smartpen_x220.jpg
கணினிகளின் வருகைக்குப் பிறகு அச்சிட்ட தகவல் அழிந்துபோகும் என்று பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை அச்சிட்ட நாளிதழுக்கான சந்தை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கணினிகளின் கோப்புகளாக்கிவிட்டால் காகிதத்திற்குத் தேவையிருக்காது என்று நம்பப்பட்டது; ஆனாலும் நிறுவனங்களில் காகிதத்திற்கான செலவு சில சமயங்களில் கணினிகளுக்கான செலவைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. இணையத்தில் எல்லா தகவலும் கொட்டிக்கிடந்தாலும் மாலை அலுவலிலிருந்து வீடு திரும்பும்பொழுது இரயிலில் வரும் சகபிரயாணிகள் அன்றைய செய்தித்தாள் விமர்சனக் கட்டுரையை அச்செடுத்து வந்து படிப்பதைப் பார்க்கமுடிகிறது.

நான் பொதுவில் நவீன நுட்பங்களுடன் இயைந்து செல்பவன்தான். ஒரே ஒருமுறை படித்துவிட்டு வீசியெறியும் விமர்சனக் கட்டுரையைக் என்னுடைய கைக்கணினியிலோ, ஐ-பாடிலோ மாற்றி எடுத்துச் செல்லும் வழக்கம் எட்டு வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இன்னும் காகிதமும் பேனாவும் என்னைவிட்டு அகன்றபாடில்லை. அலுவலக ஆலோசனைக் கூட்டங்களில் குறிப்பெடுப்பதற்கு 1999 தொடங்கி பலமுறை மடிக்கணினிகளைப் பயன்படுத்த முயன்றிருக்கிறேன். ஆலோசனைக் கூட்டத்தில் லொட்டு லொட்டு என்று விசைப்பலகையைத் தட்டுவதில் வரும் இரைச்சல் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அட்டைக்கணினி (Tablet PC) வந்தபொழுது இதில் எழுத்தாணி இருக்கிறது, இனி பேனா தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனாலும் அதன் நடைமுறைச் சிக்கல்களினால் விரைவிலேயே திரும்ப குறிப்பேட்டுக்கு மாறிவிட்டேன். (முக்கியமான சிக்கல் அட்டைக்கணினிகளின் திறமை குறைவு, பெரும்பாலானவற்றில் குறுவட்டு வசதி கிடையாது, இவற்றில் என்னுடைய ஆய்வகத்திற்குத் தேவையான சிக்கலான கணிப்புகளைச் செய்யமுடியாது, எனவே இரண்டு கணினிகள் தேவையாக இருக்கின்றன). வெட்டிய மரத்தில் விஷயம் தேடமுடியாது (You can’t grep a dead tree) என்பது நிதர்சனம் என்றாலும் குறிப்பேடின் வசதி இன்னும் கணினியில் முழுமையாக வந்தபாடில்லை. இப்பொழுதெல்லாம் ஆய்வகக் குறிப்பேடு, ஆலோசனைக் குறிப்பேடு இவற்றுக்கு இன்றுவரை நான் நோட்டுப்புத்தகங்களைத்தான் பயன்படுத்தி வருகிறேன். தேவையான பொழுது அதன் பக்கங்களை வருடி கணினியில் சேமித்துக்கொள்கிறேன்.

கணினிகளின் பரிணாமத்தில் முக்கிய கட்டம் மடிக்கணினிகள். இவை விஷயவங்கியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல வசதியைத் தந்தன. அதன் அடுத்த கட்டமாக கைக்கணினிகள் வந்தன. ஆனால் விரைவிலேயே அவற்றின் கணிப்புத்திறன் எம்பி3 இயக்கிகள், செல்பேசிகள் என்று எல்லாவற்றுக்கும் பரவ தனியாகக் கைப்பிடி கணினி தேவையில்லாமல் போய்விட்டது. இப்பொழுது இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒருங்கு கருவிகள் (
Convergence Devices) பிரபலமாகிவிட்டன. இன்றைக்கு என்னுடைய நோக்கியா ஸ்மார்ட்ஃபோனில் வேர்ட், பிடிஎஃப் கோப்புகளை வாசிக்க முடிகிறது. தேவையானபொழுது பவர்பாயிண்ட் கோப்பைக்கூட எடுத்துச் செல்ல முடிகிறது. (சமீபத்தில் ப்ளூடூத் கொண்ட ஒளிப்பெருக்கிகளில் இந்தக் கோப்பை செல்பேசியிலிருந்து நேரடியாகக் காட்டமுடிகிறது). எம்பி3 கேட்க முடிகிறது. ரியல்வீடியோ, ஃப்ளாஷ் வீடியோ பார்க்க முடிகிறது. இணையம் உலவ முடிகிறது. ப்ளாக்பெர்ரி மென்கலன் கொண்டு மின்னஞ்சல் அனுப்ப முடிகிறது. இருந்தபோதும் இதன் எடை 100 கிராம்தான். 1998-ல் 5 கிலோ எடை கொண்ட என்னுடைய முதல் மடிக்கணினி இவ்வளவு சக்தி கொண்டிருக்கவில்லை.

என்னைப் பொருத்தவரை மடிக்கணினி, ஒருங்கு கருவிகளுக்கு அடுத்த முக்கிய கட்டம் 2008 ஜனவரியில் துவங்குகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அநோட்டோ நிறுவனம் கணினிகளைப் பழைய காகிதம்-பேனாவுக்கு எடுத்துச் செல்கிறது. தாளில் எழுதும்பொழுதே பேனாவிலிருக்கும் உள்ளடக்கச் செயலி எழுதப்பட்ட எழுத்தை இலக்கமாக்கி சேமிக்கிறது. பின்னர் இதை கணினிக்கு எளிதில் மாற்ற முடியும்; பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த நுட்பம் மூன்று படிநிலைகளில் செயல்படுகிறது.

விசேடக் காகிகதம்

anoto_paper.jpgநுட்பத்தின் அடித்தளமாக இருப்பது அநோட்டோவின் விசேடக் காகிதம். இதில் 300 மைக்ரான் இடைவெளியில் சீரற்ற புள்ளிகள் இருக்கின்றன. இந்தப் புள்ளிகள் சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாது (எனவே இது சராசரி நோட்டுப்புத்தகம் போலத்தான் காட்சியளிக்கும்). பேனாவிலிருக்கும் காமெரா இந்தப் புள்ளிகளையும் எழுதப்பட்ட எழுத்தின் கூடவே பதிவு செய்வதால் எழுத்து எளிதில் இலக்கமாக்கப்படுகிறது. படத்திலிருக்கும் புள்ளிகளின் அமைப்பில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருப்பதைக் கவனிக்கலாம். வரிகளுக்கு வரி, பக்கத்திற்குப் பக்கம் புள்ளிகளின் அமைப்பை மாற்றுவதன் மூலம் எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் பேனாக்கணினி எளிதில் பதிவு செய்து கொள்கிறது.

பேனாக்கணினி

anoto_pen.jpgஆதாரக் கண்டுபிடிப்பு அநோட்டோவின் பேனாக்கணினி. பார்வைக்குச் சாதாரண போனாவைப்போலத் தோற்றமளிக்கும் இந்தப் பேனாவில் ஒரு பதிகணினி போலவே மின்கலன், நினைவகம், செயலி எல்லாவற்றுடனும் கூட ஒரு காமெராவும் உண்டு. எழுதும்பொழுது நொடிக்கு ஐம்பது படங்களை எடுத்து இவற்றை ஆராய்ந்து எழுதப்பட்ட எழுத்தை அப்படியே சேமிப்பதுடன்கூட இதை இலக்க வடிவமாகவும் மாற்றிக்கொள்கிறது. சராசரியாக ஐம்பது A4/Letter தாள்களின் சங்கதிகளைப் பேனாவில் எளிதாகச் சேமிக்கமுடியும். எழுதப்பட்ட நேரத்தையும் கூடவே பதிவு செய்வதும் சாத்தியம்.

இவற்றுடன் கூட ஒரு மைக்ரோஃபோனையும் சேர்த்தால் தேவையானபொழுது பேனாவிலிருக்கும் பொத்தானைத் தட்டி பேசுபவரின் வார்த்தைகளையும் ஒலியாகப் பதிவு செய்துகொள்ள முடியும். பேனாவில் இருக்கும் ப்ளூடூத் இணைப்பின் மூலம் சேமிக்கப்பட்ட விடயங்களைச் சுலபமாக கணினிக்கு மாற்ற முடியும்.

தகவல் சேமிப்பு

இந்த இடத்தில் சராசரி தொழில்நுட்பங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே சொன்னதுபோல பேனாவில் ப்ளூடூத் இருக்கிறது. எழுது காகிததின் மூலையில் இருக்கும் கட்டத்தில் X குறி இடுவதைக் கட்டளையாகக் கொண்டு பேனாவின் தகவல்கள் உடனடியாக கணினியில் சேமிக்கப்படுகின்றன. அல்லது ஒரு USB பேனாக்கூட்டில் இதைப் போடுவதன்மூலம் இணைப்பின் வழியேயும் தகவலைச் சேமிக்கலாம். எந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருகிறது, யார் எழுதினார்கள், எழுதிய நேரம் போன்ற தகவல்களும் எழுத்தின் கூடவே சேமிக்கப்படுகின்றன. இதை இன்னும் எளிதாக நீட்டிக்க முடியும்.

பயன்பாடுகள்

இப்போதைக்கு எங்கெல்லாம் பேப்பர்-பேனா பயன்படுகிறதோ அங்கெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும் என்று தோன்றுகிறது. புள்ளியிட்ட காகிதத்தின் தேவை ஒரு நெருக்கடியாக இருந்தாலும் இது ஆரம்பகால நுட்பச் சிக்கல்தான் என்பதில் ஐயமில்லை. விரைவில் எல்லா காகிதங்களிலும் இதைப் பயன்படுத்த ஏதுவாக்கப்படும் என்று நம்பலாம். இதன் விற்பனை உரிமையைப் பெற்ற LiveScribe என்ற அமெரிக்க நிறுவனம் இதை $200-க்கு விற்கிறது. (இது ஆரம்பகாலக் கைக்கணினியைவிட மிகக் குறைவு, என்னுடைய முதல் காஸியோ கைக்கணினியை $450-க்கு வாங்கினேன். இப்பொழுது கைக்கணினியின் சராசரி விலை $150-$200). விரைவிலேயே $50-$75-க்கு வரும் என்று எதிர்பாக்கலாம்.

என்னுடைய நடைமுறை உபயோகத்திற்கு இதை ஆய்வகக் குறிப்பெடுக்க கூட்டங்களில் குறித்துக்கொள்ளக் கட்டாயம் பயன்படும் என்று தோன்றுகிறது.

களப்பணியாளர்கள் இதை எளிதில் பயன்படுத்த முடியும். வீட்டிற்கு மக்கள் கணக்கு, வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருபவர்கள் விஷயங்களைக் குறித்துக்கொண்டு, உங்கள் கையொப்பத்தையும் பெற்றுச் செல்லமுடியும். சாலைப்போக்குவரத்துக் காவலர்கள் உத்தரவாதமான ட்ராஃபிக் டிக்கெட்டுகள், பார்க்கிங் டிக்கெட்டுகளைத் தரமுடியும்.

[kml_flashembed movie=”http://livescribe.com/media/swf/animations/paperreplay.swf” height=”338″ width=”400″ /]
மருத்துவர்கள் நோயாளியைச் சந்தித்தபிறகு நோயாளிக் குறிப்பை எழுத உதவும். இது காப்பீடு, வழக்காடுகள் மிகுந்த அமெரிக்காவில் மிக முக்கியமான ஒன்று. பல வழக்குகளில் மருத்துவரின் முதல் குறிப்பு முக்கியமான சாட்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது நோயாளியைச் சந்தித்தவுடன் அடுத்த நோயாளியைப் பார்க்குமுன் அவருடைய கணினியில் உட்கார்ந்து குறிப்பெழுத வேண்டியிருக்கிறது. இனிமேல் நோயாளியுடன் பேசும்பொழுதே அட்டையில் எழுதிச் சேமிக்க முடியும். மருத்துவரின் சொந்தக் கையெழுத்திலேயே நேரக்குறிப்போடு சேமிக்கப்படுவதால் இதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. (மருத்துவரின் கிறுக்கல்களைப் புரிந்துகொள்வதைப் பற்றி தனியாகப் பேசிக்கொள்ளலாம்). என் கணிப்பில் இந்தக் கருவிக்கு முதலாவதான, முக்கியமான சந்தை இதுவாகத்தான் இருக்கப்போகிறது.

மாணவர்கள் பாடக்குறிப்பெடுக்க உதவும். (இணைக்கப்பட்டிருக்கும் விளக்கப்படத்தைப் பார்க்கவும்).

பல நூற்றாண்டுகளாக மனிதர்களுக்குப் பழக்கப்பட்ட பரிணாம வளர்ச்சியில் திறமாக்கப்பட்ட காகிதம்-பேனா வடிவத்திற்குக் கணினியை எடுத்துச் செல்வது பயனர் இடைமுகத்தின் முக்கியமான கட்டம். அந்த வகையில் அநோட்டோவின் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பெரும் ஊடுடைப்புதான்.

யுஎஸ்பீ-யின் இணைக்கும் ஃபேன், காப்பி சூடுபடுத்தும் கோப்பை, நூடுல்ஸ் கொத்திக்க வைக்கும் சட்டி என்று பல கச்சடா (Kitsch) கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருப்பதால் கொஞ்சம் நாட்கள் யுஎஸ்பீ சாதனங்களைக் கண்டாலே வெறுப்பாக மாறிப்போயிருந்தது. ஆனால் இந்தப் பேனாக்கணினி அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று என்றுதான் நம்புகிறேன்.