yogi_times.jpg உலக அளவில் இந்து மதத்தின் மிகப் பிரபலமான முகங்களில் ஒருவரான மஹரிஷி மஹேஷ் யோகி நேற்று காலமானார். 1950 தொடங்கி அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு காலகட்டங்களில் பல பிரபலங்களுக்கு நெருக்கமானவராக இருந்தவர் யோகி. இந்த வருட ஆரம்பத்தில், தான் இந்தப் பூவுலகில் அவதரித்து செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் முடிந்துவிட்டதாகவும் இனி வரும் நாட்களை பண்டைய ஹிந்து நூல்களைப் படிப்பதில் செலவிட்டால் போதும் என்று முடிவு செய்துவிட்டதாகவும் சொன்னார். தான் செய்து முடித்த காரியங்களுள் முக்கியமானவையாக யோகி கருதுபவை: அமைதி நெறியை உலகில் பரப்பியது, சோவியத்-அமெரிக்கப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தது, பங்குச் சந்தையை நிலைப்படுத்தியது.

மஹேஷ் யோகியின் உச்சகட்ட பிரபலம் அவர் பீட்டில்ஸ் இசைக் குழுவுடன் நெருக்கமாக இருந்த சமயம்தான். 1967 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் மிகவும் பேசப்படும் வருடங்களில் ஒன்று. அந்தக் காலங்களில் அபரிமிதமான வளத்தால் மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட ஆனந்தம் தளும்பிக் கொண்டிருந்தது (மறுபுறத்தில் அமெரிக்கா வியட்நாம் மீது அமிலங்களைப் பொழிந்து பொசுக்கிக் கொண்டிருந்தது). வளமையின் வெறுமையால் விரக்தியடைந்த கூட்டம் (முக்கியமாக இளைஞர்கள்) பரஸ்பர அன்பின் மூலம் அமைதியை நிலைநாட்டமுடியும் என்று நம்பத் தொடங்கினார்கள். அப்பொழுது கீழை தேச மதங்களின்மீது அவர்கள் கவனம் பரவத் தொடங்கியது. இதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டவர்களுள் முதன்மையானவர் மஹேஷ் யோகி.

1958-ல் ஹானோலூலுவில் சுமைகள் ஏதுமின்றி வெறுங்கையுடன் இறங்கிய யோகி உலகத்தை அதன் துக்கங்களிலிருந்து விடுவித்து அமைதி வழிப்படுத்தி ஆனந்தமயமாக்கப் போகிறேன் என்று சொன்னார். இது செல்வத்தைக் குவிப்பதே தம் பிறவிக்கடன் என்றிருந்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஊட்டியது. விரைவில் அவர் அமெரிக்கர்களிடையே பிரபலமாகத் தொடங்கினார். இந்த நிலையில்தான் பீட்டிஸ்ல் இளைஞர்களான ஜான் லென்னான், ஜார்ஜ் ஹாரிஸன், பால் மெக்கார்ட்னி, ரிங்கோ ஸ்டார் நால்வரும் அவரைச் சந்தித்தார்கள். அதுவரையில் உன்னதத்தை நெருங்க எல்.எஸ்.டி ஒன்றே வழி என்றிருந்த அவர்களுக்கு யோகியின் தியானம் ஒரு மாற்றுவழியைக் காட்டியது. உலகமே பீட்டில்ஸ் இசையின் காலடியில் கிடக்க, அவர்கள் மஹேஷ் யோகியின் காலடியில் அமர்ந்து உபதேசம் கேட்கத் தொடங்கினார்கள். உடனே “எல்.எஸ்.டி எங்களுக்குத் தேவையில்லை உன்னதத்தைச் சென்றடைய வேறுவழி கிடைத்துவிட்டது” என்று ஜான் லென்னான் அறிவித்துவிட்டார்.

yogi_beatles.jpgஆனால் இந்த மாயை விரைவிலேயே விடுபட்டது. நிரந்தர பிரம்மச்சர்யம் பூண்டிருப்பதாக அறிவித்துக்கொண்ட யோகி ஆஸ்ரமத்தில் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக ஜான் லென்னன் அறிக்கைவிட்டு வெளியேறினார். எல்.எஸ்.டி-யை விட்டு விலகி இருக்கமுடியாமல் போதைக்குத் திரும்பியதைத் கண்டித்தை அவர்களால் பொறுக்கமுடியாமலேயே ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறுவதாக யோகி மறுப்புரைத்தார். யோகியில் வெறுப்புற்ற ஜான் லென்னன் விரைவில் அவரது Sexy Sadie என்ற பாடலில் “You made a fool of everyone” என்று அவரைச் சாடினார். லென்னன், மெக்கார்ட்னி, ஸ்டார் மூவரும் தங்களை யோகியிடமிருந்து விடுவித்துக்கொள்ள ஜார்ஜ் ஹாரிஸனுக்கு அவர் மீதிருந்த பக்தி நிரந்தரமாகிப் போனது. ஜான் லென்னனின் பிரபலத்தைக் கடந்தும் அவரது எதிர்ப்பிரச்சாரம் யோகியைப் பெரிதும் பாதிக்கவில்லை. பல வருடங்கள் கழித்து இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று பால் மெக்கார்ட்னி சொன்னார். பீட்டில்ஸ் தவிர பீச் பாய்ஸ், மிக் ஜாகர், கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்று பல பிரபலங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் ஆன்மீகக் குருவாக இருந்தவர் யோகி.

அலன் கின்ஸ்பர்க், ஃப்ராங் ஸாப்பா, ஜான் லென்னன், யோகோ ஓனோ, போன்றவர்கள் பிரபலப்படுத்திய ப்ளவர் பவர் இயக்கம் வியட்நாம் போரின் இறுதியில் அதன் பிரபலத்தை இழக்கத் தொடங்கியது. அந்தக் காலங்களில் ஸாப்பா, தி ஹு வின் பீட் டவுன்ஸெண்ட், பீட்டில்ஸ், பீச் பாய்ஸ், எரிக் க்ளாப்டன், லெட் ஸெப்ளின் குழு, ரோலிங் ஸ்டோன் குழு என்று ராக்/பாப் துறையிலும், ஜான் கோல்ட்ரேன், மைல்ஸ் டேவிஸ், ஜான் மெக்ளாக்ளின் உள்ளிட்ட முன்னணி ஜாஸ் இசைக்கலைஞர்களுக்கும் ஒரு ஹிந்து குரு இருந்தார் (இருந்தாக வேண்டிய கட்டாயமிருந்தது). இது விட்டகுறை தொட்டகுறையாக மைக்கேல் ஜாக்ஸனுக்கு சாய் பாபா ஈறாகத் தொடர்கிறது (மடோனா ஒரு வித்தியாசத்திற்காக யூத மதப் பிரிவான கபாலாவின் மீது தன் பிரபலத்தைச் செலுத்தினார்). போருக்குப் பின் உலகப் பேரமைதி, அன்பின் ஆதிக்க சக்தி போன்றவற்ற மாயைகளிலிருந்து விடுபட்ட மேற்கத்தியர்கள் தங்கள் வழக்கமான பொருளீட்டலில் கவனத்தைச் செலுத்தத் தொடங்க, கட்டற்ற யோகியின் அமைப்பு விரைவில் ஆட்டம் காணத் தொடங்கியது.

மிகச் சிறந்த மேடைப்பேச்சாளரும் திறமையான நிர்வாகியுமான யோகி உடனடியாகத் தன்னையும் வர்த்தக வழிகளுக்கு மாற்றிக் கொண்டு புதுப்பித்துக் கொண்டார். விரைவில் உலகெங்கிலும் அவரது ஆழ்நிலைத் தியான அமைப்புகள் நிர்மாணிக்கப்பட்டு ஒரு சர்வதேச வர்த்தக அமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. அது இன்று வரை கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1971-ல் லாஸ் ஏஞலஸில் சர்வதேச மஹரிஷி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. (பிறகு அது அயோவா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது). ஐரோப்பாவின் முதல் மஹரிஷி பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் 1975ல் அமைக்கப்பட்டது. இப்பொழுது உலகெங்கிலும் கிட்டத்தட்ட 300 வர்த்தக அமைப்புகள் யோகி அமைப்புக்குச் சொந்தமானவை. இவற்றின் நிகர மதிப்பு பல பில்லியன் டாலர்களுக்கு அளவிடப்படுகிறது.

ஆழ்நிலைத் தியானம் என்ற பல்நூறாண்டு இந்துப் பழக்கத்தைத் தன்னுடைய வர்த்தகச் சின்னமாக ஆக்கிக்கொண்டார் மஹேஷ் யோகி. அத்வைத இந்துக் கோட்பாடுகளின் அடிப்படையில் சுயத்தின் ஆழத்தில் பரம்பொருளைக் கண்டடைய மனதைக் கட்டுப்படுத்தி தியானம் செய்யும் முறை யோகியால் உலகெங்கிலும் பிரபலமாக்கப்பட்டிருக்கிறது. (இது தொடந்து பிற வியாபாரிகளுக்கும் வர்த்தக வாசல்களைத் திறந்திருக்கிறது). தொன்னூறுகளின் இறுதியில் கார்நெல், பெர்க்லி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகங்களில் சி.டி ஸ்கான், காந்த ஒத்திசைவு (Magnetic Resonance Scan) உள்ளிட்ட அற்புத அறிவியல் கருவிகளின் துணைகொண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட கடுமையான முளை, மற்றும் நரம்பியல் ஆய்வுகள் தியானத்தால் நரம்புகள் மற்றும் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்பட்டன. இவை தியானம் உண்மையிலேயே மனிதனுக்குப் பலனளிக்ககூடிய பயிற்சி முறை என்று இப்பொழுது ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றன. இந்த ஆராய்சிகளில் ஒரு ஆய்வுப் பொருளாக தலாய் லாமா தன்னையே ஈடுபடுத்திக் கொண்டார்.

time_meditation.jpgஇருந்த போதிலும் ஆழ்நிலைத் தியானத்தின் மூலம் சடத்தை மிதக்கவைக்கமுடியும் என்ற மஹரிஷி வழிபாட்டாளர்கள் நம்பிக்கை அறிவியல் உலகில் நகைப்புக்குள்ளாகும் விஷயமாகத்தான் இருக்கிறது. இந்த மிதப்புகள் எல்லாம் கற்பனையே (அவை வெற்றுத்தாவல்கள்) என்று சாதாரண சலனப்படங்களின் உதவியாலேயே நிருப்பிக்கப்பட்டிருக்கின்றன.

பலர் ஒன்றுகூடி ஒருசேர ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபடுவதால் கிளம்பும் அமைதிப் பேரலை உலகத்திற்கு நல்லதை உண்டுபண்ணும் என்று மஹரிஷி நம்பினார் (அவர் குழுவினர் இன்னும் நம்புகிறார்கள்). இந்தக் கூட்டுப் பிரார்த்தனைகளால் கொந்தளிக்கும் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தலாம், போர்களை நிறுத்தலாம் என்று யோகி பிரச்சாரித்தார். இதுபோன்ற தங்கள் குழுவின் கூட்டுப் பிரச்சாரமே சோவியத்-அமெரிக்கப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என்று யோகி அறைகூவினார். தன்னுடைய இறுதி நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்ட யோகி, நேற்று 92 வயதில் ஹாலந்து நாட்டிலிருக்கும் ஆஸ்ரமத்தில் இயற்கையாக மரணமடைந்ததாக அவரது அமைப்பு அறிவித்திருக்கிறது. அவரது சீடரான தீபக் சோப்ரா குவாண்டம் ஹீலிங் என்று நவயுக ஜல்லியடி குருவாக இவற்றைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்கிறார்.