• மூளைச் செயலிழப்பு – மருத்துவரின் அனுபவப் பகிர்வு

    by  • March 13, 2008 • அறிவியல்/நுட்பம் • 4 Comments

    அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள இயலாது என்று கூச்சலிடுகிறார்கள். காதலையும், காமத்தையும், கருணையையும், வீரத்தையும் ஹார்மோன்களின் கணக்கீட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது இவர்கள் தரப்ப்பு வாதம். ஆனால் நவீன அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக இதனை வெற்றி கொண்டு வருகிறது. இதற்கு அறிவியலுக்குப் பெரிதும் துணை நிற்பது குறைபாடுள்ள மூளையின் அமைப்பும் செயற்பாடும். ஸ்கீட்ஸோஃபெர்னியா, பார்க்கின்ஸன், மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற செயலிழப்புகளைக் கொண்டவர்களை நவீன அறிவியல் கருவிகளான செயல்முறை காந்த ஒத்திசை படக்கருவி (Functional Magnetic Resonance Imaging F-NMR) போன்றவற்றின் உதவியுடன் ஆராய்வது மூளையின் அமைப்பு-செயற்பாடு குறித்த புரிதல்களை உருவாக்கி வருகிறது.

    இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிகம் வாய்க்காத ஒரு அனுபவம் டாக்டர் ஜில் டெய்லருக்கு (Dr. Jill Taylor) டிசம்பர் 10, 1996 அன்று கிடைத்தது. அவர் மூளையின் இடதுபுறத்தில் இரத்தநாளம் ஒன்று வெடித்து சிறிய இரத்தக்கட்டி (Hemorrhage) உருவானது. தன்னிலை இழக்கத் தொடங்கிய ஜில் டெய்லர் அசைவு, பேச்சு, ஞாபகம், சுயநினைவு என்று ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கினார். அதிருஷ்டவசமாக, உடனடி மருத்துவ உதவி கிடைத்தது. அடுத்த சில நாட்களில் மூளையில் அறுவைசிகிச்சை மூலம் ஒரு சிறிய பந்தின் அளவிற்குப் பெருத்திருந்த இரத்தக் கட்டி நீக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து முழுக்குணமடைய எட்டு ஆண்டுகளானது.

    தன் மூளையின் ஒரு பாகம் செயலிழந்ததையும் அதைத் தொடர்ந்து தன் நினைவுகள், உடற் செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் குறித்த அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் ஜில் டெய்லர்.

    4 Responses to மூளைச் செயலிழப்பு – மருத்துவரின் அனுபவப் பகிர்வு

    1. பத்மா அர்விந்த்
      March 13, 2008 at 5:52 pm

      மூளை செயல் இழப்பு அனுபவம் கற்பனையில் கூட நினைக்க முடியாத பயங்கரம் சின்ன வாய்க்குளரல், கண் பார்வை மங்கல் தவிர்த்து, பாதகம் ஏதும் இல்லாமல் ஒரு 8 மாதம் முன்பு தப்பித்தேன்.
      உடலில் தழும்புகள் வருவது போல மூளையிலும் தழும்புகள் ஏற்படுவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
      சிகரெட்டில் உள்ள ஒரு வேதி பொருள் அல்ஷிமீர் வருவதை ஏதோ ஒருகாரணத்தால் தள்ளிப்போடுவதால், அதை பிரித்தெடுத்து உபயோகிக்க முடியுமா என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.மஞ்சல் அதிகம் உபயோகிப்பதும் மறதியை தள்ளிப்போடும் என்றும் சொல்கிறார்கள்.

      மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டு பழக்கங்களை மாற்றவும், ஒது போன்ற பகிர்ந்து கொள்ளுதல் ஆதரவுக்குழுக்களில் வியக்கத்தக்க நம்பிக்கையை தருவதையும் சொல்லவேண்டும். டெய்லரின் செவ்விக்கு நன்றி.

    2. வெங்கட்
      March 13, 2008 at 6:44 pm

      பத்மா -

      >சின்ன வாய்க்குளரல், கண் பார்வை மங்கல் தவிர்த்து, பாதகம் ஏதும் இல்லாமல் ஒரு 8 மாதம் முன்பு தப்பித்தேன்.

      அதிர்ச்சியான விஷயம். உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. எதுதேவையோ அதைக் கைக்கொண்டு உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

      நிக்கோட்டின், மஞ்சள் இரண்டையும் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வருடம் என் அலுவலகத்தில் இரண்டு பெண்களின் குடும்பங்களில் அல்ஸ்ஹைமர் பெற்றோர் இருந்தார்கள். (ஒருவர் வீட்டில் மாமனார், மாமியார், அம்மா என்று மூன்றுபேருக்கும் இதே நிலை). அடிக்கடி இதைப்பற்றிய பேச்சு வரும். அப்பொழுது மஞ்சள் பற்றி என்னிடம் ஒருவர் நிறையக் கேட்டார்.

    3. பத்மா அர்விந்த்
      March 13, 2008 at 8:16 pm

      மஞ்சள் நாம் உபயோகிக்கும் பொடியாக இல்லாமல், தூய்மையான கர்கூமின் ஆக கடையில் கிடைக்கிறது. இது COX 1, 2 மரபணுக்களை செயல் இழக்க வைப்பதாலும், மூளை நினைவுக்கு காரணமான சில நியுரோ ட்ரன்ஸ்மீட்டர் சுரக்க வழிவகுப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

      நன்றி வெங்கட்.

    4. வடுவூர் குமார்
      March 14, 2008 at 9:18 pm

      நன்றி,பகிர்ந்தமைக்கு.
      மஞ்சளின் மகிமையையும் “பத்மா அர்விந்த்” மூலம் தெரிந்துகொண்டேன்.
      மூளையின் செயல்பாடுகள் பற்றிய வினாக்களுக்கு விடை கிடைத்தபிறகு அடுத்தது என்ன? என்ற கேள்வியை என் மூளை கேட்கிறது. :-)

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *