இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல்-லின் இரண்டாவது வருட ஏலம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கணிப்பில் எந்த அணி யாரைக் குறிவைக்கும் என்று எழுதுகிறேன். இதில் எவ்வளவு மெய்ப்படுகிறது என்று பார்க்கலாம். சென்ற வருடத்தில் கடைசி இடம் பெற்ற அணியிலிருந்து வெற்றி பெற்ற ராஜஸ்தானுக்கு வரலாம்.

டெக்கான்:

இந்த வருடம் கில்கிரைஸ்ட், சிமந்ட்ஸ் இருவரும் முழுப் போட்டியிலும் பங்குபெரும் சாத்தியம் இருக்கிறது. அதிகம் காசு கொடுத்து பெற்ற அஃப்ரிதி சோபிக்கவில்லை, இந்த வருடம் எந்தப் பாக்கிஸ்தானி ஆட்டக்காரரும் கிடையாது. இது ஒரு வழியில் அஃப்ரிதி சோகத்தைப் போக்க உதவலாம். இவர்களிடம் சொல்லிக்கொள்ளத்தக்க வேகப்பந்து வீச்சாளர் கிடையாது. எனவே ஷான் டய்ட்-தான் இவர்களின் முதல் தெரிவாக இருக்க வேண்டும் அல்லது ஜெரோம் டைலர். குறைந்த செலவில் நுவான் குலசேகரா கட்டாயம் உதவுவார். அஃப்ரிதி காலி செய்த இடத்திற்கு ழான் – பால் டூம்னி அல்லது ஃப்ளிண்டாஃபை இவர்கள் இலக்கு வைக்கக்கூடும். ஆனால் மற்ற அணிகள் அவ்வளவு எளிதாக இவர்களை விடப்போவதில்லை. எனவே அதிகம் செலவு செய்துதான் இருவரில் ஒருவரைப் பெறமுடியும். யார் சேர்ந்தாலும் இந்த வருடமும் ஹைதராபாத் ரொம்ப முன்னேறப்போவதாகத் தெரியவில்லை.

பெங்களூர்:

சந்தேகமே இல்லை. தன்னுடைய ஒரு விமானத்தை விற்றாவது மல்லையா கெவின் பீட்டர்ஸனை வளைத்துப் போடுவார். மல்லையா வாயைத் திறந்ததால்தான் பீட்டர்ஸனுக்கு இந்தப் போட்டி. பெங்களூர் நிலையில் பீட்டர்ஸன் மாதிரி ஒரு ஆள் தேவைதான். ஆனால் எனக்கென்னமோ ஒன்றிரண்டு ஆட்டங்களைத் தவிர அவர் பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை என்று தோன்றுகிறது. மும்பாய் ஏதாவது செய்து பீட்டர்ஸனை மல்லையாவிடமிருந்து பறித்துவிட்டால் அடுத்த குறி டூம்னி, மூன்றாவது இலக்கு ஃப்ளிண்டாஃப். இந்தப் பெருந்தலைகளை வாங்கியதுபோக ஏதாவது ஒரு மலிவுவிலை ஆட்டக்காரருக்குத்தான் பணம் மீதமிருக்கும் அந்த நிலையில் பங்களாதேஷ் ஆட்டக்காரர்களில் ஒன்றிரண்டு பேரை வாங்குவதுதான் அறிவுள்ள காரியமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு கிளாமர் கிடையாது என்பதால் மல்லையா அருகில்கூடப் போகமாட்டர்.

கொல்கத்தா:

சென்ற வருடம் ஒரு நல்ல அணியையும், அதற்காக ஊழியமிக்க இரசிகர்களையும் திறமையாகக் கட்டியெழுப்பியது கொல்கத்தாதான். ஷாருக்கான் இதற்கு நிறையவே பாடுபட்டார். மான்செஸ்டர் யுனைட்டெட், செல்ஸி, ரியால் மாட்ரிட் போன்ற பணம் கொழிக்கும் அணிகள் வெற்றி தோல்வி அவர்களது பொருளாதார நிலையை அதிகம் பாதிக்காது. இன்னும் இரண்டு மூன்று வருடம் இதே போக்கில் கொல்கத்தா சென்றால் அந்த நிலையை அடையக்கூடும். இதற்கு பெங்காலிகளின் இனமான உணர்வும் பெரிதும் உதவும். அதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இன்னும் சிலமணிகளில் அவர்களுக்கு சென்ற வருடம் பெரிதும் உதவிய உமர் கல்-க்கு மாற்று தேவை. எனவே இவர்கள்தான் ஹைதராபாத்-க்கு நேரடி போட்டியாக இருப்பார்கள், ஷான் டய்ட், ஜெரோம் டைலர் இருவரும் முக்கிய இலக்குகள். மீதமுள்ள பணத்திற்கு பங்களாதேஷ்காரர்கள் இருவரைப் பிடித்துப் போடக்கூடும்.

மும்பை:

கெவின் பீட்டர்ஸனுக்கு மும்பை போட்டியிடக்கூடும் என்று ஊகமிருக்கிறது. ஆனால் ஜெயசூர்யா அந்தத் தேவையைப் போக்குகிறார். இவர்களுக்கு முக்கியமான தேவை விரைவாக அடித்தாடக்கூடிய பந்துவீச்சாளர் – எனவே ஃப்ளிண்டாஃப், டூம்னி இருவரும் முக்கிய இலக்குகளாக இருப்பார்கள். எனக்கென்னமோ இவர்கள் இருவரையும் வாங்க மும்பை முயற்சிக்கும் என்று தெரிகிறது. இருவரில் டூம்னிக்கு முக்கியத்துவம் இருக்கலாம் (இளம் வயது, குறைவான ஈகோ). மீதமுள்ள பணத்திற்கு ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒன்றிரண்டு பெயர் தெரியாத இளம் ஆட்டக்காரர்கள் மும்பையில் இலக்காக இருக்கலாம்.

தில்லி:

பீட்டர்ஸனின் தேவை முழுவதுமாக இல்லாத ஒரே அணி இதுவாகத்தான் இருக்கும். ஷேவாக், கம்பீர், டி விலியர்ஸ், தில்ஷான், ஷிக்கார் தாவன் இவர்களால் செய்ய முடியாததை பீட்டர்ஸனாலும் முடியாது. எனவே இவர்கள் இலக்கும் ஆல்ரவுண்டர்களாகத்தான் இருக்கும். முகம்மது ஆஸிஃபின் இடத்திற்கு இவர்கள் ஷான் டய்ட்டைக் கொண்டுவர முயற்சிப்பார்கள்.

பஞ்சாப்

இவர்களுக்கும் பந்து வீச்சாளர்களின் தேவைதான் அதிகம் இருக்கிறது. ப்ரெட் லீ இந்த வருடம் விளையாடுவதற்கான சாத்தியம் குறைவு. எனவே இவர்கள் ஃப்ளிண்டாஃப், ஷகீஃப் அல்ஹஸன், ஜெரோம் டைலர் இவர்களில் ஒருவரை இழுக்க முயற்சிக்கக்கூடும்.

சென்னை

ஹெய்டன் இந்த வருடம் முழுவதும் ஐபிஎல்-லில் விளையாடக்கூடும், இது கட்டாயம் இவர்களுக்கு வலுவைச் சேர்க்கிறது. கூடவே மைக் ஹஸி, ரெய்னா, பத்ரிநாத், தோனி என்று இவர்களுக்கு பேட்டிங்கில் எந்த ஓட்டையும் இல்லை. ஆனால் ந்டினியுடன் கூட சொல்லிக் கொள்ளத்தக்க நல்ல வேகப் பந்து வீச்சாளர் யாரும் இல்லை. எனவே இவர்களுக்கு அவசியத் தேவை. அது இல்லாத நிலையில் டும்னி அல்லது ஷகிஃப் அல்ஹஸன் இருவரில் யாராவது ஒருவர் கட்டாயம் தேவை. மீதமிருக்கும் பணத்திற்கு நுவான் குலசேகரா, மாஷ்ரஃப் மொர்டஸா இருவரையும் இழுக்க முடிந்தால் கட்டாயம் சென்னை வலுப்பெறும்.

ராஜஸ்தான்

சென்ற வருடம் ராஜஸ்தான் பெற்ற வெற்றியில் ஷோகைல் தன்வீரின் பங்கு மிக அதிகம். இந்த வருடம் அவர் இல்லாமல் கட்டாயம் ராஜஸ்தான் வலுவில்லை. எனவே வேகப்பந்து வீச்சாளர் இவர்களுக்கு அவசியம் தேவை. சென்ற வருடத்து வெற்றி சூத்திரத்தைத் தொடர்ந்தால் ஷேன் வார்ன் கட்டாயம் விலை அதிகமில்லாத பங்களாதேஷ் ஆட்டக்காரர்களையும் தென்னாப்பிரிக்கர்களையும் குறிவைக்கக்கூடும்.

என்னுடைய ஊகம் எப்படியிருக்கிறது என்று நாளை பார்க்கலாம்.