சமீபத்தில் ஜான் எட்வர்ட்ஸைப் போல ஒரு அடிமுட்டாள் அரசியல்வாதியை நான் கண்டதில்லை.  சென்ற வருடம்வரை இந்த ஆள் அமெரிக்க அரசியலில் ஒழுக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதாக மேடைதோறும் முழங்கி வந்தவர்.  பின்னர் அமெரிக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்பொழுது இவருக்கு மனைவியைத் தவிர ஒரு தொடுப்பு இருப்பது தெரியவந்த்து.  எட்வர்ட்ஸின் மனைவி ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே அவருடன் ஏன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கேள்வி இருந்தது.

இடையில் எட்வர்ட்ஸின் இரகசியக் காதலி ரியெல் ஹண்டர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்குத் தகப்பன் எட்வர்ட்ஸ்தான் என்றும் அற்வித்தார். இதை ஜான் மறுத்தார். தன்னுடைய இரகசியத் தொடர்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லையென்றும் அந்தக் குறுகிய காலத் தொடர்பில் குழந்தை உண்டாகியிருக்க வாய்ப்பில்லை என்றும் மறுத்தார். எட்வர்ட்ஸ் தமிழ் சினிமா பார்த்ததில்லை; ஒரே ஒரு முறை கையைப் பிடித்து இழுத்தவுடன் கதாநாயகனின் தங்கச்சி கருத்தரிப்பது சர்வநிச்சயம் என்று அவருக்குத் தெரியவில்லை. இருந்தும் ஐந்தாவது குழந்தை என்று அர்த்தம் தொனிக்க அதற்கு க்வின் (Quinn) என்ற நடுப்பெயர் ரியெல் ஹண்டரால் இடப்பட்டது; ஜான் எட்வர்ட்ஸ்க்கு ஏற்கனவே மனைவியுடன் நான்கு குழந்தைகள்.

வேறொருபுறத்தில் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்ட பொழுது தன்னுடைய கள்ளக்காதலை மறைக்க அவருக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக இப்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ரியெல் ஹண்டருக்கு எட்வர்ட்ஸின் நண்பர் மூலமாக ஒரு பி.எம்.டபிள்யூ கார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்குப் போட்டியிட வரிப்பணத்தின் உதவி பெற்று அதைக் கள்ளக்காதலியின் வாயை அடைக்கப் பயண்படுத்தினார் என்று கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நீதித்துறை குழம்பிக் கிடக்கிறது. கள்ளக்காதலிக்கு வரிப்பணத்தைத் தருவது குறித்து சட்டமியற்றியவர்கள் கவனத்தில் கொள்ளாததன் அசிரத்தை இப்பொழுது பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

எட்வர்ட்ஸின் மனைவி எலிஸபெத் இப்பொழுது புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கிறார். அவர் விவாகரத்து பெற்று குழந்தைகளைத் தன்னுடன் கொண்டு சென்றாலும், அவர் இறப்புக்குப் பின் குழந்தைகள் எட்வர்ட்ஸிடம்தான் வந்து சேருவார்கள். இந்த நிலையில் சாகும் வரையிலாவது கணவனைத் தன் பார்வையில் தக்க வைத்துக்கொண்டு, குழந்தைகளை அருகில் வைத்திருக்க அவர்கள் மீதான பாசம் அதிகரித்து ஜான் தன் மறைவுக்குப் பிறகு குழந்தைகளிடன் அன்பாக இருப்பார் என்ற ஒரே நம்பிக்கைதான் எலிஸபெத்துக்கு இருக்கக்கூடும்.

அந்த நம்பிக்கையிலும் இப்பொழுது எட்வர்ட்ஸ் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார்.  ஒருக்கால் இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப்படம் நிறைய பார்த்திருப்பாரோ என்று தோன்றுகிறது. குழந்தையைக் கொடுத்தவன் தாலிகட்டியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு இப்பொழுது தெரியவந்திருக்கிறத்து. எலிஸபெத்தின் மறைவுக்குப் பிறகு ரியெல் ஹண்டரை ஏற்றுக்கொண்டு அவர் குழந்தைக்குத் தகப்பனாகி, அவரை மொட்டைமாடியில் வைத்து தாலிகட்டுவதாக எட்வர்ட்ஸ் சொல்லியிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.  கல்யாணத்தன்று டேவ் மாத்யூ பேண்ட் என்ற இசைக்குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்போவதாகத் தெரிகிறது.

அரசியலில் நெடுநாட்கள் ஒழுக்கம், உண்மை என்று வலம் வந்து, பின்னர் கள்ளக்காதலில் ஈடுபட்டு, அரசியல் வாழ்வை இழந்து நிற்கும் இவரைப் போல அடிமுட்டாள்கள் மிகச் சிலர்தான் அமெரிக்க அர்சியலில் உள்ளனர். (இதில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று பாகுபாடு கிடையாது).  இப்பொழுது மனைவி சாகக் கிடக்க காதலியுடன் அடுத்த திருமணத் திட்டமிடலில் ஈடுபட்டிருப்பது வடிகட்டிய அயோக்கியத்தனம். John Edwards now tops the lists of my all time favourite jerks.

* * *
எல்லாவற்றும் வெளியே எலிஸபெத் எட்வர்ட்ஸின் நிலைதான் பரிதாபகரமாக இருக்கிறது.  ஒரு புறம் புற்றுநோயால் அவதி, மறுபுறம் ஒழுக்கம் கெட்ட கணவன், சாவின் வாயில் இருப்பதால் அந்த ஆளை வீட்டைவிட்டுத் துறத்த முடியாத நிலை, அவனிடம் தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, நடுவில் கணவனின் கள்ளக்காதலி அவர்களின் அடுத்த திருமணம், இப்படி முடிவில்லாத அவலங்கள்.

அது அமெரிக்காவாக இருந்தாலும்கூட, சமூகத்தின் அதியுயர் அடுக்கில் இருந்தாலும்கூட  அபலைகளாக இருக்க வேண்டிய தலையெழுத்தை நினைத்தால் கோபந்தான் வருகிறது.