சரியாக ஐந்து வருடமாகச் சவாரி செய்துகொண்டிருந்த புலியின் மீதிருந்து இன்றைக்குக் காலை வெற்றிகரமாக கீழே இறங்கிவிட்டேன் (என்று நம்புகிறேன்).

தமிழிலில் வலைப்பதிவு எழுதும் யாரும் செய்யாத ஒரு காரியத்தை நான் இவ்வளவு நாளாகத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததேன்.  2003 ஜூலையில் தொடங்கிய நாளிலிருந்து நேற்றுவரை என் வலைப்பதிவு என் வீட்டிலிருந்த சேவை வழங்கியால் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பர்களில் பலரும்  ப்ளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் என்று இலவசச் சேவைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். மிகச் சிலர் (ஒரு சதவீதம்??) சொந்தமாக இணைய தளம் பதிவு செய்து வழங்குசேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டு தாமாகவே வலைப்பதிவுப் பொதிகளை நடத்தி வருகிறார்கள். நான் இது நாள்வரை என் வீட்டிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த லினக்ஸ் கணினி ஒன்றின் உதவியுடன்  என் domesticatedonion.net தளத்தை நடத்திக் கொண்டிருந்தேன்.

இது மிகச் சிக்கலான காரியம்.  சேவைவழங்கிக்குத் தேவையான இயக்குதளத்தை (முதலில் ரெட்ஹாட் லினக்ஸ், பிறகு உபுண்டு) நிறுவுதல், அதை இற்றைப்படுத்தல் (இல்லாவிட்டால் பிளவர்கள் குதறிப்போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்), அப்பாச்சே வழங்கியை நிர்வகித்தல், mysql  தரவுத்தளத்தைக் கட்டியாளுதல், மின்னஞ்சல் நிர்வாகம் (சென்ற வருடம் இதை இலவசமாக கூகிளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டேன், சுகமாக நடந்துவருகிறது). இத்யாதி சிக்கல்கள். இதையெல்லாம் செய்த நேரம் போகத்தான் வலைப்பதிவு எழுதவேண்டும்.

இவற்றுக்குள்ளே இருந்த ஆகப்பெரிய சிக்கல் – தொடர்ச்சியாக மாறிக்கொண்டேயிருக்கும் இயங்கு ஐபி எண்ணை வைத்துக்கொண்டு நிலையான முகவரியைத் தரவேண்டிய இணைய தளத்தை நடத்துவது. என் வீட்டிற்கு அகலப்பாட்டை சேவையைத் தரும் பெல் நிறுவனம் எண்ணை மாற்றிக்கொண்டேயிருக்க நானும் dyndns.org உதவியுடன் அதைத் துரத்திக் கொண்டேயிருக்க வேண்டும்.

இவ்வளவு சிக்கல்களை எல்லாம் ஏன் தலையில் அள்ளிப்போட்டுக்கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் கேட்பார்கள். ப்ளாக்ஸ்பாட்டில் இலவசக் கணக்குத் துவக்கினோமோ, பெட்டியைத் திறந்து கிறுக்கினோமா, படத்தை வெட்டி ஒட்டினோமோ, பொத்தானைத் தட்டி பதிந்தோமா என்று ஏன் எல்லோரையும் போலச் செய்யக் கூடாது. -லாம்தான். ஆனால் நுட்பத்தின் மீது இருக்கும் பேராசை என்னை விடவில்லை. லினக்ஸ் என்று ஒரு இயக்குதளம் வந்து ஒரு வருடத்திலிருந்து அதைப் பயன்படுத்தி வருகிறேன். அதன் எல்லா வளர்நிலைகளையும் தெரிந்துகொள்ள, அதை சந்தோஷத்துடன் அனுபவிக்க இந்த சேவை வழங்கு கணினி நடத்துவது உதவியிருக்கிறது.   பயனுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கித் தூக்கியெறிந்த பெண்டியம்-3, பிறகு பெண்டியம்-4 கணினிகளில்தான் என் சேவை வழங்கி இவ்வளவு நாள் நடந்துவருகிறது. ஒருபுறத்தில் தோஷிபா அட்டைக்கணினி (Tablet PC) சோனி, ஆப்பிள், ஏஸுஸ் ஈஈஈபிஸி என்று சந்தைக்கு வந்தவுடனேயே அவற்றை வாங்கிப் பயன்படுத்தும் கருவிப்பித்து, மறுபுறத்தில் குப்பையில் போடப்பட்ட பாகங்களை இணைத்துப் பிணைத்த கணினியில் வழங்கியை நடத்துவது எல்லாமே நுட்பத்தின் சவால்களையும் வசதிகளையும் நேரடியாக எதிர்கொண்டு இயைந்தியங்கும் மனநிலைதான்.

ஆனால் கடந்த ஆறுமாதங்களாக இதன்மீது தொடர்ச்சியாகச் சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெல் நிறுவனத்தின் ஐபி எண் மாற்றத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பது எரிச்சலைத் தரத்தொடங்கியிருக்கிறது.  ஐந்து வருடமாக சேவை வழங்கியை நிர்வகித்துவிட்டு இதில் சாதிக்க ஒன்றுமில்லை என்று வெறுப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டிருக்கிறது. எனவே இந்த விளையாட்டை நிறுத்திவிட்டு வேறு விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்று இதை முடித்திருக்கிறேன். (இப்போதைக்கு லினக்ஸ் கணினியை வீட்டில் Media Server இயக்குவதிலும் குறுவட்டு, நாடா என்று சிதறிக்கிடக்கும் இசைத் திரட்டல்களை எல்லாம் முழுமையாக கணினிக்கு மாற்றி வருகிறேன், கூடவே அடர்வட்டு திரைப்படங்களையும் மீடியா செண்டருக்கு மாற்றி வருகிறேன்.  இனி மீடியா வழங்கி வைத்துக்கொள்வது லினக்ஸ் பயன்பாட்டுக்குப் போதும் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

கடந்த வாரத்தில் என் வழங்கி அமைப்புகளை முற்றிலுமாக 1and1.com நிறுவனத்துக்கு மாற்றிவிட்டேன். என் English Blog, Photo Blog எல்லாவற்றையும் அங்கே இடம்பெயர்த்தாகிவிட்டது (இனிமேல் இவற்றிலும் தொடர்ந்து எழுத உத்தேசம்).  இந்த மாற்றத்தைக் கொண்டாட விரைவில் ஒரு புதுத் தொடரை எழுத உத்தேசம்.  இதற்கான தரவுகளை திரட்டி வருகிறேன்.  பலமுறை வலைப்பதிவு எழுதுவதில் என் மனதுக்குப் பிடித்தது இசையைப் பற்றி எழுதுவதுதான் என்று சொல்லியிருக்கிறேன். விரைவில் இதைப் பற்றிய விபரங்கள் வரும்.  கட்டாயம் இது அறைத்தமாவாக இருக்காது என்பது நிச்சயம்.

இப்போதைக்கு சில இணைப்புகளும், படங்கள் பாடல்களும் பழைய பதிவுகளில் சரியாகச் செயல்படாது. இவற்றை விரைவில் சரி செய்கிறேன்.  இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டினால் உடனடியாகச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.