ipl.jpg கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்தகப் போர்வையைப் பூண்டிருக்கிறத்து. முதன் முறையாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டும் தனிநபர் வர்த்தகத்தைத் தழுவியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை இதை ஒரு தவிர்க்கமுடியாத, அதேசமயத்தில் அத்தியாவசியமான பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களை விலைகொடுத்து வாங்கிய அணியின்கீழ் ஒன்றாக விளையாடவிருக்கிறார்கள். இது கிரிக்கெட்டைப் புதியதொரு பொழுதுபோக்குத் தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

இந்த சந்தைப் பேரத்தில் இரண்டு ஆட்டக்காரர்கள் மாபெரும் தொகைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை மஹேந்திரசிங் தோணியையும், ஹைதராபாத் ஆண்ட்ரூ ஸைமன்ஸையும் முறையே 1.5 மில்லியன், 1.35 மில்லியன் டாலர்களுக்குப் பெற்றிருக்கிறார்கள். ஜெயசூர்யா, இஷாந்த் ஷர்மா, இர்ஃபன் பதான், ஜாக் காலிஸ், ப்ரெட் லி ஆகிய ஐந்துபேரும் ஒரு மில்லியனுக்ச் சற்றுக் குறைவான தொகைக்கு விலைபோயிருக்கிறார்கள். நட்சத்திர ஆட்டக்காரர்களாக அறிவிக்கப்பட்ட டெண்டுல்கர் (மும்பை – 1.12 மி.) கங்கூலி (கொல்கத்தா – 1.1 மி), யுவ்ராஜ் சிங் (சண்டிகார் – 1.06 மி), திராவிட் (பெங்களூரு – 1.03 மி) பெறுகிறார்கள். ஆகமொத்தத்தில் தில்லி (ஷேவாக் – 0.833 மில்) ஜெய்ப்பூர் (முஹம்மத் கைஃப் – 0.675 மி) இரண்டு அணிகளில் மாத்திரமே ஒரு மில்லியன் நட்சத்திரம் இல்லை.

பலருடைய புருவத்தையும் உயர்த்தியிருப்பது மஹேந்திரசிங் தோணியின் மதிப்பீடு. 1.5 மில்லியன் டாலர்களை ஒரே ஆட்டக்காரர் மீது செலவழிக்கலாமா என்று சிலர் (குறிப்பாக பெங்களூரு அணியினர்) கருத்து தெரிவித்திருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை சென்னை அணி தோணிக்குச் செலவழித்த தொகை மிகவும் புத்திசாலித்தனமானது என்றே கருதுகிறேன். எந்த நட்சத்திர ஆட்டக்காரரும் இல்லாத நிலையில் சென்னை ஆட்டத்திற்குக் கூட்டம் வரவழைக்க ஒரு பெரும் நட்சத்திரம் அவசியம். தோணியின் இருப்பு சென்னைக்குப் பெரும் அளவிலான கூட்டத்தை வரவழைக்க உதவும். மேலும் தோணியின் இருப்பினால் சென்னை இன்னும் பல விளம்பர வருமானம், கருவிகள் விற்பனை (தோணியின் எண் போட்ட சட்டை) என பெருமளவு போட்ட பணத்தை எடுக்க வாய்ப்பிருக்கிறது. இதேபோல ஹைதராபாத் ஸைமன்ஸில் செலவிட்ட பணமும் புத்திசாலித்தனமானதுதான். அதே அளவில் மும்பையின் ஜெயசூர்யாவும் நல்ல தெரிவுதான்.

மும்பை கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு ஹர்பஜன் ($850 ஆயிரம்), ராபின் ஊத்தப்பா ($800 ஆயிரம்) என்று கொட்டிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. சச்சின், ஜெயசூர்யா, ஹர்பஜன், ஊத்தப்பா என்று நான்கு பேர்கள் மட்டுமே கிட்டத்தட்ட நாலு மில்லியனை முழுங்கியிருக்கிறார்கள். சச்சின் 20/20 ஆட்டத்தில் அவ்வளவு முக்கியமானவரில்லை; ஆனாலும் அவருக்குக் கொடுத்த காசுக்கு கூட்டம் வரவழைப்பார். மற்ற இருவரும் வீண் செலவு. சண்டிகார் பதானுக்கு அவ்வளவு கொடுத்தது அதிகம்தான், அதே ரீதியில் ப்ரெட் லீயும் கூட. ஆனால் ஸ்ரீசந்த், சங்ககாரா, ஜெயவர்த்தனே எல்லாருக்கும் நியாயமான மதிப்பீடு கிடைத்திருக்கிறது.

கொல்கத்தா அக்தர், பாண்டிங் என்ற இரண்டு கூட்டம் சேர்க்கும் ஆட்டக்காரர்களுக்கு நியாயமான பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது. ஆனால் இஷாந்த் ஷர்மாவுக்கு, டேவிட் ஹஸி, முரளி கார்த்திக் மிகமிக அதிகமான மதிப்பீடு. இவர்களில் செய்த விரயத்திற்கு உமர் கல் என்ற ஜாக்பாட் மிகக்குறைவான விலையில் கிடைத்திருக்கிறது. ஜெய்ப்பூர்தான் இருப்பதிலேயே அதிகக் குறைவாகச் செலவழித்திருக்கிறது. கைஃப்தான் அவர்களின் நாயகன் என்றால் நிலவரம் எப்படியிருக்கும்? ஆனால் கிராம் ஸ்மித், கம்ரான் அக்மல் இருவரையும் மிகச் சல்லிசான விலையில் பெற்றிருக்கிறார்கள்.

என் கணிப்பில் கையில் கிடைத்த பணத்தை நியாயமாகச் செலவழித்திருப்பவர்கள் ஹைதராபாத் அணியினர்தான். நட்சத்திர அந்தஸ்திற்கு ஸைமன்ஸ் (இதற்கு அவர்கள் லெக்ஷ்மணுக்குக் கடமைப்பட்டவர்கள். தனக்கு நட்சத்திர அந்தஸ்து வேண்டாம் என்று சொல்லி $375 ஆயிரத்திற்கு மிக மலிவாக ஹைதராபத்தில் சேர்ந்திருக்கிறார் (கவனிக்கவும், இவர் ஹைதராபாத்தில் கூட்டம் வரவழைக்கக் கூடியவர், எனவே இவருக்குக் கொடுத்த ஒவ்வொரு டாலரும் நியாயமானதே). ஆர்.பி சிங் ($875 ஆ), ரோஹித் ஷர்மா ($750 ஆ) இரண்டும் கொஞ்சம் கூடுதல் விலை. ஆனால் பொதுவில் இந்திய வீரர்கள் (சமீபத்தில் நன்றாக விளையாடியவர்கள்) எல்லோருமே மிக அதிமான மதிப்பீட்டில்தான் விலை போயிருக்கிறார்கள். இவர்களைத் தவிர அஃப்ரிதி ($675 ஆ), கிப்ஸ் ($575 ஆ) இருவரும் நியாயமான மதிப்பீட்டில். வாஸ் ($200 ஆ), ஸ்டைரிஸ் ($175 ஆ), கில்கிறைஸ்ட் ($700 ஆ) மூவரும் ஹைதராபாத் மிக மலிவான விலையில் பெற்றவர்கள். குறிப்பாக வாஸ், ஸ்டைரிஸ் இருவரும் ஜாக்பாட் என்றுதான் சொல்ல வேண்டும்.

தில்லி கொஞ்சம் வித்தியாசமாக விளையாடியிருக்கிறது. யாருக்காவது அதிக விலை கொடுத்து வாங்கினால் அதற்கு மேல் 15% ஷேவாக்-கிற்குத் தரவேண்டுமே என்ற காரணத்திற்காகவே யாரையும் அதிக விலை கொடுத்து வாங்கவில்லை என்று தோன்றுகிறது. இவர்கள் கம்பீர், மனோஜ் திவாரி, வெட்டோரி, முஹம்மது ஆஸிஃப் எல்லோருக்கும் அதிக மதிப்பீடு செய்திருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக் நியாயமான விலை. தில்ஷான், மெக்ரா கூட நியாயமான மதிப்பீடுதான். அதிருஷ்டம் தில்லிக்கு டி வில்லியர்ஸ் வடிவில் $300 ஆயிரத்திற்குக் கிடைத்திருக்கிறது. திராவிட்க்கு ஒரு மில்லியனுக்கு மேலே கொடுக்க வேண்டியிருப்பது பெங்களூருவின் போதாத காலம்தான்; 20/20-ல் திராவிட் அவ்வளவு முக்கியமல்ல. மேலும் பிற உள்ளூர் ஆட்டக்காரர்களைப் போல (சச்சின், கங்கூலி, யுவ்ராஜ்) திராவிட்க்கா என்று 20/20-ல் கூட்டம் வராது. காலிஸ் $900 ஆயிரத்தில் நல்ல தெரிவு. அதேபோல மார்க் பௌஷர் கூட. டேல் ஸ்டெய்ன் நல்ல தெரிவு.

தோணியைப் பெற்ற அதே சூட்டில் சென்னை செய்த இன்னொரு நல்ல தெரிவு முத்தையா முரளீதரன். சென்னையில் முரளியைப் பார்க்கவென்றே நிறைய கூட்டம் வரும். கடைசியாக முரளிக்குச் சென்னையில் ஒரு ‘சொந்த வீடு’ கிடைக்கும் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது. முரளி நன்றாக விளையாடி சென்னையில் பிரபலமாக வேண்டும். அல்பீ மோர்க்கல்-க்குச் செலவிட்டிருக்கும் பணத்தை நியாயப்படுத்து கஷ்டம். ஆனால் ஹைய்டன் ($375 ஆ), மைக் ஹஸ்ஸி ($350 ஆ), மக்காயா ந்டினி ($200 ஆ), ஸ்டீபென் ப்ளெம்மிங் ($350 ஆ) எல்லாம் மிகவும் நல்ல தெரிவுகள். ஹெய்டன், ஹஸ்ஸி இருவரும் மிகவும் முக்கியனானவர்கள் என்று நான் மதிப்பிடுகிறேன்.

இன்றைய சந்தையை வைத்துக்கொண்டு எந்த அணியையும் எடை போட முடியாது (ஜெய்ப்பூர் மட்டும் மிகவும் சோகையாத் தெரிகிறார்கள்), ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் நான்கு வெளிநாட்டவருக்கு மேல் விளையாட முடியாது. சில அணிகளுக்கு உள்ளூர் சரக்கு நிறைய உண்டு (தில்லி, மும்பை) ஆனால் சென்னை தன் நல்ல உள்ளூர் ஆட்டக்காரர்களை எல்லாம் ஐசிஎல் லீக்கிற்குத் தாரை வார்த்துவிட்டார்கள்.

இன்னொரு நாள் அணி வாரியாக “கிரிக்கெட்” நிலவரத்தைப் பற்றி எழுதலாம்.