ஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு;

ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ
அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ

இதன் ஏறு, இறங்கு வரிசைகளைக் கவனித்தால் அவற்றிலிருக்கும் சமச்சீர் தன்மை எளிதில் புலப்படும். ஸ க ம த நி ஸ : ஸ நி த ம க ஸ  இது நடபைரவி என்ற இருபதாவது மேளகர்த்தா இராகத்திலிருந்து பிறக்கிறது.  கம்பீரமும், கவர்ச்சியும் ஒருங்கே பொருந்திய இராகம் இது.  ஹிந்துஸ்தானி மரபில் மால்கௌன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இராகத்தை பின்மதிய, மாலை வேளைகளில் பாடுவதற்கு ஏற்றதாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் மால்கௌன்ஸை இராகங்களுக்குள்ளே இராஜாவாகக் கருதுகிறார்கள். புல்லாங்குழல் மேதை ஹரிபிரஸாத் சௌராஸியா இந்த இராகத்தின் பல பரிமாணங்களை அற்புதமாக வெளிக்கொணருவார்.

நாம் மோகனத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது ஏற்கனவே சொன்னது போல ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட Pentatonic Scale உலகின் பல மரபுகளிலும் பிரபலமாக இருக்கிறது. ஹிந்தோளம் சீன இசையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழிசை மரபில் இது இந்தளப்பண் என்று அறியப்பட்டது. இசைப் பேராசிரியர் இராமநாதன் சிலப்பதிகாரத்தில் “கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்” என்ற பண் ஹிந்தோளத்தில் அமைந்திருப்பதை விளக்கியிருக்கிறார்.  தொடர்ந்து தேவாரப் பண்களிlலும் ஆழ்வார் பாசுரங்களிலும் இந்தளம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இந்த இராகத்தின் அமைப்பை பாடகி சாருலதா மணி அவர்கள் பாடக் கேட்கலாம்.

[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/03/hindholam.mp3|titles=hindholam]

பரவலாகப் பல திரைப்படங்களில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ஜி.என். பாலசுப்ரமணியம் காலம் தொட்டு ஹிந்தோளம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்  தெலுகில் மிகப் பெரும் வெற்றி பெற்ற சங்கராபரணம் திரைப்படத்தில் வந்த சாமஜ வரகமனா என்ற வர்ணம் இந்த இராகத்தை சாராசரி இரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தியது.

படம் : சங்கராபரணம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை : கே.வி. மஹாதேவன்

[youtube]http://www.youtube.com/watch?v=YXUvCUpMOWg[/youtube]

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் வணிகப் பெருவெற்றி பெறாத படங்கள் மிகச் சிலவே. அவற்றுள் ஒன்று மே மாதம். வினீத், சோனாலி குல்கர்னி நடிப்பில் 1994-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் பல அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. இவற்றில் அதிகம் கவனம் பெற்றது புதிய பாடகி ஷோபா பாடிய மார்கழிப் பூவே என்ற பாடல். இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழலிசை கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வா எனத் துவங்கும் திருப்பதி வேங்கடேஸ சுப்ரபாதத்தின் துவக்கத்தை ஒத்திருப்பது பலருக்கு பரவசத்தையும் சிலருக்கு எரிச்சலையும் ஊட்டியது.  உண்மையில் சுப்ரபாதத்தின் அந்த வரிகள்  சுத்த ஸாவேரி என்ற இராகத்தில் அமைந்தவை.  அந்த இடத்தைத் தவிர மற்றபடி இந்தப் பாடல் முற்று முழுதாக ஹிந்தோள இராக்த்தில் அமைந்தது.

படம் : மே மாதம்
பாடியவர் :ஷோபா
இசை : ஏ.ஆர். ரகுமான்

[youtube]http://www.youtube.com/watch?v=GXUGZfzP0Ao[/youtube]

ஹிந்தோளம் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த இராகங்களுள் ஒன்று.  சுமன், இராதிகா, பிரதாப் போத்தன் நடிப்பில் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த இளமைக் கோலம் படத்தில்தான் இளையராஜா முதன் முதலாக ஹிந்தோளம் இராகத்தைப் பயன்படுத்தினார் என்று நம்புகிறேன்.   பின்னர் பல அற்புதமான  பாடல்களை அந்த இராகத்தில் அவர் தந்திருக்கிறார். அவற்றுள் சில

நான் வணங்குகிறேன் சபையிலே (எஸ். ஜானகி, குரு)
ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே (மலேஷியா வாசுதேவன், எஸ்.பி ஷைலஜா, மணிப்பூர் மாமியார்)
தரிசனம் கிடைக்காதா (இளையராஜா, சசிரேகா, அலைகள் ஓய்வதில்லை)
நான் தேடும் செவ்வந்திப் பூவிது (இளையராஜா, உமா ரமணன், தர்மபத்தினி)

சற்றே மந்த கதியில் துவங்கி வேகம் பெறும் இந்த்ப் பாடல் ஹிந்தோளத்தில் அமைந்த அழகான பாடல்களில் ஒன்று.

படம் : இளமைக் கோலம்
பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்
இசை : இளையராஜா

[youtube]http://www.youtube.com/watch?v=LggayXONwiU[/youtube]

சாமஜ வர கமனா வில் துவங்கி மிக எளிதாக ஶ்ரீதேவி என் வாழ்வில் என் வாழ்வில் என்று பாடினால் இரண்டு பாடல்களுக்குள்ளே இருக்கும் ஒற்றுமை எளிதாகப் புரியும்.

சுத்தமான கர்நாடக இராகத்தை எடுத்துக் கொண்டு வேற்று இசைப் பாரம்பரியத்தின் கூறுகளுக்கு அதை மாற்றியமைப்பது இளையராஜாவின் தனித்தன்மைகளுள் ஒன்று. 1981 ஆம் ஆண்டு கமலஹாசன், மாதவி நடிப்பில் வெளிவந்த எல்லாம் இன்ப மயம் படத்தில் இரண்டு பாடல்களில் ராஜா இப்படிப் புகுந்து விளையாடியிருக்கிறார். ரார வேணுகோப பாலா என்ற கர்நாடக ஸ்வரஜதியை அடிப்படையாகக் கொண்டு “மாம வூடு மச்சு வூடு, பரிசம் போட்டது குச்சு வூடு” என்ற பாடல் கிராமிய வடிவத்தைத் தழுவியது.  இன்னொரு பாடலான  சொல்லச் சொல்ல என்ன பெருமை பாடல் ஹிந்தோள இராகத்தில் அமைந்தது. ராக் அண்ட் ரோல், டிஸ்கோ வடிவங்களுக்கு ஏற்றபடி இங்கே மாற்றப்பட்டிருக்கிறது. பாடலில் மேற்கத்திய இசைக் கருவிகளான ஆல்டோ சாக்ஸ், ட் ரம்பெட், த்ராம்போன் கருவிகள் பொருத்தமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

படம் : எல்லாம் இன்ப மயம்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

[youtube]http://www.youtube.com/watch?v=q-5MLPzRjls[/youtube]