இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் வந்து கொண்டிருந்தது, இப்பொழுது அவ்வப்பொழுது எந்த கால வரையறையும் இல்லாமல் வருகிறது. எனக்குத் தெரிந்து இணையத்தில் இவ்வளவு வெற்றி கண்ட வேறெந்தத் தொடரும் தமிழில்/தமிழ் சார்ந்து இல்லை.

தூள் வெற்றிக்குப் பின்னால் பலர் இருக்கிறார்கள். மிகக் குறிப்பாக நண்பர் சரவணன், எங்கிருந்து இந்தப் புதையல்களை அகழ்ந்தெடுக்கிறார் என்று ஆச்சரியப்பட்டால் அதற்கு அடுத்த தவணையைப் படிக்கும்ப்பொழுது “ஓ, இதற்காகக் கீழே போகத் தோண்டியதில்தான் மேலடுக்கிலேயே முந்தைய பாடல் கிடைத்திருக்கும்” என்று தோன்றச் செய்கிறார். சற்றும் மிகையில்லை; நானறிந்தவகையில் சரவணன் அளவுக்குத் தமிழ்த் திரையிசையை அறிந்தவர்கள் யாரும் கிடையாது. இதை “நானறிந்தவகையில்” என்ற முன்னடையை எடுத்துவிட்டுக்கூட தைரியமாகச் சொல்லமுடியும்; அதை ஒட்டியிருப்பதன் காரணம் முழுக்க முழுக்க என்னுடைய பாமரத்தன்மையை உறுதி செய்வதே.

உதயா, OISG, வினதா, அந்நியன், எம்.எஸ் என்று பலரும் தொடர்ந்து நல்ல இசையைப் பற்றி எழுதி வருகிறார்கள். இதன் இடையில் நானும் என்னால் இயன்ற அளவுக்கு எனக்குப் பிடித்தவற்றை பிறரிடம் பகிர்ந்து வருகிறேன். எனக்கு ஆவல் இருக்கும் அளவிற்கு அங்கே எழுத நேரம் கிடைப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் ஆதார சக்தியாக இருப்பவர் பாலாஜி. எப்பொழுதெல்லாம் தொடர் துவண்டு விழுகிறதோ அப்பொழுதெல்லாம் கிருஷ்ண பரமாத்மா போல் நானிருக்கிறேன் என்று உய்வித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 999-வது பாடலில் நின்று கொண்டிருந்த பொழுது உடனடியாக தொலைபேசியை எடுத்து அடுத்தது என்ன என்று கேட்கும் ஆவலிருந்தது, ஆனால் அதன் இச்சையின் நிகழ்விற்காகக் காத்திருப்பதில் இருக்கும் சுவாரசியத்தை விட்டுவிட்டாமல் அனுபவிக்கக் காத்திருந்தேன். இன்றைக்கு ஆயிரமாவது பாடலாக வந்திருக்கும் “ஓராயிரம் கற்பனை” பல வருடங்களுக்குப் பிறகும் என்னுடைய நிரந்தரப் பட்டியலில் இருக்கும் வெகுசில பாடல்களில் ஒன்று.

* * *
பல இசை மேதாவிகளும் எல்லா துறைகளிலும் வல்லுநர் கருத்தை வற்றாது சுரந்து வரும் தமிழகப் பேராசான்களும் தமிழ்த் திரையிசையைச் வேண்டா வெறுப்பாகத்தான் ஒப்புக் கொள்கிறார்கள் (மிகச் சமீபத்திலும் இப்படி ஒன்று வந்ததை உங்களில் சிலர் படித்திருக்கக் கூடும்). ஓரளவுக்கு உலக இசை வடிவங்களைக் கேட்டபின் எனக்கென்னமோ தனித்துவம் மிக்க உன்னத இசை வடிவமாகத்தான் இந்தியத் திரையிசை தோன்றுகிறது. உலக இசை (World Music) என்று இன்றைக்கு மிகப் பிரபலமாக இருக்கும் வடிவத்தில் கூட பல வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன (அல்லது இருப்பதைப் போல வரித்துக்கொண்டுதான் ‘உலக இசை’ உருவாக்கப்படுகிறது). ஆனால் ஒரே பாடலில் ஆண் குரல், பெண் குரல், துவக்கத்தில் மேற்கத்திய செவ்வியல் இசை, மேற்கத்திய கருவி கொண்டு இசைக்கப்படும் கர்நாடக பாணி இடையீடு, இந்திய நாட்டார் பாடலிலிருந்து பெற்ற படிமங்கள், ஜாஸ், டெக்னோ, ரக்கே, என்று எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் தேவையானபடி நுழைத்து இனிய இசையைத் தருவது அப்படியொன்றும் எளிதான காரியமில்லை. எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன், வி. குமார், விஜயபாஸ்கர், இளையராஜா, தேவா, டி.ராஜேந்தர், ஏ.ஆர்.ரகுமான், யுவன், ஹாரிஸ் ஜெயராஜ், என்று பலரும் இதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள். மேலும், தளைகளற்ற திரையிசையில் இவர்கள் தங்களுக்கென தனி பாணியையும் வகுத்திருக்கிறார்கள்.

தமிழ்த் திரையிசையின் முழு வீச்சையும் புரிந்துகொள்ள யாருக்காவது முதல் துவக்கம் வேண்டுமென்றால் தூள்.காம்-இன் இன்றைய பாடல் பகுதியைத் தயக்கமில்லாமல் நாடலாம். தமிழ்த் திரையிசையைப் புறங்கையால் ஒதுக்கும் எந்தப் பண்டிதரும் இன்றைய பாடல் பகுதியைத் தொடராக வாசித்துப் பாடல்களைக் கேட்டால் தங்கள் மேதைமையின் முழுமையின்மைப் புரிந்துகொள்ளமுடியும். தமிழ்த் திரையிசையில் ஏற்கனவே ஆர்வம் இருப்பவர்கள் அதில் தாங்கள் அறியாத பல அற்புதமான பாடல்களை அடையாளம் காணமுடியும். அந்த வகையில் இன்றைய பாடல் பகுதி ஒரு அசாத்திய சாதனை.

* * *
ஆயிரம் முடிவல்ல, துவக்கம். தமிழ்த் திரையிசையில் ஆழமும் அகலமும் நிறையவே இருக்கின்றன. கிரிக்கெட்டில் சொல்வதைப் போல Go forth, Dhool, Take a fresh guard!