இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.

புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் ரேடியோ அலைவரிசையை முயன்று இறுதியாக செல்பேசிகளின் வழியே குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தபடி பம்ப் செட்களை இயக்க வழிகண்டிருக்கிறார். இந்த அயராத பயணத்தில் அவரது மனைவி அவருக்குப் பெருந்துணையாகத் தொடர்ந்து வந்திருக்கிறார்.  நானோ கணேஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கண்டுபிடிப்பு வளரும் சந்தைகளுக்கான செல்பேசி பயன்பாடுகளுக்கான முதல் பரிசை நோக்கியாவிடமிருந்து பெற்றிருக்கிறது.

சமீபத்திய தி எக்கனாமிஸ்ட் சஞ்சிகை சந்தோஷின் கண்டுபிடிப்பைப் பற்றிய உற்சாகமூட்டும் செய்தியை வெளியிட்டிருக்கிறது.  இவரது கண்டுபிடிப்பு இப்பொழுது ஆஸ்ஸியன் (Ossian) எனும் நிறுவனம் வழியே சந்தைப்படுத்தப்படுகிறது.   கீழிருக்கும் சலனப்படத்தில் சந்தோஷின் நானோ கணேஷ் கொண்டு நீர் இறைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

பெரும்பாலான அற்புதக் கண்டுபிடிப்புகள் சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்தான் துவங்குகின்றன. ஆங்கிலத்தில் scratching a personal itch என்பார்கள். கூலிக்காக வேலை செய்யும்பொழுது இதுபோன்ற எளிமையான, அழகான கருவிகள் உருவாதல் கடினம்.  இன்னொரு அற்புதமான விஷயம், கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஒரே பிரச்சினைக்குத் தீர்வுகாண தொடர்ச்சியாக முயன்றமை.  இந்த நெடும்பயணத்தில் அலாரம் கடிகாரங்கள், ரேடியோ அலைவரிசை என்று தொடர்ச்சியாகத் நுட்பத்தை மேம்படுத்தியும் மாற்றியமைத்தும் வந்திருக்கிறார்.  கூடவே பெரும்பாலான துவக்கநிலை நிறுவனங்களில் அற்புதமான குழு ஒற்றுமை தேவைப்படுகிறது. சந்தோஷின் மனைவி இரவு பகலென்று பாரமல் அவருடன் இணைந்து நுட்பத்தை மேம்படுத்த உதவியிருக்கிறார்.  உற்சாகமூட்டும் மகிழ்ச்சிகரமான செய்தி.

[youtube]http://www.youtube.com/watch?v=IYXlOaO3Nb8[/youtube]