டொராண்டோவிலிருந்து கிளம்பி சரியாக மூன்று வாரங்களாகிவிட்டன.  முதல் நான்கு நாட்கள் லண்டனில் ஓடிவிட்டன (அந்நிய லண்டனை இலண்டன் என்று இலக்கணத்தூய்மை ‘படுத்து’பவர்களை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலலாம்). மியூசியம், கோட்டைகள் என்று ஏறி இறங்கி வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள். லண்டனைப் பற்றி விரிவாகப் பின்னர். இப்பொழுது இந்தியாவில் இதுவரை கண்ட இடங்களைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு வரையலாம்.

பெங்களூர் வந்த இரண்டாம் நாள் பையன்களுடன் பேளூரூ-ஹளபீடு போய்வந்தேன். சைஸ் கொஞ்சம் பெருசு என்பதால் வெள்ளைக்காரன்கள் சில விஷயங்களை பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடமுடியாமற் போய்விட்டது.  இந்தியாவின் அதியுன்னத பொக்கிஷங்களில் ஹொய்சாலர்களின் இந்த இரட்டை கோவில்களுக்கு கட்டாயம் முதல் ஐந்து இடங்களில் ஒன்று உண்டு.  ஆறு வருட படிப்பு பெங்களூர் வாசத்தில் நான் தவரவிட்டதை இப்பொழுது பூர்த்தி செய்தாகிவிட்டது.  ஆனால் இது கட்டாயம் கடைசி தடவையல்ல என்றுதான் தோன்றுகிறது.

வழியில் சமணர்களின் ஷ்ராவணபெலகோலாவையும் பார்த்தாகிவிட்டது. சமணக்கோவிலில் நான் எதிர்பார்த்திராத சில சிலையமைப்புகள் இருந்தன.  முற்றும் துறந்த முனிவரின் காலடியில் பாலபிஷேகம் செய்துகொண்டிருந்த பூசாரி அவசரமாக அரைலிட்டர் பால் மிச்சமிருக்கையில் செல்போனில் பேசப் போய்விட்டார். சமண உச்சாடனங்கள் ஒலியமையில் சாமவேதத்தை ஒத்திருக்கின்றன. ஷ்ராவண பெலகோலாவில் பேளூருவிலிருந்து பெயர்த்தெடுத்து வைக்கப்படதை போன்ற சில சிலைகளும் கூட. இதன் வரலாறை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த நான்கு நாட்களும் ஐஐஎஸ்ஸியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களில்.  பழைய நண்பர்கள் பலரைப் பார்க்க முடிந்தது.  முதல் நாள் விழாவில் அப்துல்கலாம். மனுஷர் பில்லியன் மக்களுக்குமாகச் சேர்த்து பாதுகாப்பு வளையம் இல்லாமல் தூங்கும் நேரங்களிலெல்லாம் கனவு காணுகிறார். விழித்திருக்கும் நேரத்தில் கனவுகளுக்கு வியாக்கியானஙகள் சொல்கிறார். (இடைப்பட்ட நேரத்தில் வார்த்தைகளை ஒடித்து கொஞ்சம் போலக் கவிதைகள்). இருபது வருடங்களுக்கு முன்னால் அதே ஐஐஎஸ்ஸியில் “நீ கும்பகோணமாப்பா, நான்கூட திருச்சிதான் படிச்சது” என்று துவங்கி ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தவர் வேறு ஆசாமி.  நந்தன் நீல்கேணி முற்றிலும் அபத்தக் களஞ்சியமாக எதிர்கால இந்தியாவைப் பற்றிய தனது கனவைப் பிரசங்கித்தார்.  (இந்தமாதிரி கனவு காண்பதற்கென்றே இந்தியாவில் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது எனத் தோன்றுகிறது). பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், சர்வதேச அரசியல் என்று சகல துறைகளிலும் அபத்தக் கருத்துக்களைத் துல்லியமான தரவுகளுடன் ஆணித்தரமாக எடுத்தோதினார்.  அருளும் நானும் அவரது பேச்சை அற்புதமாக இரசித்தோம்.  இன்னொரு சர்ந்தர்ப்பத்தில் கனவு உலகிலிருந்து சாம் பிட்ரோடா ஐஐஎஸ்ஸி போன்ற சாமானியர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்தார்.  உண்மையில் இந்த கனவுலக மும்மூர்த்திகளில் இவர்தான் கொஞ்சம் தேவலாம். மற்றபடி கேம் தியரி, பிரபஞ்சவியல், உயிர்நுட்பம் என்று பல துறைகளில் நிஜமான சாமானியர்கள்  (நோபல் பரிசுக்காரர்கள்) அற்புத உரையாற்றினார்கள். நான்கு நாட்களுக்கு அங்கே சாப்பிட்டதைக் குறைக்க கனடா போனபிறகு நான்கு வருடங்கள் ஓடியாக வேண்டும்.

நான் இப்படி ஐஐஎஸ்ஸியில் மூச்சு முட்டத் தின்றுவிட்டு வயோதிகர்களின் கனவுகளில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மனைவியும், பையன்களும் மைசூர், ரங்கனதிட்டு என்று உருப்படியாகச் செலவிட்டனர். பெங்களூரில் ஒரு வாரத்திற்குப் பிறகு இரயிலேறி மதுரை வர பயணத்தின் இரண்டாம் கட்டம். (தொடரும்).