கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது).

நிகழ்ச்சி நேயர்களுக்கான ஒரு கேள்வியுடன் துவங்குகிறது. அன்றாடம் நம் சராசரி வாழ்நிகழ்வில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கேள்வியொன்று கேட்கிறேன். நேயர்கள் தொலைபேசி வாயிலாக தங்கள் பதில்களைச் சொல்கிறார்கள். ஐந்து அல்லது ஆறு பேர் சொல்லியபிறகு அவர்கள் சொன்னவை மீதான என் விளக்கங்களைச் சொல்கிறேன். கூடவே கேள்விக்கான சரியான அறிவியல் விளக்கமும்.  நேயர்கள் தங்கள் கேள்விகளை, சந்தேகங்களை முன்வைக்க வரவேற்கப்படுகிறார்கள்.  சமீபத்திய கேள்விகள்:

  1. துவைத்த துணிகள் காயும்பொழுது ஏன் சுருங்குகின்றன. இஸ்திரி போடுவது அந்தச் சுருக்கங்களை எப்படி நீக்குகிறது?
  2. நடப்பதா, நிற்பதா? ஒரு வரை எளிதில் சோர்வடையச் செய்வது எது? ஏன்?
  3. பச்சோந்தியின் நிறம் எப்படி மாறுகிறது?

நேயர்கள் மிகவும் சுவாரசியமான பதிலகளைத் தருகிறார்கள். கரிம வேதியியல் (organic chemistry) அடிப்படையிலான விளக்கங்கள் பச்சோந்தி கேள்விக்கு வந்தன.

இன்றைய கேள்வி “நெட்டி முறித்தல் (கை, கால் விரல்களை இழுப்பதும், கணுக்களை முறித்து ஓசை உண்டாக்குவதும்) எப்படி ஒலியை உருவாக்குகிறது. இதனால் நன்மை தீமை ஏதாவது உண்டா?

ஆர்வம் இருப்பவர்கள் இங்கும் விடை எழுத முயலலாம்.  வானொலி நேயர்களுக்குச் சொல்லும் முக்கியமான அறிவுறுத்தல்: சரியான விடை முக்கியமல்ல, நிகழ்வுகளின் காரணங்களை எப்படி அறிவியல் நோக்குடன் அணுகுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். சுவாரசியமான கேள்விகள் இருந்தால் எழுதவும். இதுவரை கேட்ட கேள்விகளெல்லாம் பல சந்தர்ப்பங்களில் என் மகன்கள் என்னிடம் கேட்டவைதான்.

நிகழ்ச்சியில் கடைசி பத்து நிமிடங்களில் இவ்வாரத்திய முக்கிய அறிவியல் செய்திகளையும் பகிர்ந்துகொள்கிறேன்.  வலைப்பதிவு நேயர்களுக்கும் இவற்றை எழுத முயற்சிக்கிறேன்.  இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துவதால் ஒலிவடிவத்தில் பதிவு செய்ய என்னால் இயலுவதில்லை.  podcast ஆகத் தர முடியுமா என்று பார்க்கிறேன்.