உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை வல்லுநர்களால், சஞ்சிகைகளால், இரசிகர்களால் புகழப்படுபவர். கடந்த முப்பது வருடங்களாக ராக் இசை நிகழ்ச்சிகளில் ட்ரம்ஸ் கலைஞர் ஒருவருக்காக அதிகம் கூட்டம் கூடுகிறது என்றால் அது பீர்ட் ஒருவருக்குத்தான் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

பீர்ட் எங்கள் ஊர்க்காரர். (டொராண்டோவில் நான் முன்பு வசித்த நார்த் யார்க் பகுதியில் ஒரு பத்து தெரு தள்ளித்தான் அவர் பூர்வீக வீடு இருக்கிறது). சிறு வயதில் பியானோ கற்கத் தொடங்கிய நீல் விரைவிலேயே ட்ரம்ஸ்க்கு மாறினார். டொராண்டோ நகரிலும் அதைச்சுற்றியுள்ள நகர்களிலும் கிளப்களிலும் தெருக்களிலும் வாசித்துக்கொண்டிருந்தவர் விரைவிலேயே கவனம்பெறத் தொடங்கினார். அதில் ஊக்கம் பெற்றவராக இசைக்குழுக்களில் சேரும் உத்வேகத்துடன் லண்டன் நகருக்குச் சென்றார். அங்கு தெருக்களையும் சிறு குழுக்களையும் தாண்டி அவரால் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. மனம் வெறுத்துபோன பீர்ட் கனடா திரும்பினார். தொடர்ந்து டொராண்டோவில் மிகப்பிரபலமாக வளர்ந்துகொண்டிருந்த ரஷ் குழுவில் இணைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ரஷ் குழு உலகத்தின் மிக முக்கிய ராக் குழுக்களில் ஒன்றாக வளர்ந்தது. இசை ஆர்வம் வளரும் நாட்களிலேயே பீர்ட்டுக்கு கவிதை, தத்துவம் போன்றவற்றிலும் ஆர்வம் வளரத் தொடங்கியது. அதிருஷ்டவசமாக ரஷ் குழுவின் பாஸ் கிடார் வாசிக்கும் முன்னணிப்பாடகரான கெட்டி லீ (Geddy Lee)-க்கும் இதுபோன்ற ஆர்வங்கள் இருக்க அவர்கள் பிணைப்பு நெருக்கமானது. ரஷ்-ஷின் பல பாடல்கள் அவற்றின் உயர்ந்த இலக்கிய தரத்திற்காகப் பாரட்டப்பட்டன. இவற்றை எழுதியதில் நீல் பீர்ட்டுக்கு பெரும்பங்குண்டு.

ஜாஸிலிருந்து ப்ளூஸிலிருந்தும் வேர்களைப் பெற்று ராக் அண்ட் ரோல் செடியாக வளர்ந்து விருட்சமான ராக்கிற்கு தாளவாத்தியத்தின் முக்கியத்துவம் நிறையவே உண்டு. உயர் சக்தி கிட்டார் ஸ்ட்ரம்மிங், உச்சஸ்தாயி குரல் பாடல்கள் போன்றவற்றை நங்கூரமிட்டு இரசிகளின் இதயத் துடிப்பை விரைவாக்குவதில் ராக் இசைக்கு ஈடு எதுவுமில்லை, இதில் ட்ரம்ஸின் பங்கைத் தனிப்பட்டு சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. ப்ரொக் ராக் (Progressive Rock) குழுக்கள்தாம் ராக் இசையை கலைநயத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய உயர் தளத்திற்கு எடுத்துச் சென்றவை. என்னுடைய ராக் ட்ரம்ஸ் கலைஞர்கள் தெரிவில் பீர்ட், ஏர்ல் பால்மர், ஃபில் காலின்ஸ், கீத் மூன் என்று பெரும்பாலும் ப்ரொக் ராக் கலைஞர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் அடிப்படை ஜாஸ் ட்ரம்மிங். அது syncopation, Polyrhythms, Timing போன்ற துல்லியமான வரையறைகளுக்கு உட்படு அதே சமயத்தில் ஜாஸின் உயிர்நாதமான improvisation வழியாக படைப்பின் உச்சங்களுக்கு வழி தருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட தெரிவு என்று கொண்டாலும் கூட காலத்தைக் கடந்து நிற்கும் பீட்டில்ஸின் சார்ஜண்ட் பெப்பர் ஆல்பம், ஃப்ராங் ஸாப்பா, தி ஹூ, ஃப்ளீட்வுட் மாக் போன்ற ப்ரொக் ராக் படைப்புகள் அதற்குச் சான்றாக நிற்கின்றன. நல்ல பாடலாசிரியர், புனைவிலிகள் எழுதிய எழுத்தாளர், என்றைக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர் என்று பல தகுதிகளால் நீல் பீர்ட்-டை ஒரு முதல்தர ப்ரொக் ராக் கலைஞர் என்று சொல்லமுடியும்.

Syncopation, Polyrhythm, போன்றவை குறித்த எளிய விளக்கங்களை என்னுடைய இந்த ஜாஸ் இசை அறிமுகப் பதிவில் காணலாம்.

எல்லோரையும் போல மிகச் சாதாரணமான ட்ரம் தொகுதிகளுடன்தான் பீர்ட்டும் தன் வாழ்க்கையைத் துவங்கினார். விரைவிலேயே பலவகையான ட்ரம்களை இணைத்துக் கொண்டார். இப்பொழுது மிக அதிகமான தாள வாத்தியங்களை ராக் இசையில் வாசிப்பவராக அறியப்படுகிறார். நீல்-ன் ட்ரம் அமைப்பைப் படத்தில் காணலாம். அவருடைய தொகுதியில் பல சிம்பல்கள் உண்டு. இவை பெரும்பாலும் அவருக்காக ஸேபியன் என்ற கனேடிய நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. துல்லியமான அதிர்வுகளைக் கொண்ட சிம்பல்களை நீல்-க்காகத் தயாரிக்க ஸேபியனுடன் இணைந்து நீல் வடிவமைப்புகளில் பங்கு பெறுகிறார். இப்படி ஒவ்வொரு சிறு விஷயங்களிலும் துல்லிய கவனம் செலுத்துவது நீல் பீர்ட்டின் இயல்பு. இத்தனை வாத்திகளையும் தன்னுடைய கையெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அவரைச் சுற்றி 306 டிகிரி வட்ட அமைப்பு தேவைப்படுகிறது. அந்த வட்ட அமைப்பில் சில நேரங்கள் பார்வையாளர்களுக்கு முதுகைக் காட்டி வாசிக்க உடன்பாடு இல்லாததால் விசேடமான சுழல்மேடை கச்சேரிகளில் அவருக்காக வடிவமைக்கப்படுகிறது. ட்ரம்ஸ் தனியாவர்த்தனம் வாசிக்கும்பொழுது இந்தச் சுழல்மேடையை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதை இங்கே வீடியோவில் பார்க்க முடியும்.

இங்கிருக்கும் வீடியோ ரஷ் 2004ஆம் ஆண்டு உலகப் பயணத்தில் மிகப் பிரபலமான Der Trommler என்ற தனியிசை, இதை முதலில் ஃப்ராங்ஃபுர்ட் நகரில் வாசித்தார். நீல் சுற்றுப்பயணங்களின்பொழுது ஒவ்வொருமுறையும் இதை வாசிக்கும்பொழுது பல புதிய மாறுதல்களைக் கொண்டுவருவார். தொடர்ந்து பிரசிலின் ரியோ நகரில் இதை இன்னும் மெருகூட்டி O Baterista என்ற பெயரில் வாசித்தார். இந்தத் தனியிசை ராக் உலகின் மிக முக்கியமான ட்ரம்ஸ் தனியிசையாக பலராலும் பாராட்டப்படுகிறது. இந்த ட்ரம்ஸ் தனியிசை பல பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு விசேட பண்பு உண்டு. Anatomy of a Drum Solo என்ற இரட்டை டிவிடி தொகுதியில் டெர் ட்ரோம்லரின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி விரிவாக விளக்குகிறார். இசையில் ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரையும் இந்த டிவிடியைத் தவறாது பார்க்கப் பரிந்துரைக்கிறேன். பொதுவில் ராக் இசைக்கலைஞர்கள் என்றால் உடல் முழுக்க பச்சைக்குத்திக் கொண்டு, போதை மருந்துகளில் மூழ்கியிருப்பவர் என்ற பிம்பம்தான் இருக்கிறது. நீல் இந்த டிவிடியில் ஒரு தேர்ந்த, அற்புதமான ஆசிரியரைப் போன்று தாளவாத்தியங்களின் சிறப்புகள், தான் எப்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் தேர்ந்தெடுத்தேன், அதை எப்படித் தனித்துவமாக, அதேசமயத்தில் தொடர்பு நீங்காமல் இந்த ஸோலோ-வை வடிவமைத்தேன் என்று விளக்குகிறார். அனாட்டமி… அடர்வட்டு என் வீட்டில் எல்லோராலும் மிகத் தீவிரமாக இரசிக்கப்படும் ஒரு இசை வட்டாக இருக்கிறது. (இந்த டிவிடியைப் பார்த்ததிலிருந்து ட் ரம்ஸ்தான் கற்றுக்கொள்வேன் என்று அடம்பிடித்த என் இளைய மகனை வயலின் பக்கம் திருப்ப ஆறுமாதமானது).

நீல் பீர்ட்டைப் பற்றிய இந்த அறிமுகம் நீண்டு போய்விட்டதால் Der Trommler-ன் சிறப்புகள் அதில் வாத்தியங்களின் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன். இந்த சோலோவைப் புரிந்துகொள்வது ராக் இசையின் ட்ரம்ஸ் பயன்பாட்டுக்கு ஒரு அற்புதமான அறிமுகமாக இருக்கும்.