சற்றுமுன் வெளியான செய்தியின்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பராக் ஒபாமாவின் கொள்கைகளை ஆதரித்துவரும் எனக்கேகூட இது அதிர்ச்சியான செய்திதான்; சொல்லாப்போனால் எனக்கு இது அருவருப்பைத் தருகிறது.  இந்தப் பரிசுக்கு எந்த விதத்திலும் ஒபாமா தகுதியானவரில்லை. வருங்காலத்தில் ஒருநாள் அவர் இதற்குத் தகுதியாகக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கும்பொழுதும், இப்பொழுது இது அபத்தமாகத்தான் தோன்றுகிறது.

பரிசுக்கான அறிக்கை

Obama has as President created a new climate in international politics. Multilateral diplomacy has regained a central position, with emphasis on the role that the United Nations and other international institutions can play. Dialogue and negotiations are preferred as instruments for resolving even the most difficult international conflicts. The vision of a world free from nuclear arms has powerfully stimulated disarmament and arms control negotiations. Thanks to Obama’s initiative, the USA is now playing a more constructive role in meeting the great climatic challenges the world is confronting. Democracy and human rights are to be strengthened.

என்று சொல்கிறது.  இதில் உண்மையிருந்தாலும் இப்பொழுதைக்கு அமெரிக்கா முனைந்து அமைதிவழிகளில் உலக ஒற்றுமைக்காகப் பாடுபட இன்னும் துவங்கவில்லை. அதைச் செய்யப்போகிறோம் என்று மாத்திரமே ஒபாமா சொல்லியிருக்கிறார்; இன்னும் செய்துவிடவில்லை.

சமீபத்திய ஆண்டுகளில் நோபெல் அமைதிப் பரிசு முன்நடவடிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.  பாலஸ்தீனிய பிரச்சினையில் யாஸர் அராஃபத், ஷிமான் பெரெஸ், தென்னமெரிக்காவின் கிம் டே ஜங்,  உலகளாவியச் சூடேற்றத்திற்காக அல்கோர், பர்மாவின் அங் சான் சூ கீய், என்று பலருக்கு அமைதி வேலைகளைத் துவக்க ஆரம்பித்ததற்காக மாத்திரமே பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது.  நோபெல் குழு இப்பரிசை வழங்குவதன் மூலம் அவர்கள் நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் என்று நம்பத்தொடங்கியிருக்கிறது.  ஒருவிதத்தில் இப்பரிசு அவர்கள் கையில் அமைதிக்கான ஆயுதமாக உதவக்கூடும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  இதில் கொஞ்சம் உன்மையும் உண்டு; இவர்களில் பலர் அரக்கன் கோலியாத்தைச் சிறுகல்லெடுத்துப் போரிடும் தாவீதின் நிலையில் இருக்கிறார்கள். சக்தியற்ற நல்லெண்ணம் கொண்டவர்களை இயன்ற அளவு ஊக்குவிக்க வேண்டிய கடமை அமைதியை நம்பும் அனைவருக்கும் உண்டு. எனவே சூ கீய் இதற்கு முற்றிலும் தகுதியானவர் என்றே நான் நம்புகிறேன். ஆனால் இன்றைய பாலஸ்தீனிய நிலையைப் பார்க்கையில் ஷிமான் பெரஸ்க்கும் அராஃபத்துக்கும் இது முற்றிலும் தகுதியில்லை என்றுதான் தோன்றுகிறது.  இஸ்ரேலின் கையில் இதை நிறுத்துவதற்கான அனைத்து வழிகளும் உண்டு, ஆனால் ஷிமான் பெரஸின் நோபெல் பரிசு அவர்களை எந்த வகையிலும் அமைதியை நோக்கித் திருப்பிவிடவில்லை.  அமெரிக்க அதிபராக உலகத்தின் அனைத்து வல்லமைகளும் ஒபாமாவின் கைகளில் ஏற்கனவே இருக்கிறது. அவருக்கு இந்த வகையிலான ஊக்கம் தேவையில்லை. சொல்லத்தகுந்த ஏதாவது ஒரு அமைதிப்பணியை முடிக்கும் வரையில் காத்திருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் தொடங்கி உலகத்தின் பல மூலைகளில் அமெரிக்கப் படைகள் நிலைகொண்டு உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை நிறுத்துவதில்லை. அப்பாவி குடிமக்கள் ஆப்கானில் ஆயுதப்போரில் சாவது எந்தவிதத்திலும் குறைந்துவிடவில்லை.  புஷ் விட்டுச் சென்ற படையளவை இன்னும் ஒபாமா குறைக்கவில்லை, இந்த நிலையில் இப்பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டிருப்பது கேவல்ம்.  ஒரு வகையில் சமீபத்தில் ஆகக்கூடிய அளவில் அரக்கத்தனமாகச் செயல்பட்ட ஜார்ஜ் புஷ்ஷின் செயற்பாட்டு வெளிச்சத்தில் பார்க்கப்படும்பொழுது ஒபாமா அமைதிப் புறாவாகத் தோற்றமளிப்பதாகத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு முந்தைய அமெரிக்க அதிபர் புஷ் உலக அமைதியைச் சீரழித்துவிட்டிருக்கிறார், இதை நிறுத்துவேன் என்று சொல்வதே ஒரு சாதனையாக மாறிவிட்டிருக்கிறது. சொல்லப்போனால் புஷ் என்ற அழுகலிருந்து அமெரிக்காவையும் அதன்வழியே உலக அமைதியையும் மீட்டெடுத்தற்காக அமெரிக்கக் குடிமக்களுக்கு ஒட்டுமொத்தமாக அமைதிக்கான நோபெல் பரிசு கொடுக்கப்பட்டிருந்தால் கூட இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

பராக் ஒபாமா உலக அமைதி குறித்த கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அமைதிவழியில் அவற்றைத் தீர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுருத்த்தி வருகிறார் (குறிப்பாக சக அமெரிக்கர்களிடையே).  ஆனால் இன்னும் எதையும் செய்துவிடவில்லை.

இதே ரீதியில் போனால் அடுத்த வருடத்தில் இலக்கியத்திற்கான நோபெல் பரிசு அதிக அளவு நல்ல புத்தகங்களை அடுக்கி வைத்ததற்காக ஒரு புத்தகக் கடைக்காரருக்கு வழங்கப்படலாம்.