வலைப்பதிவுகள் செயற்படும் விதம் - 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்

முதல் பகுதி

மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். மறுபுறம் சராசரி மனிதர்களின் திண்ணை கூடிப் பேசல், டீக்கடை அரட்டைகள் என்று உலகியல் நெருக்கடிக்களுக்கு இடையில் கணநேரக் கருத்துப் பரிமாறல் நடப்பதைக் காணமுடியும். தகவல் பரிமாற்றம்தாண்டி கலைகளிலும் இது நெடுகிலும் பரவியிருப்பதைப் பார்க்கமுடியும். கமலையில் நீர் சேந்தும்பொழுது எசப்பாட்டும் எதிர்ப்பாட்டும் நம்மூரின் கலாச்சார வெளிப்பாடுகள். இணையம் அந்த எசப்பாட்டிற்கான வெளியை விரித்திருக்கிறது.

கருத்துப் பரிமாற்றத்திற்கு பலர் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் ஒன்றுகூடுவது அவசியம். மின்னுலகு அற்புதமாக இந்த கால-தேச இடைவெளிகளைச் சுருக்கிவிடுகிறது. வலைப்பதிவுகள் படைப்பு-துய்ப்பு இரண்டையும் ஒரே புள்ளியில் குறுக்கிவிடுகின்றன. உதாரணத்திற்கு அருள் செல்வனின் இந்தப் பதிவையும் அதன் கீழ் சன்னாசியின் பின்னூட்டத்தையும் பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் கருத்தை விரித்தும் மறுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் எழுதும் வாய்ப்பு வலைப்பதிவுகளில் கிடைக்கிறது. இதுபோன்ற ஆர்கானிக் கருத்துப் பரிமாற்றம் பின்னூட்டப்பெட்டிகள் மூடப்பட்ட நிலையில் சாத்தியமில்லை. ஏன்? முதலாவதாக தான் எழுதியது உடனடியாக சேரவேண்டிய இடத்தைச் சேரப்போகிறது (அது சேர்ந்த விபரமும் தனக்குத் தெரியக் கிடைக்கும்) என்ற தீர்மானம் இருக்கும் நிலையில் சொல்லவந்த கருத்தைத் தயங்காமல் சொல்லும் ஆர்வம் கிடைக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் இணையத்தில் வளரும் இன்றைய தலைமுறை ஓய்வற்ற அலைச்சல் கொண்டது; பொறுமையற்றது. இன்னொருவர் பதிவில் கருத்தெழுதி அதற்கு அடுத்த பத்து நிமிடத்தில் பதில் கிடைக்கும் என்று தெரியும்பொழுது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பதில் வரப்போவதில்லை என்ற ஐயமிருக்கும் சேர்ப்பிடத்தை நோக்கி எழுதப்போவதில்லை.

ஆர்வமுள்ள வாசகன் எப்பாடுபட்டேனும் ஆசிரியனுடன் உரையாடுவான் என்று சொல்லக்கூடும். இதற்கு ஒரே பதில் யாரும் தவிர்க்க முடியாதவர் அல்லர். இன்றைய தலைமுறைக்குத் தகவல் தொடச்சியாக வந்து கொண்டிருக்கிறது (இந்த இடத்தில் தகவல் என்று நான் பொதுமைப்படுத்துவதில் புனைவிலக்கியம், ஓவியம், இசை, சலனப்படம் என்று பலவும் அடக்கம்). அவர்கள் கவனம் ஒரு இடத்தில் நிலைப்படுவது குறைவு. இன்னும் சொல்லப்போனால் நுட்ப வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டு தன்னுடன் ஊடாட விழையாத யாரையும் அவர்கள் விரும்புவதில்லை. (மின்னஞ்சல் தொடர்புள்ள/ தொடர்பற்ற தமிழ் எழுத்தாளர்களையே கேட்டுப்பார்க்கலாம்). பின்னூட்டப்பெட்டியைச் சுமந்து திரிவது எழுத்தாளருக்குச் சுமை என்றொரு வாதம் இருக்கிறது. பின்னூட்டப் பெட்டி மாத்திரமல்ல; இடுகைப் பெட்டியும்தான். வாழ்க்கையில் எல்லாமே சுமைகள்தாம்; அவற்றை எதிர்கொள்ளும் திறனைக்/நேர்மையைக் குறித்தது இது. நுட்பத்தின் வீச்சுகள் அனைத்தையும் ஒருவர் உடனடியாகக் கைகொண்டுவிடமுடியாது என்ற வாதமும் பயனற்றது. எட்டு வயது என் மகனுக்கு post, feedback, hyperlink, trackback, aggregator என்ற ஐந்தாறு நடைமுறைகள் மிக எளிதாகப் பிடிபடுகிறது என்ற பொழுது லத்தினமெரிக்கச் சூழலையும் அதன் புலத்தில் எழுதப்படும் மாய எதார்த்தப் புனைவுகளை லத்தினமெரிக்கர்களின் பார்வையிலும் ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரெஞ்சு இருத்தலியல் மனநிலையைப் புரிந்துகொண்டு வியாசம் செய்யும் அளவுக்குத் திறனுள்ளவர்களுக்குப் பின்னூட்டத்தையும், பின் தொடர்தலையும் புரியாது என்பது வறட்டு வாதம். நுட்பப் பிரிவினை என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.

இந்த இடத்தில் எழுத வரும் அச்சுக்காரர்கள் எல்லோரும் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டுதான் வரவேண்டும் என்று நான் சட்டையைப் பிடித்துக் கேட்கவில்லை. கட்டாயமாக அது அவர்களது பிறப்புரிமை என்பதில் ஐயமில்லை. என்னுடைய இந்தத் தொகுப்பின் முழு சாரம்சமும் இதுதான்; இன்றைய நுட்பம் உரையாடலுக்கு இடம் தருகிறது, மிக எளிதாக, மிக பரந்துபட்டதாக. அந்த நுட்பத்துடன் விளையாடுபவர்கள் அதனுடைய சாத்தியங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் (மீண்டும் - தனியொருவர் இல்லை; அந்த ஊடகத்திலிருந்து வருபவர்களின் பெரும்பான்மையானவர்கள்) அவர்களின் உளநோக்கு என்னவாக இருக்கும் என்பதை ஆராய்வது மாத்திரமே. தனிப்பட்ட சிலரைத் தவிர்த்த உரையாடல்களை அவர்கள் தவிர்ப்பதற்கான நோக்கங்கள் எவை?

பெட்டியில் பின்னூட்டம் பெறுவதற்கும் மின்னஞ்சல் பெறுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்: பெட்டியில் வரும் பின்னூட்டம் உங்கள் எழுத்தைப் படிக்கும் அனைத்து வாசகர்களையும் சேருகிறது. அது உங்கள் இடுகையை ஒட்டியிருக்கும் நிலையில் வாசகர் கூடுதல் தகவல் பெறுகிறார், வெட்டியிருக்கும் பொழுது உங்கள் இடுகையின் குறைகள் சுட்டப்படுகின்றன. மூன்றாம் வாசகருக்குத் தலைப்பின் மீதான முழுப்பார்வை சாத்தியமாகிறது. தனியஞ்சல் விழைவதன் மூலம் வாசகனுக்கு உங்கள் பார்வையை மட்டுமே காட்டி அதன் எதிர் சாத்தியங்களை மறைக்கிறீர்கள். ஒரு வகையில் இது நேர்மையற்ற கருத்துத் தணிக்கை. ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் - பெரும் விவாத அரங்கில் (சட்டமன்றத்தில்) முதல்வர் பேசி முடித்தவுடன் இன்னொரு உறுப்பினர் பேசுவதற்கும் அமர்ந்த முதல்வரின் காதுகளில் அருகிலிருப்பவர் கிசுகிசுப்பதற்கும் உள்ள வித்தியாசம். அறிஞர்கள் இருக்கும் சபையில் இதற்குப் புருவங்கள் உயர்த்தப்படும். மன்னர்களுக்கு மாத்திரமே சதியாலோசனை தேவை; மக்களாட்சியில் பொதுவிவாதம்தான் நடைமுறை. இணையம் என்பது மக்களாட்சி

தீவிர விமர்சனத்தை வைக்க வேண்டும் என்பவர் தனியாக ஒரு வலைப்பதிவில் எழுதிக் கொள்ளட்டுமே என்ற வாதமும் நியாயமானதே. ஒருவகையில் ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகள், வேண்டுமென்றால் நகராட்சி பள்ளிக்குப் போகட்டுமே என்று சொல்வதைப் போன்றதுதான் இதுவும். எல்லாமே சாத்தியம்தான்; ஆனால் எது சிறந்த வழி என்பதைப் பற்றிய உரையாடல்தான் இது. வலைப்பதிவு உலகில் வெட்டியும் ஒட்டியும் தனிப்பதிவு எழுதுவது ஒன்றும் புதிதல்ல; நுட்பத்தின் ஒரு கூறுதான் இதுவும், இதன் பெயர் பின் தொடர்தல் (Trackback). ஆனால் இப்படி எழுதப்படுபவை பெரும்பாலும் பின்னூட்டப் பெட்டியில் (அல்லது நேரடி நுட்ப வசதியில் பின் தொடர்தல் பெட்டியில்) சுட்டப்படுகின்றன. நீளமான பின்னூட்டங்கள் அலுப்பைத் தரக்கூடியவை என்பதால் அவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்து எழுதுவது முறை. கடந்த சில நாட்களில் நடந்த வலையாடல்களை பெரும அளவில் பார்க்க இப்படியொரு வடிவம் கிடைக்கிறது;

இங்கே தொடர்புள்ள வாதங்களையும் எதிர்வினைகளையும் எவ்வளவு எளிதில் கண்டடைய முடிகிறது. தனியாக வலைப்பதிவில் என்னைப் பற்றிய விமர்சனம் வருகிறதே என்று சொல்லும் வாதத்தின் வலுவின்மை பிடிபடுகிறதா? உங்களை ஒட்டி எழுதுபவரின் பதிவிலிருந்து உங்களை அடைய முடியும், மாறாக உங்கள் பதிவிலிருந்து எந்த மறுகருத்தையும் சென்றடைய முடியாது. நுட்பம் எளிதில் தரும் வசதிகளை வாசகனுக்கு மறைப்பது ஒருவகையில் நேர்மையற்றது என்பது இதனால்தான்.

* * *

வலைபபதிவுகள் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. நுட்பம் தரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த வாதத்தின் அர்த்தமின்மை எளிதில் பிடிபடும். உரையாடலைத் துவக்கல், தொடர்புள்ள அனைத்துத் தகவல்களுக்கும் சுட்டிகளைத் தருதல், எழுதப்பட்டதற்குப் பின்னும் வருவனவற்றைப் பின் தொடர்தல் மூலம் தானாக இணைத்தல், பின்னூட்டத்தின் வழியே வாசகருடன் உரையாடல் என்று பல வழிகளில் வலைப்பதிவுகள் தனியொரு எழுத்தாளர் தரும் ஆழத்தைவிடப் பலமடங்கு வலிமையானவை. கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் நம் ஒருவனால்தான் வாசகனுக்குக் கரைத்துப் புகட்டமுடியும் என்ற அகந்தை/அறியாமைதான் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டுக்கு அடிகோலுகின்றன. ஒரு காலத்தில் அதற்கான அவசியம் இருந்தென்னமோ உண்மைதான்; இன்றைக்கும் அதே மனோபாவத்தில் இருப்பது காலத்தில் உறைந்துபோனதைத்தான் காட்டமுடியும்.

* * *

ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் சிறுகதைகள், புதினங்கள் பற்றிய ஒப்பீடு இங்கே அர்த்தமற்றது எனப் புரியும் (ஜமாலனை முன்வைத்து). இது அவர்களின் புனைவுகள்- வலைப்பதிவு குறித்த ஒப்பீடு அல்ல. நான் இவர்கள் ஒவ்வொருவருடைய புத்தகங்களையும் தவறாது வாசிக்கிறேன்; இயன்றபொழுது வியந்து எழுதுகிறேன். இது அவரகள் வலைப்பதிவு எழுத வரும்பொழுது இந்த வடிவத்தையும், ஊடகத்தையும் எப்படித் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றியதுதான். நாவல் இலக்கணம், சிறுகதை எழுதுவது எப்படி என்றெல்லாம் அவர்களிடமிருந்து நாம் அறிந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். அந்த அளவில் மின்னூடகத்தின் சாத்தியங்கள் என்ன என்று புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இதை எழுதுவதால் நான் இங்கே கரைகண்டு பாடம் எடுக்கிறேன் என்று பொருளல்ல, இந்த ஊடகத்தின் வசதியே இதுதான், படைத்தல்-தூய்த்தல் இடையான இடைக்கோடு அழிந்துபோகக் கற்றுக்கொள்ளும் நிலையிலேயே கற்றுக் கொடுக்க முடியும். ஆய்வுத் துறையில் இருப்பவன் என்பதால் இதன் செயல்முறையை நான் அறிவேன். முதல் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லித் தரவேண்டும். ஆராய்ச்சி ஆசிரியருக்கு மாணவியுடன் உரையாடல்தான் சாத்தியமாகும்.)

வலைப்பதிவுக்கு என்று தனி இலக்கணம் இருக்கிறது. மின்னூடகத்திற்கென தனி விதிகள் உண்டு, மசியால் எழுதுவதும் அதே முறையை இங்கே பெயர்த்துக் கொண்டு வருவது முறையல்ல என்பதை அறிவது நல்லது. பழைய உதாரணங்களைக் கொண்டு சொல்ல வேண்டுமென்றால் இது மேடைக் கச்சேரியல்ல; எசப்பாட்டு. இணையம் தரும் வசதிகளால் உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் பிரம்மாண்டமான எசப்பாட்டு. இதற்கான எதிர்குரல்கள் எல்லா முடுக்குகளிலிருந்தும் எழும்பும். அதற்குத் தயாரான மனநிலை அவசியம். எனக்குப் பிடித்தமான பக்கவாத்தியங்களுடன் மேடைக் கச்சேரி செய்யத்தான் எனக்குத் தெரியும், அதைத்தான் நான் செய்வேன் என்று சொல்வது தனிப்பட்ட தெரிவு. ஆனால், களை பறிப்பவனுக்கு வேறு வேலையிருக்கிறது, அவனால் இங்கே மூன்று மணிநேர தோடி ஆலாபனையைக் கேட்கமுடியாது, கால் கடுத்துப் போனால் அவன் விரைவில் நகர்ந்துவிடுவான்.

* * *

அச்சு ஊடகமும் மின்னூடகமும் வெவேறானவையா? மின்னூடகத்தில் ஆழமான புனைவிலிகள், புதினங்கள் சாத்தியமற்றவையா? இதைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். அங்கே வருங்காலத்தைப் பற்றிய சோதிடம் எல்லாம் எழுத வேண்டும் என்பதால் என்னை நானே முட்டாளாக்கிக் கொள்ள கொஞ்சம் வேற்று மனநிலைக்கு மாற வேண்டும்.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

நான் எழுதியது கோர்வையாக வரவில்லை என்று தெரிகிறது. இன்றைய மனநிலை அப்படி, முடிந்தால் திருத்துகிறேன்.

படத்தைச் சேர்ப்பதில் சிக்கலிருக்கிறது. மாலையில் முயற்சிக்கிறேன்.

வெங்கட், நல்ல அலசல்:-)

இப்படியெல்லாம் (’ஆஹா, ஆமாம்’ ரீதியில்) மறுமொழியக்கூடாது என்று வேறு எங்கோ எழுத்தாளர் எழுதிப் படித்த ஞாபகம், அப்படியா? :P

//இதுபோன்ற ஆர்கானிக் கருத்துப் பரிமாற்றம் பின்னூட்டப்பெட்டிகள் மூடப்பட்ட நிலையில் சாத்தியமில்லை.//

ஜெயமோகன் எதிர் கருத்துக்களை (கடிதம், கத்தோலிக்கம் குறித்த என் பதில்) எல்லாத்தையும் வெளியிடுகிறாரே?

காசி - நன்றி! ஒரு வரியோ ஒரு வார்த்தையோ எல்லாம் சந்தோஷம்தான்.

சிறில் - (இது ஜெயமோகனைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமாகக் கொள்ள வேண்டாம்.) மின்னஞ்சலில் வந்தது என்று கட்டங்கட்டிப் பதில் எழுதினால் மின்னஞ்சலில் அதுமட்டும்தான் வந்ததா என்ற கேள்வியுண்டு. அப்படி அதுமட்டும்தான் என்றால் அதையே பின்னூட்டமாக எழுதும் சுலபமான வசதியை ஏன் மறுக்க வேண்டும் என்ற கேள்வியும் உண்டு.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் புஸ்டாஸ் என்றால் சிக்ஸர் அடித்துக் கொள்ளலாம் யார்க்கர் என்றால் நோபால் சொல்லிவிடலாம் என்றுதான் மின்னஞ்சல் பின்னூட்டங்களைப் பற்றிச் சொல்லமுடியும்.

உதாரணமாக அருளின் சுட்டப்பட்ட கார்ட்டூனையும் அதனடியில் சன்னாசியின் பின்னூட்டமும் குறித்து ஜெயமோகன் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி அதைத் தொடரும் விவாதங்கள் எப்படியிருக்கும்?

எனக்கு யாருடைய மதிப்பீடும் தேவையில்லை என்று ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதில் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது. எனக்கு மதிப்பீடுகளை அனுப்பலாம் அது எனக்குப் பிடித்ததாக (அல்லது பதில் சொல்லி என்னை இன்னும் தெளிவாக/உயர்வாகக் காட்டிக்கொள்ள வசதியானதாக இருந்தால்) நான் உங்களுக்கு இணைப்பும் விளம்பரமும் தருவேன் என்று சொல்வதன் சிக்கல் புரிகிறதா?

ஓ - ஆர்கானிக் என்று எழுதிவைத்தது சரியான தமிழ் வார்த்தையைப் போட வேண்டும் என்று. இன்னும் பிடிபடவில்லை - யாராவது உதவவும். (தன்னொழுங்கான?)

organic - உயிர்ப்புள்ள? (நீங்கள் பயன்படுத்தியுள்ள சூழலுக்கு ஒரு வேளை இந்தச் சொல் பொருந்தலாம்.)

அருள்செல்வன்/சன்னாசி உரையாடலல்லாத பல கேவலமான உரையாடல்கலும் இதே அதி உன்னத பின்னூட்ட எசப்பாட்டின் வழியே நடக்குதே தலைவா. ‘அப்படி ஏன்யா எழுதுறீங்க?’ என கேட்பது பின்னூட்டத்துக்குத் தரும் உரிமையை விட குரைவான உரிமையை பதிவுக்கு வழங்குற மாதிரி இருக்குது.

நீங்க அரசியல் கலப்பில்லாம எழுதுறீங்க. நான் கவனித்தவரையில் உங்களின் பல பதிவுகளும் தகவலைச் சொல்கின்றன. ஆனால் கருத்து, வாதம், விவாதம் என வரும்போது சிலர் மோசமான தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்.

வெறும் பதிவுகள் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு பின்னூட்டமிடுபவர்கலை மேய்க்க நேரமிருக்கலாம். ஆனால் செத்த மரத்தில் செதுக்குபவர்கள் சும்மா சுவற்றில் கட்சிக்கொடி வரைந்துவிடவில்லையே.

திரும்பத் திரும்ப இதையே பேசிக்கிட்டிருக்கோம்ணு தோணுது.

பின்னூட்டத்தை பதிவர்கள் மட்டுறுத்துவது சரி என்றால் பின்னூட்டப் பெட்டியே இல்லாமல் மின்னஞ்சலைத் தருவதும் சரியே. அதுவும் எதிர் வினைகளை பதிவாகவே இடுவது அது பின்னூட்டமாய் வந்திருந்தால் கிடைத்திருக்கும் கவனிப்பை விட அதிக கவனிப்பை பெற்றுத்தருகிறது.

ரவிசங்கர் - சரியாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. நன்றி!

சிறில்

>திரும்பத் திரும்ப இதையே பேசிக்கிட்டிருக்கோம்ணு தோணுது.

எனக்கும் அப்படித்தான். ஆனால் இதுவரை இதைப் பேசியிராதவர்களுக்குப் புதிதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. தொகுத்து எழுதும்பொழுது என்னுடைய புரிதல் கொஞ்சம் தெளிவுபட்டதைப் போலவும்.

சன்னாசி சொன்னதைப்போல மற்றெல்லா இடங்களிலும் கூச்சல்கள் இல்லாததைப் போலவும், அவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தெரியாதவர்களைப் போலவும் வரும்பொழுதே இது சாக்கடை, இனி வரப்போகிறவர்கள் உருப்பட வேண்டுமென்றால் காதுகளை அறுத்துக்கொண்டு வரவும் என்று சொல்லிக் கொண்டு வருவதும் அலுப்பூட்டுகிறது.

என் பார்வையில் வலைப்பதிவு என்பது பதிவு, சுட்டிகள், பின்னூட்டம், பின் தொடர்தல், திரட்டிகள் எல்லாமான ஒரு பொழில் (Ecosystem). இவற்றில் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வேண்டாம் என்று தவிர்க்கும் உரிமையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இங்கே உரையாடுவது ஒரு குறிப்பிட்ட பின்புலம் உள்ளவர்கள் இதை மூர்க்கமாகத் தவிர்க்க வேண்டிய மனநிலையைப் பற்றி.

>நீங்க அரசியல் கலப்பில்லாம எழுதுறீங்க. நான் கவனித்தவரையில் உங்களின் பல பதிவுகளும் தகவலைச் சொல்கின்றன.

அவதானத்திற்கு நன்றிகள்! ஒரு காலத்தில் நானும் மற்றவர்களை உசுப்பி விடுவதுதான் என் பாண்டித்யத்தைக் காட்ட ஒரே வழி என்று நம்பிக்கொண்டிருந்தேன். அப்பொழுதுகூட உசுப்பி விட்டுவிட்டு காதுகளை வேறுபக்கம் திருப்பிக் கொண்டதாக நினைவில்லை. சொல்ல வேண்டிய செய்தியைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது.

>வெறும் பதிவுகள் மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு பின்னூட்டமிடுபவர்கலை மேய்க்க நேரமிருக்கலாம்.

ஆங்.. இந்த மாதிரி பதிவு எழுதுபவர்கள் வெட்டி என்ற தோரணையைப் பலரிடமிருந்தும் பல சந்தர்ப்பங்களிலிருந்தும் கேட்டாகிவிட்டது. நேரமில்லாத புண்யாத்மாக்கள் நீடூழி வாழட்டும் என்றுதான் நினைக்கமுடிகிறது.

//வலைபபதிவுகள் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வைக்கப்படுகிறது. நுட்பம் தரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த வாதத்தின் அர்த்தமின்மை எளிதில் பிடிபடும். உரையாடலைத் துவக்கல், தொடர்புள்ள அனைத்துத் தகவல்களுக்கும் சுட்டிகளைத் தருதல், எழுதப்பட்டதற்குப் பின்னும் வருவனவற்றைப் பின் தொடர்தல் மூலம் தானாக இணைத்தல், பின்னூட்டத்தின் வழியே வாசகருடன் உரையாடல் என்று பல வழிகளில் வலைப்பதிவுகள் தனியொரு எழுத்தாளர் தரும் ஆழத்தைவிடப் பலமடங்கு வலிமையானவை. கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும். எல்லாவற்றையும் நம் ஒருவனால்தான் வாசகனுக்குக் கரைத்துப் புகட்டமுடியும் என்ற அகந்தை/அறியாமைதான் ஆழமற்றவை என்ற குற்றச்சாட்டுக்கு அடிகோலுகின்றன. ஒரு காலத்தில் அதற்கான அவசியம் இருந்தென்னமோ உண்மைதான்; இன்றைக்கும் அதே மனோபாவத்தில் இருப்பது காலத்தில் உறைந்துபோனதைத்தான் காட்டமுடியும்.//

இது ஒருவிதத்தில் சரியானதுதான் என்றாலும் எந்தவிதமான பொறுப்பும் (பொதுத்தளத்தில் ஒருவிதமான பொறுப்பை அனுசரிக்கவேண்டும் என்று எண்ணுகிறவன்) இல்லாமல் (பெயர் கூட வெளியிடாமல்-இப்படிச் சொல்லுவது பெயரோடுதான் எழுதவேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றாகாது- ) எனது வலைப்பதிவில் தன்னளவில் நேர்மையோ, பொறுப்போ, உண்மையான தகவலோ இல்லாது வருகிற பின்னூட்டத்தை அனுமதித்து, பிறவாசகர்களின் நேரத்தை, மனநிலையை பாதிக்கச்செய்யும் வகையில் நடக்கவேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது.

மொத்தபதிவும் நல்ல, அவசியமான வெளிப்பாடு!
நன்றி!

//இந்த மாதிரி பதிவு எழுதுபவர்கள் வெட்டி //
நான் அப்படி சொல்லவேயில்லையே. பதிவுலகிலும் பதிப்புலகிலும் சேர்ந்து செயல்படுவது அதிக நேரத்தை எடுக்கும் விதயம். அதைத்தான் சொல்கிறேன்.

முதலில் எனது பெயரைக் குறிப்பிட்டு நீங்கள் எழுதிய பதிலுக்கு நன்றி. அதாவது என்னைப் பொருட்படுத்தியதற்கு முந்தைய பதிவைப்போல இதிலும் விட்டுவிடுவீர்கள் என நினைத்தேன்.

உங்களது நுட்பம் குறித்த உரையாடலையோ அல்லது பின்னொட்டப்பெட்டி சுதந்திரம் குறித்த மக்கள் ஆட்சி தத்துவத்தையோ மறுப்பதற்கி்ல்லை. இணையத்தின் இந்த சுதந்திரம் அவசியமானது அங்கீகரிக்கப்பட வேண்டியதே. அதேசமயம் அதனை முன்வைக்கும் வாதமுறையில் உள்ள உணர்வெழுச்சிதான் பிரச்சனை. நீங்களாக சில யூகங்களை செய்தகொண்டு, அதை சரியான தரவாக எண்ணி எழுதுகிறீர்கள். உங்களது மொழியின் ‘எல்லாம் தெரிந்த’ தன்மை ஏற்படுத்தம் அதிகாரத்துவக் குரல் உரையாடவே அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உண்மை. (ஒரு நண்பர் அறிவியல் தெரியாமல் உங்களிடம் பேசமுடியாது என்று பயமுறுத்திவேறு விட்டார். ‘பிரோக்கரசி’ மாதிரி ‘டெக்னோகிரசியும்’ ஒரு அதிகார போதை என்று நம்புபவன் நான்.) நீங்கள் சொல்ல வந்த கருத்து பற்றியது அல்ல நான் கூறவருவது அதை சொல்லும் முறைபற்றியதுதான். ஒருவேளை உங்கள் மொழி எனக்கு புதிதாக உள்ளதோ? தெரியவில்லை.

செத்தமரம் கட்டுரையில் பத்தி எழுத்தையும் இலக்கிய எழத்தையும் ஒன்றாக எண்ணும் ஒரு மயக்கம் இருந்தது. அதை இல்லை என்று நீங்கள் கூறியதால் அதனை எனது புரிதல் கோளாறாக நான் ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான உங்கள் விவாதத்தில் பல ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தினீர்கள். நான் எனது பதிவில் அதனை சுட்டிக்காட்டவில்லை. காரணம் உங்கள் கருத்தின் உள்ளார்ந்த உணர்வை புரிந்துகொண்டதால்.அதில் எனக்கு பேரளவில் மாற்றுக்கருத்து இல்லை.

//”உளறிக்கொட்டுவதை”
“மேம்போக்காக மேய்ந்துவிட்டு”

“செய்நேர்த்திக்கு முக்கியத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை”

“ஒளிவட்டம் தாங்கி உலாவரும் மேதைகளிடமிருந்து”
“செத்தமரத்தில் இப்படியில்லை. அது எழுதி எட்டு நாளுக்குப்பிறகுதான் அச்சில் வரும், சுருட்டிப் பிடித்துக்கொண்டு வாசிப்பவர்கள் வாசித்துமுடித்தவுடன் சுருட்டியெறிந்துவிட்டுப் போய்விடுவார்”//

இவை எல்லாம் நீங்கள் ஒரு நிதானமான மனநிலையில் வாசித்தால் இதன் உக்ரம் உங்களுக்குப் புரியக்கூடும். நீங்கள் அந்த எழுத்தாளர்கள எவ்வளவு உயர்ந்த தளத்தில் உங்களுக்குள் குடிவைத்தள்ளீர்கள் என்பதும் புரியும். அதனால்தான் அவர்களைப்பற்றிக் கொட்டித் தீர்க்கிறீர்கள்.காகித ஊடகம் கலையிழந்ததைப்போல (அதனை தொல்ஊடகம் என்கிற சொல்லாடலை ஏற்கமுடியாமல் இருக்கிறேன்) மின் ஊடகம்கூட ஒரு காலத்தில் தொல்லாக மாறலாம்தானே? அல்லது அறிவு வளர்ச்சி இதனுடன் நின்றுவிடுமா?

வலைநுட்பங்களைப் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. அது கற்றுக்கொள்வதற்கு கடினமானது இல்லை என்கிற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால்கூட.. ஏன் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வியும் உள்ளது? பதிவு எழுதுவதற்கு கொஞ்சம் அடிப்படை அறிவு இருந்தால்போதும் எனும்போது அதற்கு பின் மற்றவற்றில் அவரவர் ஆர்வத்திற்கு ஏற்ப கவனம் செலுத்துகிறார்கள். ஏன் அதனை முழுமையாக கற்றுக்கொள்ள தயாரில்லை என்று கேட்க முடியாது. அவர்கள் நீங்கள் கூறுவதுபோல ‘நேரமில்லாத புண்யாத்மாக்கள்”. அவரவரவருக்கு அவரவர் பணி உள்ளது. பதிவு என்பது சமூகப் பொறுப்பு உள்ளவர்கள, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள், எழுத்தின் மீது காதல் உள்ளவர்கள், வியபார நோக்கில் எழுதுபவர்கள், பத்தரிக்கை எழத்தாளனாக மர்றும் ஆசையில் எழுதபவர்கள் என பலவிதமாக உள்ளது.
அதனால் பதிவுகள் பலவித நுட்பங்களின் அறிவு மட்டத்தில் உள்ளவர்களால் எழுதப்படுகிறது. எல்லோரும் ஒன்றுபோல மாற வேண்டும் என்கிற ஒருவகை தன்முனைப்பே உங்கள் இப்பதிவுகளில் வெளிப்படுகிறது. அதில் ஒரு நியாயமும் உண்டு. தமிழ்பதிவிற்காக உழைத்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில். அதே சமயம் நீங்கள் எழுதும் வாசகங்கள் முற்றிலும் முன்முடிவு சார்ந்த மற்றவரை உரையாட அனுமதிக்காத, அவர்களை எதிர்நிலையில் தூண்டக் கூடியவையாக உள்ளன.
//பின்னூட்டத்தை பதிவர்கள் மட்டுறுத்துவது சரி என்றால் பின்னூட்டப் பெட்டியே இல்லாமல் மின்னஞ்சலைத் தருவதும் சரியே. அதுவும் எதிர் வினைகளை பதிவாகவே இடுவது அது பின்னூட்டமாய் வந்திருந்தால் கிடைத்திருக்கும் கவனிப்பை விட அதிக கவனிப்பை பெற்றுத்தருகிறது.//
மேற்கண்ட சிறில் அலக்ஸ் கேள்விக்கு நீங்கள் பதிலே சொல்லவேயில்லை. இங்கு நீங்கள் பினதொடர வழியி்ல்லை என்று கூறக்கூடும். அதற்கு மின்அஞ்சலை வெளியிடுபவர்கள் அவர்களது பதிவு சுட்டியை தர வாய்ப்பு உள்ளது. நிற்க பின்னொட்டப் பெட்டியை அனுமதிக்காதது தந்திரம் சார்ந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் (நொ பால சிக்ஸர் உதாரணம்). இருக்கட்டுமே ஒருவரை அவரது எழுத்துதான் அம்பலப்படுத்தும் அவரது கருத்தக்களை ஒருவர் எதிர்த்து எழுதுவதால் அல்ல. பின்னோட்ட பெட்டியில்லாமலே ஒருவரிடம் விவாதிக்க வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் துரிதம் என்றும் நுட்பம் என்றும் பேசுகிறீர்கள். இன்று ஒருவர் கருத்தை பின்னோட்ட பெட்டியில்லாமலே ஒருவர் எதிர்க்க முடியம். அதேநேரம் அதை எல்லோரும் படிப்பதில்லை என்பதையும் இதனுடன் சேர்த்து பார்கக வேண்டும். இதன்பொருள் எல்லோரிடமும் தேர்வுகள் உள்ளது. அத்தேர்வின் அடிப்பயைடில்தான் வாசிக்கிறார்கள். உலகின் எந்த மூலையிலிருந்து கருத்து வந்தும் குவியலாம். அத்தனையும் எல்லைக்குட்பட்டதே. எல்லாவற்றையும் எல்லோரும் வாசிப்பதில்லை. அதனால் பின்னோட்டப்பெட்டி என்பதை எல்லாம் மீறிய கருத்தாடல் என்பது சாத்தியமே. பின்தொடர்பவர்களாலும் அதனை வாசிக்கும் குழுவினராலும். ஒருவர் பின்னோட்ட பெட்டியை அனுமதிப்பதை அறம் சார்ந்ததாகப் பார்க்க வேண்டியதில்லை. பெட்டியை அனுமதிக்கும் அறமற்ற எழத்தைவிட அனுமதிக்காத அறம் உள்ள எழுத்து ஏற்புடையதே.
இதனை வளர்த்து செல்வதற்கு ஒன்றுமில்லை. காரணம் உங்கள் கருத்தில் எனக்கு பேரளவில் முரண்பாடுகள் இல்லை. நீங்கள் பயன்படுத்தம் வாசகங்கள் பயம் ஊட்டுகின்றன. நீங்கள் யாரை நோக்கி எழத முனைகிறிர்களோ அவர்களை கீழிறக்கம் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்.ஒருவேளை அது உங்கள் பாணியாகக்கூட இருக்கலாம். நான் தவறி வந்து மாட்டிக்கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.
இதனை சொல்லக்கூடாதுதான் என்று எண்ணினேன் இருந்தாலும் சுட்டுதலுக்காக… இதற்கு முந்தைய பதிவு - 1 ல் இந்த விவாதத்தை தொகுத்த முதல் பத்தியில்… எனது விவாதம் பற்றிய எந்த குறிப்பையும் நீஙகள் சுடடவில்லை. ஒருவேளை ‘தீண்டத்தகாதவனாக’ எண்ணியிக்கலாம் என்று ஒதுங்கிவிட்டேன். இந்த பதிவில் எனது பெயரை அடைப்புக் குறிக்குள் சுட்டியிருப்பதால் (அங்குகூட நீங்கள் எனது விவாதம் பற்றிய குறிப்பையோ தொடர்பு சுட்டியையோக் கொடுக்கவில்லை இந்த தேர்வு விடுபடலா? அல்லது மறதியா? என்கிற விவாதத்திற்கு நான் போகவில்லை. மறதியும் என்னைப்பொறுத்தவரை அரசியல் சார்ந்ததுதான்.) இந்த பதிலை எழதுகிறேன். இது விளம்பர நோக்கம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மக்கள் ஆட்சி சுதந்திரம் என்றெல்லாம் கூறியதாலும். வலைநுட்ப விவாதத்தில் இந்த பினதொடர்ந்த செல்தலை சிலாகித்திருப்பதாலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். எனது பினனோட்டப்பெட்டி திறந்தே உள்ளது அதில் நீங்கள் குறைந்த பட்சம் இந்த பதிவு குறித்து எனக்கு ஒரு சுட்டி தந்திருக்கலாம். எனது பிரச்சனை நானே உங்களை பினதொடர்ந்து விவாதிப்பது என்பதுதான். எனது விவாதத்தை நீங்கள் புறக்கணிக்கலாம். அல்லது மதிப்பற்ற ஒர கருத்தாக எண்ணியிருக்கலாம். அதில் தப்பில்லை. எல்லாவற்றையும் எல்லோரும் ஏற்றக்கொள்வது சாத்தியமில்லைதானே. ஒருவேளை இந்த பதிவை நானாக வந்து பார்க்காவி்ட்டால் இந்த பின்னோட்டத்தில்கூட எனது நிலையை தர முடியாது.
‘அங்கீகாரம் தேடுவது அடிமைகளின் வேலை’ என்பதே என்றும் என்நிலைப்பாடு. அதனால் உங்கள் அங்கீகாரம் குறித்தும் இதனை நான் கூறவில்லை என்பதையும் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
வலைப்பதிவு அறிமுகமாகி எனக்கு 6-மாதங்கள்தான் ஆகிறது. எனது ஒரு சில பதிவுகளுக்கு எனத தாய் சகோதரிகளை குறித்த வசைச்சொற்களை பெற்றிருக்கிறேன். எனது தொழிலை கேவலமாக பேசும் சில நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வசைகளையும் பெற்றிருக்கிறேன். ஒருவேளை நீங்கள் எனது எழுத்து வசையை வரவழைக்கும் மோசமான அல்லது குறையுள்ள எழுத்து என்று கூறலாம். ஏதொ எனக்கு தெரிந்தது என்னால் முடிந்தது வசை பெற வாழவே எழத முடிகிறது. அதன் அரசியலை இஙகு நான் பேசவில்லை. நான் கூறவருவது இதுதான்.. எல்லோரும் இன்பமடைய எழத முடியாது. அரசியலாக எழுதினால் ஒரு சாரரால் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களிடம் வசைபாடல்கள் வரத்தான் செய்யும். அதனை மட்டுறுத்திக் கொள்ளலாம். ஒருமுறை அணாணி சாத்தியத்தை நிறுத்தி வைத்தேன். மின் அஞ்சலில் அதையே ஒற்றி அனுப்புகிறார்கள். அவர்களது நொக்கம் வசைபாடி வெளியிட வேண்டும் என்பதல்ல. எழுதுபவனை உளவியல்ரீதியாக குறுக்குவதுதான். அப்படி குறுக்க மனநிலைக்கு நானே ஆளாகியுள்ளேன். என்னை விடுங்கள் நானாவது சிறுசு, பெருசுகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை எல்லாவற்றையும் மீறிய உணர்வற்ற சிரமணநிலையில் பதிவெழுத கற்றுக் கொண்டதான் வரவேண்டும். நீங்கள் நுட்பம் சார்ந்த வளர்சிதைமாற்றம் பற்றி எனக்கு தெரியாதவை பற்றி பேசுவதால் அதில் பேச எனக்கு அதிகம் இல்லை. ஆனால் கட்டற்ற சுதந்திரம் வலைப்பதிவு ஜனநாயகம் பற்றி கோட்பாட்டுரீதியாக பேச நிறைய உள்ளது. அதன் எல்லைகள் அது கட்டுப்டுத்தும் கட்டமைக்கும் உளவியல் என பல உள்ளது. தற்சமயம் முடியாது. வாயப்பிருந்தால் நானும் உங்ளைப்போல் தனிப்பதிவாக பிறகு எழுதுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

சற்றே நீ்ண்டுவிட்டது. வருத்தங்களுடன்.

ஜமாலன்.

ஜமாலன், முதலில் சில விளக்கங்களும் பொது மன்னிப்பும். நான் என்னுடைய பதிவுகள் பெரும்பாலானவற்றை காலையில் அலுவல் செல்லும்பொழுது அல்லது மாலையில் இல்லம் திரும்பும்பொழுது தொடர்வண்டியிலிருந்து எழுதுகிறேன். இன்றைக்குக் காலையில் நான் எழுதியது சரியாக வரவில்லை என்பது எனக்கே தெரிந்திருக்கிறது. உடனடியாக என் மனநிலை குறித்து ஒரு பின்னூட்டம் எழுதிப் போட்டேன். வார்த்தைகள் சரியாக வரவில்லை. உணர்ச்சி மேலீடாக இருப்பதால் சொல்லவந்த விஷயம் எடுபடாமல் போய்விட்டது. அதை மிகச் சரியாகச் சுட்டியிருக்கிறீர்கள். எழுதி முடித்தவுடன் நானே அப்படித்தான் உணர்ந்தேன். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என் மன்னிப்புகள்.

சுட்டிகள் சரிவர இணையவில்லை. என் முதல் பதிவுக்கும், ஜமாலனை முன்வைத்து என்று அடைப்புக்குறியில் எழுதியதற்கும் சுட்டி சேர்க்க மறந்துவிட்டேன். இப்பொழுது இணைத்திருக்கிறேன். இணைக்கப்பட்ட படத்தைக் கொண்டும் உங்களைச் சுட்டாமல தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் எதுவும் எனக்குக் கிடையாது என்று அறிவீர்கள் என நம்புகிறேன்.

செத்தமரம் என்ற வார்த்தை கணினி உலகில் பழைய பெருச்சாளிகளால் (யுனிக்ஸ்-காரர்களால்) காகிததைக் குறிக்க மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் சொல். You can’t grep a dead tree என்று இருபது வருடச் சொலவடை உண்டு. ஆங்கிலத்திலும் இதை நுட்பம் சாராதவர்களும் dead tree-ஐப் பய்ன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். தமிழில் இந்த வார்த்தை புதிது என்பதால் பலருக்கும் புரியவில்லை. இதை நேரடியாகப் பொருள்கொண்டு கோபம்/வருத்தமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

ஜமாலன், சிறில் அலெக்ஸ், பாஸ்டன் பாலாஜி இருவரும் முன்னரே சொல்லியிருப்பதைப் போல நான் உணர்ச்சிகளைத் தூண்டும் வாதங்களில் அதிகம் ஈடுபடுபவனல்லன். இந்தத் தனிப்பதிவைக் கொண்டு என்னை ஒட்டுமொத்தமாக மதிப்பிட மாட்டீர்கள் எனறு நம்புகிறேன். அறிவியல் தெரியாமல் என்னிடம் பேசமுடியாது என்று உங்களிடம் சொன்ன நண்பர் யாரென்று தெரியாது - எல்லாவற்றையும்விட மிகவும் வருத்தமளிக்கும் வார்த்தைகள் இவை. இயன்ற அளவுக்கு நாம் அறிந்தவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விழைபவன் நான். இந்த ஒரே காரணம்தான் நான் தமிழில் அறிவியல் குறித்து எழுதுவது. உங்கள் நண்பர் சொன்னது உண்மை என்றால் நான் ஆங்கிலத்தில் எழுதி ஜோதியில் ஐக்கியமாகியிருப்பேன். பல சர்ந்தர்ப்பங்களில் இந்த வலைப்பதிவுகளே என் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஒரு வெளிப்பாடு என்று தெரியப்படுத்தியிருக்கிறேன்.

எழுதியதன் அடிப்படைகளில் கருத்து வேறுபாடு அதிகம் கிடையாது, விதம்தான் கடுமையாக இருக்கிறது என்று சொல்வதால் நான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.

வலைப்பதிவுகள் செயற்படும் விதம் குறித்தும், தொல்லூடகங்கள் அணுகும் விதம் குறித்தும் நான் எழுதியிருக்கும் பல விஷயங்கள் தமிழ் எழுத்தாளர்களை முன்வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் இவை முழுவதுமாக என் அனுமானங்கள் அல்ல. இவை குறித்த என் புரிதல்களும் பார்வைகளும் பின்வரும் வல்லுநர்களை வாசித்து எனக்கு நானே உருவாக்கிக் கொண்டவை. இவர்களின் தனிப்பட்ட பதிவுகள்/கட்டுரைகள் என்றில்லாமல் பல புத்தகங்கள் எனக்கு உதவியிருக்கின்றன. (மூன்றாம் பாகத்தின் இறுதியில் முழுப்பட்டியலும் தருகிறேன், இப்பொழுதைக்கு தனித்தாக்குதல், தமிழ் எழுத்தாளர்கள் மீதான விமர்சனம் போன்றவற்றிலிருந்து விலக்கிக் கொள்ள இவை பயன்படலாம்).

1. Lawrence Lessig, (various blogs, essays and the following books: Free Culture, The Future of Ideas)
2. Anti-Lessig Reader (Wiki in Lessig’s site)
3. Siva Vaidyanathan and Sivacracy blog
4. Convergence Culture: Where Old and New Media Collide, Henry Jenkins
5. Confronting Challenges of Participatory Culture - McAruthur Foundation White papers on Cultural Convergence and Participatory Culture.

தங்கமணி - இடையில் உங்களுக்குப் பதிலெழுத விட்டுப் போய்விட்டது.

நீங்கள் சொல்லியிருப்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் எனக்குக் குறைவாகவே நிகழ்ந்திருப்பதால் அதன் தீவிரம் எனக்குப் பிடிபடவில்லையோ! சன்னாசியின் பதிவில் பின்னூட்டப் பெட்டியின் மேல் “என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள், ஆனால் மற்றவர்களிடமிருந்து நீங்கள் என்ன மரியாதையை எதிர்ப்பார்க்கிறீர்களோ அதை அவர்களுக்கும் தாருங்கள்” என்று பொருள்பட எழுதியிருப்பார்.

நேர்மையாக எழுதிவருபவர்கள் பலருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பின்னூட்ட அராஜகம் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. தாக்குதலுக்கு அதிகம் இலக்குகள் இல்லாத காலத்தில் இது எல்லாரையும் பீடித்திருந்தது. ஆனால் சமீபகாலங்களில் பரவலான இலக்குகள் (பின்னூட்டத் தூண்டிலகள், ஆங்கிலத்தில் Karma Whore என்று சொல்வதைப் போல) இருப்பதால் நான் தொடர்ந்து வாசிக்கும் பல நண்பர்களின் பதிவுகளில் இது காணப்படுவதில்லை என்பதுதான் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

வலைப்பதிவு என்பது இரு வழி பாதை போன்றது. எழுத்தாளர் பீடத்தில் அமர்ந்து எழுதி தள்ள,பவ்வியமாய் படிக்க இது பத்திரிக்கை அல்ல. இங்கு எழுதுபவனும், வாசகனும் ஒன்றே. அதனால் பதிவுகளை விட, பின்னுட்டங்களில் வெளிப்படும் கருத்துக்கள், மோதல்கள் சுவாரசியமாக்குகின்றன.
இந்த பதிவைப் போல, பதிவு ஒரு முறை படித்தாலும், பின்னுட்ட சுவாரசியத்திற்க்காக, மீண்டும் மீண்டும் வர தூண்டுகின்றன.
அனானிக்மெண்ட் மற்றும் அதர் ஆப்ஷனை தூக்கிவிட்டு, மாடரேஷன் போட்ட பிறகு பிரச்ச்னைகள் வெகுவாய் குறைந்துவிட்டன. வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கும் பின்னுட்டங்களை ஒதுக்கி தள்ள எல்லோரும் கற்றுக் கொண்டு விட்டோம். ஆபாசம் ஒரு காலத்தில் ஆண், பெண் வித்தியாசம்
இல்லாமல் எல்லாருமேதான் பாதிக்கப்பட்டோம், வடிக்கட்டி உதவியால் கண்ணிலேயே படாமல் குப்பை தொட்டிக்கு போகும் வழியும் வந்துவிட்டது.
இன்னும் என்ன பயம் என்று புரியவில்லை :-)

எனக்கு உன்னிடமிருந்து அறிந்து கொள்ள தேவை இருக்கிறது,
நாம் விவாதிப்பது அவசியம் என்பதை அங்கீகரிக்கும் போதுதான் உரையாடல் சாத்தியமாகும்.பின்னூட்டங்கள் மூலம் அத்தகைய உரையாடல் சாத்தியமாகும் எப்போதும் என்று சொல்ல முடியாவிட்டாலும்.ஆனால் அத்தகைய உரையாடலின் தேவையை மதிக்காதவர்களால் பின்னூட்டப் பெட்டி தேவையில்லை என்பதற்கு நூறு காரணம்
சொல்லமுடியும்.வாசகரை தன் எழுத்தின் வெறும் நுகர்வோராக
நினைக்கும் எழுத்தாளர்கள் உரையாடல் தேவையில்லை என்று
நினைக்கலாம்.இரைச்சல் காதில் விழலாம் என்பதற்காக அனைத்து சாளரங்களையும் மூடி வைக்கும் போது இரைச்சலற்றவற்றையும் நாம் கேட்கும் வாய்ப்பினை
இழந்து விடுகிறோம்.

நண்பர் வெங்கட்டிற்கு உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். உங்கள் உரையாடும் மாண்பு எனக்கு பிடித்திருக்கிறது. மற்றபடி வலைநுட்பத்தின் வசதிகளை நீங்கள் ஆழ்நத தளத்தில் விளக்கியுள்ளீர்கள். நானும் நேற்றிரவு 2 மணிக்குத்தான் உங்கள் பதிவை பார்த்து உணாச்சிவசத்தில் எழுதியது. அதனால் அதன் முன்பின் உணர்ச்சிகளுக்கு மீண்டும் ஒரு மன்னிப்பு. தமிழில் அறிவியல் நுட்பங்கள் குறித்த உங்கள் ஆக்கங்கள் அவசியமானவை. அவற்றை குறைத்து மதிப்பிடவில்லை. அதற்காய் நீங்கள் எடுக்கும முயற்ச்சிகளும் உழைப்பும் போற்றதக்கவை. உதராணமாக பை (pie) பற்றிய க்ட்டுரை. நண்பர் கூறியது உண்மைதான் உங்களிடம் உள்ள அறிவியல் குறித்த கருத்தாக்கமும் அதே நேரத்தில் தமிழ் மீதான பற்றும் பல்நோக்கும் (இசை போன்றவற்றிற்கு விரிப்பது) அவசியமானதும் அற்புதமானதும்கூட.

அதற்காய் நீங்கள் வருந்தி எழுதியிருப்பதுதான் சங்கடமாக உள்ளது. நன்றி.

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல உரையாடலைக் காண மகிழ்ச்சியாய் இருக்கிறது.

சொல்லப்போனால் என்னுடைய இந்த வார்த்தைகள் கூட பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்து விட்டு தனி மடலின் மூலமாய் நடைபெற்றிருந்தால் சொல்லப்பட்டிருக்கவே நேர்ந்திருக்காது.

பல சமயங்களில் பதிவுகளைத் தொடர்ந்து பின்னூட்டங்களில் நடைபெறும் உரையாடல்கள் பார்வையாளனுக்கு தெளிவான பார்வையை ஏற்படுத்துபவனையாய் இருக்கின்றன. பதிவுகள் எப்போதும் பதிவரின் பார்வையை மட்டுமே முன்வைப்பதும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகள பதிவருக்கும், பின்னூட்டமிடுபவருக்கும் இடையேயான புரிதல்களை மட்டுமல்ல. பார்வையாளனின் புரிதல்களைச் சார்ந்ததாகவும் இருக்கிறது. எல்லா தகவல்களையும், புரிதல்களையும சார்ந்த பதிவருக்கு மின் மடல் இடுவதன் மூலமே பெற முடியும் என்பது நிச்சயம் வலையுலகின் முழு பயன்பாட்டையும் உபயோகித்துக்கொள்ள மறுப்பதே.

நிற்க. உபயோகித்துக் கொள்ள மறுப்பதும், உபயோகித்த்க் கொள்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் என்னிடம் உரையாடவே ஒரு தகுதி வேண்டும் என்று தன்னை ஓர் இலக்கிய் ஆளுமையாகக் கருதிக் கொள்பவர்கள் சொல்லிக் கொள்வதால்தான், இது போன்ற பின்னூட்டப் பெட்டியை மூடி வைப்பதற்கும் பின்னேயுள்ள அரசியலை பற்றி மெனக்கெட்டு யோசிக்கவோ, உரையாடல் நிகழ்த்தவோ வேண்டிய தேவையே ஏற்படுகிறது.

ஆனால் பத்தி எழுத்தாளராயினும், இலக்கிய எழுத்தாளராயினும்,தனது வாசகனை வெறும் நுகர்வோராகவே பார்க்கிறார் என்று இனம் காண பல்வேறு குறியீடுகள் தேவைப்படுகின்றன. வாசகனுடனான உரையாடல்களை எந்த சூழ்நிலையிலும் மறுப்பது, மீறி நடைபெறும் சமயங்களில் குன்றின் மீதேறி நின்றுக் கொண்டு உபதேசம் செய்வது போல நடத்துவது, தனது உரையாடல்களின் மூலம் தான் பெற்ற கருத்துத் தெளிவை எந்த சூழ்நிலையிலும் மற்றவர்க்கு அறிவிக்க மறுப்பது அல்லது அதை தனது ஈகோவுக்கு ஏற்பட்ட இழுக்காய் நினைத்துக் கொள்வது போன்று பல குறியீடுகள் இருக்கின்றன என்றே தோன்றுகின்றது….

தொடர்ந்து வரும் பின்னூட்டங்கள் எனக்கே(கும்) கூட மன மாற்றத்தை ஏற்படுத்தலாம். யாருக்குத் தெரியும்?????

உணர்ச்சிக்கட்டத்தைக் கடந்து சில விஷயங்களை முன்வைக்கலாம்:

1. ஒரு பரிசோதனையாக நான், ஏன் நாம் எல்லோருமே மிக மதிக்கும் உலக எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பலருடைய அதிகாரப்பூர்வ இணைய தளங்களைப் பார்த்தேன் (இப்போதைக்குப் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்). அங்கே பல இடங்களில் பதிவுகள் இல்லை. தம் பணி குறித்த அறிவிப்புகள், விளம்பரப் பலகைகள் போலத் தெரிகின்றன. பல இடங்களில் மின்-மடல் அனுப்ப வசதியாக முகவரி இருக்கிறது. “இவரைக் கேளுங்கள்” என்ற சுட்டிகளைப் பார்த்தேன். ஆனால் வந்த கேள்விகளைப் பார்த்தால் ரசிகர் மன்ற வகைதாம். பல இடங்களில் கேள்விகளே இல்லை. சில இடங்களில் பதில் எனப்பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. சில இடங்களில் மின்-மடல் முகவரியும் இல்லை… (பாலம் சிறுகதை வாசித்துவிட்டு சுஜாதாவை, வந்துகொல்ல நாள்கேட்ட வாசகர் ஏனோ என் நினைவில் வந்துதொலைத்தார்).

2. இன்னும் தேட வேண்டும். நான் மட்டுமன்றி இங்கே எழுதும் பலரும் இதைச் செய்துபார்த்தால் இந்த விவாதத்தை மேலும் சுவாரசியமாக்கலாம். பெயர்களை முன்-நிறுத்தாமல் செய்வோம்.

3. உலக அளவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துவிட்டு, நோஞ்சான் தமிழ் எழுத்தாளர்கள் மீது வெங்கட் பாய்ந்திருக்கலாம் என்று ஒருகணம் தோன்றுகிறது!

4. வலைப்பதிவுகளின் முன்-வடிவமாக ஏற்றம் இறைக்கும் எசப்பாட்டை வெங்கட் குறிப்பிடுகிறார். தனிமனித ஈகோக்களை வெட்டும் ஒப்பீடு இது, நல்லது. இருந்தாலும் சில விஷயங்கள்.

உற்பத்திச்செயலும் அச்செயலை ஒத்திசைவாக்கும் (harmony) மற்றும் மாறுபடும் (counter) படைப்பும் பொருந்திக் கூட்டாக archive எனவும் தனிமட்டத்தில் variation எனவும் வருவது எசப்பாட்டு போன்ற நாட்டுப்புற வடிவம். அந்த மட்டத்தில் இன்று அழிவின் விளிம்பில் நிற்பது எனலாமா! தொலைக்காட்சியில் இன்ன பிற இடங்களில் காணும் இவ்வடிவமோ அச்செயலற்றது, அற்ற செயலுக்கு நம்மை ஏங்கவும் வைப்பது.

இணையத்தை எடுத்துக்கொண்டால் அங்கே பலர், கண்ணொடு கண் இணை (நேரே) நோக்கொக்கும் ஒத்திசைவை பதிலுறுத்த (substitute) வாய்ச்சொற்கள் மற்றும் என்ன பிறவெல்லாமோ பிரயோகிக்கிறோம். இங்கே செயலின் நோக்கம் உற்பத்தியும் படைப்பும் என்று கூறவும் முடியாது. தொழில்நுட்பத்தின் இப்போக்கில் செய்தி இசையாக முடியுமா? இந்த ஊடகப் பதிலுறுத்தலில் இரைச்சல் தவிர்க்க முடியாத ஒன்று என்றே கூறவேண்டும். Repetitive archive-வுக்கான விதிகள் சிலவற்றை அனைவரும் ஏற்றுக்கொண்டால் ஒருவேளை குறையலாம், ஆனால் இரைச்சல் ஒழியாது, ஆனால் அப்போது சுதந்திரம் பறிபோய்விட்டதாகப் பலரும் கூறுகிறோம். இது வலைப்பதிவின் irony.

நாகார்ஜுனன்

Many scientists have their official homepages and hence do not use them as blogs.But many academics have individual
or collective blogs with option for comments.Some like lessig have blogs as part of their website.In many universities departmental/faculty blogs are there,
as part of the departmental pages.

Noise in communication is too old a concept.So is distortion in communication. Despite these meaningful conversations are possible. Some consider web/internet as a public sphere bur this idea is a disputed one. Venkat’s views are moulded by his ideas on open source, open access, web as a medium for communication and free exchange of ideas and the possibilities offered by technologies to further conversations and learning. Perhaps he is influenced by the libertian thinking of Lessig and others who have strong views on public domain and communication.

I see a gap in understanding here. Many others who are not familiar with the theory behind his views dont grasp the
points he makes.Coming to Tamil writers they seem to be interested more in monologs than in dialogs.As one who scans many blogs in my discipline regularly I understand the views of Venkat. But there is a world of difference between scholarly communication in academia where you interact with peers on equal footing and writer centric world view of Tamil writers. The writer centric world view of Tamil writers offers little scope for dialog or debate.
There author stands tall above the readers as a solitary figure. The very fact that readers can be smarter and better informed than the writer and thereby can challenge them gives them jitters as that robs them of the halo, created with much difficulty over years.

When one expresses ones views in public sphere many responses are possible.Not all of them will be plesant.
But these Tamil writers who are not relecutant to reveal details about their personal lives are relectant to provide a facility for readers to post comments. Why they expect the reader to email their comments.If one looks at the blogs of some academics you realise the diversity in views and often points missed by the academics are pointed out by readers who in many cases give new information. By foreclosing the possibility of dialog these writers
refuse to learn and listen to others , to say the least.

>வேண்டும் என்றே வம்புக்கு இழுக்கும் பின்னுட்டங்களை ஒதுக்கி தள்ள எல்லோரும் கற்றுக் கொண்டு விட்டோம். ஆபாசம் ஒரு காலத்தில் ஆண், பெண் வித்தியாசம்
இல்லாமல் எல்லாருமேதான் பாதிக்கப்பட்டோம்,

உஷா - என்னுடைய கருத்தை உறுதி செய்ததற்கு நன்றி! பத்மா அரவிந்த்-தின் வலைப்பதிவை சிலகாலம் என்னுடைய தளத்தின் வழியே நடத்தியவன் என்பதால் பின்னூட்டங்களால் பெண் பதிவர்கள் சந்திக்கும் கூடுதல் அவஸ்தைகளைப் பற்றி ஓரளவேனும் தெரியும்.

ஜமாலன் - இதையெல்லாம் மறந்துவிட்டு நாகார்ஜுனன் சொல்வதைப் போல் தேவையான உரையாடலுக்குத் திரும்புவோம்.

ignorant, Claude Habermas, நந்தா - நான் சொல்ல வந்த விஷயம் உங்களைச் சென்றடைவதில் மகிழ்ச்சி. நான் முக்கியமாகப் பயன்படுத்தத் தவறிய கருத்து - வாசகரை நுகர்வோராகப் பார்ப்பது. வாசகன் நம்முடைய சரக்குக்கான சந்தை மட்டுமே என்ற மனநிலையில் இருந்தால் சந்தையைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் முழுக்கவனமும் தெரியும். அந்த நிலையில் விலைபொருளின் தரத்தை உயர்த்திக் காட்ட அதற்கு ஒரு உன்னத முத்திரை தேவைப்படும். சமநிலையில் உரையாடத் தொடங்கினால் தனக்கான பிம்பத்தைக் கட்டியெழுப்புவது சாத்தியமில்லாமல் போகும்.

க்ளாட் - உண்மை, என்னுடைய கருத்தாக்கங்கள் பெரிதும் என் அனுபவத்தினால் கட்டமைக்கப்பட்டவை; திறந்த கருத்துப் பரிமாற்றம், சக-விமர்சனம், உரையாடல் போன்றவை. திறமூலத்தில் என்னுடைய அனுபவங்களும் பதினைந்து வருடங்களாக அதன் வளர்நிலைகளை அருகிலிருந்து கவனிப்பதும் கூட.

நீங்கள் இன்னொரு முக்கியமான கோட்பாட்டைச் சுட்டியிருக்கிறீர்கள். தகவல் நுட்ப கருத்தாக்கத்தில் செய்தியிலிருந்து இரைச்சலைத் தவிர்க்க முடியாதது. நம்முடைய திறமை செய்தி/இரைச்சல் விகிதத்தை மேம்படுத்துவதில்தான் இருக்கிறது. (Improving signal to noise ratio).

நாகார்ஜுனன்

> 1. பல இடங்களில் மின்-மடல் அனுப்ப வசதியாக முகவரி இருக்கிறது. “இவரைக் கேளுங்கள்” என்ற சுட்டிகளைப் பார்த்தேன். ஆனால் வந்த கேள்விகளைப் பார்த்தால் ரசிகர் மன்ற வகைதாம்.

மிகப் புகழ்பெற்றவர்களுடன் உரையாடுகள் என்று சந்தர்ப்பம் கொடுத்தால் பல சந்தர்ப்பங்களின் சுமையில் வார்த்தைகள் வெளிவராமல் வெறும் உணர்ச்சிப் பெருக்கீட்டால் புகழ்பாடல் மட்டுமே சாத்தியமாவதைப் பார்த்திருக்கிறோம் (awestruck). இதற்கு அடுத்த கட்டமாகத்தான் உரையாடல் சாத்தியமாகும். அந்த அடுத்த கட்டத்திற்குப் பிரபலம் எப்படி நகர்த்திச் செல்கிறார் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. அதே கேளுங்கள் பெட்டியில் வாசகருக்கு அவர் பதிலளிக்கத் தொடங்கினால் தொடர் கேள்வி எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடியும். மின்னஞ்சலில் இது சாத்தியம் என்றாலும் படிக்கும் மூன்றாவது வாசகரையும் வட்டத்திற்குள் ஒருபோதும் வரவழைக்காது.

உதாரணமாக ஜமாலன் ‘பச்சை மரத்தில் பதியும் பதிவர்கள்’ என்ற விஷயத்தை எனக்குத் தனியஞ்சலில் அனுப்பியிருந்தால் இதே உரையாடலின் இரு வேறு அணுகுமுறை இன்னொரு நண்பருக்குச் சாத்தியமாகுமா என்பது ஐயமே!

பின்னூட்டம் வந்தால் பிரபலத்தின் நேரத்தையெல்லாம் விழுங்கிவிடும் என்பது உண்மையல்ல. பல சமயங்களில் கேள்விகளுக்குப் பிற வாசகர்களே பதில் சொல்லிவிடுவார்கள்.

>3. உலக அளவில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துவிட்டு, நோஞ்சான் தமிழ் எழுத்தாளர்கள் மீது வெங்கட் பாய்ந்திருக்கலாம் என்று ஒருகணம் தோன்றுகிறது!

இல்லை நாகார்ஜுனன். ஒரு முறை சுஜாதா குறித்த விமர்சனம் ஒன்றில் இப்படி எழுதினேன் (வலைபபதிவுகள் குறித்து அவர் சொன்னதை முன்வைத்து): தனக்குத் தெரியாத/ஆர்வமில்லாத விஷயத்தில் தீவிரமாகக் கருத்துச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். வலைப்பதிவா, ஆங், என்னமோ எழுதுறாங்க, எனக்கு நேரமில்லை, ஆர்வமில்லை என்று சொல்லாமல், இரண்டு நிமிடப் புகழுக்காக அலைகிறார்கள் என்ற ரீதியில் சொன்னார். அதேபோல ஜெயமோகனும் புதிதாக எழுதப் போகிறீர்களா? பின்னூட்டப் பெட்டியை மூடிவிடுங்கள் என்று உபதேசித்தார் (புதிதாக எழுதத் துவங்குபவர்களுக்கு பின்னூட்டம் எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும்). இன்னும் பல உதாரணங்கள் உண்டு. இப்படித் தொடர்ச்சியாக வந்து விழும் விமர்சனங்களுக்குப் பதிலாக எழுதியதுதான். கட்டாயம் நம் எழுத்தாளர்கள் நோஞ்சான்கள் வேறு இடத்தில் தெரிந்துகொண்டதை வைத்துக்கொண்டு அவர்களைத் தாக்கலாம் என்ற நோக்கம் இல்லை. ஒரு வகையில் நோஞ்சான்களின் மீது முதல் குத்தை விட்டது (தொடர்ச்சியாகப் பல குத்துகளை விட்டுக் கொண்டிருப்பதும்) அவர்கள்தான். (திருப்பிக் குத்த அவர்களுக்கு இடமில்லை என்று தெரிந்துகொண்டு).

>உற்பத்திச்செயலும் அச்செயலை ஒத்திசைவாக்கும் (harmony) மற்றும் மாறுபடும் (counter) படைப்பும் பொருந்திக் கூட்டாக archive எனவும் தனிமட்டத்தில் variation எனவும் வருவது எசப்பாட்டு போன்ற நாட்டுப்புற வடிவம். அந்த மட்டத்தில் இன்று அழிவின் விளிம்பில் நிற்பது எனலாமா! தொலைக்காட்சியில் இன்ன பிற இடங்களில் காணும் இவ்வடிவமோ அச்செயலற்றது, அற்ற செயலுக்கு நம்மை ஏங்கவும் வைப்பது.

நான் அடுத்த பகுதியில் விரிவாக எழுத உத்தேசித்திருக்கும் விஷயம் இது. நீங்கள் இந்த வரிகளை எழுதியிருப்பது மிக மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் நான் இதுவரை எழுதியது எங்கே இட்டுச் செல்லப்போகிறது என்பதை உங்களால் ஊக்கிக்க முடிகிறது. சுருக்கமான பதில் ஏக்கத்திற்கு விடிவு இருக்கிறது.

இரைச்சலிருந்து தன்னெழுச்சியாக படைப்புகள் வருவது சாத்தியம். அதற்கான கட்டியங்களைக் காணமுடிகிறது.

Perhaps Venkat is going to write about Wikinomics and other user generated ‘literature’ and artifacts. Variation need not be disharmony.Archive can be a polyphony. Coming to noise and signal, improving signal to noise ratio is important but in the name of filtering noise we may miss
some voices too.

நுட்பப் புரிதல் என்பது அவரவர் தேவையுடன் தொடர்புபடுகிறது. வலைப்பதிவுகளில் நுட்பங்களின் உச்சத்தைப் பயன்படுத்துவோர் கூட விக்கிப்பீடியாவில் வந்து தடுமாறியிருக்கிறார்கள். அவர்களால் புரிந்து கொள்ள முடியாததால் அல்ல; அதற்கான தேவை ஏற்படாததால். தேவை ஏற்பட்டாற்கூட புரிந்து கொள்வதற்கான தடைகள் ஏராள