வலைப்பதிவு செயல்படும் விதம்:மூன்று

இதன் முந்தைய பகுதிகள் : ஒன்று, இரண்டு

வலைப்பதிவுகள் இப்பொழுது பதின்ம வயதில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் மிகவும் சுவாரசியமான கட்டம். ஆர்வமும், சக்தியும் பொங்கியெழும் வயது. மூத்தவர்களை மதிக்காது தனக்கென ஒரு பாட்டை வகுத்துக்கொள்ளத் துடிக்கும் பிராயம். ஒருபுறம் கவர்ச்சிக்கான உறுப்புகள் வளர்ச்சியும் மறுபுறத்தில் ஒழுங்கற்ற ரோமங்கள், முகப்பருக்கள், உடைந்த குரல் என்று அருவருக்கத்தக்க வளர்மாற்றங்களும். எல்லாம் தெரிந்துவிட்டதைப் போல ஒரு மதப்பு, மறுபுறம் பயணிக்க வேண்டிய நீண்ட தூரத்தின் சுமை. பதின்மம்தான் எத்தனை அற்புதமானது!

(இந்தப் பகுதியில் வலைப்பதிவுகளைத் தனித்து நோக்கமால் இணையம் என்ற பெரு ஊடகத்தின் பல்வேறு சாத்தியங்களையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே பதிவுகள் என்று எழுதினாலும் அதைக் கடந்த பிற இணையப் படைப்புகளையும் அது உள்ளடக்கியது என்பதை மனதில் கொள்ளவும்.)

வருங்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுதல் மிகவும் சிக்கலானது. பல்வேறு மேதைகளும் வரலாற்றின் பல காலகட்டங்களில் எதிர்வுகூறி சில வருடங்களிலேயே தங்கள் அபத்தங்களைக் கண்டு தலைகுனிந்திருக்கிறார்கள். என்னை நானே முட்டாளாக்கிக்கொள்ளும் சாத்தியம் நிறையவே இருப்பதை உணர்ந்தாலும் ஆர்வக்கோளாறினால் கொஞ்சம் ஊகமீடு (ஊகம்+மதிப்பீடு - Guesstimate) செய்துதான் பார்க்கலாமே!

முதலாவதாக சில எளிய விஷயங்கள்: தகவல் ஊற்று இப்பொழுதைக்குப் பெரும்பாலும் பரவலாக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா குண்டு போட்டதால் என்ன நன்மை நடந்தது என்று பெருஊடகங்கள் பிம்பங்களைச் சித்தரிக்க ஆயத்தமாகும் முன்னரே இராக்கின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் செல்பேசியில் எடுத்த படங்களுடன் அவலத்தை வலைபரப்புகிறார். ஆழிப்பேரலை வந்த அடுத்த நிமிடமே தகவல் இணையத்தில் பெருக்கெடுக்கிறது. ஆறாவது பந்திலும் சிக்ஸர் அடித்தால் பந்து விழுந்த இடத்திலிருந்தே செல்பேசியில் படங்கள் வருங்கின்றன. மலேசியத் திரையங்கிலிருந்து சிவாஜியின் முதல் காட்சியின் அரைமணி நேரத்திற்குள்ளாக பல்லேலக்கா சூப்ப்ப்பர் என்று ஒரு வரிப் பதிவு வருகிறது. ஒரு காலத்தில் ஊடகங்கள் தங்களுக்கு வேண்டிய வடிவத்தில் செய்திகளைக் கட்டமைத்துக் கொண்டிருந்த நிலை போக இப்பொழுது பன்முகப் பார்வைகள் தொடர்ச்சியாக இணையத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் அடியில்லா ஆழ்கடலைப்போல காந்தச் சேமிப்பின் அளவு பெருகிக் கொண்டே போவதால் வரும் அத்தனை தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. இதனால் எந்த ஒரு நிகழ்வைக் குறித்தும் துல்லியமான பார்வைகள் எப்பொழுதும் அகழ்ந்தெடுக்கக் கிடைக்கின்றன. துல்லியம் என்று சொல்வதால் இவை சார்பற்றவை என்று அர்த்தமில்லை. ஆனால் சார்புள்ளவை என்று வெளிப்படையாகத் தெரிவதாலும், பல்சார்புத் தகவல்களும் எளிதில் கிடைப்பதாலும் வாசகர்கள் தங்களுக்கான தகவல்களை இரைச்சலிருந்து வடிகட்டிக் கொள்ளமுடியும். செப்டம்பர் 1989 வரை கிழக்கு ஜெர்மனியின் வானொலி அங்கே எரிச் ஹானேக்கர்க்கர் ஆட்சி மிகத் திறம்பட நடக்கிறது என்று பெரஸ்த்ராய்க்காவின் தேவையின்மையைப் பரப்பிக் கொண்டிருக்க இரண்டே வாரங்களில் இரும்புக்கோட்டை சரிந்தது. இரண்டாவது பெரிய சோஷலிச நாடு இவ்வளவு சீக்கிரம் தர்ந்துபோனது ஒரு பெரும் வரலாற்று அதிர்ச்சி. இந்த நாட்களில் அது சாத்தியமில்லை. உலகின் எந்த மூலையானாலும் எதிர்குரல்கள் தொடர்ச்சியாக, உரக்க ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் வலைப்பதிவுகளின் பங்கு மிக முக்கியமானது.

வெறும் தகவலைத் தாண்டி செறிவார்ந்த களஞ்சியங்களும் இன்றைக்கு இணையம் வழியே வளர்ந்துவருகின்றன. 1768 தொடங்கி இரு நூறாண்டுகளைத் தாண்டி வளர்க்கப்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவை முகம் தெரியாத ஆர்வலர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியா ஐந்தே வருடங்களுக்குள்ளாக ஓரங்கட்டிவிட்டது. இதன் முக்கிய காரணம் படைப்போர்-துய்ப்போர் இடைக்கோடு அழிந்துபோவது. இங்கே நுகர்வோர் என்ற தனியினம் கிடையாது. இதையும் தவிர இன்றைக்குச் சந்தையில் வந்திருக்கும் புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கலாமா என்ற குழப்பம் இருக்கிறதா? இதற்காக ஒரு வல்லுநரின் கருத்து தேவையில்லை. ஒரு நூறு சக பயணாளர்களின் கருத்து இணையமெங்கும் விரவிக் கிடக்கிறது. இவற்றுள் பல சார்பானவை என்றாலும் பெரும அளவில் இவற்றைக் காண, துல்லியமான கணிப்பு சாத்தியமாகிறது. ஒன்றிரண்டு பண்டிதர்களின் இடத்தை ஒரு நூறு பாமரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தை வளர்த்தல், மார்பகப் புற்றுநோய், சரியப் போகும் பங்கு, திரைப்படம், புத்தகம் என்று எல்லாவற்றிலும் பண்டிமர்கள் (பண்டிதப் பாமரர்கள்) கருத்து சொல்லத் தயாராக இருக்கிறார்கள். இந்த வைக்கோற்போரிலிருந்து ஊசியைத் தேடியெடுக்கவும் அவர்களே உதவுகிறார்கள். தொடர்ச்சியாக தவறான தகவல்களையும், சார்பான விமர்சனங்களையும் அடையாளம் கண்டு இந்தப் பண்டிமர்கள் முத்திரை குத்துகிறார்கள். இந்த சக-விமர்சனத்திலிருந்து தப்புவது யாருக்குமே சாத்தியமில்லை. இரைச்சலும் குழப்பமும் நிறைந்த இணைய உலகில் நம்பிகைத் திறத்தை சக-விமர்சனம் (peer review) உறுதி செய்கிறது. அறிவியலின் இன்றைய வளர்ச்சியில் சக-விமர்சனத்தின் இடம் மிகவும் முக்கியமானது.

இதைத் தொல்லூடகங்கள் (நாளிதழ்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி, வானொலி) உணரத் தொடங்கியிருப்பதன் அறிகுறி அவர்களையும் இதே முறைக்கு மாற்றிக் கொள்வது. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், டைம் உள்ளிட்ட முன்னணி சஞ்சிகைகள் தங்கள் ஆக்கங்களைப் பரிந்துரைக்கச் சொல்கின்றன. சில சஞ்சிகைகளின் தங்கள் ஆக்கங்களின் கீழேயே வாசகர்கள் கருத்தெழுதும் வசதியைத் தருகின்றன. பெரும்பாலானவை தங்கள் இணையத்தின் ஒரு பகுதியாக வலைப்பதிவுகளை உருவாக்கி அதன்கீழ் விவாதத்திற்கு வருமாறு வாசகர்களை அழைக்கின்றன. தொலைக்காட்சிச் செய்திகளில் நடுங்கும் கைகளுடன் வாசகர்கள் எடுத்த குழப்பமான செல்பேசிப் படங்கள் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்கின்றன. இப்பொழுது சந்தேகத்திற்கு இடமின்றி பயணர் பங்களிப்பு செய்தியில் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது.

* * *

இப்படி நொடி நேரத் தகவல் சொல்வதில் இவற்றின் பங்கைத் தவிர்த்து இவர்களால் ‘ஆழமாக’ ‘உருப்படியாக’ ஏதாவது சாதிக்க முடியுமா என்ற விமர்சனம் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கிறது. உற்பத்தியும், படைப்பும் இவற்றின் வழியே சாத்தியம்தானா? இதற்கும் ஆம் என்றுதான் தோன்றுகிறது. இதன் இடைக்கட்டம்தான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு ராண்டம் ஹவுஸ், பிக்க்டோர், உள்ளிட்ட பல முண்ணனி பதிப்பாளர்களின் முகவர்கள் தங்கள் அடுத்த நட்சத்திரத்தை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எழுதத் தொடங்கி நான்கே மாதங்களான வலைப்பதிவாளருக்கு ராண்டம் ஹவுஸிலிருந்து $300,000 முன் பணத்துடன் புத்தகம் எழுத ஒப்பந்தம் கிடைக்கிறது. Stuff White People Like என்ற வலைப்பதிவை புத்தகமாக்கக் கொடுக்கப்பட்ட இந்த முன்பணம் முன்னெப்பொழுதும் இல்லாத சாதனை. இதில் போட்ட பணத்தை ராண்டம் ஹவுஸ் எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 75,000 பிரதிகளாவது அச்சிட்டாக வேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே அதிக விற்பனை பட்டியலில் இடத்தை உறுதி செய்கிறது. இன்னும் இரண்டே வருடங்களில் இப்படி வலைப்பதிவுகள் புத்தகமாதல் மிகச் சாதாரணமான தினசரி நிகழ்வாகிவிடும் என்று ராண்டம் ஹவுஸ் சொல்கிறது.

தமிழிலும் இது மிக தன்னிச்சையாக நிகழத் தொடங்கிவிட்டது. காஞ்சனா தாமாதரன், கோகுலக் கண்ணன், வெங்கட்ரமணன், ஜெயபாரதன், பத்ரி சேஷாத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ரஜினி ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் என்று இணையம் வழியே பரிச்சயமானவர்களின் எழுத்துக்கள் புத்தகங்களாக மாறியிருக்கின்றன. (இணைய செய்திக் குழுமங்களிலிருந்து பதிவுகள் வரை தொடர்ச்சியாக தமிழிணையப் பங்களிப்பாளரான பத்ரியின் கிழக்கு பதிப்பகம் இதில் முனைந்து நிற்பதில் வியப்பேதுமில்லை).

* * *

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஆறு அல்லது எட்டு வயது இருக்கும். எங்கள் ஊருக்கருகில் கோடைநாட்களில் கிராமம் கிராமமாக மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொரு ஊரிலும் காப்பு கட்டியதிலிருந்து தேர் நிலைக்கு வரும்வரை ஊரைவிட்டு யாரும் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு இருக்கும். அந்த நாட்களில் கரகம், சிலம்பாட்டம், குறவன் - குறத்தி, பொய்க்கால் குதிரை, பொம்ம்லாட்டம் என்று மாலையில் தொடங்கி பின்னிரவில் ஆர்.எஸ்.மனோகர், நவாப் ராஜமாணிக்கம் என்று விடியல் வரை மக்கள் கலைகள் நடைபெறும். இவற்றில் பலர் உள்ளூர்க் கலைஞர்களாகவும் இருப்பார்கள். மறுநாள் பகலில் என் பெரியண்ணன் ச்ிறுத்தொண்ட நாயனாராக மாறி சீராளனான என்னை வெட்டி விருந்து கொடுப்பான். சில சமயங்களில் என் அம்மா இந்த நாடகத்தில் பார்வையாளராக இருப்பார். ஒப்பனை உதவியாக சீராளன் எனக்குக் காவித் துண்டைக் கட்டிவிடுவதும் உண்டு. இப்படிக் கலைகள் அனைத்தையும் மறுநிகழ்வாகத் தனக்குள்ளே நிகழ்த்திக் கொள்வது வாசகனின் இயல்பு. பின்னர் ஒரு வருடம் அதே திருவிழாவில் வெள்ளை வேட்டியைத் திரையாகக் கட்டி இருபது நிமிடம் மோர்க்குழம்பாக அஸ்ஸாம் ஆளுநர் கொடியேற்றிய இந்திய செய்திப் பிரிவின் படத்தையும், குடும்பக் கட்டுப்பாடு குறித்த பத்து நிமிடப் பிரச்சாரத்தையும் காட்டினார்கள். இந்த முப்பது நிமிடத் திரையிடலுக்காக பொய்க்கால் குதிரையைக் காவு கொடுத்துவிட்டு நாங்கள் மூன்று மணிநேரம் காத்திருக்கத் தொடங்கினோம். எனக்கு நினைவு தெரிந்தவரை நான் ஒரு நாளும் அஸாம் கவர்னராகக் கொடியேற்றியதில்லை. நிகழ்கலைகள் மெல்ல மெல்லத் திருவிழாவை விட்டு விலக்கப்பட திருவிழாவே இரண்டு நாளாகச் சுருங்கிவிட்டது.

திரைப்படம் வந்தபின்னும் பார்வையாளர்கள் மறுநிகழ்வு செய்தல் தொடர்ந்து வந்தது. சிகரெட்காகிதங்களை ஒட்டிச் செய்யப்பட்ட வேலேந்தி நான் நிற்க அடுத்த வீட்டு அண்ணன் எட்டு நிமிடத்திற்கு சிவாஜி வசனங்களைச் சீறிப்பொழிவான். இருபது வயதில்கூட “எனக்கின்று புரிந்தது எவரென்று தெரிந்து, ஹேய்” என்று கத்திக் கொண்டு எட்டாவது மாடிப்படியிலிருந்து பொத்தென்று குதித்து குதிகாலைச் சுளுக்கிக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சி வந்தபிறகு இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோய்விட்டது. எல்லோரும் உறைந்துபோய் சித்தியையும் அண்ணியையும் பார்த்தாலும் அடுப்பில் பாலைப் பொங்கவிட்டுப் பிழியப் பிழிய அழுதாலும் தங்களுக்குத் தாங்களே முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டு வசனம் பேசியதாகத் தெரியவில்லை. கொஞ்சக் கொஞ்சமாக தானும் ஒரு பாத்திரம் என்ற உணர்வு விட்டுப் போய் தான் வெறும் பார்வையாளர், நுகர்வோர் மாத்திரமே என்று ஒதுங்கத் தலைப்பட்டனர். இவர்களில் மிகச் சிறுபான்மையினர் மாத்திரம் ஸ்லோகம் சொல்லும் குழந்தையாகவும், பாட்டுக்குப்பாட்டு பாடும் குமரியாகவும், அரட்டை அரங்கப் பேச்சாளினியாகவும் அவ்வப்பொழுது தலைகாட்டினாலும் இவர்களும் பெரு-ஊடக சக்கரத்தின் ஒரு ஆரக்கோலாக மாத்திரமே இருக்கிறார்கள். சராசரி வாசகன் ஊடகத்திலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக் கொண்டுவிட்டான். பத்து வயதாகும் என் தங்கை மகனுக்குப் பொழுது போக்கு கிரிக்கெட் பார்த்தல்; விளையாடுவது இல்லை.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று ஓய்வு ஒழிச்சலில்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொண்டிருப்பது. மற்றது பிரம்மாண்டம். பொம்மலாட்டத்தை திரும்ப நடத்திப் பார்க்க சிறுவனுக்கு ஒரு முகபவுடர் டின் போதும். திரைப்படத்தைத் திரைப்படமாக நிகழ்த்துவதற்குப் உயர்நுட்பங்களின் உதவி தேவை. தொலைக்காட்சிப் பெட்டியினுள் நுழைவது இயலாத காரியம்.

மீண்டும் புத்தகங்களுக்குத் திரும்புமுன் பிற துறைகளில் இணையம் வழி எசப்பாட்டுகளிலிருந்து எப்படி முழுப்படைப்புகள் உருவாகியிருக்கின்றன என்று கொஞ்சம் பார்க்கலாம். தனித்தன்மை வாய்ந்த முக்கியமான படைப்புகளை இணையம் வழியே உருவாக்க அது தரும் சாத்தியக்கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:

1. கலைப்படைப்புகளை வெளிப்படுத்தவும் அதற்கான வாசகர்களை உருவாக்கிக் கொள்ளவும் மிக எளிய, தடையற்ற அமைப்புகள்
2. படைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர உதவி
3. பண்டிதத்தனத்தைக் காட்டிப் பயமுறுத்தாமல், சற்றே கூடுதல் அனுபவம் உள்ள சக-படைப்பாளர்/வாசகரின் தோழமை கலந்த வழிநடத்தல்
4. தங்கள் செயல்களிலும் படைப்புகளிலும் பிறருக்கு ஆர்வம் இருப்பதைக் காணும் வாய்ப்பு
5. ஒருவருக்கொருவர் தோழமையையும் முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டி உருவாக்கும் சமூக அமைப்பு

இந்தச் சாத்தியக்கூறுகளைப் பற்றி கொஞ்சம் அசைபோடுங்கள். சுவாரசியமான சில உதாரணங்களுக்கு வருகிறேன்.

(பி.கு: இந்தப் பகுதியுடன் முடித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். எதிர்பாராத வேலகளின் காரணமாக முழுவதையும் எழுத முடியவில்லை. வலைப்பதிவுகளில் தொடராக ஒரு கருத்தை எழுதும் பொழுது நீண்ட இடைவெளி கூடாது என்பதால் எழுதியவரை உள்ளிட்டிருக்கிறேன்.)

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

அருமையாக சொல்லியிருக்கீங்க.
கருத்து சொல்கிற அளவுக்கு சரக்கு இல்லை என்னிடம்.

உங்கள் நேரத்தினை சற்று அளவிற்கு அதிகமாகவே செலவழித்தது போல் தோன்றுகிறது. ஆயினும், நேரம் என்பது வலைப்பதிவர்களுக்கு ஒரு பின்னடைவே! தங்களுக்கே ஒவ்வொரு பகுதியிலும் தாங்கள் கூற வருவதை முழுமையாக கூற முடியாத திருப்தியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

முன்பு ஒரு முறை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி யார் என்ற கேள்வியினை எழுப்பி ‘அவர் யாருமற்றவர்’ என்பதுதான் சரியான பதிலாக என்று மறைந்த ஆண்டன் பாலசிங்கம் கூறியிருந்தார். அதைப் போலவே வலைப்பதிவுகளை அவ்வளவு எளிதில் ஒரு கட்டத்தினுள் அடக்கிவிட முடியாதுதான்

—வலைப்பதிவுகள் புத்தகமாதல் மிகச் சாதாரணமான தினசரி நிகழ்வாகிவிடும் …. தமிழிலும் இது மிக தன்னிச்சையாக நிகழத் தொடங்கிவிட்டது. காஞ்சனா தாமாதரன், கோகுலக் கண்ணன், வெங்கட்ரமணன், ஜெயபாரதன், பத்ரி சேஷாத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ரஜினி ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் என்று இணையம் வழியே பரிச்சயமானவர்களின் எழுத்துக்கள் புத்தகங்களாக மாறியிருக்கின்றன.—

இதில் எத்தனை பேரின் பதிவுகள் புத்தகங்களாக மாறுகின்றன?

என்னுடைய புரிதல்…
காஞ்சனா தாமோதரன் - சிறுகதைத் தொகுப்பு. புத்தகம் வருவதற்கு முன்பே ஓரளவு பிரபலம். சில போட்டிகள், விகடன்/குமுதம் இதழ்களில் எழுதியவர்.

ஜெயபாரதனும் வெங்கட்ரமணன் - எழுதுவதற்கு கணினியை பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் என் புரிதல். அமெரிக்கா குறித்த எண்ணங்கள், ஜப்பான் அனுபவங்கள், நூல் விமர்சன/அறிமுகங்கள் என்று எழுதினால் புத்தகமாகி இருக்குமா?

பத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ராம்கி ஆகியோர் ‘இன்ன தலைப்பு’ என்று கொடுக்கப்பட்டு எழுதப்படுவதாகவே நினைக்கிறேன். ‘நானும் க்ரிக்இன்ஃபோவும்’, ‘தினம் ஒரு கவிதை - தொகுப்பு’, ‘எண்பதுகளின் சினிமா/ரஜினி ரசிகன்’ என்னும் புத்தகங்கள் வந்தால் — ஆங்கிலத்தைப் போலவே தமிழிலும் பதிவுகள் புத்தகமாகின்றன எனலாம்.

லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் ஆகியோரின் புத்தகங்கள் பொருத்தமான உதாரணம். இப்போதைக்கு எடுத்துக்காட்டுகள் exceptions ஆகவே இருக்கிறார்கள். துறை சார்ந்து எழுதினால் அச்சிடுவது norm ஆக உள்ளது.

சிறுகதை/புனைவு என்றால் அச்சு ஊடகங்களில் புகழ் பெற்றவர்; சொந்த அனுபவம், நகைச்சுவை என்பதெல்லாம் எஸ் ராமகிருஷ்ணன்/ஜெமோ போன்ற அச்சுக்காரர்களுக்கு கூட சாத்தியமில்லை என்பது என் புரிதல்.

சுருக்கமாக, ‘தான் விரும்பியதை எழுதினால் விற்குமா?’ - (தமிழ் சூழலில் போணி/அச்சு ஆகாது?)
‘தான் விரும்புவதை எழுதினால் தவிர்க்க இயலாத பதிவாகுமா?’ - (எந்தச்சூழலிலும் ஆகும்!)

>காஞ்சனா தாமோதரன் - சிறுகதைத் தொகுப்பு. புத்தகம் வருவதற்கு முன்பே ஓரளவு பிரபலம். சில போட்டிகள், விகடன்/குமுதம் இதழ்களில் எழுதியவர்.

பாலாஜி, இந்தக் கேள்வி வரும் என்று நான் ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான். காஞ்சனா முதலில் எழுதியது குமுதத்தில் அல்ல; ஃபோரம்ஹப்-பில் (circa 1999). கோகுலக்கண்ணனும் கூட. அது மரத்தடி, ராயர், அகத்தியர் எல்லோருக்கும் தாத்தா. செயற்பாட்டு வழிமுறைகளில் ஃபோரம்ஹப்பிற்கும் வலைப்பதிவுகளுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. அதுதான் தமிழில் (தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு எழுதுவதில் சிக்கல்கள் காரணமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும்), தமிழ்க் கலாச்சாரத்தின் முதல் இணைய எசப்பாட்டுக்கூடம். பெயரிலி ‘ஈழத்த்துக் கழைக்கூத்தாடியின் நாட்குறிப்புகள்’ என்று ஒரு தனி இழையை வைத்துக் கொண்டு தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். அவருடைய (கிட்டத்தட்ட) தினசரி கவிதைகளுக்கு நான் இரசிகன். கோ.க. பெயரிலி, காஞ்சனா, மணிவண்ணன், நான் உட்பட பலர் ஒருவருக்கொருவர் கைகொடுத்துத் தூக்கிவிட்டிருக்கிறோம்.

>ஜெயபாரதனும் வெங்கட்ரமணன் - எழுதுவதற்கு கணினியை பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் என் புரிதல். அமெரிக்கா குறித்த எண்ணங்கள், ஜப்பான் அனுபவங்கள், நூல் விமர்சன/அறிமுகங்கள் என்று எழுதினால் புத்தகமாகி இருக்குமா?

ஆகும் என்றுதான் நினைக்கிறேன். இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிறுத்திக்கொள்கிறேன்.

>பத்ரி, சொக்கன், சுவடு சங்கர்,…

அதில் என்ன குறை? மாறாக இணையத்தில் எழுதி அதன் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் இவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பதிவில் எழுதுவதை அப்படியே புட்டியில் அடைத்துவிட வேண்டும் என்பது என்ன எதிர்பார்ப்பு? திறமையை அடையாளம் காண உதவினால் போதாதா? (தீபாவளியில் தொடங்கி பொங்கலில் முடிய வேண்டும், வாரத்துக்கு மூன்று பக்கங்களுக்கு மிகக்கூடாது என்று விகடன் ஆசிரியர் வகுத்த எல்லைகளுக்கு சுஜாதா எழுதினால் சேர்த்தியில்லையா?)

>ுறை சார்ந்து எழுதினால் அச்சிடுவது norm ஆக உள்ளது.

சட்டில இருக்கறதுதான் ஆப்பைல வரும். எஸ்.ரா ஏன் அறிவியல் கட்டுரை எழுதவில்லை என்றுகூடக் கேட்கலாம்.

>சொந்த அனுபவம், நகைச்சுவை என்பதெல்லாம் எஸ் ராமகிருஷ்ணன்/ஜெமோ போன்ற அச்சுக்காரர்களுக்கு கூட சாத்தியமில்லை

சுஜாதா கடைசிப் பக்கங்கள், கற்றதும் பெற்றதும் என்று எழுதி சாதனை விற்பனைகளைப் படைக்கவில்லையா? க.க.ப இத்தனை ஆண்டுகள் கழித்தும் விற்கிறதே? ஜெயமோகன் தன்னுடைய தனிப்பட்ட உரையாடல்களை (மரத்தடி விவாதங்களைப்) புத்தகமாக்கவில்லையா?

பதிவுக்கும் அச்சுக்கும் உள்ள வித்தியாசம் அதில் தேவைப்படும் முதலீடு, மற்றவர் தயவு. சென்ற பகுதியின் இறுதியில் சொன்ன நுழைவுத் தடையைக் குறைப்பது இப்போதைக்குப் பதிவின் முக்கிய பங்காக இருக்கிறது. நான் பட்டியலிட்டிருந்தவர்கள் பலரையும் அடையாளம் காண வலை உதவியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்தப் பட்டியல் தொடர்ந்து பெருகி வருகிறது என்பது நிதர்சனம்.

பி.கே.சிவகுமார் பதிவுகளில் (+திண்ணை?) எழுதியவற்றைப் புத்தகமாகத் தொகுத்துக் கொண்டுவந்துள்ளார்.

பாலாஜி சொல்வதுபோன்று பத்ரி, சொக்கன், சுவடு ஷங்கர், ரஜினி ராம்கி ஆகியோர் பதிவுகளில்/குழுமங்களில் எழுதுவதற்கும் புத்தகங்களாக எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால் ‘நானும் கிரிக்கின்ஃபோவும்’ என்று நான் எழுதினாலும் அது பதிவு->புத்தகம் என்று ஆகாதல்லவா? Stuff White People Like கூட, பதிவில் இருப்பது அப்படியே புத்தகம் ஆகப்போவதில்லை. பெரும்பாலும் மேற்கொண்டு எழுதிச் சேர்க்கப்போகின்றார்.

அதற்கு முக்கியக் காரணம், பதிவு பாஷை வேறு, புத்தக பாஷை வேறு. பதிவின் வடிவம் வேறு, புத்தகத்தின் வடிவம் வேறு. நான் இட இதுக்கீடு பற்றி என் பதிவில் எழுதியது அனைத்தையும் அப்படியே புத்தகமாகப் போட, பதிப்பாளரான நானே விரும்பமாட்டேன். ஏனெனில் அந்தப் பதிவுகளுக்கு புத்தகத்துக்கான வடிவம் இல்லை என்றே நம்புகிறேன். அதனால்தான் இன்றுவரை நான் பதிவுகளில் எழுதியவற்றைப் புத்தகமாக்க நினைக்கவில்லை. அதேபோல, லிவிங் ஸ்மைல் வித்யா புத்தகத்துக்கும் அவரது பதிவுகளுக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை. ஒரு வலைப்பதிவர் புத்தகம் எழுதுகிறார் என்பது மட்டும்தான். சிறில் அலெக்ஸ் (முன்சொன்ன பி.கே.எஸ் போன்று) பதிவுகளைப் புத்தகமாக்கிய மற்றொருவர்.

கொஞ்சம் உருப்படியான எடிடிங்கை வைத்துக்கொண்டு பல பதிவுகளிலிருந்து சுவாரசியமான விஷயங்களை மட்டும் எடுத்து அவற்றைப் புத்தகங்களாக ஆக்கமுடியும். விற்பனை பெரிதாக இருக்காது, ஆனால் அது பெரிய பிரச்னை என்று எனக்குத் தோன்றவில்லை. இதைப்பற்றி வலைப்பதிவர் தேசிகனிடம் ஒருமுறை பேசினேன். இன்ஷா அல்லாஹ், இந்த ஆண்டு எதையாவது செய்யமுடியுமா என்று பார்ப்போம்.

***

இங்கு தேவையாக நான் கருதுவது, வலைப்பதிவர்கள், தங்களையும் எழுத்தாளர்களாக, படைப்பாளிகளாக நினைக்கவேண்டும் என்பதையே. அப்படி நினைத்தால், அவர்களது வலைப்பதிவுப் படைப்பிலேயே பெரும் முன்னேற்றம் ஏற்படும். அதன்பின் அவர்கள் தனியாகவும் புத்தகம் எழுதலாம், அல்லது பதிவுகளையே புத்தகமாக்கலாம்.

பத்ரி - உங்கள் கருத்துக்களை நான் ஆவலோடு எதிர்பார்த்தேன். ஒரு பதிப்பாளர், வலைப்பதிவர் என்ற இரட்டைத் தொப்பி அணியும் உங்களால் இதனை ஒரு சமநிலையில் பார்க்க முடியும்.

வலைப்பதிவுகளில் எழுதுவதை அப்படியே புத்தகமாக்க வேண்டும் என்ற கருத்து அபத்தமானது. நான் எப்படி அச்சு ஊடக எழுத்தாளர்களை வலைக்குத் தகுந்தபடி மாறிக்கொள்ள வேண்டும் என்கிறேனோ அதே அளவில் வலைப்பதிவாளர்கள் புத்த்கம் எழுதினால் மாறிக்கொள்ள வேண்டும். என் திண்ணைக் கட்டுரைகள், வலைப்பதிவுகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்ட பொழுது அவற்றைப் பெருமளவில் திருத்தியது உண்மை.

ஒரு நல்ல் எழுத்தாளர் என்று அடையாளம் காண வலைப்பதிவுகள் உதவுவது வருங்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று நம்புகிறேன். அதேபோல் ஆரம்பகட்ட எழுத்தாளர்களுக்கு சக-விமர்சனம் தங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

மற்றொரு விஷயம்… பதிவுகளை புத்தகங்களுக்கான சோதனைக் களமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொடரை பதிவுக்கு என்றே எழுத ஆரம்பித்து, பின்னூட்டக் கருத்துகளை ஒன்றுசேர்த்து, அதனால் பதிவையே சற்றே திருத்தி, மாற்றியமைத்து, அனைத்தையும் ஒன்றுதிரட்டி, சில பின்னூட்டங்களை அப்படியே அதனை எழுதியவர்களின் அனுமதியுடன் மேற்கோளாகக் கொண்டுவந்து ஒரு புதிய முயற்சியை சாத்தியமாக்கலாம்.

வேண்டுமானால் என் பதிவில் இப்படி ஒன்றைச் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன்.

நன்றாக எழுதியிருக்ககிறீர்கள். வலைப்பதிவு மூலம் படைப்புகள் வாசகர்களை வந்தடையும் காலம் வந்தாயிற்று. நேரத்தை ஒதுக்கி சரியாகப் படைத்திட வேண்டும் என்பது முக்கியம்.

பதிவுகளையும் அதன் பின்னூட்டங்களையும் சேர்த்துப் புத்தகம் போடும் எண்ணம் ரொம்ப நாளாவே மனசில் ஊறிக்கிட்டு இருக்கு. பார்க்கலாம் செய்ய முடியுமான்ன்னு.

//5. ஒருவருக்கொருவர் தோழமையையும் முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டி உருவாக்கும் சமூக அமைப்பு//

இதுதான் மெய் என்று இருக்கு. நல்ல சமூகம் அமைய வலைப்பூக்கள் பயன் படுகின்றது என்பதே இப்போதைக்கு மனசுக்கு மகிழ்ச்சி.

//பதிவுகளை புத்தகங்களுக்கான சோதனைக் களமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு தொடரை பதிவுக்கு என்றே எழுத ஆரம்பித்து, பின்னூட்டக் கருத்துகளை ஒன்றுசேர்த்து, அதனால் பதிவையே சற்றே திருத்தி, மாற்றியமைத்து, அனைத்தையும் ஒன்றுதிரட்டி, சில பின்னூட்டங்களை அப்படியே அதனை எழுதியவர்களின் அனுமதியுடன் மேற்கோளாகக் கொண்டுவந்து ஒரு புதிய முயற்சியை சாத்தியமாக்கலாம்.//

மா. சிவகுமாரின் பொருளாதாரம் குறித்த பதிவுகளை இப்படி பின்னூட்டங்களுடன் வெளியிட ஒரு முயற்சியை ஆழி செய்தது.

ஆழி பதிப்பகம் வலையில் எழுதுபவர்களின் புத்தக ஐடியாக்களை வரவேற்கிறது.

(தொடர்புக்கு செந்தில் 99401 47473 or aazhibooks@gmail.com )

வெங்கட், இந்த மூன்று பதிவுகளையும்,பின்னூட்டங்களையும்
படித்தேன்.சுவாரஸ்யமாக இருந்தது.நான் தற்போது தமிழ் வலைப்பதிவுகளிலிருந்து விலகி நிற்பதால் விரிவாக பின்னூட்டம் இடுவதை தவிர்க்கிறேன்.உங்களிடம் தொழில்னுட்பம் குறித்த ஒரு அதீத நம்பிக்கை இருப்பதாக தோன்றுகிறது. அதன் சாத்தியக்கூறுகளை நான் மறுக்கவில்லை,அதே சமயம் சில சாத்தியக்கூறுகள் நாம் எதிர்பாராத திசைகளில் செல்லக்கூடும்,
சில நம்பிக்கைகள் பொய்க்ககூடும், எதிர்பாராதவை நடக்க்கூடும்.
இணைய அரசியல் குறித்த ஆரம்ப நம்பிக்கைகளை மீறி இன்றைய
போக்குகள் இருக்கின்றன.ஆனால் digital divide இன்னும் பெரிய
பிரச்சினையாக உள்ளது. வேறு கோணத்தில் பார்க்கும் போது இன்றைய இணையத்தின் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தத்
தேவையான தொழில்னுட்ப அறிவும், அதனை தொடர்ந்து கையாள்வதும், தகவல் பெருக்கத்தினை தக்கபடி பயன்படுத்தத்
தெரிவதும் சிலவற்றை, குறிப்பாக தொடர்ந்த கற்றலைக் கோருகின்றன. அதற்கான நேரம், திறன் எத்தனை பேரிடம்
இருக்கிறது.வலைப்பதிவுகளை எழுதினால் மட்டும் போதாது,
தொழில்னுட்ப சாத்தியக்கூறுகளை பயன்பாடுத்தி பரவலான
வாச்கர்களை சென்றடைய வேண்டும். இதுவும் தொடர்ந்த கற்றலைக் கோருகிறது. தகவல்களை, சான்றுகளை தகவமைத்து ஒழுங்குபடுத்துவதும், அதன் அடிப்படையில் ஆராய்வதும்,
எழுதுவதும் இணையத்தில் மூலம் நினைத்திரா வண்ணம் சாத்தியமாகியிருப்பினும், அதைச் செய்வது எளிதாக
இல்லை.ஒரு ஆய்வாளன் என்ற முறையில் இதை
என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். பல தரவுகள்
இணையத்தில் கிடைக்கும் போது அவற்றை நம்பி
எழுத முடிவதில்லை,குறிப்பாக தமிழில் இணையத்தில்
உள்ளவை.
சில கேள்விகளை எழுப்பியாக வேண்டும், சிலவற்றை பேசியாக
வேண்டும்.அந்த விதத்தில் உங்கள் இடுகைகளை நான்
வரவேற்கிறேன்.

உங்கள் மின்னஞ்சல் தெரியாததால், இதை இங்கே ஒரு மறுமொழியாக இடுகிறேன். மன்னிக்கவும்!

அன்புள்ள வெங்கட்

வலைப்பதின் interactive தன்மையைக் கொண்டாடும் உங்களின் சமீபகால வாசகன் என்கிற முறையில் ஒரு வேண்டுகோள்.

குழுக்களிடையே புத்தகம் மற்றும் திரைப்பட குறுந்தகடுகள் பரிமாற்றத்திற்கு (Sharing DVDs, CDs & books within groups) Lendbee.com அப்படீன்னு ஒரு இணையதளம் ஆரம்பிச்சிருக்கோம். நேரம் கிடைக்கும்போது அதைப் பாருங்க (”வந்துட்டான்யா பாயின்டுக்கு”!). பிடிச்சுருந்துதுன்னா நண்பர்களுடன் சேர்ந்து அதை உபயோகப்படுத்துங்கள். வலைப்பதிவில் தொடுப்பும் கொடுங்க!

தயவு செஞ்சு உங்களுக்கு இந்த இணையதளம் பிடிக்கலைன்னா “எனக்காக மட்டும்”னு இதை பரிந்துரைச்சிடாதீங்க!
“எந்த வகையில் மேம்படுத்தலாம்”, “இதனால நான் இதை போடலை”னு ஒரு மின்னஞ்சல் மட்டும் தட்டி விட்டுருங்க!

நன்றி.

அன்புடன்
வெங்கட்ரமணன்! நானும் வெங்கட்தான்!
[selections.wordpress.com - இது "மற்றுமொரு" வலைப்பதிவே. ரொம்ப ஆவலா எட்டிப்பார்த்து (நெனப்புத்தாண்டா உனக்கு!) ஏமாற வேண்டாம்!]

இரண்டாம் வெங்கட்ரமணன்,

சில வலைப்பதிவுகளில் உங்கள் மறுமொழிகளை அவ்வப்பொழுது படித்திருக்கிறேன். ஒரு சமயம் தூக்கக் கலக்கத்தில் நான் தான் அங்கே எழுதினேனோ என்று சந்தேகம்.

உங்கள் வலைப்பதிவைப் பதிவை இப்பொழுது மேலோட்டமாகப் பார்த்தேன். இனிமேல் படிப்பேன்.

Lendbee பார்க்கிறேன்.

Leave a comment

(required)

(required)