• Love Marriage – V.V. Ganeshananthan

    by  • June 24, 2008 • இலக்கியம் • 4 Comments

    ஒவ்வொரு குடும்பமும் திருமணத்தில் துவங்குகிறது; ஒவ்வொரு திருமணமும் குடும்பத்திலிருந்து.  வாசுகி கணேசானந்தனின் Love Marriage குடும்பங்களைத் திருமணங்கள் வழியே ஆராய்கிறது.  இருபத்தியொரு வயதாகும் யாழினி ஈழத்துப் பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை அமெரிக்கப் பெண். யாழினியின் எண்ணவோட்டங்களாகக் கதை நகர்த்தப்படுகிறது. படிப்பின் இடையே தன்னுடைய பெற்றோர்களின் வார்த்தைக்கு இணங்க யாழினி கனடாவின் டொராண்டோ நகருக்கு வருகிறார்.  இலங்கையிலிருந்து தன் அந்திமக் காலத்தைக் கழிக்க வரும் அவருடைய மாமாவைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றோர்களுடன் இணைந்து ஏற்றுக் கொள்கிறாள்.  குமரன் ஒரு முன்னாள் விடுதலைப்புலி.  ‘முன்னாள் புலி’ என்று ஒன்று கிடையாது, முற்றிப்போன நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் குமரனுக்குக் களப்பணியிலிருந்து (இயக்கத்திலிருந்தல்ல) விலகி இறுதிநாட்களைக் குடும்பத்துடன் கழிக்க அனுமதி கிடைக்கிறது.  அவருடன் கூடவே வரும் அவரது பதினெட்டு வயது மகள் ஜெனனி.  இயக்கத்திலிருக்கும் குமரன்-சகபோராளி இல்லற உறவின் எச்சம். ஜெனனியின் தாய் களத்தில் இறந்துபட, குமரனைப் புற்றுநோய் பீடிக்க  இயக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறுதி நாட்களைக் கழிக்க டொராண்டோ வரும் குமரனுக்கு யாழினியின் குடும்பம் உதவுகிறது.

    {Love Marriage by V.V. Ganeshananthan, Random House, 2008 Amazon Link}

    எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கவும் ஏற்கவும் இயலாத யாழினி; மறுபுறத்தில் வந்த சில நாட்களுக்குள்ளாகவே திருமணத்திற்குத் தயாராகும் ஜெனனி.  நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை டொராண்டோவில் போதை மருந்து வியாபாரத்தில் – பணம் இயக்கத்தைப் பராமரிக்க முற்செலுத்த்தப்படுகிறது.  மரணப்படுக்கையிலிருக்கும் குமரன் சகோதரியின் திருமணத்தைத் தடுக்க முயன்றவர். விதி அவரது அந்திம நாட்களை சகோதரி குடும்பத்திடமே தஞ்சமடையச் செய்கிறது. எந்தவொரு முற்பகையையும் மனதில் கொள்ளாமல் யாழினியின் தந்தை பராமரிப்பை மேற்கொள்கிறார்.   குற்றவுணர்ச்சி குமரணை யாழினியிடம் மனந்திறக்க வைக்கிறது. குமரனின் வழியே தன் குடும்பத்தைப் புரிந்துகொள்கிறாள் யாழினி.  போராலும் புலம்பெயர்தலாலும் சிதறுண்டு கிடக்கும் பெருங்குடும்பத்தின் கதை திருமணங்களின் வழியே சொல்லப்படுகிறது.

    வாழ்க்கையில் சீரோட்டம் கிடையாது, அதிலும் போர்ச்சூழல் வாழ்வில் நிச்சயமாக. வாசுகியின் இந்தக் கதையும் சிதறுண்டு கிடக்கிறது.  சம்பவங்கள் கால வரிசைக்கிரமத்தில் வருவதில்லை. நாவலை வாசிக்கத்துவங்கவும், மையத்திலும் இந்த உத்தி புத்திசாலித்தனமானதாகத் தோன்றினாலும் தொடர்ந்து அலுப்புதட்டுகிறது.  மிகச் சிறுபத்திகளால் சம்பவக் கோர்வையாக எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு பத்தியின் இறுதியிலும் ரஜினிகாந்த்-தனமாக நெத்தியடி வசனம். கூடவே இது யாருடைய கதை என்ற சிக்கலும் சேர்ந்துகொள்கிறது.  யாழினியின் கதை என்று கொண்டால் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் அவர் மாமாவின் நடவடிக்கைகள் யாழினியின் விமர்சனத்தில் சொல்லப்படவில்லை. யாழினியின் பெற்றோரின் காதலுக்கு குமரன் பெருந்தடையாக இருந்திருக்கிறார்.  போதை மருந்து வியாபாரிக்குத் தன் மகளைத் தாரை வார்க்கத் தயாராகிறார். தன்னைக் காதலித்த பெண்ணின் சாவுக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.  தான் கைபிடித்தவளைக் காப்பாற்ற எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதவருங்கூட.  இத்தனை எதிர்குணங்களுக்கிடையே  உயர்நடுத்தட்டுப் பெற்றோரின் அரவணைப்பிலும் பாசத்திலும், அமெரிக்கப் பாதுகாப்புச் சூழலில் வளரும் யாழினிக்கு குமரன்மீது எந்தவிதமான விமர்சனமும் இன்றி பாசம் பொங்கிவருவது இயல்பானதாகத் தோன்றவில்லை.

    கதைக்கான களத்தில் பல சுவாரசிய முடிச்சுகள் இருக்கின்றன.  திருமணங்களில்தான் எத்தனை வகை; பெற்றோர் பார்த்து நிச்சயிப்பது,  பெற்றோரால் ஆசிர்வதிக்கப்படுவது,  உள்-உறவுத் திருமணம், விருப்பமற்றது, நிர்ப்பந்திக்கப்படுவது என்ற பல வகையான திருமணங்கள்.  இவற்றின் ஆழம் கதையில் வலுப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. மிக மேலோட்டமாக பட்டியலிட்டுக் காட்டமட்டுமே முயன்றிருப்பதாகத் தோன்றுகிறது.  பெருங்குடும்பத்தின் உறவுச்சிக்கல்கள் அழுத்தமாக வெளிப்படவில்லை.  மிகச் சிறிய சம்பவங்கள், மனவோட்டக் குறிப்புகளென துண்டுதுண்டாக எழுதப்பட்டிருப்பது பிணைப்பின்றி மேலும் சிதறிச் செல்லத்தான் உதவுகிறது.  கவித்துவமான மொழிக்குச் செய்திருக்கும் எத்தனமும் முழுமையாகக் கைகூடவில்லை என்றே தோன்றுகிறது.

    மிக நுட்பமான சித்தரிப்புக்கு ஏற்றது ஜெனனியின் பாத்திரம்.  வீட்டாருக்குத் தெரியாமல் இயக்கத்திலிருக்கும் குமரனுக்கும், இயக்கத்திலேயே அவர் கைபிடித்தவருக்கும் பிறந்தவள் அவள். தாயைக் களத்தில் பறிகொடுத்தவள், நோய்க்குத் தந்தையைத் தாரை வார்க்கக் காத்திருப்பவள், எந்தவிதமான உறவுகளின் ஒட்டுதலும் இல்லாதவள் (குமரன் தன் மகளைக் காட்டிலும் யாழினியிடம் பாசமாக இருப்பதாகத் தோன்றுகிறது) , தலைமறைவு காட்டுவாழ்க்கையிலிருந்து பிடுங்கப்பட்டு கனேடிய அரசாங்கத்தின் கருணையுடன் பெருநகரில் நடப்படுகிறாள்.  இளம்வயதில் திருமணத்தை எதிர்நோக்கியிருக்கிறாள்.  இருந்தும் இந்தப் பாத்திரம் கூர்மையாகச் செதுக்கப்படவில்லை.  முற்றிலும் மாறுபட்ட சூழலில் பிறந்து வளரும் யாழினி-ஜெனனியின் உரையாடல்கள் வழியே இப்பாத்திரத்தையும் கதையையும் வலுவடையச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    இலங்கைச் சூழலைப் பற்றித் தெரியாத ஆங்கில வாசகர்களுக்கு இது ஒரு நல்ல அறிமுகமாக இருக்கக்கூடும்.  சமீபத்தில் கனடாவில் (குறிப்பாக டொராண்டோவில்) மைக்கேல் ஒண்டாட்சி, சியாம் செல்வதுரை போன்றவர்களின் கதை இலங்கையின் சூழலை ஓரளவுக்கு வாசகர்களுக்குச் சொல்லியிருக்கிறது.  இவர்கள் கதைக்களங்களைவிட வாசுகி உருவாக்கியிருக்கும் கதைப்புலம் ஈழத்தின் போர்ச்சூழலை  இன்னும் விரிவாகவே சொல்கிறது.  விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை முழுதுமாக ஆதரிக்காமல் எதார்த்தத்தின் கட்டாயத்தையும் அழுத்தமாகச் சுட்டுகிறது.

    புதினத்தின் இறுதியில் வரும் ஈமக்கிரியை விவரணைகள் சற்றும் சம்பத்தமில்லாமல் வலுவற்றுத் திணிக்கப்பட்டிருப்பதால் அலுப்பையும் எரிச்சலையும் ஊட்டுகின்றன. எந்தவிதமான உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் கட்டியெழுப்பாமல், மழுங்கலான கதையோட்டத்தில் முடியும் நாவலுக்கு இந்த விவரணைகள் சற்றும் தேவையற்றவை.  மேலும் கடைசி இருபத்தைந்து பக்கங்களில் வரும் எழுத்தோட்டத்தில் தன்மை, படர்க்கைக் குழப்பங்கள் மலிந்துகிடக்கின்றன.  “If we were in Jaffna,…” என்று தொடங்கும் விவரிப்பு “The priest would give the mutal makan, the first son, a tarppai… The ayer assembles vessels for the ceremony… They would carry the body outside…” என்ற ரீதியில் மொழிக்குழப்பத்துடன் நீண்ண்ண்ண்டுகொண்டே செல்லும் கடைசிப் பகுதி எந்தவிதமான உணர்விறுக்கத்தையும் எழுப்பவில்லை.  மாறாக ஒரு புறத்தில் டொராண்டோ கோவிலில் ஜெனனியின் திருமணம், மறுபுறத்தில் ஈழத்தில் செத்திருந்தால் குமரனுக்குரிய ஈமக்கிரியைகள் என்று ஒன்றிழைத்து (juxtapose) இறுதிப் பத்திகள் எழுதப்பட்டிருந்தால் மரணமும், திருமனமும் மாறிமாறி தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் நிலையின்மையும் அபத்தமும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கும்.

    எல்லாவற்றையும்விட மனதில் முரணாகத் தைத்தது இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம்தான். தலையில் முக்காடிட்டுப் பொட்டிட்டு நின்றிருக்கும் பெண்ணின் உருவம் தமிழ்/திராவிடக் கலாச்சாரங்களைச் சேர்ந்ததி stock image-ஐ யாராவது எடுத்து உள்ளே தள்ளிவிட்டார்களா?) இந்த மாபெரும் தவறை எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை.  (இல்லை உண்மையாகவே ஈழத்தில் மணக்கோலத்தில் பெண்கள் இப்படித்தானா என்று யாரவது உறுதிப்படுத்துங்கள்).

    ( இந்த நாவல் எனக்கு பதிப்புக்கு முன்னால் ராண்டம் ஹவுஸின் Early Reviewer Program வழியே அனுப்பப்பட்டு அமெரிக்க-கனேடிய எல்லையில் தெரியாத காரணங்களுக்காகத் தாமதிக்கப்பட்டு சமீபத்தில்தான் கிடைத்தது.  இறுதியில் நான் சொல்லியிருக்கும் மொழிக்குழப்பங்கள் முறையான பதிப்பில் சரிசெய்யப்பட்டிருக்கலாம்.  அத்தியாயங்களுக்கு இடையில் வெள்ளைத்தாளின் நடுவில் {இந்த இடத்தில் ஒரு திருக்குறள் போடவேண்டும்} என்று நிரப்புக்கோடுகள் மானே, தேனே பொன்மானேக்காகக் காத்துக்கிடப்பதைப் பார்த்தது முற்றிலும் புதிய அனுபவம். ராண்டம் ஹவுஸ்க்காக் இதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்).

    4 Responses to Love Marriage – V.V. Ganeshananthan

    1. June 28, 2008 at 12:24 pm

      வாங்க! வாங்க!

      (உ)வேர்ட்பிரஸ் 2.51 ம் கண்ணன் ராமநாதனின் தமிழ்மணம் தொடுப்பு சொருகுநிரலும் ஒத்துப் போகவில்லை.

      கண்ணனின் பழைய v-06 வேலை செய்கிறது.

    2. வாசகன்
      July 30, 2008 at 5:46 am

      ராண்டம் ஹவுஸ்க்காக் இதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்

      ஐயா என்ன சொல்ல வருகிறீர்கள். அது ஆங்கில நாவல் இல்லையா இல்லை நீங்கள் தமிழாக்கப் போகிறீர்களா.
      ஒருவேளை நூலாசிரியையின் கடைசி 25 பக்க குழப்பம்
      உங்களுக்கும் வந்துவிட்டதா :)

      ‘தலையில் முக்காடிட்டுப் பொட்டிட்டு நின்றிருக்கும் பெண்ணின் உருவம் தமிழ்/திராவிடக் கலாச்சாரங்களைச் சேர்ந்ததி stock image-ஐ யாராவது எடுத்து உள்ளே தள்ளிவிட்டார்களா?) இந்த மாபெரும் தவறை எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. (இல்லை உண்மையாகவே ஈழத்தில் மணக்கோலத்தில் பெண்கள் இப்படித்தானா என்று யாரவது உறுதிப்படுத்துங்கள்).’

      இந்தியா/தெற்காசிய சார்ந்த புனைவு என்பதால் அப்படி ஒரு
      படத்தை எங்கிருந்தோ எடுத்துப் போட்டிருக்கலாம். அது
      பொருத்தமாயில்லை.

      ஈழக்கலாச்சாரமும், பிரதி மேம்படுத்தலும் அறிந்த ஒரு
      பதிப்பாசிரியர் இதை வாசித்து திருத்தியிருந்தால் நீங்கள்
      சுட்டும் சில குறைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

      ஒன்றிழைத்து (juxtapose). juxtapose என்பதன் பொருள்
      ஒன்றிழைத்து என்பதற்கு பொருத்தமன்று.

    3. admin
      July 31, 2008 at 10:45 am

      வாசகன் – தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      ராண்டம் ஹவுஸ்-காரர்கள் எனக்கு விமர்சனத்திற்காக அனுப்பிவைத்தார்கள். எனவே என்னுடைய இந்த புத்தக விமர்சனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

      புத்தகம் மொத்தத்தில் வளர்ந்துவரும் தெற்காசியச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்வது என்ற ஒரே காரணத்திற்காக எழுதப்படிருப்பதைப் போலத் தோன்றுகிறது. திருமணங்களைப் பற்றிய இந்தக் கதையில் கவர்ச்சிக்காக இனப்போராட்டச்சூழல் இணைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

    4. admin
      July 31, 2008 at 10:58 am

      Juxtapose – ஒன்றிழைத்து சரியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு என்ன சொல்லலாம் – எதிர்நிறுத்தி?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *