ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

sujatha.pngசற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.

ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது “மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது” என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை ‘ஹேபியஸ் கார்பஸில்’ வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது.

வானொலி மாமா சோதனைகள் என்று குழந்தைத்தனமாகவும், பொழுதுபோக்கு பௌதீகம் என்று வறட்சியாகவும் வாசித்துக் கொண்டிருந்த தமிழில் சிலிக்கன் சில்லுப் புரட்சியைக் கொண்டு வந்தவர் சுஜாதா. ஸ்பான், ஸ்பூட்னிக், கூரியர், சயண்டிபிக் அமெரிக்கன், நேஷனல் ஜியாகரபிக் சமாச்சாரங்களை ‘சுடச்சுட” அந்தக் காலங்களில் தமிழுக்குக் கொண்டுவந்தவர். என்னுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றியமைத்ததில் அவருக்கும் கொஞ்சம் பங்குண்டு. நான் பத்தாம் வகுப்பு முடித்து +2 செல்லும்பொழுது மிகச் சூடாக இருந்தது “காமெர்ஸ் க்ரூப்” படிப்பு (எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி, கணக்கு) என்னுடன் படித்த சகாக்கள் எல்லோரும் சிஏ-ஆவதைக் கனவாகக் கொண்டு வர்த்தகப்படிப்பில் நுழைந்த பொழுது இயல்பியலிலும், பொறியியலிலும் சுஜாதா (யா.பெர்ல்மான், ரைட்னிக், ஈறாக) கட்டுரைகள் என்னை வர்த்தக வழிசெல்லாமல் தடுத்தாட்கொண்டு அறிவியலுக்கு வரவழைத்தது. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் கணினி வருகிறது என்று சுஜாதா எழுதும்பொழுதுதான் காகிதங்கள் வாயிலாக மாத்திரமே அறிந்திருந்த ஒன்றிலிருந்து நாம் நீண்ட காலம் தப்பமுடியாது எனவே இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று படிக்கும் ஆர்வம் வந்தது.

பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் பல தமிழ் மன்ற ஆண்டு விழாக்களுக்கு சுஜாதாதான் ஆஸ்தான தலைவர்). ஐஐஎஸ்ஸியில் படிக்கும்பொழுது சிலமுறைகள் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்புகளில் அவரது கூர்மையான அவதானிப்பை நேரடியாக அறியமுடிந்தது. முதல் தடவை ஒரு சாவகாசமான சனிக்கிழமை காலை, இரண்டு மணி நேர இலக்கில்லா அரட்டைக்கு இடையில் மழைவிட்டிருந்த பொழுது காப்பி குடிக்கச் சென்றோம். ஓய்ந்த மழைக்குப்பின் ஐஐஎஸ்ஸின் சாலைகள் கழுவிவிடப்பட்டதுபோல் கருப்பாக, பளபளப்பாக மிகக் கவர்சியாக. சாலையின் இரு ஓரங்களிலும் கரையிட்டதுபோல் மஞ்சள் பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அந்தப் பூக்களைப் பற்றிய பேச்சு வந்தது. இது என்ன பூ என்றார். நான் சரக்கொன்றை என்றேன். இதுக்கு இங்கிலீஷ்ல என்ன பேர் தெரியுமா என்று கேட்டார்? அவர் அறிந்திருக்கவில்லை. என் நண்பர் ஒருவர் இண்டியன் லேபர்னம் என்று சொன்னார். இந்தச் சந்திப்புக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கல்கியில் ஒரு புதிய தொடரை ஆரம்பித்தார் (தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரியரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை). அந்தக் கதையே இப்படித்தஅன் துவங்கும் “இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால் இன்னதேதியில் சொல்லிவைத்தால்ப்போல் பெங்களூர் சாலையோரமெங்கும் மஞ்சள் பூக்கள் பூக்கட்டும்” எங்களுக்கும் சுஜாதாவுக்கும் நடந்த அதே இண்டியன் லேபர்னம் உரையாடல் எந்த மாற்றமுமில்லாமல் அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையில் கதையில் நடந்தது.

இரண்டாம் முறை இன்னும் சுவாரசியமானது. அப்பொழுது விகடனில் ‘நிலா நிழல்’ ‘என் இனிய இயந்திரா’ தொடர் மிகப் பிரபலமாக நடந்துகொண்டிருந்தது. அதில் ஸ்டார் வார்ஸைப்போல லேசர் ஆயுதமெல்லாம் வரும். ஒரு இடத்தில் லேசர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தப்படும்பொழுத்து ஜீனோ என்ற இயந்திர நாய் நிதானமாக உன்னிடம் இருக்கும் லேசரின் பவர் அதன் கொகரென்ஸில் இருக்கிறது, நான் அதைப் போக்கி உன் துப்பாக்கியை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லும். அந்த சந்திப்பின் பொழுது எங்கள் ஆய்வகத்திலிருந்த லேசர்களை அவருக்கு இயக்கிக் காட்டிக்கொண்டிருந்தோம். (அந்தத் தொடருக்காகவே எங்கள் லாப்-க்கு வந்தாரோ என்று தோன்றுகிறது). அப்பொழுது coherence என்பது லேசரின் அடிப்படைப் பண்பு என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது என்றும் அவரிடம் சொன்னோம். தொடர்ந்து அப்பொழுது இந்திய இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திற்காக நான் செய்துகொண்டிருந்த Optical Phase Conjugation என்ற சோதனையை அவருக்கு விவரித்தேன். அதன் முக்கியமான இலக்கு ஒரு auto-tracking ஆடி போன்ற அமைப்பை உருவாக்குவது. இது ரொனால்ட் ரீகனின் ஸ்டார் வார்ஸ் ப்ரொக்ராம்க்குப் (Strategic Defense Initiative) பதில் சொல்ல வேண்டி இந்தியாவின் முயற்சிகளில் ஒன்று. வானில் பறக்கும் விமானத்திலிருந்து ஏவப்படும் லேசரை அதனிடமே திருப்பியனுப்பும் உத்தி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுத்த வாரம் கதையில் ஜீனோவின் decoherence எல்லாம் பம்மாத்து சும்மா சுடு என்று சக காவலனிடம் ஒருவன் சொல்ல, அவன் சுட ஜீனோ phase conjugate mirror ஐப் பயன்படுத்தி அவனிடமே லேசரைத் திருப்பியனுப்பி அழிக்கும். நான் பழகிய மனிதர்களில் இத்தனைக் கூர்மையான அவதானம் கொண்டவர்கள், அந்த அவதானத்தை சுவரசியாமான உரைநடையாக்கம் செய்யும் திறன் கொண்டவர்கள் மிகச் சிலரே.

சுஜாதாவின் முதல் திரைப்பிரவேசம் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் என்று தொடர்ச்சியாக அவர் கதைகள் திரைச்சேதம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இரண்டாம் வருகையில் அவருக்கு மாபெரும் வெற்றி ரோஜா, முதல்வன், இந்தியன், அந்நியன், ஆய்த எழுத்து, சிவாஜி என்று அவர் பங்களித்த படங்களில் பல மாபெரும் வெற்றியைப் பெற்றவை. எழுத்துக்கும் திரைக்கும் இடையில் சப்தமில்லாமல் சில நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் உதவியுடன் அபத்தத் துணுக்குத் தோரணங்களிடமிருந்து மேடை நாடகங்களை மீட்டெடுக்கும் முயற்சி பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும்கூட என்னைப் பொருத்தவரை அவர் ஆத்மார்த்தமாகச் செய்த ஒரே காரியம் இதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

பலரும் எழுத்துத் துறையில் சுஜாதா அசாத்திய சாதனைகளைச் செய்து முடித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள். அலுங்காமல் போகிற போக்கில் எழுதுபவை பெருவெற்றியைப் பெறுவதும் ஒன்றிரண்டு உண்மை முயற்சிகள் தோல்வியைத் தருவதும் அவரது எழுத்தின் போக்கை முழுமையாக நிர்ணயித்துவிட்டன. அதன் காரணமாகவே அவர் எந்த ஆழமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றிலும் தகவல் தெரிய ஒரு சுஜாதா போதும் ஆனால் எவற்றிலும் முழுமையான புரிதலை அவர் தந்ததில்லை. பெயர் உதிர்த்தல், ஜல்லியடி போன்று அவர் பிரபலமாக்கிய சில வார்த்தைகள் அவருக்கே முழுமையாகப் பொருந்திப்போவது வருத்தமான விஷயம்.

வேலைக்கிடையில் எந்தவிதமான ஆழமான முயற்சிகளுக்கும் இடமில்லாத நிலையில் பெங்களூரில் இருந்தவரை அவரால் அதுதான் சாத்தியம் என்று தோன்றியது. ஓய்வுக்குப் பின் அவர் மாபெரும் படைப்புகளை உருவாக்கப் போகிறார் என்றிருந்தது. வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது.

So long, Sujatha! Thanks for everything.

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு ‘மரணம்’ ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

துளசி - கடைசியாக சில நாட்கள் ஆஸ்பத்ரியில் இருந்தார் என்று சில வாரங்களுக்கு முன் தேசிகன் எழுதியிருத்தார். இன்னும் அவர் பதிவைப் பார்க்கவில்லை.

I could’nt stop tears running out of my eyes .He had a great impact on readers under the fourty plus age group.I express my heart felt condolence to his family,friends and readers.

[...] - வெங்கட் [...]

எளிமயான, ஆற்றல்மிக்க தமிழில் அறிவியலின் அடிப்படைகளை விளக்கிச்சொல்வது சுஜாதவின் தனித்துவம். ஆழ்ந்த வருத்தங்கள்.

நம்ப முடியாமல் ஆடிப்போயிருக்கிறேன்! :-(
அஞ்சலிகள்.

I am taken aback after reading the news..
A great loss..difficult to digest..

Hi,

Sujatha will ever be remembered for his articles about science in simple tamil.His short stories like “Thoondil” stories are ever green.Ask anything,he will have an answer.
His sharp dialogues,his observation,his humour,interesting and sudden ending are his trade marks in short stories even any writer can follow.
God bless his family.

Kannan
http://www.truemlmrockstar.com

ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆன்மா சாந்தி அடைவதாக

உண்மைதான். வர்த்தகம் அவரை விழுங்கி விட்டது.
எழுவதோடு அவர் இருந்திருக்கலாம்.
சிவாஜி படத்தில் அங்கவை-சங்கவை என்று சொன்னதற்காக அவரை நகைச்சுவை உணர்வில்லாமல்
எத்தனை பேர் திட்டினார்கள்.
தமிழ் எழுத்துக்கு ஒரு பேரிழப்பு.
சகாதேவன்

தமிழுலகின் மொழிநடையில் பௌதீகத்தை சுவையாக தந்த நல்லதொரு எழுத்தாளனுக்கு எனது அஞ்சலி. சுஜாதாவை மரணம் வென்றிருந்தாலும் அவர் தம் எழுத்துக்கள் காலனையும் காலத்தையும் வென்றவை.
ஆனாலும் சில படைப்புகள் திராவிடனையும் தமிழையும் ஆக்கபூர்வமான பாதையில் கொன்டுசெல்லவில்லை. அத்துடன் துரதிட்டவசமாக ஈழ போரட்டம் தொடர்பாக தவ்றான புரிதலையும் கொன்டு இருந்தார்.

பாரதி
கனடா.

வெங்கட்,

அற்புதமாக எழுதப்பட்டுள்ள அஞ்சலி ! சுஜாதா சார் இத்தனை பேரை (ஏதோ ஒரு விதத்தில்) பாதித்திருக்கிறார் என்பது, அவருக்காக இன்று எழுதப்பட்ட பல அஞ்சலிப் பதிவுகளை காணும்போது புலப்படுகிறது, What a Remarkable man, really !
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html

எ.அ.பாலா

நல்ல பதிவு.

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

//(தலைப்பு நினைவில் இல்லை, அது ஒரு பெங்காலி பேராசிரியரையும் அவரது இளம் மாணவியையும் பற்றிய கதை).//

அந்த கதைதான் ”வானம் வசப்படும்” என்று சினிமாவாக வந்தது.

கதை தலைப்பு ஞாபகம் இல்லை. “பெங்களூரில் ஓரிரவில் “ என்று ஞாபகம்

Your second meet with Sujatha - it’s not ‘Nila Nilzhal’ (this is related to Trichy cricket star Muhundan who goes to Mumbai for a tournament, came in Dinamanikkathir), it’s ‘Jeeno’, a science fiction in Vikatan. Also, your ‘firt meet’ story came only after your ’second meet’ story

sivakumar -

>your ‘firt meet’ story came only after your ’second meet’ story

could very well be. It is long time ago (about 15 years) and my memory does not serve well.

On the second thought, I think the Robodog story is ‘en iniya iyanthiraa’ - could someone confirm?

இந்தப் பதிவுக்குக் கருத்தெழுதிய பிற நண்பர்களுக்கு என் நன்றி!

வெங்கட், ரோபா நாய் கதை - என் இனிய இயந்திரா. மீண்டும் ஜீனோ, அதன் இரண்டாம் பாகம்.

ப்ரூனோ : பி.சி.ஸ்ரீராம் கொலை செய்த அந்தக் கதையின் பெயர், ‘ இருள் வரும் நேரம்’. கல்கியில் தொடராக வந்தது.

சுஜாதாவால் தமிழ்ப் புத்தகங்கள் படிக்க வந்த பல தலைமுறை வாசகர்களில் ஒருவனாக என் அஞ்சலி. கண் ஓரத்தில் கண்ணீர் துளிப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

////வைணவம், அறிவியல், புதினம், சிறுகதை என்று ஆர்வமுள்ள துறைகளில் முத்திரை பதிக்கும் படைப்புகளை அறுபது வயதுக்குப் பின் படைக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னைப் பிரவேசத்திற்குப் பின் குமுதம், மணி ரத்னம், ஷங்கர் என்று வர்த்தகம் அவரை முழுமையாக விழுங்கிவிட்டது. /////

இது முழுக்க உண்மையில்லை எனத் தோன்றுகிறது.அவர் ஆரம்பம் முதலே ஜெ.கா. போலவே தி.ஜா. போலவோ அல்லது லா.ச.ரா போலவெ ஒரு பிம்பமெடுத்துக் கொள்ளவில்லை.அப்படி இருந்திருந்தால் பலர் அந்த வரிசைகளில் இவரையும் சேர்த்து ஆகா என்றிருப்பார்கள்..ஆனால் அவர் இவர்கள் எல்லோரும் கலந்த ஒரு கலவையானார்;அவரின் சுருக்கமான மந்திரம்,சுவாரசியமான தகவல்களுடனான எழுத்து.
அந்த எழுத்துக்கான மொழி,’பீகாரில் வெள்ளம்’ என்ற ரீதியிலான அக்கால நியூஸ் ரீல் போல சவ சவ என்றிருந்திருக்க வேண்டிய வேளையில்,கத்தி வீச்சுப் போல கூர்மையையும் ஒளியையும் பெற்றிருந்தது…..
அதில்தான் அவர் வென்றார் !!!!!!

//ப்ரூனோ : பி.சி.ஸ்ரீராம் கொலை செய்த அந்தக் கதையின் பெயர், ‘ இருள் வரும் நேரம்’. கல்கியில் தொடராக வந்தது.//

நன்றி. நான் படம் பார்க்கவில்லை. ஆனால் நாவல் அருமை. மனித மனத்தின் ஆழ்நிலை எண்ணங்களை (subconciousக்கும் conscious இடைப்பட்ட நிலை - அப்படி ஒன்று உண்டு என்றால் !!) வெளிப்படுத்தியதில் அது நல்ல நாவலாகவே எனக்கு தோன்றியது.

அது போன்ற (actionஐ விட descriptionம் discussionஐ விட contemplationம் அதிகம் உள்ள) நாவல்கள் சினிமாவாக எடுக்கப்படும் போது பெறும்பாலும் சொதப்பிவிடும்.

//பி.சி.ஸ்ரீராம் கொலை செய்த அந்தக் கதையின் பெயர், ‘ இருள் வரும் நேரம்’. கல்கியில் தொடராக வந்தது//

நல்ல படமாக வந்திருக்கவேண்டிய கதை - சுஜாதாவின் கதைகளில் எனக்கும் பிடித்தமான ஒன்று இது…

பிரகாஷ், சன்னாசி, புருனோ

இருள் வரும் நேரம் தலைப்பு நினைவில் இல்லையே.

Venkat, that was a good and honest tribute.

// என்னைப் பொருத்தவரை அவர் எழுதுபதுகளில் கட்டியம் கூறிய வருகை நிறைவேறவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு முக்கிய காரணம் வர்த்தக ரீதியான அவரது அசாத்திய சாதனைகள்.//

His contribution to Tamil short story is pbenomenal and unsurpassed. You should give credit for the man where it is due.

His popular science articles might not have been deep and profound, but they kindled the interest of the reader and triggered them to go search further - in that way he was one of the very few writers who acted as a “catalyst” for his readers (and fans alike), not just an idol. This is by no means, small achievement.

Fair comments on Sujatha, whatever said and done, he has taken the science to masses

சீரங்கத்து தேவதைகளை எத்தனை முறைபடித்தாலும் அலுக்காது ஒவ்வொருமுறை சீரங்கத்துக்கு (எனது வீடு திருச்சி சிந்தாமணியில்) வடக்குவாசலில் உள்ள வக்கீல் பிரபாகரைப் பார்க்க செல்லும் போதும் அந்த வீதிகளில் சுஜாதா சாரின் எழுத்துக்களில் வந்த மனிதர்கள் உலாவுவதாகவே எனக்கு தோன்றியது உண்டு. என்னைப்போன்ற நடுத்தர வர்க்க படிப்பை மூச்சாக கொள்ளாமல் ஏனோதானோ என்று படித்தவர்களுக்கு கூட சுஜாதாவின் எழுத்துக்கள் டானிக் போன்று பலதரப்பட்ட விபரங்களை படித்து தெரிந்துகொள்ள துாண்டியது முற்றிலும் உண்மை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பபும் அன்பன் துரை, தியாகராஜ், திருச்சி

Sujatha knows what short storey,novel (in particular historical), drama, cinema in simple real art is. He has not lived to his potential. If you judge Sujatha from Kanaiyaziyen Kadaisi pakkam and other literary articles you can easily come to this conclusion. Yes, we lost Sujatha”s precious contribution because of diversions pointed out by Venkat. My tributes to Sujatha.

Leave a comment

(required)

(required)