வரியை மக்களுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கும் விபரீதம் அமெரிக்காவில் முற்றிப்போய்க் கிடக்கிறது. வரி விதித்தால் நாட்டுக்குத் தீமை என்பதுபோல  எல்லோரும் அசட்டுத்தனமாக அரட்டுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சுவரில் முட்டிக்கொள்வதைப் போல ஸ்காண்டிநேவிய நாடுகள், பிரான்ஸ்சு, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய முதலாளி நாடுகள், இன்னும் ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் உயர் சதவீத வரி இருக்கிறது. இவையெல்லாவற்றையும்விட அமெரிக்கா பெரிய பொருளாதாரமாக இருக்கலாம், ஆனால் மேற்சொன்ன நாடுகளில் பலவற்றின் பொருளாதாரம் அமெரிக்காவைவிட உயர் வளர்ச்சி வீதத்தில் இருக்கிறது.  இன்னும் முக்கியமாக இந்த எல்லா நாடுகளிலும் வாழ்க்கைத்தரம் அமெரிக்காவைக் காட்டிலும் உயர்வாக இருக்கிறது.

டென்மார்க்கில் 40 சதவீத மக்கள் தங்கள் வருவாயில் 60 சதவீதத்தை வருமான வரியாகச் செலுத்துகிறார்கள்.  ஆனால் டென்மார்க்கின் வளர்ச்சிவீத

ம் அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம்.  பல வருடங்களாகத் தொடர்ச்சியாக லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லெகோ (விளையாட்டு சாதனங்கள்) நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு வருடாந்திர சம்பளம் வெறும் $300,000 தான், இதில் வருமான வரி போக அவர் கைக்கு வருவது $115,000 மாத்திரமே. இதைத்தான் நான் அமெரிக்காவின் வித்தியாசமாகப் பார்க்கிறேன். அமெரிக்காவில் $155 ஆயிரம் வருமானம் என்பது அற்பம்.  சமீபத்தில் நஷ்டமடைந்து நொடித்து நிற்கும் அமெரிக்க நிறுவன அதிகாரிகளின் சம்பளத்தைப் படத்தில் பார்க்கலாம்.  திரும்பத் திரும்ப சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும், வரிவிதித்தல் கொடியது என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைப் பொருளாதாரம் ஒரு சில தனிநபர்களுக்கலாது பொதுவில் எந்தவிதத்திலும் பயனற்றது.  அது பல்லியைப் போல வாலைக் கழற்றிவிட்டு தலையைத் தப்பிக்க வைக்கிறது.

ஒழுங்குபடுத்தப்படாத சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தகவல் பெருக்கம் விரைவுபடுத்துகிறது.  இதைப் பற்றி இன்னொரு நாள் எழுதவேண்டும்.