மோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும்.  சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு முகங்களில் (ஆரோகண அவரோகணத்தில்) கொண்டது என்று சொன்னோம். அப்படிப்பட்ட இராகங்களுக்கு சம்பூர்ணராகம் என்று பெயர். மோகனம் ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது. ஐந்து ஸ்வரங்களைக்கொண்ட இராகங்களை ஔடவ இராகம் என்று அழைப்பார்கள்.

ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ
அவரோகணம்: ஸ த2 ப க3 ரி2 ஸ

மோகனத்தின் வடிவத்தைப் பாடுகிறார் திரையிசைப் பாடகி கே. சித்ரா.

[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/01/mohanam_swaram.mp3|titles=mohanam_swaram]

மோகனம் ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் ராக் தூப் என்று அழைக்கப்படுகிறது.  எந்த வேளைகளிலும் பாடுவதற்கு ஏற்றது மோகன இராகம்.

மோகனம் மலையும் மலைசார்ந்த பகுதிகளாலான குறிஞ்சி நிலத்திற்குச் சொந்தமானதாக தமிழிசை நூல்கள் வரையறுக்கின்றன.  ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது என்றாலும் இதில் பாடகரின் கற்பனைத் திறனுக்கேற்றபடி விரிந்துகொடுப்பது மோகனம்.  தியாகையரின் நனு பாலிம்ப, மைசூர் வாசுதேவாச்சாரின் ரா ரா ராஜீவலோசனா போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழிசையைல் அருணாச்சல கவிராயரின் “ஏன் பள்ளிகொண்டீரைய்யா’ என்ற பாடல் மிக அற்புதமானது, இப்பாடலும் மோகன இராகமும் மறைந்த இசைக்குயில் என்.சி. வஸந்தகோகிலத்தின் மயக்கும் குரலில் காலத்தால் அழியாத புகழ்கொண்டன.  எனக்குத் தனிப்பட்ட முறையில் சிறுவயதிலிருந்து இப்பாடலில் ஈர்ப்பு உண்டு; என் அம்மா வேலைகளுக்கு நடுவே மிகவும் மெல்லிய குரலில் ஏன் பள்ளிகொண்டீரைய்யாவைப் பாடுவது இப்பொழுதும் நினைவிருக்கிறது.

மீண்டும் மோகனத்தின் வடிவததைக் காட்ட கே.சித்ரா பாடும் சில வரிகள். இப்பாடல் ஊத்துக்காடு வெங்கடசுப்பையரால் எழுதப்பட்டது.

[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/01/swagatham_krishna.mp3|titles=swagatham_krishna]

மேற்கத்திய செவ்வியல் இசையில் ஐந்து நோட்டுகளை மாத்திரமே கொண்ட அமைப்பிற்கு Pentatonic Scale என்று பெயர். உலகெங்கிலும் நாட்டார் இசையிலும் செவ்வியல் இசையிலும் pentatonic இராகங்கள் பெருமளவில் புழங்குகின்றன. கிட்டத்தட்ட மோகனத்தின் அமைப்பு அயர்லாந்து நாட்டின் கெல்டிக் இசையிலும், ஜப்பானின் இசை நாடக வடிவங்களிலும், இன்னும் போலந்து, கீரீஸ், இந்தோனேஷியா,சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் பிரபலமாகப் புழங்குகின்றன. ஒரு அற்புத ஒற்றுமை நாம் குறிஞ்சி நிலத்திற்கான பண் என்று சொல்லும் அதே வடிவம் ஸ்காட்டிஷ் ஹைலாண்ட் (மலைப் பகுதி) போலந்து மலைப்பிரதேசங்கள் உள்ளிட்ட மலைசார்ந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கிறது. பெண்டடானிக் ஸ்கேல் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது.

தமிழ்த் திரையிசைக்கு வருவோம்.  முதல் பாடல்
பூவில் வண்டு கூடும், — காதல் ஓவியம் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்) இளையராஜா – 1982
[youtube]http://www.youtube.com/watch?v=V69pGaQpen8[/youtube]

இளையராஜா மோகனத்தில் பல அற்புதமான பாடல்களை இசைத்திருக்கிறார்.

  • கண்ணன் ஒரு கைக்குழந்தை (பத்ரகாளி)
  • கீதம்.. சங்கீதம் (கொக்கரக்கோ)
  • நானொரு பொன்னோவியம் கண்டேன் (கண்ணில் தெரியும் கதைகள்)
  • இதயம் ஒரு கோவில் (இதயக்கோவில்)
  • ஏ.பி.ஸி நீ வாசி (ஒரு கைதியின் டைரி)

அக்னிநட்சத்திரம் படத்தில் மோகனத்திற்குப் பாப், டெக்னோ வடிவம் தந்தது மாபெரும் இசைச் சாதனை.  நாம் கேட்கவிருக்கும் அடுத்த பாடல்

வான்போலே வண்ணம் கொண்டு – சலங்கை ஒலி  (எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷைலஜா)  இசை: இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=LkPxCJ5ux-c[/youtube]
பாய்ஸ் திரைப்படத்தில் பாய்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டுல ஹெல்மட் மாட்டாதே என்று அபத்தமான வரிகளைக் கொண்ட பாடல் ஏ.ஆர். ரகுமானால் மோகனத்தின் சாயலில் இசைக்கப்பட்டது.   இளையராஜா, ரகுமான் என்று சாதனை இசையமைப்பாளர்களுக்கு மாத்திரமல்லாது அதிகம் பிரபலமாகாதவர்கள், ஒன்றிரண்டு படங்களுக்கு மாத்திரமே இசையமைத்தவர்களுக்குக் கூட மோகனம் அற்புதமாகக் கைவந்திருக்கிறது. அடுத்த பாடல்

மனமே தொட்டாச் சிணுங்கிதானே –    தொட்டாச் சிணுங்கி – (ஹரிஹரன்) – பிலிப் ஜெர்ரி 1995

தேர்ந்த பாடகரான ஹரிஹரன் பாடலில் செவ்வியல் அமைப்புகளைத் துல்லியமாகக் கையாண்டிருக்கிறார்.  இனி கடைசியாக, நாட்டுப்புற இசைச் சாயலில் மோகனத்தில் ஒரு அற்புதமான பாடல்; தேவா இசையமைப்பில்
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா – காதல் கோட்டை, (கிருஷ்ணராஜ், தேவா) தேவா – 1996
[youtube]http://www.youtube.com/watch?v=h1Q7CpxW7BY[/youtube]
இனி அடுத்த வாரம் இன்னொரு ராகத்துடனும், பாடல்களுடனும் சந்திப்போம்.