இனிய தீபாவளி வாழ்த்துகள்.

புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பண்டிகைகளும் தினங்களும் புதிய அடையாளங்களைப் பெற்றிருக்கின்றன. தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வரும் முக்கிய விஷயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.  சிறுவயதில் காலையில் எழுந்தவுடன் சகோதர்கள் மூவருக்கும் அப்பா வற்றல் மிளகாய், மஞ்சள் பொடி, பச்சரி போட்டு காய்ச்சிய எண்ணையை அழுந்தத் தேய்த்துவிடுவார். கடைக்குட்டி நான்தான் முதல் குளியல்.  விறகு அடுப்பில் கொதிக்கும் சுடுநீரில் குளியல். எண்ணை போக அரப்புப் பொடி (சிகைக்காய் விலை அதிகம்). அரப்பு அதிகம் கண்ணில் எரியாமல் இருக்க, சட்டியில் போட்டு சற்று வறுத்து எடுப்பாள் அம்மா.  (பின்னாட்களில் அரப்புக்குப் பதிலாக புலிமார்க் சிகைக்காய் பொடி வந்தது).

எண்ணெய்க் குளியல்  சாத்தியமில்லாததாக ஆகியிருக்கிறது. உச்சந்தலையில் மாத்திரம் ஒரு சொட்டு வைக்கப்படும் நல்லெண்ணெய். குளியலுக்கு ஷாம்பு, பிறகு எண்ணெய் காணத தலைக்கு கண்டிஷனர்.  இப்படி ஒவ்வொன்றாக பண்டிகையின் அடையாளங்கலெல்லாம் முற்றிலும் மாறிய நிலையிலும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.   வறட்டுத்தனமாக சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியில் பத்து வருடங்களுக்கு முன்னால் தீபாவளியை கொண்டாடமல் இருந்தது உண்டு. ஆனால் இப்பொழுது எனக்காக இல்லாவிட்டாலும் என் பையன்களுக்காகவது கொண்ட்டாட வேண்டும் என்று திரும்பிக்கொண்ட வழக்கில், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக என் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. (இதே மனநிலையில் ரோசா வஸந்த் எழுதிய பதிவு இங்கே.) வீட்டில் வசதியில்லாமல் பண்டிகளைகளை அமர்க்களமாகச் சிறுவயதில் கொண்ட்டாடியதில்லை. சோம்பியிருந்த சிறுவயது நினைவுகள் மேலெழும்பி வரத்தொடங்கி பண்டிகைகளை என் பையன்களின் கண்களில் பார்க்கத் தொடங்கியபிறகு முற்றிலும் புதிய உணர்வுகள் பண்டிகைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. சரஸ்வதி பூஜைக்கு மீண்டும் புத்தகங்களை அடுக்கிவைத்து அதன் மேல் ஸ்பானரையும் கொல்லையில் பூக்கும் காரனேஷனையும் வைக்கிறேன். தீபாவளிக்குப் புதுத்துணிகளை அடுக்கத் துவங்கியிருக்கிறேன்.

அடையாளங்கள், வழக்கங்கள், சடங்குகள் இவற்றுக்கெல்லாம் அப்பாலும் பண்டிகைகளில் ஒரு முக்கியத்துவம் இருப்பதாகவே தோன்றுகிறது.  இயந்திரத்தனமாக இறுகிப் போன அன்றாட நடவடிக்கைகளிலிருந்து ஆழ்மன உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொள்ள அவ்வப்பொழுது பண்டிகைகள் தேவை என்று உணரத் தொடங்கியிருக்கிறேன்.  சுற்றிலிருமிருப்பவர்கள் ஒரு சேர இதைச் செய்கையில் உற்சாகம் பலமடங்கு பெருகுகிறது.  மலர்ந்த முகத்துடன் மெர்ரி கிறிஸ்மஸ் என்று ஒரு நாளில் நான்குபேர் சொன்னால் ஐந்தாவது நண்பரைப் பார்க்கும் பொழுது தன்னிச்சையாக நம் முகமும் மலர்கிறது.   இறுகிப் போன நாத்திகர்களான என் நண்பர்கள் சிலர் கிற்ஸ்துமஸைக் கொண்டாடும் உற்சாகத்தைச் சொல்லி மாளாது. அவர்களுக்கு கிறிஸ்துமஸ் எந்தவிதமான சமய அடையாளங்களையும் கொண்டதல்ல. அது உற்சாகத்தின் வெளிப்பாடு மாத்திரமே. இன்றைக்கு நாத்திகர்களின் முதன்மை கொள்கைப் பரப்புப் செயலாளராக மாறியிருக்கும் மரபியல் விஞ்ஞானி ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருடம் தவறாமல் கிறிஸ்துமஸ் கரோல் பாடுகிறார்.  சந்தப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மூர்க்கத்துடன் சமயத்தையும் ஆன்மீகத்தையும் விமர்சிக்கும் நண்பர் ஒருவருடன் இதைப் பற்றி கதைத்த பொழுது அவர் சொன்னது; “கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகையா என்பது இன்னும் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது.  கிறிஸ்தவம் இல்லாவிட்டாலும் பனிக்காலத்தின் ஆழத்திலிருந்து உற்சாகத்தை மீட்டெடுக்க வேறொரு பண்டிகை கட்டாயம் கற்பிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் உற்சாகத்தின் குறியீடு. நான் கொண்டாடாமல் இருந்து அதைக் கிறிஸ்துவர்களுக்கு முழுமையாகத் தாரைவார்க்கத் தயாராக இல்லை.”   எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸைய்ம் கொண்டாடுகிறோம்.  தெரு முழுக்க வண்ண விளக்குகளும் அலுவலகத்தில் அலங்காரங்களும் நிறைய, அதிலிருந்து ஒதுக்குவது அராஜகமானதாகவும், மூர்க்கத்தனமாகவும் தோன்றுகிறது.

எனக்கென்னமோ தீபாவளிக்கும் நரகாசுரனும், கிருஷ்ணனும், ராமனும், ராமலீலாவும், ராவணனும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.  கொஞ்சம் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தால் இருபது வருடங்களுக்கு முன்னால் என் வீட்டில் கூட கிருஷ்ணனுக்கும் நரகாசுரனுக்கும் தீபாவளியில் 1% பங்குகூட இருந்ததாகத் தோன்றவில்லை. ஜப்பானில் வசித்தபொழுது தீபாவளிக்கு இந்திய நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோ டை-புட்ஸு (பெரும் புத்தர்) கோயிலுக்குச் சென்றிருக்கிறோம்.

ஒரு காலத்தில் வருடத்தில் கிடைக்கும் ஒரே புத்தாடையாக தீபாவளித்துணி இருந்தது.  இப்பொழுது வாங்கி வைத்த சட்டைகளில் குறைந்தது பத்தாவது பிரிக்காமல் கிடக்கும். இருந்தபோதும் இந்த வருடம் பிடிவாதமாக தீபாவளிக்கென சட்டை வாங்கி வந்திருக்கிறேன்.  நாளை போட்டு கழற்றியெறிந்தபின் அது  கிடக்கும் இருபது முப்பதிலொன்றாக மாறியிருக்கும். ஆனாலும் இப்பொழுது உறையிலிருக்கும் அதைப் பார்க்கும் பொழுது மனதில் இனம்புரியாத உற்சாகம் பீரிடுவதையும்,  பள்ளிக்கூட நாட்களில் அணிந்த ஒவ்வொரு தீபாவளி சட்டையையும் பற்றிய நினைவுகள் மேலெழும்பி வருவதையும் எழுத்தில் வடிக்க முடியாது.  அதிசயமாக இரண்டு சட்டைகள் கிடைத்த ஐந்தாம் வகுப்பு தீபாவளி, முதன் முதல் டெரிகாட்டன் சட்டை வாங்கிய ஒன்பதாம் வகுப்பு தீபாவளி,  முதன் முதல் புதுப் பேண்ட் தைத்த பதினொன்றாம் வகுப்பு தீபாவளி, அண்ணா பம்பாயிலிருந்து துணி அனுப்பிய காலேஜ் தீபாவளி,  இவற்றோடு பல வருடங்கள் கழித்து பின் தீபாவளிக்கென துணி வாங்கிய இந்த வருடமும் நினைவில் நிலைக்கும் என்று தோன்றுகிறது.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.