பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

spring_clean
இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது.

அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு ஊராட்சி பள்ளிக் கூடங்கள் தொடங்கி கும்பகோணத்தில் படித்த சிறியமலர் மேநிலைப் பள்ளி, நகர மேநிலைப் பள்ளி போன்ற எல்லா பள்ளிக்கூடங்களிலும் துப்புரவு வேலைகளைச் செய்திருக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும்பொழுது (நான் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவன் இல்லை என்றாலும்கூட) வார்டு 2 பள்ளிக்கூடத்தில் மதிய உணவு முடிந்தபிறகு சிதறிக்கிடக்கும் சோளரவா, வெங்காயத் துண்டுகள் என்று பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். வாராவாரம் பள்ளியின் முன்னால் இருக்கும் சிறிய தோட்டத்தைப் பெருக்கி அங்கேயிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்; இதற்காக கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லணைக்கால்வாயின் மதகிலிருந்து வாளியில் நீர் எடுத்து வருவோம். (தோட்டம் என்றால் ஒன்றும் அற்புதமான பூந்தோட்டமெல்லாம் கிடையாது; அந்த உவர் மண்ணில் எழுத்துக்கீரை என்று சொல்லப்படும் ஒரே தாவரம்தான் வளரும், அதை வைத்துக்கொண்டு விதவிதமான பாத்திகள் கட்டி, பள்ளியின் பெயரை எழுதி… அதுதான் தோட்டம்).

கும்பகோணம் சிறிய மலர் பள்ளிக்கூடத்தில் ஃபாதர் லூயி (இவர் தேசிய விருது பெற்ற நல்லாசிரியர்) தன் மேலங்கியை வரிந்து கட்டிக்கொண்டு எங்களுடன் மைதானத்தில் குப்பை பொறுக்குவார். ஏன் ஐஐஎஸ்ஸியில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபொழுது எங்கள் ஆய்வகத்தின் லினோலியம் தரையை மாதம் ஒருமுறை சோப்பு நீர் கொண்டு துடைப்போம். சனிக்கிழமை க்ரூப் செமினார் முடிந்தவுடன் நடக்கும் இதற்கு என் ஆசிரியர் நீர் சேந்திக் கொண்டுவந்து தருவார். நாம் புழங்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் பெருமையைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?

இப்பொழுதும் இங்கே கூட என் மகன்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆண்டுதோறும் துளிர்காலத்தில் பனியில் புதைந்துகிடக்கும் குப்பைகள் வெளியே வரும்பொழுது ஒரு நாள் முழுவதும் பள்ளியைச் சுற்றிய அரை கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். கடந்த வருடம் விக்ரம் இந்த துப்புரவை ஒழுங்கு செய்யும் குழுவில் முக்கிய உறுப்பினாரக இருந்தான். அவன் பெருமைபொங்க இருபது மூட்டை குப்பை பொறுக்கினோம் என்று சொல்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கனடாவின் வால் ஸ்ட்ரீட் என்று அறியப்படும் பே ஸ்ட்ரீடில் (bay st.) ஆண்டுதோறும் இதே போன்ற துப்புரவு நடக்கிறது. இதில் உலகின் மிகப்பெரும் வங்கிகளின் தலைவர்கள் உட்பட பலரும் கையுறை அணிந்துகொண்டு தெருவில் குப்பை பொறுக்குவதைப் பார்க்கலாம். இதைத் தவிர ஒரு சனிக்கிழமையைப் பலரும் சுற்றுப்புற சுத்திகரிப்புக்காக ஒதுக்குகிறோம். இங்கிருக்கும் படம் பல்கலைக்கழகப் பேராசிரியரும் மாணவர்களும் குப்பை பொறுக்குவது.

சமூகப் பொறுப்பு மாணவர்களுக்கு அந்த வயதிலேயே சொல்லித்தரப்பட வேண்டிய ஒன்று. சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பை பள்ளியிலிருந்து துவக்காவிட்டால் வேறு எப்படி செய்யமுடியும்? நம்மூரில் பள்ளிக்கூடங்கள் போதுமான அளவிற்கு சமூகப் பொறுப்பு குறித்து சொல்லித்தருவதில்லை. இங்கே பள்ளி முடிந்து பல்கலைக்கழகத்தில் சேரும்போது அவர்கள் சமூக சேவை குறித்து எழுத வேண்டும். அதற்கு சில நேரங்களில் பல்கலைக்கழங்கள் 25% வரையான மதிப்பைத் தருகிறது. குறிப்பாக உதவித்தொகை வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான சமூக சேவை செய்திருக்க வேண்டும். நம்மூரில் இதெல்லாம் பற்றி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்கும். ஏற்கனவே நம்மூரில் ஆண் குழந்தைகள் வீட்டில் எந்தவிதமான வேலையையும் செய்வதில்லை. சமூகத்திலும் எந்தவிதப் பொறுப்புமின்றி வளர்வது ஆபத்தானது.

Popularity: 42% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வெங்கட்

நீங்கள் சொல்வதுடன் ஒத்துப் போகிறேன்.

கீழத்தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய பள்ளி விளையாடுகளமாய் இருந்த ஊழியக்காரன் தோப்பு தளத்தில் மாணவர்களான நாங்கள் வாரமொருமுறை களையெடுக்க வேண்டும். பாகுபாடுகள் ஏதும் கிடையாது. அதுவும் நிறைய நெருஞ்சி முள். முனகல் செய்த தாளாளரின் உறவினனுக்கு தண்டனை உடன் கிடைத்தது. இதுமட்டுமின்றி பள்ளி அறைகளில் ஓட்டடை அடிக்க உதவ வேண்டும். தற்போதைய தமிழ்நாட்டில் பாகுபாடுகள் அதிகரிக்கவில்லை என்றால் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டியது.

இங்கே பள்ளி சம்பந்தமான பயிற்சி சுற்றுலாக்கள் செல்லும் போது, விஷ்ணு portable rest room ஐ
தூய்மைபடுத்த வேண்டி வந்தது. எதொரு முகச்சுளிப்பும் இல்லாமல்தான் அதுபற்றி சொன்னா(ன்)ர். காலை உணவு சமைப்பது மற்றும் சுத்தப்படுத்துவதிலும்
உதவி செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பதிவுக்கு நன்றி.

வாசன், நீங்கள் இங்கே பள்ளிகளில் செயல்படும் தன்னார்வ முறைகளைப் பற்றி நன்றாக அறிந்திருப்பீர்கள். எனக்கு பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியம் தந்திருக்கிறது. என் மகன்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் என் அண்ணன் மகள்களுக்கு சென்னையில் அவர்கள் பள்ளிக்கூடத்தின்மீது இருக்கும் ஆர்வமின்மையையும் பார்க்கும்பொழுது நாம் ஏன் இதைத் தொலைத்தோம் என்று வேதனையாக இருக்கிறது. அவர்களுக்குப் பள்ளிக்கூடத்தின்மீது உணர்வுபூர்வமான ஈடுபாடு இல்லை என்றுதான் தோன்றுகிறது. தங்கள் தனி நண்பர்கள்மீது இருக்கும் பெருமை அவர்கள் பள்ளிமீது அவர்களிடம் இல்லை.

வெங்கட்,

அரசு பள்ளி மாணவர்களை கழிவறை கழுவுதல் உள்ளிட்ட பணிகளில் “கட்டாயமாக” ஈடுபடுத்துவது அவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தருவதற்காக அல்ல.

அரசு நிதி ஒதுக்காததால் மாணவர்களைக் கொண்டு அவர்கள் விருப்பத்துக்கு மாறாக இலவச வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இதுவும் குழந்தைத் தொழிலாளர் முறை போலத் தான். இதை நியாயப்படுத்துவது தவறு.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக என்றாவது ஆசிரியர்களும் சேர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபடுகிறார்களா? தங்கள் கழிவறையைத் தாங்களாவது கழுவிக் கொள்கிறார்களா? மாணவன் கழிவறை வசதி இன்றி பொட்டலில் கழிக்க, ஆசிரியர்கள் தங்கள் கழிவறையைக் கூட மாணவர்களை விட்டுக் கழுவச் சொல்வதற்கு பேர் சமூகப் பயிற்சியா? நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியருக்கு தேநீர், cigarette, பாக்கு வாங்கி வர பாட நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம். இது இன்றும் பல பள்ளிகளில் தொடர்கிறது. இது ஆசிரியர்களின் எல்லா பணிவிடைகளையும் செய்து தரும் குருகுல முறை தான். இதன் தொடர்ச்சி தான் சில முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களைக் கூட அவர்களின் ஆய்வு வழிகாட்டிப் “பேராசிரியர்கள்” காய்கறி வாங்கவும், மின்சாரக் கட்டணம் கட்ட அனுப்புவதுமாகத் தொடர்கிறது.

காசு வாங்கிக் கொண்டு கல்வி விற்கும் தமிழ்நாட்டுத் தனியார் பள்ளியில் இது போல் தினம் கழிவறை கழுவ விட்டால் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? காசில்லாத ஏழை அரசு பள்ளி மாணவனுக்கு மட்டும் இது எப்படி சமூகப் பயிற்சி ஆகும்?

மாணவர்களுக்கு சமூக அக்கறை சொல்லித் தர சாரணர் படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவைச் சங்கம், NSS போன்ற அமைப்புகள் உள்ளன. அதன் மூலம் பக்கத்து ஊர்களில் பள்ளியில் சிறு சிறு பணிகளில் ஈடுபடுத்தலாம்.

//காசு வாங்கிக் கொண்டு கல்வி விற்கும் தமிழ்நாட்டுத் தனியார் பள்ளியில் இது போல் தினம் கழிவறை கழுவ விட்டால் பெற்றோர்கள் ஒப்புக் கொள்வார்களா? காசில்லாத ஏழை அரசு பள்ளி மாணவனுக்கு மட்டும் இது எப்படி சமூகப் பயிற்சி ஆகும்?
//

எந்த வேலையும் இழிவல்ல. கழிவறை கழுவதலையும் கூட மாணவர்களின் கோடை முகாம்களில் ஒரு பயிற்சியாகத் தரலாம். இதன் மூலம் உடலுழைப்புத் தொழிலின் சிரமத்தை, மதிப்பை மாணவர்கள் உணர்வார்கள். ஆனால், அந்தந்த வேலைக்கு ஆள் போடாமல் குழந்தைகளை இவற்றில் தினம் தினம் ஈடுபடுத்துவது தவறு.

வெங்கட், நீங்கள் சொல்வதற்கு எந்த மறுப்பும் கூற முடியாது,
இது அனைவருக்கும் பொதுவான, திறந்த கொள்கைகளுடன், இருக்குமானால்.
ஆனால் இந்து செய்தியைப் பொறுத்தவரை மாநகரப்பள்ளிகளில் அத்தகைய ‘noble cause’ இருப்பதாகத் தெரியவில்லையே…
1.பணியாட்கள் அமர்த்தப் படாமலேயே (அந்த சிறுவர்களை பயன்படுத்திக்கொண்டு) ஊதிய கணக்கெழுதப் படுகிறதா ?
2.சிறுவர்களின் பொருளியல் பின்னணியை மனதிலிருத்தி அவர்கள் உளநிலை நிலைநிறுத்தப்படுகிறதா ?
3.விவரம் அறிந்த பெற்றோர் தடையெழுப்பினால் அச்சிறார்கள் விலக்கிக்கொள்ளப்பட்டு மற்றவர்கள் மீது மட்டும் கட்டாயமாக்கப் படுகிறதா ?
ஒரு RTI மூலமே இச்சய்திகள் வெளிவந்திருப்பதாலும், மேலதிகாரிகளின் சங்கடங்களைக் காணுகையாலும் இந்த சந்தேகங்கள்.

ரவி – நான் சொல்லியிருப்பது மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அணைவருமாகச் சேர்ந்து தம்மிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றி. (என் ஆராய்ச்சி குரு, இங்கே படத்தில் இருக்கும் ஆசிரியர் எல்லாம் இதை வலியுருத்திச் சொல்வதற்காகவே). மாணவர்கள் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படும்பொழுது ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் சேர்ந்தால் அதன் பெயர் வலியுருத்தி வேலை வாங்குவதில்லை.

குழந்தைத் தொழிலாளர்களை நியாயப்படுத்துவது எப்படித் தவறானதோ அதேபோல் குழந்தைகளை பொறுப்பற்ற சோம்பேறிகளாக வளர்ப்பதும் அநியாயம். என் வீட்டில் ஆறு வயது முதல் என் மகன்கள் பால் அருந்தியபின் அவர்கள் குவளையைக் கையோடு கழுவிப் போட வேண்டும். ஒன்பது வயதிலிருந்து சாப்பிட்ட தட்டைக் கழுவுகிறார்கள். சென்ற முறை இந்தியா வந்தபோது அவர்கள் வயதொத்த எந்தக் குழந்தையும் அதெல்லாம் செய்வதாகத் தெரியவில்லை. இதனால் உடலுழைப்பு என்றாலே இழிவு என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கிறது.

மற்றபடி காசு கொடுத்து படிக்கும் தனியார் பள்ளியில் இதைச் செய்தால் (அங்கும் செய்ய வேண்டும்) நம் மக்கள் அதையே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்டக்கூடும். தனியார் பள்ளியில் படிக்கும் பெரும்பாலானவர்களுக்கு (அவர்கள் பெற்றோர்களுக்கு) – நாம்தான் காசு கொடுக்கிறோமே என்ற ஆண்டை மனப்பான்மை இருக்கிறது.

ரவி – எனக்கு NSS, கோடை முகாம் என்று வருடத்தில் ஒருநாள் ஊழியம் சொல்லித்தருவதில் நம்பிக்கையில்லை. அது ஒரு சாதனை உணர்வை (sense of achievement) உண்டாக்குமேயொழிய அடிப்படை தூய்மை, சமூகப் பொறுப்பு போன்றவற்றை வளர்க்காது. வருடத்தில் ஒரு நாள் சேரிக்குப் போவார்கள், அங்கே கையில் விலக்கமாறுடன் படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் மறுநாள் தங்கள் பள்ளிக்கூடத்தில் குப்பை கிடந்தால் வேலைக்காரியைக் குறை சொல்வார்கள்.

இதை ஒரு வாழ்முறையாக சொல்லித்தராவிட்டால் அவர்கள் இதை உணர்வது கடினம்.

மணியன் – உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். செய்தியை வாசிக்குப்பொழுது இதே சந்தேகங்கள் எனக்குத் தோன்றின. ஆனால் ட்விட்டரில் இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா என்று நண்பர்கள் எழுதியபொழுது அதில் குழந்தைகள் வேலை செய்கிறார்களே என்ற கவலை மட்டும்தான் தெரிந்தது.

குழந்தைகள் வேலை செய்வதை ஆதரிக்கும் நான், வேலை வாங்கும் அமைப்பை எதிர்க்கிறேன். நண்பர்கள் குறை சொல்லியிருக்க வேண்டியது வேலை வாங்குபவர்களைப் பற்றி; வேலை செய்யும் குழந்தைகளைப் பற்றியல்ல.

குழந்தைகளின் பொருளியல் பின்னணியைக் கொண்டு செய்யப்படுவது அநியாயம். எனவேதான் காசு வாங்கும் உயர்குடி பள்ளிகளிலிருந்து இது துவங்க வேண்டும் என்று சொன்னேன். அங்கு இருந்தது, நான் படித்த துவக்கப்பள்ளிகள் ஏழைப் பள்ளிக்கூடங்கள் என்றாலும் 9,10 படித்த சிறிய மலர், 11, 12 படித்த நகர மேநிலைப் பள்ளி எல்லாம் அற்புதமான தனியார் பள்ளிக்கூடங்கள். அங்கேயும் நான் பெருக்கியிருக்கிறேன்.

வெங்கட்,

நீங்க, அருள், காசி எல்லாருமே ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முந்தி இருந்த சூழ்நிலைய வெச்சே பேசிட்டு இருக்கீங்க. இப்ப காலம் மாறிட்டுது.

கம்யூனிடி பிஹேவியர், பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை பிள்ளைங்களிடத்திலே வளக்கணும்ங்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், முந்தைய காலத்துல, பிள்ளைங்க செஞ்சதும், இப்ப, பிள்ளைங்க மேல திணிக்கறதும் வேற வேற.

ஒரு காலத்துல, பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆசிரியர் கிட்ட விடும் பொழுது, ‘ இனிமே இவன் உங்க பிள்ளை, ஒழுங்கா படிக்கலைன்னா, முதுகுத் தோலை உரிச்சா கூட எதுவும் கேக்கமாட்டேன்’ ன்னு சொல்றது யதார்த்தமான விஷயம். அப்படிப் படிச்சு மேதைகளானவங்க இருக்காங்க. ‘நாங்கல்லாம் அந்த காலத்துல டப்பா அடிச்சுப் பாஸ்பண்ணித்தான் இப்ப எல்லாம் வசதியா இருக்கோம்னு சொல்றவங்களும் இருக்காங்க.
ஆனா, குழந்தைகளின் உளவியல், அவர்களுக்கான சுதந்திரம்ன்னு introspective ஆக சிந்தனை செய்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்துல இது ஒத்து வராது.

அந்த காலத்துல, சென்னை மாதிரியான பெருநகரங்கள் தவிர, மீதமிருக்கிற தமிழகத்துல, பெரும்பாலானவர்களுக்கு அரசுக் கல்விதான். பெற்றோர் வசதியானவங்களாக இருந்தாலும், வசதி குறைச்சலானவங்களாக இருந்தாலும், பிள்ளைகளுக்கு கிடைச்ச கல்வியும், வசதி வாய்ப்புகளும், கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அதனால யாருக்கும் எந்த குறையும் இல்லை என்பதோடு, இதை ஒரு நல்ல விஷயமாகப் பார்க்கவும் உங்களைப் போன்றவர்களால் முடிந்தது. அப்போது இருந்த ஆசிரியர்களும் ஆதரவாக இருந்தார்கள்.

இப்ப நிலைமை அப்படியா? பக்கத்து வீட்டுப் பையன் போல மெட்ரிகுலேசன் பள்ளிலே நம்மளைச் சேக்க வசதி இல்லேன்னுதானே இங்கே நாம இங்க கக்கூஸ் கழுவ வேண்டியிருக்கு ன்னு கார்ப்பரேஷன் பள்ளிலே படிக்கிற ஒரு மாணவன் வயிறு எரிந்தால், அந்த பிரச்சனையை கண்டுக்கறதை விடவும், அவனுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சியை ஊட்டுவது பிரதான காரியமல்ல என்பது எ.தா.க.

எப்படியும், கார்ப்பரேஷன் ஸ்கூலிலே படிக்க விதிக்கப்பட்டவர்களிலே முக்காவாசிப் பேருக்கு, தங்கள் சொந்த வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் பார்க்க வேண்டும்.

கல்வி முறையிலே சீர்திருத்தம் வேண்டும் என்கிறதிலே அபிப்ராயபேதம் இல்லை. ஆனா, சீர்திருத்தத்தை எங்கிருந்த ஆரம்பிக்க வேண்டும் என்பதிலே நமக்கு ஒரு தெளிவு வேண்டும்.

பிரகாஷ் – நான் என் பையன்களைப் பற்றிச் சொன்னது, மேலே படம் போட்டிருப்பது எல்லாம் 30-40 வருஷ சமாச்சாரங்களில்லை. :)

இப்பொழுது காசு கொடுக்கிறோமே என்று எதற்கெடுத்தாலும் கல்வியைப் பற்றி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

>எப்படியும், கார்ப்பரேஷன் ஸ்கூலிலே படிக்க விதிக்கப்பட்டவர்களிலே முக்காவாசிப் பேருக்கு, தங்கள் சொந்த வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும் என்ற நிதர்சனத்தையும் பார்க்க வேண்டும்.

என் பையன்கள் இங்கே அவர்கள் சொந்த வேலையைப் பார்த்துக்கொள்வதைப் போல நம்மூரில் 10% பேர்கூடச் செய்யமாட்டார்கள் (என் பையன்கள் மாத்திரமல்ல; இங்கே இருக்கும் எல்லா பிள்ளைகளும்). பக்கத்துவீட்டுப் பையன் 9 ஆம் வகுப்பில் இருக்கிறான்; பேப்பர் போட்டு பல்கலைக்கழகத்திற்குப் பணம் சேர்க்கிறான். 90% மாணவர்கள் கோடையில் புல் வெட்டுவது, கட்டுமானத்தில் ஈடுபடுவது என வேலை செய்கிறார்கள்.

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் துளிர்காலத்தில் உங்கள் வீட்டுப் புல்லை நீங்கள்தான் வெட்டியாக வேண்டும், பாத்திரம் தேய்க்க வேண்டும், பனி உழ வேண்டும். காரைவிட்டு இறங்கி பெட்ரோல் நிரப்ப வேண்டும். இதனால் உடலுழைப்பில் ஈடுபடுபவர்கள் மீது தானாக மரியாதை ஏற்படுகிறது.

உடலுழைப்பில் ஈடுபட வேண்டிய வயதில் அதை விலக்குவதால் பின்னாட்களில் தொடரும் தேவையற்ற உழைப்பைக் குறித்து முன்னர் ஒருமுறை எழுதியிருந்தேன்;
http://domesticatedonion.net/tamil/2003/08/18/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/

நம்மூர் கல்வி முறை சீர்த்திருத்தம் தேவை; அது துவங்க வேண்டியது தனியார் பள்ளிகளில்தான்.

வெங்கட்,

அமரிக்க கனட சமூக அமைப்பில் சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு குறைந்த இடைவெளியில் இருப்பதால் பள்ளிகளில் கல்லூரிகளில் ஊர், கல்லூரி, பள்ளி, ஏன் intra school houses வரை இங்கே பெருமை பேசப்படுகிறது. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வித்தியாசங்கள் இருப்பினும் அடிப்படை கட்டமைப்புகளில் சீர்மை இருக்கிறது. அமரிக்க, கனட பள்ளிகளில் இந்தப்பெருமை மற்றும் வசதிகள் நூற்றுக்கு 75 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும்.

இந்தியாவிலோ அ) பெரும் பணக்காரப்பள்ளிகள் ஆ) மெட்ரிக் பள்ளிகள் இ) அரசுப் பள்ளிகள் என்று மூன்றுவகை இருக்கிறது. மூன்றின் சதவிகிதங்களைப் பார்த்தேலே பிரச்சனை புரியும்.
அதுவும் அரசுப் பள்ளிகளில் தரம் வீழ்ந்து கொண்டே போகிறது. ஆசிரியர் மற்றும் கட்டமைப்புகளில் incentivising என்பதே இல்லை. அவர்களுக்கும் ஆர்வமோ பெருமையோ இருப்பதில்லை. பிள்ளைகள் பெரும் இடையூறுகளுக்கும் வறுமைக்கும் இடையில் படிக்கிறார்கள்.

மெட்ரிக் பள்ளிகளில் காசு மட்டுமே குறி. மேலோட்டமாக அவர்கள் செய்யும் சமூக சேவைகள் ஒரு போலியானது என்ற புரிதல் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நன்கு புரிகிறது.
பெரும் பணக்காரப்பள்ளிகளில் சமூக சேவை என்பது பகட்டுக்கானது.

அமரிக்க கனட பள்ளி கல்லூரிகளில் உள்ள வசதியையும் பெருமையையும் இந்தியாவில் பெரும் புகழ்பெற்ற லட்சக்கணக்காக காசு வாங்கும் பள்ளிகளிலும் பார்க்கலாம். அதனால் நீங்கள் பேசுவது இந்திய அளவுகோலில் ‘மேட்டுகுடி’ மக்களைப்பற்றி. அதனால்தான் இது வர்க்கப்பிரச்சனையாக பிரகாஷ்,ரவி,மணியன் போன்றோரால் அணுகப்படுகிறது. வறுமை மற்றும் சோற்றுக்கே பள்ளிக்கு வரவேண்டிய சூழலில் இருக்கும் பிள்ளைகளை மேலும் வேலை வாங்குவதற்கும் தன்னிறைவு பெற்ற பிள்ளைகள் சமூக பங்களிப்பு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறதே.

நீங்கள் சொல்லும் உடலுழைப்பு சாரா வெட்டிப்பொழுது போக்கும் சிறுவர் என்போர் மிகமிகச்சிறிய விழுக்காட்டில் தான் இருப்பர். எனக்குத் தெரிந்த பல சிறுவர்களும் சிறுமிகளும், கூடை பின்னுதல், தீப்பெட்டி ஒட்டுதல், பஞ்சு பிரித்தல்( திருப்பூர் சுற்றுப்புற ஊர்களில்), புத்தகங்களை பைண்ட் பண்ணுதல், வீட்டுச் சாமன் கழுவுதல், பூ விற்றல், சமையல் உதவி, சாமான் வாங்குதல், கடையில் வேலை செய்தல்(தொண்ணுறுகளில், 14 வயதில் நானே வறுவல் கடையில் வேலைசெய்து இருக்கிறேன். வாழ்க்கையில் முதலில் வாங்கிய சம்பளம் 180 ரூபாய் ;-) )), புத்தகக்கடையில் வேலைப் பார்த்தல், கோவில் வேலைகள்(என் உறவினரின் பெண் ஒருவர் வாரம் அறுபது ரூபாய் கோவில் வேலைக்கு தண்ணீரைத்து ஊற்றி சம்பாதிக்கிறார் 11ம் வகுப்பு படிக்கவும் செய்கிறார்) என்றும் நீக்கமற உடலுழைப்பை தருகிறார்கள். எனக்கு துணி தேய்த்து தருபவரின் மகன் பள்ளியில் படித்துக்கொண்டு வார இறுதிகளில் தன் தந்தைக்கு உதவி செய்வதை பார்த்திருக்கிறேன்.

என்ன சென்னை மற்றும் நகரங்களில் வாழும் மத்திய தர மற்றும் உயர்மத்திய தர சிறுவர்களில் இவர்களைக் காண்பது அரிது.
மத்தியதர மற்றும் உயர்மத்திய தர சமூக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தான் பட்ட கடினம் தன் பிள்ளைகளுக்கு வேண்டாம் என செல்லம் கொடுப்பதாலும், வெறும் அறுபது ரூபாய்க்கும் எழுபது ரூபாய்க்கும் வேலை செய்ய வேண்டாம் என் எண்ணுவதாலுமே.

சத்யா – மீண்டும்: நான் எழுதியிருப்பது வேலை செய்வதே தவறு என்ற எண்ணம் குறித்துதான். நம்மூரில் பணக்கார பள்ளிக்கூடங்களில் துவங்கி (நாந்தான் பணம் கட்றேனே என் புள்ள ஏன் பள்ளிக்கூடத்தை சுத்தமா வச்சுக்கனும்) மெதுவாக இது எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் இறங்கி வந்திருக்கிறது. இந்த நிலையில் உடலுழைப்பே தவறு என்ற எண்ணம் குழந்தைகளுக்குத் திணிக்கப்படுகிறது. இது மோசமான சமூகத்திற்கு இட்டுச் செல்லும்.

உடலுழைப்பு மாத்திரமல்லாது பள்ளி/சமூகம் குறித்த பெருமித உணர்வை விளைக்கும் நடவடிக்கைகளும் பெரிதும் குறைந்துவிட்டன. இது குறித்து இன்னும்கொஞ்சம் விரிவாக எழுத வேண்டும்.

//மாணவர்கள் சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படும்பொழுது ஆசிரியரும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள வேண்டும். அப்படிச் சேர்ந்தால் அதன் பெயர் வலியுருத்தி வேலை வாங்குவதில்லை.
//

குற்றச்சாட்டு வரும் எந்த அரசு பள்ளியிலும் எந்த ஆசிரியரும் இப்படி சேர்ந்து ஈடுபடுவதில்லை என்பது தான் பிரச்சினை. தங்களுக்கு ஊழியம் பார்க்க பிள்ளைகளைப் பயன்படுத்துகிறார்கள். வேலைக்கு ஆள் வைக்க பணம் ஒதுக்காத அரசு, உள்ளூரிலேயே மாற்று ஏற்பாடு செய்து தராத பெற்றோர்-ஆசிரியர் சங்கம் என்று எல்லாரும் கூட்டுக் குற்றவாளிகள் தான். “பிள்ளைகளை வேலை வாங்காதே” என்று பெற்றோர்கள் சண்டை போட்டால், ஆசிரியர் மாற்றல் வாங்கிக் கொண்டு போய் விடுவார். இது பிரச்சினைக்குரிய ஊர் என்ற மற்ற ஆசிரியர்களும் வர மறுப்பார்கள்.

//என் வீட்டில் ஆறு வயது முதல் என் மகன்கள் பால் அருந்தியபின் அவர்கள் குவளையைக் கையோடு கழுவிப் போட வேண்டும். ஒன்பது வயதிலிருந்து சாப்பிட்ட தட்டைக் கழுவுகிறார்கள். சென்ற முறை இந்தியா வந்தபோது அவர்கள் வயதொத்த எந்தக் குழந்தையும் அதெல்லாம் செய்வதாகத் தெரியவில்லை. இதனால் உடலுழைப்பு என்றாலே இழிவு என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கிறது.
//

கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் மேட்டுக்குடி, உயர்+நடு நடுத்தர வர்க்க குழந்தைகளைப் பற்றி பேசுகிறீர்கள். இந்தியாவின் உழைக்கும் மக்கள் விழுக்காடு மிகப் பெரிது. அவர்கள் சும்மாவே ஏற்கனவே வீட்டில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

என் ஊரில் உழவு தான் முதன்மைத் தொழில். பெண் என்றால் காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கூட்டி, கட்டுத்தரை கூட்டி, சாணி அள்ளி, மாடுகளுக்குத் தண்ணீர் காட்டி, பால் கறந்து, மாடுகளுக்கு வைக்கோல் போட்டு, சமையல் செய்து, வீட்டில் இருக்கும் வயதில் சிறிய குழந்தைகளைக் கவனித்து, தண்ணீர் தூக்கி, அதன் பிறகு தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு கையில் கட்டுச் சோறு தூக்கிக் கொண்டு நடந்தே 2 கி.மீ அரசு பள்ளிக்கு ஓட வேண்டும். மாலை திரும்பி வந்து காட்டில் உள்ள மாட்டை மேய்க்கப் போக வேண்டும். வயலில் வேலைகள் இருந்தால் அதையும் செய்ய வேண்டும்.

ஆண் என்றால் வயலுக்குப் போய் தண்ணீர் பாய்ச்சுவது, மயில் விரட்டுவது, பிற உழவு வேலைகளில் ஈடுபட வேண்டும்.

சரியான தண்ணீர் வசதி இல்லாத ஊர்களில் நடந்தும், மிதிவண்டியில் சென்றும் எத்தனை மைல்கள் கடந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள் தெரியுமா?

மற்ற வேலைகளில் உள்ள குடும்பங்களிலும் அப்பா அம்மாவின் தொழிலுக்குப் பிள்ளைகள் உதவிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஊர்ப்புறங்களில் ஒன்றிரண்டு பிள்ளைகள் கூடுதலாகப் பெறுவதே உடலுழைப்பு வேலை செய்யத்தான் ஐயா?

இத்தனை பணிகளுக்கு இடையே பள்ளிக்கு பிள்ளைகள் சென்று படிப்பதே ஒரு சாதனை. இதில் இவர்களுக்குத் தனியாக வேறு உடலுழைப்பு வேலை தர வேண்டுமா?

அரசு பள்ளிக்கு வருபவர்களில் 90% விழுக்காட்டுக்கு மேல் உழைக்கும் மக்களாக இருக்க வாய்ப்புண்டு.

//மற்றபடி காசு கொடுத்து படிக்கும் தனியார் பள்ளியில் இதைச் செய்தால் (அங்கும் செய்ய வேண்டும்) நம் மக்கள் அதையே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்டக்கூடும். //

இந்தியாவில் நடக்காது.

அரசு பள்ளிகளில் முதலில் அவர்கள் எல்லா வேலைக்கும் ஆள் போடட்டும். பிறகு வேண்டுமானால் நீங்கள் சொல்லும் சமூக பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ஆள் போடாமல் பிள்ளைகளை வேலை வாங்கிவிட்டு அதை இப்படி எல்லாம் நியாயப்படுத்தக்கூடாது.

//நண்பர்கள் குறை சொல்லியிருக்க வேண்டியது வேலை வாங்குபவர்களைப் பற்றி; வேலை செய்யும் குழந்தைகளைப் பற்றியல்ல.
//

எல்லாரும் வேலை வாங்கும் அமைப்பைத் தான் குறை சொல்லி இருக்கிறார்கள் என்பதே என் புரிதல்.

Leave a comment

(required)

(required)