கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை.
இரவு உறங்கச் செல்லும்பொழுது நாளைய நாளை அமைதியாகக் கழிக்க வேண்டும். இயன்றவரை மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கச் செல்வது வழக்கம். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலையின் பளு நெருக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு வார இறுதியை இப்படிக்கழிக்கலாமே என்ற ஆதங்கம் இயல்பானது. நேற்று அப்படித்தான் நினைத்திருந்தேன். இன்று காலை விடிந்ததும் என் கண்ணில்பட்ட முதல் செய்தி “பாடகி ஸ்வர்ணலதா மறைவு”.
மனதுக்குப் பிடித்த விஷயங்கள் என்றால் இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது இரண்டும் முக்கியமானவை. எனவே இன்று கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த பாடல்கள் 1990களில் வந்தவை. தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜா, வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி. அந்தக் காலங்களில் இளையராஜாவின் இசையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா பாடல், தளபதியில் ராக்கம்மா கையத்தட்டு, சின்னத் தம்பியில் – போவோமா ஊர்கோலம் மூன்றும் மிக முக்கியமான பாடல்கள். இளையராஜாவின் இசையில் இன்னும் பல பாடல்கள் இவரால் மெருகூட்டப்பட்டவை
சத்திரியன் – மாலையில் யாரோ
தர்மதுரை – மாசி மாதம் ஆளான பொண்ணு
தேவர் மகன் – மணமகளே
என் ராசாவின் மனசிலே – குயில் பாட்டு
புதுப்பட்டி பொண்ணுத்தாயி – ஊரடங்கும் சாமத்திலே
செந்தமிழ்ப் பாட்டு – காலையில் கேட்டது
வீரா – மலைக்கோவில் வாசலிலே
பின்னர் ரகுமானில் வருகையில் ஸ்வர்ணலதாவுக்கு மேலும் அற்புதமான பாடல்கள் கிடைத்தன; குறிப்பிடத்தக்கவை
அலைபாயுதே – எவனோ ஒருவன்
இந்தியன் – மாயா மச்சிந்தா
கருத்தம்மா – போறாளே பொன்னுத்தாயி
உயிரே – பூங்காற்றிலே
உழவன் – ராக்கோழி ரெண்டு
பம்பாய்- குச்சிக் குச்சி ராக்கமா
பாடல்கள் ரகுமானின் இசையில் ஸ்வர்ணலதா மெருகூட்டியவையாக உடனடியாக நினைவிற்கு வருகின்றன. ரகுமானை இந்தித் திரையுலகில் அடையாளம் காட்டிய ஹை ராமா (ரங்கிலா) பாடலை அற்புதமாகப் பாடியதற்கு அவர் ஸ்வர்ணலதாவை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூறுவார் என்றே நினைக்கிறேன். தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா என்று பல இசையமைப்பாளர்களுடனும் இணைந்து இனிமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்.
சுசிலா, வாணி ஜெயராம், ஜானகி, சித்ரா என்று முதல்வரிசைப் பாடகிகளுடன் இணைத்துப் பேசப்பட வேண்டியவர் ஸ்வர்ணலதா. திறமையான பாடகி என்றால் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் முழுமையாக வெளிக்கொணரத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துள்ளல் (ஆட்டமா, ராக்கமா), சோகம் (போறாளே பொன்னுத்தாயி, பூங்காற்றிலே), ஏக்கம் (எவனோ ஒருவன்,) இப்படிப் பல உணர்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கிறார். இன்னொரு முக்கியமான தகுதி – அப்பழுக்கில்லாமல் வார்த்தைகளைத் துல்லியமாக உச்சரிப்பது. அந்த வகையில் சமீபத்தியப் பாடல்களைக் கேட்கும்பொழுது அவருடைய இழப்பு இன்னும் பெரிதாகத் தெரிகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு பாடகியான ஷ்ரேயா கோஷால் கிட்டத்தட்ட ஸ்வர்ணலதாவின் மறுவடிவாகவே எனக்குத் தோன்றுகிறார்.
மிகச் சிறியவயதிலேயே திரையிசைக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. 37ஆம் வயதில் மரித்துப் போனது அபஸ்வரம் இல்லாத வாழ்க்கையின் அபத்த முடிவு.
மிகவும் வித்தியாசமான குரலைக் கொண்ட ஸ்வர்ணலதாவை ராஜாவும் ரஹ்மானும் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களால் இவர் வாய்ப்புப் பெற்றார் என்றில்லாமல், அவர்களுடைய பாடல்களுக்கு இவரால் கூடுதல் பலம் (Value-add) தரமுடிந்தது என்பதே அவருடைய மிகப் பெரிய தகுதி. அநேகமாக ஸ்வர்ணலதா பாடிய எல்லாமே நல்ல பாடல்கள் (அல்லது ஹிட் பாடல்கள், அல்லது இரண்டுமே) என்பது ஆச்சர்யமே. குறைவாகப் பாடினாலும் என்றென்றும் நினைவுகூரப்படும் ஒருவராக இருப்பார். தமிழ்த் திரையிசைக்கு மிகப் பெரிய இழப்பு.
உங்களுடைய பாடல் பட்டியலுடன் எனக்கு ‘வள்ளி’யின் ‘என்னுள்ளே, என்னுள்ளே’வும் பிடிக்கும்.
– என். சொக்கன்,
பெங்களூரு.
சொக்கன். இறுதியாக என்னுள்ளே பாடலின் யூ ட்யூப் வீடியோவை இணைப்பதாக இருந்தேன் (ஆகச் சிறந்த பாடலென). சரிவர இணைக்க முடியவில்லை. நீங்கள் சரியாகப் பிடித்துவிட்டீர்கள்.
நல்ல பாடகி. ’மாலையில் யாரோ’ என்னுடைய எல்லா காலத்திற்குமான விருப்பப் பாடல். இசை பற்றிய க்யான் இல்லாமலேயே சொல்லமுடியும் அது பாடுவதற்கு மிகக் கடினமான பாடல் என்று. மிகத் தெளிவாகவும் , உணர்ச்சிகளை அழகாகவும் வெளிப்படுத்தியிருப்பார்!. இவருக்கு ஏன் அதிகமான பாடல்கள் கிடைக்கவில்லை என்று தோன்றியதுண்டு. ஒருவேளை ஷாஜியால் இதை விளக்கமுடியும் என்று நினைக்கிறேன்!.
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ….
இவர் குரல் கேட்காத நாட்களே இல்லை…. இவர் ரசிகர் சார்பில் பேஸ்புக்கில் குரூப்பில் இணையவும்….