Photonics in India
by வெங்கட் • January 7, 2010 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
டிசம்பர் மாத Photonics Spectra சஞ்சிகை Photonics Is Heating Up in Indiaஎன்று ஒரு முகப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எந்த புண்ணியவதியோ தெரியவில்லை, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார். கட்டுரையில் கொச்சி பல்கலைக்கழகம், பெங்களூர் ராமன் ஆய்வுக்கூடம், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் இவற்றைப் பற்றி மாத்திரமே எழுதியிருக்கிறார்.
உண்மையில் இவற்றைத் தாண்டி பல விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன. (நான் இந்தியாவை விட்டு அயலகத்தில் குடியேறி பதினைந்து வருடங்களாகிவிட்டன, எனவே இவற்றில் பல விடுபட்டிருக்கலாம்). முதலில் இந்தியாவில் இந்தத் துறை சார்ந்த மேற்படிப்பு ஐஐடியில் பல வருடங்களாக உண்டு (M.Tech in Optoelectronics), தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 1986-87ல் M.Tech Laser Technology படிப்பை அறிமுகப்படுத்தியது. பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் (சி.வி.ராமன் அறிவுப்பரம்பரை) காலங்காலமாக Optics, Lasers, Spectroscopy, Photonics, Optical metrology, Quantum Optics, Nonlinear Optics என்று பல துறைகளில் முதல்தர ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐஐடி கான்பூரிலும் தொன்னூறுகளில் தொடங்கி M.Tech Lasers படிப்பு உண்டு. அதனுடன் பல முதல் தர ஆய்வுக்குழுக்களும் உண்டு.
ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கிரீஷ் அகர்வால் துவக்கிய குவாண்டம் ஒளியியல் குழு உலகளாவிய புகழ் பெற்றது. அவர் அங்கு ஒரு நல்ல பாரம்பரியத்தையே உருவாக்கியிருக்கிறார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலும் பனாரஸ் ஹிந்து பல்கலைகழத்திலும், கொல்கத்தாவிலும் (சி.வி.ராமன் நோபெல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆய்வை அங்கேதான் மேற்கொண்டார்) நிறமாலையியல் (Spectroscopy) குழுக்கள் முதல்தர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவையெல்லாம் கட்டுரையை ஆசிரியரியையின் கண்களில் படவில்லை போலிருக்கிறது. சொத்தையான இரண்டு மூன்று குழுக்களை மட்டுமே காட்டுவதால் இந்தியாவைப் பற்றிய மோசமான சித்திரம்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆய்வு/கல்வித்துறை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும்போதும் சொல்லிக்கொள்ளத் தக்க தொழித்துறை இந்தியாவில் உருவாகவில்லை. தகவல் புரட்சியின் ஆதார தொழில்நுட்ப முதுகெலும்பு ஒளியனியல்தான். தகலல் நுட்பத்துறை இந்தியாவில் பெருவளர்ச்சி கண்டபோதும் ஆதார அறிவியல், நுட்பம் சார்ந்த வர்த்தக முயற்சிகள் இல்லாமலேயே போய்விட்டன. எனக்கென்னவோ காலம் கடந்துவிட்டதைப் போலத்த்தான் தோன்றுகிறது, இனி இந்தியாவில் இவை சாத்தியமில்லாமலேயே போய்விடக்கூடும்.
