கல்யாணி மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று. கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது. ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை மேளகர்த்தா இராகம் அல்லது ஜனன இராகம் என்று அழைப்பார்கள். நாம் சென்ற வாரம் பார்த்த மோகனம் அப்படியல்ல அது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது. இராகங்களின் வரிசையில் கல்யாணி 65-வது மேளகர்த்தா இராகம். இதன் ஏறு/இறங்கு ஸ்வர வரிசைகள்
ஆரோகணம் : ஸ ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ
அவரோகணம் : ஸ நி3 த2 ப ம2 க3 ரி2 ஸ
கல்யாணியின் ஸ்வரங்களை பாடகி சாருலதா மணி பாடக் கேட்கலாம்.
[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/04/kalyani.mp3|titles=kalyani]
இதற்கு மேச கல்யாணி, சாந்த கல்யாணி என்ற பெயர்களும் உண்டு. ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் இது முக்கியமான இராகம். இதை அவர்கள் யமன் என்று அழைப்பார்கள். சமீபகாலங்களில் ராக் கல்யாண் என்றும் இதை அழைக்கிறார்கள். கர்நாடக இசையில் யமன் கல்யாணி என்று ஒரு இராகமுண்டு; இது கல்யாணியிலிருந்து வேறுபட்டது. இதை இன்னொரு சமயத்தில் பார்க்கலாம். கல்யாணியும் ராக் யமனும் மாலை நேரத்திற்கான இராகம் என்று அறியப்படுகிறது. இது சிருங்கார ரசத்தைக் காட்ட வல்லது. கல்யாணி இராகம் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த இராக அமைப்புகளுள் ஒன்று. பாரசீக மொழியில் இதற்கு ஏமன் அல்லது இமன் என்று பெயர், அதற்கு நற்குணம் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டது என்று பொருள்; அதே பொருளைத் தரும் கல்யாண்/கல்யாணி என்ற பெயர் கர்நாடக இசையிலும் சூட்டப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் இது இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று மதிப்பிடுகிறார்கள்.
கல்யாணி இராகம் பாடப்படாத கச்சேரிகள் மிகவும் குறைவு. கல்யாணியின் ஆரோகண அவரோகண ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை. எனவே திறமையான பாடகர்கள் ஒவ்வொரு ஸ்வரத்திலும் கமங்களைக் குழைத்து மிக நீண்ட நேரம் இராக ஆலாபனை செய்ய வசதியானது கல்யாணி.
கல்யாணி இராகத்தில் பல மிகப் பிரபலமான கர்நாடக கீர்த்தனைகள் உண்டு;
தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னன் தியாகய்யரை அரசவை இசைவேந்தராக அழைப்பு விடுத்தான். ராமனைப் பாடுவதும், யாசித்து உண்பதை மாத்திரமே அறிந்த தியாகையர் அரச அழைப்பை நிராகரித்தார். பொருளால் பேறு கிட்டுமா, இராமனைப் பாடுவதாலா என்று பொருள்பட அவர் இயற்றிய நிதிசால சுகமா என்ற கீர்த்தனை மிகவும் புகழ் பெற்றது.
முத்துஸ்வாமி தீட்சிதர் திருவாரூரில் இருக்கும் கமலாம்பிகையைத் துத்திது கமலாம்பா நவரத்ன கீர்த்தனைகள் என்ற பெயர் கொண்ட ஒன்பது பாடல்களை இயற்றியிருக்கிறார். இவற்றுள் ஒன்று கமலாம்பாம் பஜரே என்று துவங்கும் கல்யாணி இராகப் பாடல்; மிகவும் பிரபலமானது.
தமிழிசையைல் பாபநாசம் சிவன் ‘உனையல்லால் வேறே கதியில்லை அம்மா’ என்ற பாடலை இயற்றியிருக்கிறார்.
கர்நாடக இசையில் எழுநூறுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் கல்யாணி இராகத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. இனி நம் இசையமைப்பாளர்கள் கல்யாணி இராகத்தைக் கையாண்ட விதத்தைப் பார்க்கலாம்.
பாடல்: மன்னவன் வந்தானடி தோழி
படம் : திருவருட்செல்வர்(1967)
பாடியவர் : பி.சுசீலா
இசை: கே.வி.மாகாதேவன்
[youtube]http://www.youtube.com/watch?v=u1rPzzwH1mc[/youtube]
( Sung by Mahathi in the video)
பாடல்: சிந்தனை செய் மனமே
படம்:அம்பிகாபதி (1957)
பாடியவர் டி.எம். சௌந்தரராஜன் (1957)
இசை: ஜி. ராமநாதன்
[youtube]http://www.youtube.com/watch?v=n6Pt-dKwvwQ[/youtube]
பாடல்: ஜனனி ஜனனி
படம்: தாய் மூகாம்பிகை (1982)
இசையமைத்துப் பாடியவர் : இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=6eFjBl_r4jE[/youtube]
பாடல் : காற்றில் வரும் கீதமே
படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005)
பாடியவர்கள் ஹரிஹரன், ஷ்ரேயா கோஷால், சாதனா சர்கம், பவதாரிணி,
இசை: இளையராஜா
[youtube]http://www.youtube.com/watch?v=ER062n90_K8[/youtube]
Dear One,
Please to send a song list especially in Kalyaani. Because it is a best remedy from depressing.
Thanks