முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.

என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது).  இருந்தபோதிலும் பணக்காரனின் வயலில் பாயும் வெள்ளம் கசிந்துதான் ஏழையின் காணிக்கு வரவேண்டும் என்ற சிந்தனை அதன் மிகப் பெரும் கரும்புள்ளிகளில் ஒன்று. மற்றது சமீபகாலமாக வளர்ந்துவரும் சமய வெறி.  இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் காற்புள்ளியாவது ஒபாமாவால் இடமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  கடந்த எட்டு வருடங்களில் வறட்டு முரட்டுத்தனத்தை மாத்திரமே உலக நாடுகளிடம் காட்டிய அமெரிக்கா தனது மூர்க்கத்தைக் களைந்தெரிந்து ஒரு உன்னத முதன்மை நாடாக உலக நாடுகளிடையே தன் பெயரை மீட்டெடுக்க வேண்டும்.

ஒபாமா அப்பழுக்கற்றவர் என்ற எண்ணம் எனக்கு ஒருப்போதும் இருந்ததில்லை. ஆனால் போட்டியிட்ட எல்லோரைக் காட்டிலும் மிகக் குறைவான எதிரெண்ணங்களைக் கொண்டவர் என்பதே அவரிடம் நான் கண்ட (காணும்) முக்கிய தகுதி.  இன்றைய அமெரிக்க மற்றும் உலக நடப்பில் ஒபாமாவின் துவக்கம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலில் காட்டிய சில நல்ல பண்புகளைத் தொடர்ந்தாலே போதும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன். குறிப்பாக அனைவரையும் அரவணைத்துச் செல்வது.

செனட்டர் மெக்கெய்ன் இந்தத் தோல்வியால் ஒன்றும் சிதைந்துப் போகப் போவதில்லை. அவருடைய நீண்ட நாளைய சேவை அமெரிக்கர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்று நம்புகிறேன். இன்னும் சில காலமாவது செனட்டாராகத் தொடரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

சிக்கலான துவக்கம். தடைகளைக் களைந்தெரிந்து வெற்றிகளைச் சேர்க்க ஒபாமாவுக்கு இனிய வாழ்த்துகள்.

(இதை எழுதி முடிக்கும் நேரத்தில் 54 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஒரு டெமாக்ரடிக் வேட்பாளர் (ஒபாமா) வர்ஜீனியாவில் வெற்றி பெறுவார் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னும் முழு முடிவுகள் வரவில்லை எனினும் … சரியாக 11:00 மணி, சி.என்.என் ஒபாமாவின் வெற்றியை உறுதியான அறிவிப்பாக்கியிருக்கிறது.)