மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 

இன்றைக்கு பிபிஸி ஒரு செவ்வியில் பிரிட்டனில் இதுபோன்ற சோதனையைச் செய்துவரும் ஒருவர் முதல்முறையாக உடலில் இருக்கும் சில்லுக்கு கணினி வழியே கணினி வைரஸை முதல்முறையாக மாற்றியிருக்கிறார்.  அபத்தமான இந்தச் சோதனை பல பயங்கர சாத்தியங்களை உருவாக்குகிறது.

இதயம் சரியாகச் செயல்படாதவர்களுக்கு பேஸ்மேக்கர் என்ற கருவியைப் பொருத்துவார்கள். அதில் இதுபோன்ற ஒரு சில்லுக்கணினி உண்டு.  இரண்டு/மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பேஸ்மேக்கரின் சில்லுக்கணினியுடன் மருத்துவர் தன் மேசைக்கணினி வழியே தொடர்புகொண்டு அது சரியாகச் செயல்படுகிறாத என்று அவதானிப்பார்.  இதுபோல் தொடர்பு ஏற்படும்பொழுது மேசைக்கணினியிலிருந்து பேஸ்மேக்கர் கணினிக்கு வைரஸ் தாவச் சாத்தியம் இருக்கிறது.வைரஸ் பீடிக்கப்பட்ட பேஸ்மேக்கர் பிழையாகச் செயல்பட்டு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

மருத்துவரின் கவனத்திற்கு வராமலே ஒரு நோயாளியிடமிருந்து இன்னொருவரை வைரஸ் சென்றடையும் சாத்தியம் இருக்கிறது. இது கிட்டத்தட்டத் தொற்றுநோய் போலவே செயல்பட்டு சிக்கல்களை விளைவிக்கும். மருத்துவம் பதிகணினிகளின் பயன்களில் ஒரு பகுதி மாத்திரமே, நான் முன்னால் சொன்னதுபோல் பாதுகாப்பான செல்பேசி உரையாடல், கதவுகளைத் திறத்தல் கார்களை இயக்குதல் என பல பயன்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்றைய செய்தி கவலையளிக்கிறது.