இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது.  மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு கர்நாடக இசையோ அராபிய இசையோ உடனடியாக இரசிக்கும்படியாக இருப்பதில்லை.  காரணம் இரண்டு வேறு செவ்வியல் இசைகளுக்குகிடையே ஒலியிலான அடிப்படை வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் குறித்து பின்னர் ஒரு நாள் இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கட்டாயமாக ஒரு குறிப்பிட்ட வகையான இசையை இரசிக்க ஏற்ற உடற்கூறுகளுடன் நாம் பிறப்பதில்லை.  எனவேதான் பள்ளியில் இசை கற்கும் என் மகனுக்கு மேற்கத்திய இசை கர்நாடக இசையைக் காட்டிலும் விருப்பமானதாக இருக்கிறது.

நல்ல இசை குறித்த வரையறை தனிநபர் விருப்புகளின் பாற்பட்டது என்று சொன்னாலும் பொதுவில் ஒரு சில வகையான ஓலிகள் இரைச்சல்களாகவே பலராலும் அறியப்படுகின்றன. அந்த ஒலிகளை நீண்ட நேரம் தொடர்ச்சியாகக் கேட்பது சாத்தியமில்லாததாகிறது. உதாரணமாக வாகனங்களின் இயக்க ஒலி, அல்லது இயந்திரங்களின் இரைச்சல்.  மறுபுறத்தில் ஒரு சில ஒலிக் கோர்வைகள் காதுகளுக்கு இனிமையாகவே பலராலும் உணரப்படுகிறது.  விவால்டியின் நான்கு பருவங்கள் இசையை  முதல் முறையாகக் கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதை இரசிப்பதைக் கண்டிருக்கிறேன்.

கர்நாடக இசையின் முன்னோடிகளாக சாம வேதமும் தமிழர்களின் பாரம்பரியப் பண்களும் சொல்லப்படுகின்றன. ஏழு ஸ்வரங்களின் அடிப்படையிலானது இந்திய செவ்வியல் இசை.
ஸ,ரி,க,ம,ப,த,நி என்னும் சப்தஸ்வரங்களைக் கொண்டு இராகங்கள் அமைக்கப்படுகின்றன.  இவற்றில் சில அடிப்படை இராகங்கள் ஏழு ஸ்வரங்களையும் ஏறுவரிசையிலும் (ஆரோகணம்), இறங்கு வரிசையிலும் (அவரோகம்) கொண்டிருக்கும். இந்த இராகங்களை மேளகர்த்தா இராகங்கள் அல்லது ஜனன இராகங்கள் என்று அழைப்பார்கள்.  கர்நாடக இசையமைப்பில் 72 மேளகர்த்தா இராகங்கள் உண்டு.  இவற்றில் ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வரங்களோ இல்லாமல் பிறக்கும் இராகங்களுக்கு ஜன்ய இராகங்கள் என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இப்பொழுதும் கூட பலப் புது இராகங்கள் உருவாக்கப்படுகின்றன.

மாயாமாளவகௌவ்ள 15-ஆவது மேளகர்த்தா இராகம்.  இதன் ஆரோகண அவரோகண ஸ்வரங்கள்:

ஆரோகணம்: ஸ ரி1 க3 ம1 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ நி3 த1 ப ம1 க3 ரி1 ஸ

கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு பயிலும் மாணவருக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப்படும் இராகம் மாயாமாளவ கௌவ்ளை. இது ஏழு ஸ்வரங்களையும் ஆரோகண அவரோகணத்தில் முழுமையாகக் கொண்ட இராகம்.  பயிற்சி அதிகமில்லாத மாணவர்கள்கூட வெறும் ஆரோகண அவரோகண ஸ்வரங்களைப் பாடினால் இந்த ராகம் கிடைத்துவிடும்.

மாயாமாளவ கௌள இராகத்தை முதலாகக் கொண்டு இசையைப் பயிற்றுவிக்கும் முறையை உருவாக்கியவர் புரந்தரதாஸர். இவர் தோற்றுவித்த சரளி வரிசை, ஜண்டை வரிசை, தொடங்கி வர்ணம், கீர்த்தனம் வரையான பயிற்றுமுறைதான் இன்றுவரை பயன்படுத்தப்படுகிறது.  இந்துஸ்தானி பாரம்பரியத்தில் இது ராக் பைரவ் என்று அழைக்கப்படுகிறது.  அவர்கள் பைரவ் இலையுதிர்காலத்திற்கான ராகம் என்று பயிலுகிறார்கள்.  கர்நாடகப் பாரம்பரியத்தில் இப்படி பருவங்களுக்குப் இராகங்களைக் குறிக்கும் வழக்கம் கிடையாது.  இது சாந்தத்தை வெளிப்படுத்தும் இராகமாக அறியப்படுகிறது.

இனி மாயாமாளவ கௌவ்ள  இராகத்தில் அமைந்த சில திரைப்பாடல்கள்;

1. பூங்கதவே தாழ்திறவாய்

பாடியவர்கள்: உமா ரமணன், தீபன் சக்ரவர்த்தி
படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=ESAqaUep7bM[/youtube]

2. காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.சித்ரா
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=jfQ23PWDER0[/youtube]
3. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா

பாடியவர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி, டி.எம். சௌந்தரராஜன்
படம்: ஆலயமணி
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி

4. அல்லா உன் ஆணைப்படி
பாடியவர்கள்: உண்ணி கிருஷ்ணன், பவதாரிணி
படம்: சந்திரலேகா
இசை: இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=b0vFRWTjY-4[/youtube]
5. ஒரு சிரி கண்டால்

பாடியவர்கள்: மஞ்சரி, விஜய் யேசுதாஸ்
படம்: பொன்முடிப் புழையோரத்து (மலையாளம்)
இசை: இளையராஜா

[youtube]http://www.youtube.com/watch?v=7fleO7vWjj4[/youtube]