[youtube]http://www.youtube.com/watch?v=2fZHou18Cdk[/youtube]

இன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.

என்னைப் பொருத்தவரை குடியரசுக் கட்சியைப் பற்றி அதிகம் கவலையில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் துப்பாக்கி முன்னேற்றக் குழு, ஆயுத வியாபாரிகள் மற்றும் பெட்ரோலிய மாஃபியாதான் மீண்டும் அமெரிக்காவை ஆளும். இது அமெரிக்காவிற்கும் உலகத்திற்கும் நல்லதிற்கில்லை. ஏழை அமெரிக்கர்களுக்கோ, பிழைக்கவந்த ஹிஸ்பானிய வரவாளர்களுக்கோ இது முற்றிலும் எதிராகத்தான் இருக்கும். எனவே முன்னோட்டத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக யார் வந்தாலும் பெரிதாக அக்கறையில்லை. ஜான் மெக்கெய்ன் வருவார் என்று தோன்றுகிறது. மிதவாதக் குடியரசாளர் என்ற முத்திரை குத்தப்படவராதலால் இவர் தன்னை வலிந்து தீவிர வலதுசாரி என்று காட்டிக்கொள்ளவே முயலப்போகிறார்.

கவனம் ஜனநாயகக் கட்சியின் மீதுதான். ஒரு வாரலாற்றை உருவாக்க அமெரிக்காவிற்கு அரிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஜனாதிபதியாக முதன்முறையாக ஒரு பெண் அல்லது கறுப்பினத்தவரைத் தெரிந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இந்த முன்னோட்டத் தேர்தல்களின் துவக்கத்தில் எனக்கு ஒபாமாமீது பெரிய மதிப்பிருக்கவில்லை. பெண் என்ற காரணம் கடந்து ஹில்லரி ஒரு திறமையான ஆட்சியைத் தரக்கூடும் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமாக ஜான் எட்வர்ட்ஸ் மீதுதான் எனக்கு அதிக மதிப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக எட்வர்ட்ஸ் விலகிவிட்டார்.

ஹில்லரிமீது நம்பிக்கை குறைந்துவருகிறது. அவருடைய செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிக்க, அவர் உரக்கக் கூவி விற்கும் பல கொள்கைகளுக்கு எதிராகவே ஹில்லரி செயல்பட்டு வருகிறார். அது புஷ்ஷின் போரை நியாயப்படுத்தி வாக்களித்தது, பெண்களின் அதிகபட்ச வாராந்திர வேலை நேரத்தை 30 ஆகக் குறைப்பதற்கு எதிராக வாக்களித்தது போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த இரண்டு சந்தர்ப்பங்கள் ஹில்லாரி பொதுவில் எப்படிச் செயல்படுவார் என்பதற்கு ஒரு உதாரணம். தற்பொழுதைய நடப்புகளிலிருந்து எந்தவகையிலும் மாறுபட்டதாக ஹில்லரியால் ஆளமுடியும் என்று தோன்றவில்லை. இதுதான் ஆன் கொல்ட்டர் போன்ற வலதுசாரி தீவிரவாதிகளையே அவர் மீது நம்பிக்கைக் கொள்ள வைக்கிறது.

மறுபுறத்தில் ஒபாமா மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இப்பொழுதைய அமெரிக்காவின் போக்கிலிருந்து நிதானத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஒரே நபர் அவராகத்தான் தெரிகிறார். அதிகம் பக்குவப்படாதவர், அவருக்குப் போதுமான முன்னனுபவம் இல்லை என்பது ஒன்றுதான் அவர்மீது பெரிதாக வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது. முன்னனுபவமும் இன்னும் எதுவுமே இல்லாமல் இரண்டு தடவைகள் ஜார்ஜ் புஷ்ஷால் ஆட்சி நடத்த முடியும் என்றால் ஒபாமாவால் அதைவிடைத் திறமையாகக் கட்டாயம் அமெரிக்காவைச் செலுத்த முடியும்.

இன்றைய முன்னோட்டத் தேர்தல்களின் முடிவுகள் வருவதற்குள் என் கருத்தை எழுதியாக வேண்டும் என்ற உந்துதலால் அவசரமாக எழுதியது இது. என் கணிப்பில் ஒபாமா ஜனாதிபதியாகவும், ஜான் எட்வர்ட்ஸ் அவருக்குத் துணையாகவும் வந்தால் (வரமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது). அமெரிக்காவுக்கும், உலகத்திற்கும் நல்லது என்று தீவிரமாக நம்புகிறேன்.

* * *

நான் விரும்பிப்படிக்கும் பதிவாளர்களில் பலர் அமெரிக்காவில் வசிப்பவர்கள். இவர்கள் இன்னும் தேர்தலைப் பற்றி எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. என்னிலும் பார்க்க இந்தத் தேர்தலைக் குறித்து அவர்களால் மிகத் திறமையான கருத்துக்களைச் சொல்லமுடியும். விரைவில் நம் நண்பர்கள் எழுத வேண்டும் என்று அழைக்கிறேன்.