சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த வீட்டு மாமாவிடம் ஓசி ஹிண்டு வாங்கி படித்துக்கொண்டே தாளத்தில் மயங்கிக் கிடப்பேன். கணேசய்யருக்குக் காசுகொடுத்து படிப்பிக்க என் குடும்பத்தில் வலுவில்லை. தெருவெல்லாம் புறப்பாடு நடத்திவரும் காளஹத்தீஸ்வரரையோ, பாணபுரீஸ்வரரையோ, படைவெட்டி மாரியம்மனையோ ஜனங்கள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நான் மேளத்தையும், பறையையும் மாத்திரமே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். சாவு ஊர்வலத்தைப் பார்த்துப் பயப்படும் நண்பர்களுக்கிடையில் (பாடைலேந்து விழுந்த பூவ மிதிச்சா உங்க ஊட்லயும் சாவு விழும்) பறையைக் கேட்பதற்காக இரகசியமாக பிண ஊர்வலத்தைத் தொடர்ந்து சுடுகாடுவரை சென்றதுண்டு. அந்த ஊர்வலத்தில் வாசிக்கும் பறையொலியை லயம் மாறாமல் பள்ளிக்கூட மேசையில் வாசிப்பேன். இது பத்து வயதிலிருந்து பதினைந்து வயதுவரை. பாட்டி “தாளம் போட்ற வேதாளத்தப் பாரு, கைய ஒடிச்சி கட்டல வை” என்று திட்டுவதெல்லாம் ஒரு பொருட்டில்லை.

தொடர்ந்து கூடையில கருவாடு, தண்ணி கருத்துருச்சு, ஆசையக் காத்துல தூதுவிட்டு, நடைய மாத்து, ஏஞ்சோடி மஞ்சக் குருவி, போன்ற தாளம் தூக்கி நிற்கும் பாடல்களுக்குத் தப்பாமல் வாசிப்பது நண்பர்களிடையே பிரபலம். பிறகு ஒருகாலத்தில் நான் மேசையில் தட்டும் அபத்தங்களின்மீது எனக்கே உண்டான சலிப்பால் இது கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோயிற்று. தொடர்ந்து பலவகையான இசைகளைக் கேட்க ஆரம்பிக்க உலகெங்கிலும் இருக்கும் தாளவாத்தியங்களின்மீது பரிச்சயமுமண்டாக பரந்துபட்ட கலாச்சாரங்களுக்கிடையே இருக்கும் தாள ஒற்றுமைகள், வேறுபாடுகள் மீது தீராத வியப்பு கூடிக்கொண்டே போகிறது. தாள வாத்தியங்களின் மீது எனக்கிருக்கும் ஈர்ப்பை உங்களுடன் பகிர்துகொள்ளும் முயற்சி இது. (சில மாதங்களாக எழுத விட்டுப் போனதை மீட்டெடுக்கும் முயற்சியும் கூட. எப்பொழுதெல்லாம் வலைப்பதிவு எழுதுவதில் சலிப்பு ஏற்பட்டு நின்றுப்போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை மீட்டெடுக்க இசை குறித்து எழுதுவது உதவியிருக்கிறது. இந்த முறை தாள வாத்தியங்கள் குறித்தான இந்தத் தொடர் உதவுமென்று நம்புகிறேன்).

இந்தத் தொடரில் நமக்கு மிகவும் பரிச்சயமான மிருதங்கம், தவில், பறை, உறுமிமேளம், உடுக்கு போன்ற வாத்தியங்கள் வரும், சிவமணி, உமையாள்புரம் சிவராமன், ஜாகிர் ஹுசேன், ஆனையாம்பட்டி தண்டபாணி, விக்கு விநாயகராம் போன்ற பெயர்கள் அடிபடக்கூடும். சற்று குறைவாக அணுக்கமுள்ள தோளக், பஞ்சவாத்தியம், செண்டை போன்றவையும் வரும். என் மனதைக் கவர்ந்த ராக் இசை தாள மேதைகளான நீல் பீர்ட், கீத் மூண், ஏர்ல் பால்மர், மைக் ஃப்ளீட்வுட், பட்டி மைல்ஸ், ஸ்டீவ் கோப்லண்ட், ஜிஞ்சர் பேக்கர், ரிங்கோ ஸ்டார், நிக் மேஸன், பில் காலின்ஸ், என்ற பல நட்சத்திரங்கள் கட்டாயம் வருவார்கள். எனவே க்ரீம், ரஷ், போலிஸ், லெட் ஸெப்ளின், தி ஹூ, டீப் பர்ப்பிள், ப்ளாக் ஸப்பாத், ஸண்டானா, போன்ற சூப்பர் குழுக்களும் இடம்பெறும்.

ஒரு கட்டத்தில் எனக்கு தாளங்களின் மீதிருந்த ஈர்ப்பு குறைந்துபோனபோழுது (பொதுவில் இசையின் மீதான ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்), அதை மீட்டெடுத்துத் தந்தது ஜாஸ் இசைதான். ஆப்பிரிக்க இசையின் அடிப்படையில் உருவான ஜாஸில் எப்பொழுதுமே தாளத்திற்கு முக்கிய இடமுண்டு. ஜாஸின் பல காலப்பிரமாணங்களை நிர்ணயிப்பது அதன் லயம்தான். ஜாஸ் ட்ரம்ஸ் மேதைகளான ஜீன் க்ருபா, பட்டி ரிச், ஜோ மொரெல்லோ, பில்லி கோப்ஹம், போன்றவர்களின் புகழ்பாட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். பொதுவில் ஜாஸில் இருக்கும் தாள ஓட்டங்களைப் பற்றியும் எழுதக்கூடும். ஜப்பானின் தைக்கோ ட்ரம்ஸ், காங்கோ, நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளின் அற்புதமான தாளங்கள், கரீபியன் ஸ்டீல் ட்ரம்ஸ், போன்றவற்றையும் எழுதலாம். எல்லாவற்றையும் எழுதிவிட்டு நம் தமிழ்த் திரையிசையை எப்படி எழுதாமல் போவது?

இந்தத் தொடரில் இயன்ற அளவுக்கு சலனப்படத் துண்டுகளை (கூகிளாண்டவரின் உபக்கிரகமான யூட்யூப் உபயத்தில்) நிறையத் தர உத்தேசம். நம்மூர் வாத்தியங்களையும் கலைஞர்களையும் பற்றி எழுதும்பொழுது இயன்ற அளவுக்கு அதிகப் பிரபலமில்லாத, மறைந்துகிடக்கும் அற்புதமான இசைத்துணுக்குகளைப் பயன்படுத்த உத்தேசம். உண்மையிலே ஆர்வமுள்ள நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் இந்த இசைக்கோப்புகளை முழுமையாகப் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. ஏனென்றால் இவற்றில் பல இப்பொழுது வர்த்தக முக்கியத்துவம் இல்லாத, பழைய இசைத்தட்டுகளிலிருந்து பெறப்பட்டவை. ஜாஸ் துணுக்குகள்கூட அப்படித்தான் இருக்கும்.

ஒரு முக்கியமான எச்சரிக்கை: நான் முறைப்படி சங்கீதம் கற்றவன் கிடையாது. என்னுடைய புரிதல்கள் எல்லாம் ஒரு பாமரனின் கண்ணோட்டம்தான். இப்படி ஒரு தொடரை எழுத எனக்கு எந்தத்தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக இப்படியெல்லாம் யாரும் தமிழில் எழுதக் காணவில்லை. எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாக நானே பலகையில் ஏறி உட்கார்ந்துகொள்கிறேன். இடுப்புப்பட்டைகளைக் இருக்கக் கட்டிக்கொண்டு நீங்களும் தயாராகுங்கள்.

தன்னை மறந்து தாளம் தட்டாத மனிதர்கள் இந்த உலகில் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். வாய் விட்டுப் பாடத் தயங்குபவர்கள்கூட தன்னிச்சையாகத் தொடையில் தட்டுவதைப் பார்க்கமுடியும். இந்தத் தொடரை உலகெங்கிலும் இருக்கும் அமெச்சூர் தாளக் கலைஞர்களுக்குப் பாராட்டுடன் தொடங்கலாம்.

Music for One Apartment and Six Drummers

Producer: KOSTR-FILM
Writers: Ola Simonsson, Johannes Stjarne Nilsson
Cast: Johannes Bjork, Magnus Bjorjeson, Marcus Haraldson, Fredik Myhr, Sanna Persson, Anders Vestergard, Barbro Gustafsson Lofgren, Zerny Thor, Anders Jansson