நேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட முடிந்தது, நேற்று நாள் முழுவதும் பையன்களுடனும் மனைவியுடனும் முழுவதுமாகக் களிக்க முடிந்தது.

இரண்டாவது வருடத்திலேயே இந்த விழா பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதில் டொராண்டோவின் நான்கு பெரிய பல்கலைக்கழங்களும் பங்கெடுத்தன. கூடவே உலகின் முதல்தர குழந்தைகள் மருத்துவமனை/ஆய்வகமான SickKids, உலகின் முதல்தர புற்றுநோய் ஆய்வுக்கூடமான Princess Margaret Hospital, இன்னும் பல மருத்துவக்கூடங்கள், ஒண்டாரியோ அறிவியல் மையம், எனப் பலவற்றின் கதவுகளும் பொதுமக்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேற்று திறந்துவிடப்பட்டன. இவற்றுடன் கூட ஷாப்பிங் மால்களில் Malls of Science என்ற பெயரில் மையத்தில் காட்சிகளும் செய்முறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. Café Scientifique என்ற பெயரிடப்பட்ட சுவாரசியமான நிகழ்வில் ஒரு கப் காப்பியோ, அல்லது ஒரு பியரோ வாங்கிக் கொண்டு முன்னணி விஞ்ஞானிகளின் கலந்துரையாடலைக் கேட்கலாம். உதாரணமாக ஒரு காப்பிக்கடையில் மூலச்செல்கள் மற்றும் அவற்றின் சமூகத் தாக்கங்கள் குறித்த உரையாடல் நடந்தது. Sipping Science என்ற பெயரில் வேறு சில இடங்களில் மரபியல், வானியல், நானோநுட்பம் உட்பட பல தலைப்புகளில் காப்பிக்கடைகளில் உரையாடல்கள் நடந்தன. இந்த நிகழ்வில் விஞ்ஞானிகளுள்ளே மாத்திரமில்லாமல், பொதுமக்களும் உரையாட முடியும்.

நேற்று இங்கே பயங்கர மழை பெய்தது. அதையும் மீறி உற்சாகத்துடன் பலரும் வந்திருந்தார்கள். எங்கள் பல்கலைக்கழகத்தில் பிரதான வீதியை முழுவதுமாக அடைத்து பல பந்தல்களில் பார்வையாளர்கள் நேரடியாக பங்குபெறும் நிகழ்வுகள் இருந்தன. என் பையன்கள் வாழைப்பழத்தை மசித்து டி.என்.ஏ எடுத்தார்கள், ஒற்றை பேட்டரியில் டி.சி. மோட்டார் செய்தார்கள், காப்பி வடிகட்டும் தாளில் குரொமோட்டோகிராம் செய்தார்கள், மூளை விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் நத்தையைக் கூறுபோட்டு மூளையை வகுத்தெடுத்தார்கள், ஆடிகளையும் வில்லைகளையும் மாற்றி தொலைநோக்கி செய்தார்கள், உடைந்த குறுந்தகட்டில் நிறமாலைமானி செய்தார்கள், திரவ நைட்ரஜனைக் கொண்டு உடனடி ஐஸ்க்ரீம் செய்து சாப்பிட்டார்கள், கைப்பிடி நுண்ணோக்கி வழியாக சட்டையின் பருத்தி இழைகளையும் என் தலையில் இருந்த பொடுகையும் இராட்சத திரையில் பார்த்தார்கள். இன்னும் Atomic Force Microscope, pump-probe ultrafast spectroscopy, seismograph, radio controlled car, Cloud Chamber, Cosmic ray detector, Magnetic levitation on superconductors என்று பல சோதனைகளை நேரடியாகப் பார்த்தார்கள், அல்லது அவர்களாகவே செய்தார்கள்.

Chemistry Magic என்ற நிகழ்வில் சாக்லெட்டை உருக்கி எரியவிட்டார்கள், கோதுமைமாவைக் கொளுத்தி வெடிக்க விட்டார்கள், திரவ நைட்ரஜனில் கார்னேஷன் பூக்களை உறையவிட்டு பொடித்தார்கள். பையன்கள் பெரிய தொட்டியில் உள்ளே நின்று தங்களைச் சுற்றி இராட்சத சோப்புக் குமிழிகளை எழுப்பினார்கள். ஒரு பென்னி காசிற்கு வெள்ளி முலாம் பூசினார்கள். மொத்தத்தில் பசியை மறந்து, மழையை மறந்து ஆறுமணி நேரம் அறிவியல்தான்.

நாங்கள் வீடு திரும்பிவிட்டோம். ஆனால் இரவிலும் சில நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. The Grown-Up Science Fair என்ற நிகழ்வில் அறிவியல் காப்புரிமை வல்லுநரான ஒரு வழக்கறிஞர் பேசியிருக்கிறார். பப் ஒன்றில் பொதுமக்கள் எங்கள் குழுவில் இருக்கும் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஒருவருடன் பில்லியர்ட்ஸ் விளையாடியிருக்கிறார்கள். வேறொரு பப்பில் மூன்று சுற்று குடித்தவர்கள் பியர் குமிழிகளைப் பற்றி அறிவியல் பேசியிருக்கிறார்கள். எங்கள் துறை மொட்டைமாடியில் தொலைநோக்கியில் பார்த்திருக்கிறார்கள்.

அடுத்த வருடம் இந்த விழா ஒண்டாரியோ மாநிலம் முழுவதும் நடக்கவிருக்கிறது. அதற்கடுத்த வருடத்தில் இந்த தினத்தை (அண்ணையர் தினத்திற்கு முந்தைய நாள்) நாடுமுழுவது அறிவியல் தினமாக அறிவிக்கச் சொல்லி அரசைக் கேட்டு வருகிறோம். இந்த வருடமே டொராண்டோ பெருநகரைச் சுற்றியுள்ள பல ஊராட்சிகள் (நான் வசிக்கும் ஓக்வில் உட்பட) அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. எங்கள் ஆய்வகத்தில் நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறு பொறியாக உருவான இந்தத் திட்டம் இரண்டாவது வருடத்திலேயே இந்த அளவிற்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தெருவில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் எதேச்சையாக ஒரு பந்தலில் நுழைந்து magnetic levitation சோதனையைப் பார்த்து வியந்து, கண்விரிய ஓடிச்சென்று தன் ஆண் நண்பரை இழுத்து வந்து காட்டியதைப் பார்த்த பொழுது இந்த வருடாந்திர நிகழ்வின் முக்கியத்துவம் தெரிந்தது. கட்டாயம் அவர் நாலுபேரிடமாவது அற்வியல் விந்தையைத் தன் மொழியில் சொல்வார்.