திரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது.   22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம் பார்த்த மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இந்த இராகத்தின் ஏறு/இறங்கு வரிசைகள் :

ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ
அவரோகணம் : ஸ நி2 ப ம1 ரி2 ஸ

ஹிந்தோளத்தைப் போலவே இதுவும் ஆரோகண அவரோகணங்களிடையே சமச்சீர் தன்மை கொண்ட இராகம். இந்த இராகத்தின் அமைப்பைப் பாடகி சாருலதா மணி அவர்கள் பாடக் கேட்கலாம்.
[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/03/madhyamavathi.mp3|titles=madhyamavathi]

ஹிந்துஸ்தானி பாரம்பரியத்தில் இந்த இராகம் மதுமத் சாரங் என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் இதை பின்மதிய வேளைக்கு ஏற்ற இராகமாகக் கருதுகிறார்கள்.  கர்நாடக இசையின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழிசை மரபில் இது செந்துருத்திப் பண் என்று அழைக்கப்பட்டது.  கர்நாடக இசையில், இது மங்களகரமானது எனவே கச்சேரியின் இறுதியில் இறைவணக்கமாகப் பாடுவதற்கு ஏற்றது எனப் பாவிக்கிறார்கள்.  மேலும், கச்சேரியின் இடையில் இந்த இராகத்தைப் பாடினாலும் கச்சேரியின் குறைகள் கடவுளாலும் இரசிகர்களாலும் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையும் உண்டு.

கர்நாடக இசையில் இந்த இராகத்தில் பல அற்புதமான கீர்த்தனங்கள் இருக்கின்றன.  அவற்றுள் மிகப் பிரபலமான சில;

  • கமலாக்ஷி லோகசாக்ஷினி – ஷ்யாமா சாஸ்திரி
  • ஆடாது அசங்காது – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
  • நகுமோமு – தியாகையர்

தமிழ்த் திரையிசையிலும் பல இனிமையான பாடல்கள் இந்த இராகத்தில் இசைக்கப்பட்டிருக்கின்றன.  முதலாவதாக நாம் கேட்கப் போகும் பாடல் இளையராஜாவின் இசையில் பெருவெற்றியைப் பெற்ற சிப்பிக்குள் முத்து என்ற படத்தில் வரும் துள்ளித் துள்ளி நீ பாடம்மா என்ற பாடல். இப்பாடலின் ஆரம்பத்தில் மத்யமாவதியின் ஸ்வரங்களை ஜானகியும் பாலசுப்ரமணியமும் பாடுவதைக் கேட்கலாம்.

பாடல் : துள்ளித் துள்ளி
படம் : சிப்பிக்குள் முத்து
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=9tLYhiSVLv0[/youtube]
இளையராஜா மத்யமாவதி இராகத்தைப் பல உணர்ச்சிகளைக் காட்டப் பயன்படுத்தியிருக்கிறார். முள்ளும் மலரும் திரைப்படத்தில் ஜென்ஸி ஆண்டனி குரலில் வந்த அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை என்ற பாடல் துள்ளல் நிறைந்த சந்தோஷத்தை வடிக்கிறது. சகலகலாவல்லவன் படத்தில் மலேஷியா வாசுதேவன், ஜானகி பாடிய நிலாக்காயுது என்ற பாடல் காதலும் காமமும் தோய்ந்தது. இளமைக் காலங்கள் படத்தில் கே.ஜே யேசுதாஸின் குரலில் வந்த ஈரமான ரோஜாவே பிரிவையும், சோகத்தையும் காட்டுகிறது. என்றாலும் ஆகக்கூடி  இளையராஜா மத்யமாவதி இராகத்தை அதிகம் பயன்படுத்தியிருப்பது தாலட்டுப் பாடல்களுக்குத்தான்.

  • ஆரிரோ ஆராரோ – இந்திரன் சந்திரன்
  • செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு – மெல்லப் பேசுங்கள்
  • தங்க நிலவுக்குள் நிலவொன்று – ரிக்ஷா மாமா
  • தாழம்பூவே வாசம் வீசு – கை கொடுக்கும் கை
  • துள்ளித் துள்ளி – சிப்பிக்குள் முத்து

இளையராஜாவின் தாலட்டுகளுக்குள்ளே மிகவும் அற்புதமானது முத்துராமன், லக்ஷ்மி நடிப்பில் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த அச்சாணி படப்பாடல்.

பாடல் : தாலாட்டு, பிள்ளை உண்டு தாலாட்டு
படம் : அச்சாணி
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா
இசை : இளையராஜா

இளையராஜாவின் இசையில் வந்த மற்றொரு மத்யமாவதி பொன்னு ஊருக்குப் புதுசு படத்தில்; 1979-ஆம் ஆண்டு.

பாடல் : சோலைக்குயிலே காலைக்கதிரே
படம் : பொன்னு ஊருக்குப் புதுசு
பாடியவர்: எஸ்.பி ஷைலஜா
இசை : இளையராஜா

ஜீவா, சந்தியா நடிப்பில் டிஷ்யூம் என்று அபத்தமாகப் பெயரிடப்பட்டு சமீபத்தில் வெளிவந்த  படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மத்யமாவதி இராகத்தில் அமைந்த ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார்.  முறைமாமன் படத்தில் வித்யாசாகர் உன்னிகிருஷ்ணன் குரலில் ஆனந்தம் ஆனந்தம் என்று துவங்கும் மத்யமாவதியை இசைத்திருக்கிறார். இனி நாம் கடைசியாகக் கேட்கவிருக்கும் மத்யமாவதி இராகப் பாடல் காலத்தால் அழியாமல் நிலைத்திருப்பது. சிவாஜி கணேசன், பாலாஜி நடிப்பில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையில் வந்த பாடல் இது;

பாடல் : பொன்னொன்று கண்டேன்
படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடியவர்கள் : பி.பி. ஶ்ரீநிவாஸ், டி.எம். சௌந்தரராஜன்
இசை : விஸ்வநாதன் – இராமமூர்த்தி