முதலில் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். வியப்பாக இருக்கிறது திரும்பிப் பார்ப்பதற்குள் ஐந்து ஆண்டுகளாகியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் காசி தமிழ்மணத்தின் ஐந்தாண்டு நிறைவிற்காக என்று சில கேள்விகளை அனுப்பி பதிலளிக்கச் சொல்லியிருந்தார். கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைப்பளுவின் காரணமாகப் பாதியில் நின்றுபோயிற்று. காலம் கடந்தேனும் பதில்களை முடித்து, சில கருத்துகளைச் சொல்லிவைக்கிறேன்.

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

கட்டாயமாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆங்கிலத்தின் வாயிலாக இணையத்தில் துய்ப்பதில் பத்திலொரு பங்குகூட தமிழில் இல்லை. தமிழில் இருக்கும் ஆர்வத்தால் மாத்திரமே வலையில் வாசித்துவருகிறேன். மற்றபடி உள்ளடக்கம், நுட்பம், வடிவம் என்று பல விடயங்களைக் கொண்டால் தமிழ் இணைய பக்கங்களில் நேரம் செலவிடவே தேவையில்லை. கடந்த வருட இறுதியில் இந்தியா வந்தபொழுது உறவினர் நண்பர்கள் உள்ளிட்ட (கிட்டத்தட்ட) எல்லோர் வீட்டிலும் கணினியும் இணைய இணைப்பும் இருந்தன; பலர் வீட்டில் தமிழில் இணையத்தில் வாசிக்கலாம், மின்னஞ்சல் எழுதலாம் என்றே தெரிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் தங்களும் தங்கள் இருப்பிடம் சார்ந்தவை குறித்தும் இணையத்தில் அதிகம் எதுவும் இல்லை என்பதுதான் என்று தோன்றுகிறது. கடையில் தொங்கும் விகடனை ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கலாம் என்றிருக்கும்பொழுது எதற்கு இணையத்தில் வாசிக்க வேண்டும் என்கிறார்கள். உள்ளூர் விஷயங்கள்; தொலைகாட்சி போட்டிகள், தொ.கா. நிகழ்ச்சிகளின் நீட்சி வடிவங்கள், தெருக்கோடி கடையில் தள்ளுபடி பெற கூப்பான், சினிமா போட்டிகள், என்று சாதாரணர்களின் அன்றாட விஷயங்களில் இணையம் வாயிலாக மட்டுமே, பிரத்தியேகமாகக் கிடைக்கும் என்று வந்தால்தான் இணையத்தில் தமிழிப்பயன்பாடு பெருகும். தமிழில் இணையம் இன்னும் மேட்டிமை சார்ந்த, பொழுதுபோக்கு விஷயமாகவே இருக்கிறது, பயனளவு முன்னேற்றமில்லை.

மறுபுறத்த்தில் செல்பேசிகள் இந்தக் குறையை ஓரளவு போக்கியிருக்கின்றன என்றே கருதுகிறேன். சென்னையில் இருந்தபோது செல்பேசி வாங்கிய இரண்டாம் நாளே எனக்குக் கடன் தருகிறேன் என்று ஒரு வங்கியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது, என் அண்ணன் மகள் பார்க்காத நேரங்களில் அரைமணிக்கொரு குறுஞ்செய்தி அனுப்பி என் மகன்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நுட்பப் புரட்சியைத் தமிழ் சமூகம் இன்னும் அனுபவிக்கத் தொடங்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அனுபவிப்பவர்கள் தமிழ் புழங்காத தமிழர்கள்; இவர்கள் பேசும் பத்துவார்த்தைகளில் எட்டு ஆங்கிலம். மாறாகத் தமிழ் மாத்திரமே பேசும், புழங்கும் முதியவர்கள், கிராமத்து உறவினர், நண்பர்கள் இன்னும் இதையெல்லாம் தொடவில்லை. நாம் தமிழில் எதையும் கேட்டுப் பெறுவதில்லை. உதாரணமாக கிராமம் தோறும் செல்பேசிகள் புழங்குகின்றன. ஆனால் ஒரு நிறுவனத்தின் ஒரு மாடலுக்காவது தமிழில் பயனர் கையேடு கிடையாது. (தமிழக அரசு இலவசமாகக் கொடுத்த கலர் தொலைக்காட்சியுடன் எந்த மொழியில் கையேடு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை). செல்பேசி வாங்கும்போது கடைக்காரர் வாய்வழி பயனர் கல்வி தருகிறார். இங்கே ஒண்டாரியோ மாநிலத்தில் இரண்டு வீதத்துக்கும் குறைவான தமிழர்கள் இருந்தாலும் அரசுச் சேவைகள் பற்றிய கையேடுகள் தமிழில். நம்மூரில் இதெல்லாம் கேட்டுப் பெறும் மனப்பாங்கில்லை. மேலடுக்கினர் நுட்பத்தைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் துய்த்துக் கொண்டே இருக்கே அடித்தட்டினர் இன்னும் வாய்வழி (அல்லது சுய அனுபவக்) அறிவை மாத்திரமே பெற்றுவருவது இந்த நூற்றாண்டின் மாபெரும் முரண்.

சென்ற கேள்வியின் இறுதியில் சொன்னதுபோல செல்பேசிகள் அண்டைச்சமூகம் சார்ந்த பல சேவைகளை அளிப்பதில் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. மிகசி சிறிய நுட்ப மாறுதல்களுடன் இதைத் தமிழில் முன்னெடுத்துச் செல்வது எளிது. இதற்கு அரசாங்கம்தான் அதிக அளவில் பொறுப்பேற்க வேண்டும். தமிழில் இடைமுகம் தரும், பயனர் ஏடு தரும் கருவிகளுக்கு சிறிய வரிவிலக்கு என்று ஊக்கமும், இன்றியமையாதனவற்றில் தமிழ் இல்லை என்றால் விற்பனைக்கு அனுமதியில்லை என்ற கட்டாயமும் தேவை. தமிழில் பணவிடை (Money Order) கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்கள்; நினைவில் வருகிறது. அதற்கெல்லாம் உண்ணாவிரதம் இருந்து சாதிக்கும் தலைமுறை போய்விட்டது. இனி, செல்பேசியில் தமிழ் பொத்தான்கள் வேண்டும் என்று யார் சோறில்லாமல் இருக்கப்போகிறார்கள் என்று நினைக்கும்போது சலிப்பும் கோபமும் மேலிடுகிறன.

சென்னையில் நான் பார்த்த பத்து இளைஞர்களில் மூன்று பேர்களுக்காவது தொழில்முனைவு ஊக்கமிருக்கிறது. ஆனால் இவர்களில் ஒருவருக்காவது தாங்கள் சார்ந்திருக்கும் சமூகம் சார்ந்த தொழில் துவங்கும் ஆர்வமில்லை. மாறாக மேலைநாடுகளில் முதியோருக்கு தினசரி மாத்திரை எடுத்துக்கொண்டார்களாக என்று நினைவுருத்த செல்பேசி பயன்பாடு, அமெரிக்காவில் மின்சாரம் அளக்கும் மீட்டர்களை எப்படி கம்பியில்லாமல் மையக் கணியியுடன் இணைப்பது என்று அற்புதமான திட்டங்களைத் துல்லியமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். நம்மவருக்கான நுட்பத்தை நாமே உருவாக்க முயலவில்லை எனில் முழுச்சமூகத்தையும் இது ஒருக்காலும் சென்றடையப்போவதில்லை.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

கணினியில், இணையத்தில் தமிழப் பயன்பாடுகள் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் மாத்திரமே சாத்தியமாகியிருக்கிறது. ஆரம்பகால எழுத்துருக்கள் தொடங்கி, மதுரைத்திட்டம், தமிழ் லினக்ஸ், ஓப்பன் ஆபீஸ், மோஸிலா ஈறாக வலைப்பதிவுகள், குறும்பதிவுகள் என்று எல்லாமே கிட்டத்தட்ட தன்னார்வலர்களின் பங்களிப்புதான். இதைத்தாண்டி இப்பொழுது அதிகம் எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை; உதாரணமாக செல்பேசிகளில், இடங்காட்டி கருவிகளில், மின்படிப்பான்களில் தமிழ்ப் பயன்பாடு குறித்து எந்தத் தன்னார்வலரும் தீவிர முயற்சி கொள்வதாகத் தெரியவில்லை. இந்தத் தேக்கம் வருத்தமளிக்கிறது. என் பார்வையில் கணினி தாண்டி கருவிகளில் தமிழ்ப் பயன்பாடுகுறித்து முயலவேண்டியது முக்கியம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

மக்களாட்ச்சியில் மிகவும் முக்கியமானது தகவல். முதலாவதாக அரசின் அனைத்து தகவல்களையும் தமிழப்படுத்த, இணையம் வழி வழங்க முயலுவேன். ஒரு தினத்திலிருந்து துவங்கி இனி வரும் அணைத்து தகவல்களும் தமிழில், இணையம் வழியாக வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடலம், இது முன்னோக்கிச் சொல்லும்போது, பழையனவற்றையும் தமிழில் இணையம் வழி மாற்றலாம். ஒருங்குறியில் இல்லாதனவற்றை உடனடியாக மாற்றுவது அவசியம், இது மிக எளிது என்பதால் இருக்கும் தகவல்களை எளிதில் துய்க்கும் வகையில் மாற்றுவதற்கு முன்னுரிமை தரலாம்.

தகவலைத் தொடர்ந்து சேவைகள், இவற்றில் அதிகம் புழங்கும் சேவைகளை முதலில் கணினி/இணையம்/செல்பேசி வழி தமிழில் தர முயலலாம்; மாதந்தோறும் கட்டும் மின் கட்டணம், பிற சேவைக்கட்டணங்களைத் தமிழில் மின்னூடகம் வழி மாற்றலாம். தொடர்ந்து ரேஷன் அட்டைகள், வாக்காளர் பட்டியல் இவற்றைச் சரிபார்க்க, குறை நீக்கப், பயன்படுத்த என்று ஒவ்வொன்றாகத் தமிழாக்கம் செய்யலாம்.

அடுத்தபடியாக ஆரம்ப சுகாதாரம். கிராமம் தோறும் சுகாதார நிலையங்களில் தமிழ் மாத்திரமே புழங்க வேண்டும் என்று ஆனையிடலாம். (ஆமாம், இதை நான் உறுதியாகச் சொல்கிறேன், தமிழில் மாத்திரமே; கிராமங்களில், ஆதார சுகாதார நிலையங்களில் ஆங்கிலத்தில் புழங்குவது மாபெரும் அபத்தம்). தனிநபருக்கு நாட்பட்ட, நிரந்த மருத்துவத் தரவுகளைத் தர கணினி வழி ஆவணமாக்கல் பெரும் உதவி செய்யும்.

கூடவே உயர்நிலைப் பள்ளிகளில் கணினி/இணையம் தமிழ் வாயிலாகப் பயில்வித்தலைத் துவக்க வேண்டும். அது சரியான வயது; அப்பொழுது தமிழில் பயன்படுத்தத் துவங்கினால் அது ஆயுளுக்கு நீடிக்கும்.

தமிழில், நம் சமூகம் சார்ந்த சேவைகளை உருவாக்கும் தனியார் நிறுவங்களுக்கு வரிவிலக்கு தரலாம். தொழில் முனைவோருக்கு வட்டியில்லா கடன் தரலாம். இவை தனியார் உதவியுடன் நுட்பப் பயனை விரைவில் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழில் வலைப்பதிவுகள் அமோகமாகப் பெருகி வருகின்றன. இந்த நிலையில் யாருக்கும் எதைப் பற்றி எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. பண்டிதத்தனத்தைத் தாண்டி மக்காளாட்சி நிலைக்கு வலைப்பதிவுகள் வந்திருக்கின்றன. என்னைப் பொருத்தவரை அவர்வருக்கு நெருக்கமான விஷயத்தை எழுத வேண்டியது முக்கியம். உதாரணமாக உங்கள் ஆச்சி ஒரு குறிப்பிட்ட வகை கோழிக்குழம்பைச் சிறப்பாக செய்வார், தலைவலிக்கு சுக்குப் பொடி எப்படித் தயாரிப்பார் என்று தோன்றினால் இயன்ற அளவு துல்லியமான தகவல்களுடன் அதைப் பற்றி எழுதலாம். தம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பதிவு செய்தாலே போதுமானது. நான் வாசித்து வரும் வகையில் ஈழத்து நண்பர்கள் இதை அழகாகச் செய்கிறார்கள்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ஐந்தாண்டுகள் நம் சூழலில் தாக்குப் பிடித்தல் என்பதே ஒரு சாதனைதான், இதற்காக மாத்திரமே தமிழ்மணத்தைப் பாராட்டலாம். வலைப்பதிவுகள் விரைவாக வளர தமிழ்மணம் ஆரம்ப நாட்களில் பெரிதும் உதவியிருக்கிறது,

என் அறிவின்படி வலைப்பதிவுகளுக்குத் திரட்டி சேவையின் காலம் முடிந்துவிட்டது. பொதுச்சேவை அமைப்புகள் (அவை தன்னார்வம் சார்ந்தைவையாக இருந்தாலும் வர்த்தகரீதியாக இருந்தாலும்) அவற்றை மேம்படுத்த, விரைவுபடுத்த திறகருவிகளை (API) அளித்து மற்றவர்களை தமிழ்மணத்தின் சேவைகளை நீட்டிக்க ஊக்குவிக்கலாம். வலைப்பதிவு தாண்டிய விடயங்களைக் கவனிக்க முயலலாம்.

சமூகப் பொறுப்பு, நுட்பத்தில் புதுமை, மொழி வளர்ச்சி, உள்ளடக்கத்தில் நாட்டம் என்று சிக்கலான, சில சமயங்களில் முரண்படும் பல்வேறு இலக்குகளுக்கிடையே விரைவாக ஒரு தளத்தை எப்படி வளர்ப்பது என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. ஆனாலும் மற்றெல்லாத் தளங்களுக்கும் வாய்க்காத நிபுணர்கள் குழு தமிழ்மணத்திற்கு இருக்கிறது. இவர்களுக்கு உத்தி சொல்ல எனக்குத் தகுதியில்லை என்றுதான் கருதுகிறேன்.

மீண்டும் தமிழ்மணத்திற்கு என் நல்வாழ்த்துகள்.