக் கொண்டு என்னைக் கிழித்துக் குதறியெடுக்கிறார்கள்.  (ஒருவகையில் நானே கூட இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.)  இந்தத் தொடரில் கட்டாயமாக கர்நாடக சங்கீதத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. என் மனதுக்குப் பிடித்த பல பாடல்களை, குறிப்பாக இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்களை, இந்தத் தொடரில் பிறரிடம் முன்வைக்க முடியும் அதை வைத்து கொஞ்சம் கதைக்கவும் முடியும். வாராவாரம் வானொலியில் போடும் பாடல்களை இங்கே வலைப்பதிவிலும் எழுத உத்தேசம்.  வாரந்தோறும் ஒரு இராகத்தை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அமைந்த மூன்று அல்லது நான்கு பாடல்களைப் பற்றி பேச உத்தேசம்.  இராகங்களைத் தெரிந்தெடுக்க எந்தவிதமான வரிசையையும் நான் மேற்கொள்ளப் போவதில்லை. வானொலியில் ஒலிபரப்புவதற்கு மேலதிகமாக அந்த இராகத்தின் அடிப்படையில் அமைந்த பிற பாடல்களையும் தெரிந்த அளவுக்கு இங்கே பட்டியலிட உத்தேசம்.  இது இராகத்தைக் குறித்த கூடுதல் புரிதலுக்கு உதவக்கூடும்.

இந்தத் தொடரில் கர்நாடக இசையின் அடிப்படைகளைப் பற்றி விவாதிக்கவும் (எனக்கு) விளக்கவும் நண்பர்களை அழைக்கிறேன்.  அப்புறம் வழக்கமான இளையராஜா-ரஹ்மான் சண்டையையும் அவ்வப்போது போடலாம்.  ஆனால் இதற்கு நான் எடுத்துவரப் போவது அட்டைக்கத்திதான் எனவே உங்களுக்கு அட்டைக்கத்தியா பட்டாக்கத்தியா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நாளை இரவு மாயாமாளவ கௌவ்ளை

7 Replies to “திரையில் கர்நாடக இசை இராகங்கள்”

 1. ஒலிபரப்பாகும் நேரத்தில் கேட்க முடியாமல் போனால், பின்பு கேட்க இந்த நிகழ்ச்சிகள் ஏதேனும் தளத்தில் வலையேற்றப்படுகின்றனவா?

 2. I find it difficult to record as I was presenting. (esp. with my Mac as the site is not friendly with anything other than IE). Will attempt again.

  I will try to write it here as much as possible. More importantly will certainly give links to audio, video, etc.

 3. ஹையா, உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (விசிலடிப்புக்கு என்ன ராகம் என்று கேட்பதாக நினைத்துக்கொண்டுவிடாதீர்கள் :)))

  - என். சொக்கன்,
  பெங்களூர்.

 4. இதை... இதைத்தான் எதிர் பார்த்தேன்...கலக்குங்கள்...

 5. மிக்க மகிழ்ச்சி. உங்கள் இசை தொடர்பான பதிவுகளுக்கு நான் ரசிகன்.

 6. சொக்கன், கவி, ஶ்ரீனி, நன்றிகள்! உங்கள் எதிர்பார்ப்புகளை கூடியவரையில் நிறைவேற்றுவேன்.

 7. உங்களுடைய வானொலி நிகழ்ச்சி பற்றி எனக்கு தெரியாது. எந்த அலை வரிசை , எந்த நேரம் (இந்தியா) பற்றி கூற முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *