புகழ்பெற்ற கணிதவியலாளர், வெகுஜன அறிவியல் எழுத்தாளர் மார்ட்டின் கார்ட்னர் (Martin Gardner) சென்ற சனிக்கிழமை, 22 மே 2010 அன்று காலமானார்.  கார்ட்னர் கிட்டத்தட்ட எழுபது புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  எண்ணிக்கை கடந்து அவர் புத்தகங்கள் பல காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கின்றன.  அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதும்பொழுது காலத்தால் அழியாமல் அவை நிலைத்திருப்பது அசாத்தியமானதும், ஒரு வகையில் வருந்தத்தக்கதுமாகும். வெகுவாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் அறிவியலில் நேற்றைய சாதனைகள் இன்றைய சாதாரணங்கள், நாளை அவை முற்றிலுமாக மாறிப்போயிருக்கும்.  ஆனால் கார்ட்னரின் Fads and Fallacies in the Name of Science (1952, revised 1957), Science: Good, Bad and Bogus, 1981 உள்ளிட்ட பல புத்தகங்கள் போலி அறிவியலை அடையாளம் காட்ட எழுதப்பட்டவை.  படைப்பியல் (Creationism), சயின்டாலஜி (Scientology),  மீயுணர்வு (Extra-sensory, ESP), ஆழ்மனவியக்கம்  (Psychokinesis) உள்ளிட்ட பல, அறிவியலைப் போலத் தோற்றமளிக்கும், அறிவியலுக்குப் புறம்பான ஏமாற்று வித்தைகளைத் துல்லியமாக அவை தோலுரித்துக் காட்டின.  சோகமான விஷயம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் இவற்றில் பல ஏமாற்றுகள் இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கின்றன. அந்த வகையில் கார்ட்னரின் புத்தகங்கள் இன்றைக்கும் முக்கியமானவையாகத் திகழ்கின்றன.  கார்ட்னரைக் குறித்து நான் தெரிந்துகொண்டது டக்ளஸ் ஹோஃப்ஸ்டாடரின் (Douglas Hofstadter) ஒரு கட்டுரை வாயிலாகத்தான். கார்ட்னரின் கணிதப் புதிர்களைப்பற்றி அவர் சொன்ன Mathematics, Magic and Mystery என்ற புத்தகத்தைத் தேடிப்போக, ஏமாற்று அறிவியல் குறித்த கார்ட்னரின் புத்தகங்களுக்குப் பரிச்சயமேற்பட்டது. மேற்சொன்ன மூன்று புத்தகங்களும் டோவர் பதிப்பகத்தின் மலிவுவிலைப் பதிப்புகளில் கிடைக்கின்றன. Fads and Fallacies in the Name of Science புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

காட்னரின் இளமைப்பருவம் அமெரிக்காவின் ஓக்லஹாமா மாநிலத்தில் டல்ஸா பகுதியில் துவங்கியது. அவர் தத்துவவியலில் இளங்கலைப் பட்டத்தை சிக்காகோ பல்கலைக்கழத்தில் பெற்றார். தொடர்ந்து கட்டாய அழைப்பில் அமெரிக்கா இராணுவத்தில் இணைந்து இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றினார்.  போருக்குப் பின் படிப்பைத் தொடர அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பின்னர் நியூயார்க் மாநிலத்திற்குக் குடிபெயர்ந்து தன்னுடைய எழுத்துப்பணியைத் தொடங்கினார். சஞ்சிகைகளில் பத்தி எழுதுவது, கணிதம், கணிதவியலின் தத்துவ அடிப்படைகள், ஏமாற்று அறிவியல்கள், அறிவியல்/தர்க்கப் புதிர்கள் உள்ளிட்ட பல படைப்புகளை அவர் 2010 ஆம் ஆண்டு சாகும்வரை எழுதித் தொடர்ந்திருக்கிறார். விளையாட்டும் சீண்டல்களும் நிறைந்த அறிவியல் புதிர்கள் கார்ட்னருக்கு மிகவும் நெருக்கமானவ.

கணிதம் மற்றும் அறிவியல் தவிர அவர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளையும் சில புதினங்களையும் எழுதியிருக்கிறார்.  லூயி கரோலின் ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் புத்தகத்தின் தர்க்க அடிப்படைகளையும், அதன் புதிர்களையும் குறித்து இவர் எழுதிய The Annotated Alice (Clarkson Potter, 1960),  More Annotated Alice (Random House, 1990), The Annotated Alice: The Definitive Edition (Norton, 1999) புத்தகங்கள் மிகப் பிரபலமானவை.

இறைநம்பிக்கை குறித்த கார்ட்னரின் கருத்துக்கள் பல சமயங்களின் என்னுடைய எண்னங்களை ஒத்துப்போகின்றன.  அவர் கட்டாயம் இறைமறுப்பாளர் (atheist) இல்லை, அவர் அறிபுறனாரும் (Agnost)  இல்லை. பொதுவில் கடவுளின் இருப்பை ஒத்துக்கொண்டவர் அவர். ஆனால் மனிதனின் அன்றாடத்தின் கடவுளின் இடையீடுகள் இருப்பதாக அவர் நம்பவில்லை.  எனவே நிறுவனமாக்கப்பட்ட சமயங்களுக்கு அவர் எதிரானவராக இருந்தார்.  கடவுளின் இருத்தல்/இன்மை குறித்த கேள்வி அறிவியலின் சட்டகங்களுக்கு அப்பாற்பட்டது என்பது கார்ட்னரின் கருத்து.

தன் இறுதிவரை அறிவியலின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களையும் அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தங்களையும் அயராது அடையாளம் காட்டியவர் மார்ட்டின் கார்ட்னர்.  வலதுசாரி அரசியல் பலத்துடன் இன்று மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள படைப்பியல் உள்ளிட்ட போலி அறிவியல்களை எதிர்க்க முன்னெப்பொழுத்தையும்விட நமக்கு இன்னும் ஒரு நூறு கார்ட்னர்கள் தேவையாக் இருக்கிறார்கள்.