spring_clean
இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது.

அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு ஊராட்சி பள்ளிக் கூடங்கள் தொடங்கி கும்பகோணத்தில் படித்த சிறியமலர் மேநிலைப் பள்ளி, நகர மேநிலைப் பள்ளி போன்ற எல்லா பள்ளிக்கூடங்களிலும் துப்புரவு வேலைகளைச் செய்திருக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும்பொழுது (நான் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவன் இல்லை என்றாலும்கூட) வார்டு 2 பள்ளிக்கூடத்தில் மதிய உணவு முடிந்தபிறகு சிதறிக்கிடக்கும் சோளரவா, வெங்காயத் துண்டுகள் என்று பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். வாராவாரம் பள்ளியின் முன்னால் இருக்கும் சிறிய தோட்டத்தைப் பெருக்கி அங்கேயிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்; இதற்காக கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லணைக்கால்வாயின் மதகிலிருந்து வாளியில் நீர் எடுத்து வருவோம். (தோட்டம் என்றால் ஒன்றும் அற்புதமான பூந்தோட்டமெல்லாம் கிடையாது; அந்த உவர் மண்ணில் எழுத்துக்கீரை என்று சொல்லப்படும் ஒரே தாவரம்தான் வளரும், அதை வைத்துக்கொண்டு விதவிதமான பாத்திகள் கட்டி, பள்ளியின் பெயரை எழுதி… அதுதான் தோட்டம்).

கும்பகோணம் சிறிய மலர் பள்ளிக்கூடத்தில் ஃபாதர் லூயி (இவர் தேசிய விருது பெற்ற நல்லாசிரியர்) தன் மேலங்கியை வரிந்து கட்டிக்கொண்டு எங்களுடன் மைதானத்தில் குப்பை பொறுக்குவார். ஏன் ஐஐஎஸ்ஸியில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தபொழுது எங்கள் ஆய்வகத்தின் லினோலியம் தரையை மாதம் ஒருமுறை சோப்பு நீர் கொண்டு துடைப்போம். சனிக்கிழமை க்ரூப் செமினார் முடிந்தவுடன் நடக்கும் இதற்கு என் ஆசிரியர் நீர் சேந்திக் கொண்டுவந்து தருவார். நாம் புழங்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் பெருமையைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?

இப்பொழுதும் இங்கே கூட என் மகன்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஆண்டுதோறும் துளிர்காலத்தில் பனியில் புதைந்துகிடக்கும் குப்பைகள் வெளியே வரும்பொழுது ஒரு நாள் முழுவதும் பள்ளியைச் சுற்றிய அரை கிலோமீட்டர் சுற்றுப்புறத்தில் இருக்கும் குப்பைகளைப் பொறுக்குகிறார்கள். கடந்த வருடம் விக்ரம் இந்த துப்புரவை ஒழுங்கு செய்யும் குழுவில் முக்கிய உறுப்பினாரக இருந்தான். அவன் பெருமைபொங்க இருபது மூட்டை குப்பை பொறுக்கினோம் என்று சொல்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கனடாவின் வால் ஸ்ட்ரீட் என்று அறியப்படும் பே ஸ்ட்ரீடில் (bay st.) ஆண்டுதோறும் இதே போன்ற துப்புரவு நடக்கிறது. இதில் உலகின் மிகப்பெரும் வங்கிகளின் தலைவர்கள் உட்பட பலரும் கையுறை அணிந்துகொண்டு தெருவில் குப்பை பொறுக்குவதைப் பார்க்கலாம். இதைத் தவிர ஒரு சனிக்கிழமையைப் பலரும் சுற்றுப்புற சுத்திகரிப்புக்காக ஒதுக்குகிறோம். இங்கிருக்கும் படம் பல்கலைக்கழகப் பேராசிரியரும் மாணவர்களும் குப்பை பொறுக்குவது.

சமூகப் பொறுப்பு மாணவர்களுக்கு அந்த வயதிலேயே சொல்லித்தரப்பட வேண்டிய ஒன்று. சூழலைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பொறுப்பை பள்ளியிலிருந்து துவக்காவிட்டால் வேறு எப்படி செய்யமுடியும்? நம்மூரில் பள்ளிக்கூடங்கள் போதுமான அளவிற்கு சமூகப் பொறுப்பு குறித்து சொல்லித்தருவதில்லை. இங்கே பள்ளி முடிந்து பல்கலைக்கழகத்தில் சேரும்போது அவர்கள் சமூக சேவை குறித்து எழுத வேண்டும். அதற்கு சில நேரங்களில் பல்கலைக்கழங்கள் 25% வரையான மதிப்பைத் தருகிறது. குறிப்பாக உதவித்தொகை வேண்டுமென்றால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான சமூக சேவை செய்திருக்க வேண்டும். நம்மூரில் இதெல்லாம் பற்றி எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. இது பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்கும். ஏற்கனவே நம்மூரில் ஆண் குழந்தைகள் வீட்டில் எந்தவிதமான வேலையையும் செய்வதில்லை. சமூகத்திலும் எந்தவிதப் பொறுப்புமின்றி வளர்வது ஆபத்தானது.