lego_brick.jpg பல அதியற்புத கண்டுபிடிப்புகள் அமைப்பில் எளிமையானவை. இதற்கு முதன்மை உதாரணமாக நான் அடிக்கடிச் சொல்வது பேப்பர் கிளிப். ஒரு வெற்று கம்பியை எடுத்து சில முறை வளைத்துச் செய்யப்படுவது கிளிப். ஆனால் இன்றைய தினம் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், வீடுகளிலும் பயனில் இருக்கும் ஒரு சாதனம் கிளிப். இதைப் போல விளையாட்டு சாமான்களில் முதன்மை உதாரணமாக நான் கருதுவது லெகோ கட்டைகள். அமைப்பில் மிக எளிமையானது, ஆனால் உலகெங்கிலும் பல மில்லியன் சிறார்கள் (ஏன் பெரியவர்களும் கூடத்தான்) இதை வைத்துக்கொண்டு தினமும் விளையாடுகின்றார்கள். சில இடங்களில் இது மிக முக்கியமான விஷயங்களில் பயன்படுகிறது.

லெகோ 1958 ஆம் ஆண்டு ஒலே கிர்க் கிறிஸ்டியன்ஸன் என்ற டேனிஷ்காரரால் வடிவமைக்கப்பட்டது. மிகச் சாதாரணமான பிளாஸ்டிக் கட்டையும் அதன் மீது குமிழ்களையும் கொண்டது என்ற போதும் இதைக் கொண்டு சிக்கலான பல வடிவங்களைக் கட்டமுடியும். இங்கே நான் காட்டியிருப்பது லெகோவின் மிக அடிப்படையான எட்டுக் குமிழ் கட்டை. எத்தனை சாதாரணமானது! ஆனால் இப்படியான ஆறு எட்டுக்குமிழ் கட்டைகளைக் கொண்டு 900 மில்லியன் (துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் 915,103,765) வெவ்வேறு அமைப்புகளை உருவாக்க முடியும். எனவேதான் லெகோ ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் இப்பொழுதுகூட மிக முக்கியமான விளையாட்டுச் சாதனமாக இருக்கிறது. பார்பி, சூப்பர்மேன், போக்கேமான், தமகோட்சி, கேம்பாய், பிஸ், பிஸ்பி, எக்ஸ் பாக்ஸ் என்று எத்தனையோ விளையாட்டுச் சாதனங்கள் வந்து போய்விட்டன. இன்றளவும் நிலைத்திருப்பது லெகோ மட்டும்தான்.

லெகோ நிறுவனம் அதன் டேனிஷ் தொழிற்சாலையில் வருடத்திற்குப் 15 பில்லியன் பாகங்களை உற்பத்தி செய்கிறது. அதாவது மணிக்கு 1.7 மில்லியன் பாகங்கள். லெகோ உற்பத்தித் தரக்கட்டுப்பாட்டிற்கு மிகவும் பெயர்பெற்றது. அதனால் தயாரிக்கப்படும் 1 மில்லியன் பாகங்களில் சராசரியாக 18 மாத்திரமே பழுதானவையாக ஒதுக்க்ப்படுகின்றன. (யோசித்துப் பாருங்கள், சில பிளாஸ்டிக் கட்டைகளில் நூற்றுக்கணக்கான குமிழ்கள் இருக்கும் அவற்றில் ஒன்றின் அளவு குறைந்தாலோ, அல்லது குமிழ் முனையில் பிசிறு இருந்தாலோ ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்தாது).

தனது சிறிய வண்டிகளுக்கான ரப்பர் டயர்களையும் லெகோ தானே தயாரிக்கிறது. வருடத்திற்கு 306 மில்லியன் டயர்களை உற்பத்தி செய்வதால் உலகின் மிகப்பெரும் டயர் உற்பத்தி நிறுவனம் கூட!

லெகோ பாகங்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்று இந்த படத்தொகுப்பு விளக்குகிறது.

* * *

alpharex.jpg என்னுடைய இரண்டு மகன்களுக்கும் லெகோவின் மீது அலாதிப் பிரியம். ஒரு வயதில் வாங்கிய லெகோ கட்டைகளைப் பதினோறு வயது ஆனபொழுதும் தொடந்து பயன்படுத்துகிறான் பெரியவன்.

இன்றைய விடியோ விளையாட்டு உலகில் லெகோ மெல்லச் சாகும் என்று சோசியம் சொல்லப்பட்டது. ஆனாலும் பிணைத்து உருவாக்கும் பல வீரப் பொம்மைகளை (Action Figures) அவ்வப்பொழுது வடிவமைப்பதன் மூலம் சந்தையில் நிலைத்து நின்று வருகிறது லெகோ. இப்பொழுது பிளாஸ்டிக் கட்டைகளை அடுக்குவதற்கு பதிலாக கணினித் திரையில் படக்கட்டைகளை அடுக்கி லெகோ உருவங்களை வடிக்கும் விடியோ விளையாட்டு கிடைக்கிறது.

சென்ற கிறிஸ்துமஸ்க்கு என் பையன்களுக்கு லெகோ மைண்ட்ஸ்றாம் வாங்கித்தருவதாக இருந்தேன். நிண்டெண்டு வீ, பிஸ்3, எக்ஸ் பாக்ஸ் எல்லாவற்றையும் விட விலை அதிகம் என்பதாலும், எல்லோரும் வீ பைத்தியத்தில் இருப்பதாலும் மைண்ட்ஸ்ராம் கிடைக்காமல் போய்விடாது என்று அசட்டையாக இருந்துவிட்டேன். ஆனால் கிஸ்துமஸ்க்குப் பத்து நாட்களுக்கு முன்னதாக டொராண்டோவில் ஒரு கடையிலும் இருப்பில் இல்லை. எனவே கடைசி நேரத்தில் இருப்பதிலெலேயா அதிக ஆளியக்கிக் கட்டுப்பாடுகளைக் (Manual control) கொண்ட Canon A570 IS வாங்கிக் கொடுத்தேன் (கிட்டத்தட்ட மைண்ட்ஸ்ராமைவிட கிட்டத்தட்ட 300 டாலர்கள் மலிவு). அடுத்த கிறிஸ்துமஸில் வரப்போகும் மைண்ட்ஸ்ராமுக்காக இப்பொழுது கொஞ்சம் Logo Programming கற்றுக் கொடுத்துவருகிறேன். லெகோ கனவு இன்னொரு வருடத்துக்கு ஊறப்போடப்பட்டிருக்கிறது.