2007_buck.jpgஇந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி இதைப்பற்றி எழுதும்பொழுது

நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.

என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து என் முந்தைய பதிவின் கருத்துப்பகுதியில் பத்ரி இதையே வலியுறுத்தி;

ஓர் ஆட்டத்தில் நடுவர்களது தவறான முடிவால் வெல்வதோ தோற்பதோ பெரிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை. இங்கு பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு இரண்டு நடுவர்களும் ஏற்கெனவே பேசிவைத்து முடிவுசெய்ததுபோல, ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் முடிவுகளைக் கொடுத்தனர் என்பது. அதை நான் ஏற்க மறுக்கிறேன்.

அப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட, அந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஐசிசியில் வைத்து நடுவர்களை அழைத்து விசாரிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் தொடரின் நடுவிலேயே, நடுவரை மாற்றினால்தான் ஆயிற்று என்று தகராறு செய்தது; இல்லாவிட்டால் தொடரைப் புறக்கணிப்போம் என்றது – இரண்டுமே அசிங்கமான செயல்.

இந்தப் பதிவு நடந்து முடிந்த அசிங்களுக்கு அப்பாற்பட்டு பொதுவில் நடுவர்கள் சர்ச்சைக்குறியர்வர்களாக மாறும்பொழுது அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து.

பத்ரி சொல்வதைப் போலவே எனக்கும் ஸ்டீவ் பக்னர் உள்நோக்கத்தோடு செயல்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. எனது மதிப்பிற்குரிய தமிழ் வர்ணனையாளர்/வல்லுநர் அப்துல் ஜபார் வெகுண்டெழுந்து பக்னரை ஒருமையில் விளித்திருப்பது அதிகமாகத்தான் தோன்றுகிறது. ஒரு வல்லுநராகக் கருத்துகளை வெளியிடும் ஜபார் ஆதாரங்களைத்தான் அடுக்க வேண்டுமேயொழிய தீர்ப்பகளை வாசகர்களிடம் விடுவதுதான் முறையானது. தான் விழையும் கருத்துக்கு வாசகனை இட்டுச்செல்ல வேண்டிய ஆதாரங்களையும் தரவுகளையும் தந்திருந்தாரும் வார்த்தைகளின் தெரிவால் ஜபார் வாசிப்பவரிடம் சமநிலை சாய்ந்த தோன்றத்தை எளிதில் தருவதால் அவரது வாதம் எடுபடாமல் திசை திரும்பிப் போகிறது. இந்த இடத்தில் அணில் கும்ளேயின் நடத்தை அப்துல் ஜபாருக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று விழைகிறேன்.

பொதுவில் நடுவர்கள் மீதான விமர்சனத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நம்புகின்றவன் நான். ஒருசில தவறுகள் கிரிக்கெட் போன்ற ஆட்டங்களில் சாத்தியம் என்பதும் என் முழு நம்பிக்கை. ஆனால் நடந்து முடிந்த போட்டி வேறுவிதம். தொடர்சியாக தவறான முடிவுகளால் ஆட்டத்தின் போக்கில் நடுவர்கள் முழுமையாக குறுக்கீடு செய்திருக்கிறார்கள். முன்முடிபுடன் வந்து இந்தியாவைத் தோற்கடித்துவிட்டார் பக்னர் என்று நான் குற்றம் சாட்டவில்லை (அப்படியான குற்றச்சாட்டுக்கு இடம் தருவதைப் போல அவர் வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது உண்மை). முன்முடிபு இல்லை என்றால் திறமையின்மை. (ஒரு காலத்தில் பக்னர் மீது எனக்கு அளவிடமுடியாத மதிப்பு இருந்தது. ஆனால் இப்பொழுது இல்லை. ஒற்றை ஆட்டத்தை வைத்துக் கொண்டு திறமையில்லை என்று சொல்லிவிடலாமா என்றால் ஆம் என்றுதான் சொல்வேன். இன்றைய நிலையில் ஆட்டக்காரர்கள் மீது இப்படித்தான் முடிவெடுக்கப்படுகிறது) நடுவர்கள் மீது குறைசொல்ல அணிகளுக்கு உரிமையில்லை என்று முழுதாக மறுக்க வேண்டுமானால், ஐசிசி ஒவ்வொரு ஆட்டத்திற்கு முடிவிலும் பாரபட்சமற்ற தனிக்குழு கொண்டு நடுவர்களின் நடவடிக்கைகளை மதிப்பிட வேண்டும். அப்படியில்லாத பொழுது உடனடி முறையீடு சொல்ல அணிகளுக்கு உரிமையை மறுப்பது தவறு. நடுவர்களை மாத்திரம் ஏன் எந்தவிதமான விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக உயர்த்தி வைக்க வேண்டும்?

என்னைப் பொருத்தவரை அடுத்த ஆட்டத்தில் பக்னர் நடுவில் நிற்கக்கூடாது என்று நான் சொன்னது உறுதியானது மட்டுமல்ல நியாயமானதும்கூட என்று கருதுகிறேன். இந்த ஆட்டத்தில் இரண்டு நடுவர்களும் அளித்த தீர்ப்புகள் மிக மோசமானவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தையும் நான் படிக்கவில்லை. கொஞ்சமும் நேர்மையில்லாமல் ரிக்கி பாண்டிங் (மற்றும் ஸ்டீவ் வா உள்ளிட்ட இந்நாள்/பழைய ஆட்டக்காரர்களும்) தொடர்ந்து ஆஸ்திரேலிய நடத்தையை நியாயப்படுத்தி வரும்பொழுதும் நடுவரின் தீர்ப்புகள் இந்தியாவிற்கு (மாத்திரமே) எதிராக இருந்தன என்று பாண்டிங்கே தெளிவாக சாட்சியளித்திருக்கிறார். (ஒரு வகையில் நடுவர்களைப் பலிகடா ஆக்கி ஆஸ்திரேலிய அணியின் அராஜகத்தின் தீவிரத்தை இவர்கள் குறைக்க முயல்வதும் வெளிப்படையாகத் தெரிகிறது). இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்குமே பக்னர் மீது மதிப்பு இல்லை என்பது தெளிவாகியிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க பக்னர் நடுவில் நின்றால் அது ஆட்டத்தின் போக்கைக் கட்டாயம் பாதிக்கும்.

இரண்டு அணிகளுக்குமே நம்பிக்கையில்லை என்றாலும்கூட அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியா என்பதால் இந்தியாதான் இதை முன்னெடுத்து அவரைத் தவிர்க்கச் சொல்ல வேண்டும். அதைத்தான் செய்திருக்கிறார்கள் – பக்னர் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். தொடரின் நடுவில் இப்படி நீக்கச் சொல்வது நியாயமில்லை என்பதெல்லாம் வெறும் கனவான்கள் கூற்று. ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் எதுவுமே கண்ணியமில்லாமல் போயிருக்கும்பொழுது தொடர் நடுவில் என்றெல்லாம் சொல்வது வெற்று. தவறுதலான தீர்ப்புகளாலும், அரஜாகமான நடவடிக்கைகளாலும் (சக நடுவரையும் மூன்றாவது நடுவரையும் ஆலோசிக்க மறுத்தது) பக்னர் ஆட்டத்தின் போக்கையும் முடிவையும் பாதித்திருக்கிறார் என்பது நிதர்சனம். அடுத்த போட்டியிலும் அவர்தான் நின்றாக வேண்டும் என்று ஐசிசி வலியுறுத்தினால் அது எல்லாவற்றையும் மீறி இந்தத் தொடர் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்காக மாத்திரமே நடத்தப்படுகிறது என்றாக்கும், பக்னரைத் தவிர்ப்பதன் மூலம் தொடரின்மீது குறைந்தபட்ச நம்பிக்கையை வரவழைத்திருக்கிறது ஐசிசி என்பதில் ஐயமில்லை. இந்தியா முறையிட்டுக் கேட்காமலிருந்தால் ஐசிசி இதைச் செய்திருக்காது என்பது சர்வ நிச்சயம். இந்த இடத்தில் ஐசிசி ஃபிஃபா (FIFA) கால்பந்தாட்டங்களை நடத்துவதை போல அவ்வளவு திறம்பட நடத்துவதில்லை என்பது உறுதி. தன்னுடைய வணிக பலத்தை வைத்துக்கொண்டு ஐசிசியின் கையை இந்தியா முறுக்கியது என்று சொல்வதெல்லாம் பம்மாத்து. இப்படியொரு பழியைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பக்னரை தொடந்தும் நடுவில் நிற்க அனுமதித்தால்தான் என்னைப் பொருத்தவரை வர்த்தக ஆதாயங்களுக்கு இந்தியா கட்டுப்பட்டு சார்புள்ள நடுவரை ஏற்றுக்கொள்கிறது என்று சொல்வேன்.

ஒருவகையில் இந்த ஆட்டத்தில் இல்லாமலிருப்பது பக்னருக்கே நல்லது. இருந்தால் அவரது ஓவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்பட்டு விமர்சிக்கப்படும், அது அவருக்கே சாதகமாக இருக்காது. அவர் வழங்கப்போகும் எந்தத் தீர்ப்பும் கேள்வியில்லாமல் ஏற்றுக் கொள்ளபடமாட்டது. நேரடியான கேட்சுக்கு அவுட் கொடுத்தால்கூட அதற்கு ஏன் இவ்வளவு தாமதம் என்று கேட்பார்கள். விரைவாகத் தந்தால் ஏனிந்த அவசரம் என்று சாடுவார்கள். இந்தியர்களைப் பார்த்து நட்புணர்வோடு புன்னகைத்தால் குற்றம், ஆஸ்திரேலியர்களைச் சற்று உற்றுப்பார்த்தால் குற்றம் என்று சொல்லப்போகிறார்கள். இப்போதைய நிலையில் பக்னர் வேண்டாத பெண்டாட்டி; கைப்பட்டாலும் குற்றம்தான், கால்பட்டாலும் குற்றந்தான். உற்றுப் பார்க்கப் போகிறார்கள் என்பதாலேயே பக்னர் தவறு செய்யும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

* * *
அப்படியும் நடுவர்கள் என்ன குற்றம் சொல்லக்கூடாத இறைதூதர்களா? இன்றைய ஆட்டத்தில் ஒரு மூத்த ஆட்டக்காரரே எளிதில் ஓரங்கட்டப்படும் நிலை இருக்கிறது. திராவிட், கங்கூலி, சச்சின், லெஷ்மண், ஜாஃபர், யுவ்ராஜ் என்று எல்லோருமே தலைக்குமேல் கத்தி தொங்கத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பு ஒரு ஆட்டக்காரரின் வாழ்வையே மாற்றியெழுதப்போகிறது. உதாரணமாக அடுத்த போட்டியில் திராவிட் சரியாக ஆடவில்லை என்றால், அதை முந்தைய போட்டியுடன் இணைத்துப் பார்த்து திராவிட் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லப்போகிறது. அப்பொழுது பக்னர்தான் அவரைக் காவுகொடுத்தார் என்று யாரும் அவருக்கு அனுதாபப்படப் போவதில்லை. முரளிதரன் கதையைப் பாருங்கள். தங்களுடன் விளையாடும்பொழுது அளவுக்கு அதிகமான அழுத்ததைக் கொடுத்து, ஒரு அம்பயர் கூட்டத்தை எறிகிறார் என்று சொல்லவைத்து பிறகு சாதனை என்று வரும்பொழுது “ஆமாம் எடுத்த விக்கெட் எல்லாம் ஜிம்பாப்வேக்கும், பங்களாதேஷ்க்கும் எதிராகத்தானே” என்று அவரை மட்டும் தட்டுவார்கள். கடுமையான சோதனைகளுக்குப் பிறகு எறியவில்லை என்று நிரூபிக்க்ப்பட்டாலும் முரளி மீது கறை நீங்காது. தொடர்ந்தும் தூற்றுபவர்களை ஐசிசி தடுக்க முயலாது. ஆனால் நடுவர்கள் மாத்திரம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு குறையொன்றும் இல்லாத மறைமூர்த்திகளாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்.

இமைக்கும் நொடியில் ‘நிறவெறிக்காரர்’ என்ற பட்டம் ஹர்பஜனுக்கு விழுவதில் தவறில்லையா? அதற்கு மட்டும் தொடரின் நடுவில் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே Instant Justice கொடுக்கலாம் என்று சொல்லி நடுவர்களுக்குத் தொடர் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்லது அபத்தமில்லையா? கவனிக்கவும் நிறவெறி பட்டம் என்பது காலத்திற்கும் ஹர்பஜனை மாத்திரமல்லாமல் இந்திய அணியையும் பாதிக்கப் போகிறது. நொடியில் இதுபோன்ற முடிவு ஐசிசி நிர்வாகியால் எடுக்க முடியும் என்றால், நடுவரின் பணித்திறமை பற்றிய முடிவுக்கு மட்டும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்? உடனடியாகத் தலையிட்டு நிலையைச் சரிசெய்வதுதானே நியாயம்?

இன்றைய நிலையில் நடுவர்கள் சம்பளத்திற்குக் கடமையாற்றும் பணியாளர்கள்தான். வேலையில் தவறு செய்தால் அதற்கான தண்டனையை அவர்கள் பெற்றாகத்தான் வேண்டும். தொழில்நுட்பம் வளரவளர அவர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கிறது என்று சொல்வதும் அபத்தம். சென்ற தலைமுறை ஆட்டக்காரர்களைவிட இந்த தலைமுறையில் இருப்பவர்கள் பல மடங்கு அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். அப்படித்தான் நடுவர்களும். வேண்டுமானால் நடுவர்கள் குழு நுட்பத்தைத் தங்களுக்குத் துணையாகப் பயன்படுததிக்கொள்ள வாரியத்தை தயார்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? நுட்பத்திற்கு எதிர் திசையிலேயே செல்ல முயல்கிறார்கள். மூன்றாவது நடுவரை ஆலோசிப்பது, தொலைக்காட்சி மறு ஒளிபரப்பைப் பயன்படுத்துவது போன்றவற்றை அவர்களது ஈகோவிற்கு எதிரானதாகப் பார்க்கிறார்கள். மேலும், அளவுக்கு அதிகமான ஆட்டங்களில் பணியாற்றுவதைத் தவிர்க்க முயல்வதில்லை. அற்புத நடுவர்கள் என்று பத்தே பத்துபேர் இருப்பது எவ்வளவு அபத்தம்! தங்களை உலகிலேயே பத்துபேர்தான் என்று உன்னதர்களாக அறிவித்துக் கொண்டால் அதற்கான விலையை அவர்கள் கொடுத்துதான் ஆக வேண்டும்.

* * *

எந்த வகையில் பார்த்தாலும் பக்னர் அடுத்த ஆட்டத்தில் பணியாற்றுவது இந்தியாவுக்கும் (ஆஸ்திரேலியாவுக்கும்), அவருக்கும், ஏன் கிரிக்கெட்டுக்கு கூட நல்லதில்லை. வேறு யாரும் அவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதில்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அணி என்ற வகையில் இந்தியாவிற்கு அதற்கான முழு உரிமையுண்டு. அதுதான் நடந்திருக்கிறது. அடிக்கடி நடுவர்களை மாற்றுவது தவறு என்பதில் ஐயமில்லை. ஆனால் உச்சகட்ட தவறுக்குப் பிறகும் அவர்களை விதிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக நிலைநிறுத்துவதும் நல்லதில்லை.