• முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 2

    by  • March 7, 2008 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 9 Comments

    nexium.jpg இதன் முதல் பகுதி
    நாம் சாப்பிடும் சாப்பாட்டைச் செரிப்பதற்கு வயிற்றில் சுரக்கும் அமிலம் மிகவும் முக்கியமானது. (இது எப்படி வேலை செய்கிறது என்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசையிருந்தால் சொல்லுங்கள், இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம்). அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பதால் மூன்றில் ஒருவர் அவதிப்படுகிறார் என்று மருத்துவப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எல்லா காலத்திலும் எல்லா நாடுகளிலும் இது ஒரு முக்கியமான, தீராத வியாதியாகத்தான் இருப்பதாகத் தெரிகிறது. நம்மூரில் வவுத்தெரிச்சல், வவுத்துல புளியக் கரைக்குது என்றெல்லாம் மிகச் சாதாரணமாகப் பேச்சுவழக்கில் சொல்கிறோம். இந்த அமிலச் சுரப்பைக் கட்டுபடுத்த, தாங்கிக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. மிகச் சுலபமான வழி, சுரக்கும் அமிலத்தின் காரத்தன்மையைக் கட்டுப்படுத்துவது. ஜெல்லுஸில், டைஜின், டம்ஸ், மேலாக்ஸ் என்று இதற்குப் பல மருந்துகள் இருக்கின்றன. பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மாத்திரையை உரித்துப் போட்டுச் சப்பினால் நெஞ்சு எரிச்சல் கொஞ்சம் குறையும். இதற்கு அடுத்தபடியாக H2 எதிர்ப்பான்கள் (H2 Antagonists) என்று சொல்லக்கூடிய மருந்து வகை உண்டு. க்ளாக்ஸோ ஸ்மித்க்ளெய்ன் நிறுவனம் 1981-ல் அறிமுகப்படுத்திய இந்த வகை ஹிஸ்டமைன் என்ற அமினோ அமிலத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. ரானிட்டிடைன் என்ற மருந்துப்பொருள் Zantac உள்ளிட பல பெயர்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

    ஆனால் என்னைப் போன்ற தீவிர வவுத்தெரிச்சல்காரர்களுக்கு இதெல்லாம் சரியாக வராது. ப்ரோட்டான் ஊற்று நிறுத்திகள் (Proton Pump Inhibitors) என்றவகை மருந்துகள் எல்லாவற்றையும்விட அமிலத்தால் உண்டாகும் எரிச்சலுக்குச் சிறந்த மருந்துகளாகச் செயல்படுகின்றன. இந்த வகை மருந்துகள் அமிலச் சுரப்பியை அதன் ஊற்றுச் செல்களிலேயே நிறுத்துகின்றன. அமிலம் நீண்ட காலத்திற்கு அளவிற்கு அதிகமாகச் சுரப்பதால் குடலின் உள்பகுதி புண்ணாகிறது. பிபிஐ வகை மருந்துகள் நீண்டகால அமிலப் பெருக்கால் வரும் புண்களையும் குணப்படுத்துகின்றன. ப்ரைலோஸெக், நெக்ஸியம், அஸிபெக்ஸ், பாண்டொலாக், ப்ரெவஸிட், உள்ளிட்ட பல மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவை.

    ஆஸ்ட்ரா ஸெனிக்கா உலகின் மூன்று பெரும் மருத்துவ நிறுவனங்களில் ஒன்று. 1995 தொடக்கம் ஐந்து ஆண்டுகளில் ஆஸ்ட்ராவின் ப்ரைலோஸெக் (பிபிபி வகை அமிலக் கட்டுப்படுத்தி) 26 பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது. மருந்தைக் கண்டுபிடிக்கும் நிறுவனங்களுக்கு அதைக் கொண்டு பணம் சம்பாதிக்கக் காப்புரிமைகள் உதவுகின்றன. குறிப்பிட்ட வருடங்களுக்கு அந்த நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் அதைத் தயாரிக்கவோ சந்தைப்படுத்தவோ முடியாது. பொன்முட்டை இடும் வாத்தான ப்ரைலோஸெக்கின் காப்புரிமை 2001 ஏப்ரல் மாதத்துடன் முடிவுக்கு வரவிருந்தது. ப்ரைலோஸெக்கின் வருவாயை இழந்தால் ஆஸ்ட்ராஸெனிக்காவின் பங்குகள் சந்தையில் மோசமாக வீழ்ச்சியடையும். விரைவில் அது வேறு ஒரு பெரிய நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டு இணைத்துக்கொள்ளப்ப்டும் என்றெல்லாம் ஆரூடங்கள் வரத் தொடங்கின. இந்த நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரைவில் ஏதாவது செய்தாக வேண்டும் என்றபொழுது ஆஸ்ட்ரா உடனடியாக ஒரு பெரிய குழுவை நியமித்தது. அதில் விஞ்ஞானிகள், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள் எல்லோரும் உண்டு. இவர்களுக்குச் சம அளவில் சந்தை விற்பன்னர்கள், சட்ட நிபுணர்கள், வர்த்தக மேலாளர்கள் என்று ஒரு கூட்டமும் உண்டு. ஒருபுறத்தில் அறிவியல் குழு புதிய மருந்துகளுக்கான தேடலை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த வர்த்தகச் சுறாக்கள் சந்தையின் போக்கு, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள், அரசியலில் ஆதாயம் போன்ற திசைகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இது ஒன்றும் புதிதில்லை. பெரும்பாலான பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களில் இப்படித்தான் நடக்கும். ஆனால் ஆஸ்ட்ராஸெனிக்கா கொஞ்சம் புத்திசாலிததனமாகச் செய்தது. அறிவியல் ஆய்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் வழக்கறிஞர்களும், சந்தை விற்பன்னர்களும் கூடவே இருந்தார்கள். எனவே மிக நல்ல மருந்து மட்டுமே அறிவியலின் இலக்காக இல்லை; அதன் சந்தை சாத்தியமும் கூடவே பிணைக்கப்பட்டிருந்தது.

    இந்த இடத்தில்த்தான் லூயி பாஸ்ட்யூரின் ஆவி அவர்களுக்கு முன் தோன்றியிருக்க வேண்டும். ப்ரைலோஸெக் என்று சந்தைப்படுத்தப்படும் மாத்திரையின் மருந்துப் பெயர் ஒமெப்ரஸோல் (Omeprazole). இது ரேசமிக் அமிலத்தைப் போல ஒளி வினை இல்லாதது (முனைவாக்கம் கொண்ட ஒளி இதனால் எந்தச் சுழற்சியையும் அடைவதில்லை). இதே வேதிப்பொருளை ஒளிவினை கொண்ட வடிவத்திலும் தயாரிக்கமுடியும் என்று ஆஸ்ட்ராவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். அது ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஒருபுறத்தில் மருத்துவர்களும், வேதியியலாளர்களும் அதன் பண்புகளையும், அதன் மருத்துவ பலாபலன்களையும் ஆராய்ந்து எங்கேயாவது கொஞ்சம் முன்னேற்றம் இருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினார்கள். மறுபுறம் வர்த்தக, சட்ட முதலை இதற்கு எப்படிக் காப்புரிமை பெறுவது, அதை எப்படி தீவிரமாகச் சந்தைப்படுத்துவது என்று மண்டையைக் குடைந்துகொண்டிருந்தார்கள்.

    ஆஸ்ட்ராவின் நல்லகாலம், ஒளிவினை கொண்ட ஈஸோமெப்ரஸோல் (Esomeprazole) பழைய சரக்கைவிட கொஞ்சம் சக்தி கூடுதலாக இருந்தது என்று தெரியவந்தது (இது உண்மையில்லை என்று இப்பொழுது சந்தேகிக்கப்படுகிறது). விரைவில் தயாரிப்பு மேம்பாடு, காப்புரிமைப் பாதுகாப்பு, என்று எல்லா சுபகாரியாங்களும் நடந்தன. கூடவே, ஆஸ்ட்ரா தன்னுடைய சந்தைத் திறமையையும் காட்டியது. பல பில்லியன் டாலர்கள் சந்தைப்படுத்தலுக்காக மட்டுமே செலவிடப்பட்டன. எல்லா பத்திரிக்களிலும் ஈஸோமெபரஸோலின் கல்யாண குணங்கள் பறைசாற்றப்பட்டன. வயிற்று மருத்துவர்களைக் கூட்டி கோலாகலமான விருந்துகளுடன் நெக்ஸியம் (Nexium) என்று நாமகரணம் சூட்டப்பட்ட ஈஸோமெப்ரஸோல் அறிமுகப்படுத்தப்பட்டது. அமில வியாதிக்கு முடிவு வந்துவிட்டது என்று ஆஸ்ட்ரா முழங்கத்தொடங்கியது. மலிவான விலையில் கிடைப்பவை எல்லாம் நல்ல மருந்துகள் அல்லன என்ற பெருவழக்கம் இன்னொருமுறை உறுதி செய்யப்பட்டது. செரிப்பு அமில வியாதி இருப்பவர்கள் தினமும் இதற்கான மருந்தைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் (எடுத்துக் கொள்கிறேன்). பழைய ப்ரிலோஸாக் மருந்துககான மாதாந்திர செலவு (அமெரிக்காவில்) 28 டாலர்கள்தான். புத்தம் புதிய நெக்ஸியத்தின் விலையோ 180 டாலர்கள். (ஐந்து மடங்கு விலை இருந்தால் ஐந்து மடங்கு திறனும் இருக்குமல்லவா?)

    YouTube Preview Image

    ஆனால், நெக்ஸியத்திற்கான சோதனைகளின்போது பல அறிவியல் வழிமுறைகள் மீறப்பட்டன. ப்ரைலோஸெக்-குடன் ஒப்பிட நடத்தப்பட்ட சோதனைகளில் அதைவிட அதிகமான அளவு நெக்ஸியம் கொடுக்கப்பட்டது (ஒரு மாத்திரையை இரண்டு மாத்திரையுடன் ஒப்பிடுவதைப் போல). அதிக திறனைக் காட்டவேண்டி நெக்ஸியம் அமிலம் குறைப்புக்கும் மேலான சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படத்து. நீண்ட கால அமிலக் கோளாறினால் அவதிப்படுபவர்களுக்கு குடலின் உள் சுவற்றில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகும். நெக்ஸியம் இதையும் குணப்படுத்தவல்லது என்று விளம்பரிக்கப்படுகிறது. சராசரி அமிலக்கோளாறு உள்ளவர்களுக்கு விலை குறைவாகக் கிடைக்கும் பிரிலோஸாக்கைவிட நெக்ஸியம் எந்த அளவிலும் விசேட குணம் கொண்டதில்லை. குடல் சுவர் புண்ணைக் கட்டுப்படுத்த நெக்ஸியம் ஓரளவுக்கு உதவுகிறது).

    நெக்ஸியம் இப்பொழுது அமெரிக்காவில் அதிகமாக விற்கும் மருந்துகளில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. (பணக்கார நாடுகளில் இந்த மருந்துகளிடையே அதிக வித்தியாசம் இல்லை). வருடத்திற்கு $4.4 பில்லியன் வருமானம் ஆஸ்ட்ராஸெனிக்காவுக்கு. இதன் விற்பனையில் முக்கிய பங்கு சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள். ஃபைஸர், மெர்க், ஆஸ்ட்ராஸெனிக்கா, ப்ரிஸ்டால் மேயர், க்லாக்ஸோ-ஸ்மித்க்ளெய்ம் போன்ற இராட்சத மருத்துவ நிறுவனங்கள் வருவாயில் சராசரியாக 16% மருத்துவ ஆராய்ச்சியில் செலவிடுவதாகப் பெருமையாகக் சொல்கின்றன (ஆட்டோ, எரிபொருள் துறை போன்றவற்றுடன் ஒப்பிட்டால் இது அதிகம்தான்). ஆனால் சந்தைப்படுத்தலுக்காக இவர்கள் சராசரியாக 30% வருவாயைச் செலவிடுகின்றன. நெக்ஸியத்தின் விற்பனைக்கு அதன் விளம்பரங்கள் முக்கிய காரணம். நெக்ஸியத்தை ஒருவர் மருந்துக்கடையில் சென்று நேரடியாக வாங்கிவிட முடியாது, அதற்கு மருத்துவரின் பரிந்துரை தேவை. அப்படியிருக்க அதற்குத் தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் விளம்பரிக்க அவசியம் என்ன?

    இங்குதான் நிறுவனங்கள் நோயாளிகளின் உளவியலைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நெக்ஸியம், வயாகர, லிப்பிடார், ஸெலெப்ரெக்ஸ், உள்ளிட்ட பல பரிந்துரை மருந்துகளுக்கு தொடர்ச்சியாகத் தொலைகாட்சியில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளிவருகின்றன. நெக்ஸியம் விளம்பரத்தில் “செய்துமுடிப்பவர்” என்று தன்னை அறிவித்துக் கொள்பவர் நாடுவது நெக்ஸியம். எல்லாவற்றையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்தாலும் அவருடைய அமிலப் பிரச்சனையை அவரால் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. அதற்கு நெக்ஸியம் தேவை. இதைப் பார்க்கும் அன்பர் மருத்துவரிடம் சென்று நேரடியாக “எனக்கு நெக்ஸியம் பரிந்துரையுங்கள்” என்று கேட்கிறார். “வேண்டாம், உங்களுக்கு அதைவிட விலை குறைந்தது போதும்” என்று சொன்னால் உடனே “சக்தி குறைந்த மருந்தைத் தந்தால் வேறு மருத்துவரிடம் மாறிவிடுவேன்” என்று நோயாளி பயமுறுத்துவார். எனவே மருத்துவர் பரிந்துரைப்பில்தான் வழங்கப்பட வேண்டும் என்று விதியுள்ள பல மருந்துகள் நோயாளிகளின் பரிந்துரையில் எழுதித் தரப்படுகின்றன. மருத்துவக் காப்பீடுக்குக் கொடுக்கும் பணத்திற்கு அதிக விலையுள்ள் (எனவே அதிக சக்திவாய்ந்த) மருந்தைப் பெற்றுக் கொள்வதால் நோயாளிக்கு சந்தோஷம். நோயாளியைத் தக்கவைத்துக் கொள்வதில் மருத்துவருக்கு இலாபம். ஆமாம், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் இதில் தலையிட்டு நிறுத்துவதில்லை? காப்பீட்டு நிறுவனங்கள் ஒருபோதும் நஷ்டத்தில் இயங்குவதில்லை. மருத்துவச் செலவு அதிகமானால் காப்பீட்டுத் தொகையை உடனே அதிகரித்துவிடுவார்கள். அதிகப் பணம் புரண்டால் இலாபமும் அதிகரிக்கும்தானே! இப்படித் தொடர்ச்சியாக மருத்துவச் செலவுகள் அதிகரித்த்துக் கொண்டே இருக்கின்றன.

    ஆஸட்ராஸெனிக்காவின் நெக்ஸியம் மாத்திரமல்ல. இன்னும் பல மருந்துவ நிறுவனங்களும் காப்புரிமை முடிவுக்கு வரும் காலங்களில் தங்கள் மருந்துகளில் சற்றே மாற்றம் செய்து மீண்டும் காப்புரிமை பெற்றுவிடுகின்றன. எலி லில்லி (Eli Lilly) நிறுவனத்தின் ப்ரோஸாக் (Prozac) காப்புரிமை முடிவுக்கு வரும்பொழுது இதே முறையில் ஒளிவினை கொண்ட (S)-Fluoxetine என்ற இரண்டாம் வடிவத்தைத் தயாரித்து காப்புரிமையைத் தக்கவைத்துக் கொண்டது. இன்னும் இருக்கும் மருந்தின்மீது இன்னொரு படலப் பூச்சைச் சேர்த்து (இப்படிச் சேர்ப்பதன்மூலம் அது மெதுவாகக் கரைந்து நீண்ட நேரத்திற்குச் செயல்பட்டுப் பலனளிக்கிறது என்று நிறுவுகிறார்கள்), அல்லது வேறு ஒரு எந்த மருத்துவக் குணமும் இல்லாத இன்னொரு பொருளைச் சேர்த்து – இப்படிப் பல வழிகளில் காப்புரிமைகளைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

    கடந்த இருபது வருடங்களில் அமெரிக்கத் தேர்தலில் மருந்து நிறுவனங்கள் செலவழிக்கும் பணம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. 1990-ல் $3.2 மில்லியன் செலவிட்ட மருந்து நிறுவனங்கள், கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட $20 மில்லியன்கள் செலவிட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் இதுவரை $10 மில்லியன்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன. (இப்பொழுது முன்னோட்டத் தேர்தல்கள்தான் நடக்கின்றன). கடந்த இரண்டுமுறை தேர்தல்களுக்காக ஜார்ஜ் புஷ் கிட்டத்தட்ட இருபது மில்லியனகள் தானமாகப் பெற்றிருக்கிறார் என்று opensecrets.org தளம் தெரிவிக்கிறது. இதற்குக் கைமாறாக மருத்துவக் காப்பீடுகளில் அரசாங்கத்தின் நிலையை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் நிலை பிற நாடுகளையும் கட்டாயம் பாதிக்கிறது. எனவேதான் உலகம் முழுவதும் மருந்து நிறுவனங்களின் இலாபம் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருக்கிறது.

    சந்தைப்படுத்தல், அரசியல், விளம்பரம், போன்றவற்றில் செலவு குறைந்து உண்மையான அறிவியல் ஆராய்ச்சியில் முதலீட்டை அதிகரிக்காவிட்டால் நம் தலையில் இன்னும் பல வருஷங்களுக்கு பழைய மருந்துகளையே புதிய மொந்தையில் அடைக்கப்பட்டு தலையில் கட்டப்படும். அறிவியலில் எவ்வளவு முன்னேற்றம் நடந்தாலும் அதன் பலன்கள் நம்மிடம் வந்தடையப் போவதில்லை.

    மேலதிக விபரங்களுக்கு:

    ஒளிவினை பற்றிய விளக்கங்களுக்கு Crystals and Optics, Elizabeth Wood, Dover Publications

    Pill Pushers, Forbes, May 08, 2006

    High Prices – How to think about drugs, New Yorker, Oct. 25, 2004

    US Presidential Elections – Long term contribution trends, Pharmaceuticals/Health products,

    9 Responses to முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 2

    1. March 8, 2008 at 1:37 am

      அருமையாக, புரியும்படி இருந்தது. உடலுக்குள் நடக்கும் வேதிவினைகள் என்று யாராவது ஒரு தொடர் எழுதமுடியுமா? இதுபற்றி எளிமையான பாபுலர் அறிவியல் புத்தகம் ஏதேனும் இருக்கிறதா?

      மாத்திரைகள், மருந்துகள் தயாரிப்பவர்கள் எங்கிருந்து தொடங்குகிறார்கள், எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஒரு தொடர் யாராவது எழுதினால் நன்றாக இருக்கும். அத்துடன் பொதுவாக பலரும் பயன்படுத்தும் மருந்துகள் உடலில் சென்று எம்மாதிரியான வினைகளைப் புரிகின்றன என்பதையும் விளக்க ஒரு தொடர்?

      எ.கா: சாதாரண ஜுரம் (வைரல், பேக்டீரியல்) வரும்போது உடலுக்கு என்ன ஆகிறது? ஒரு பாரசிடமால் மாத்திரை போட்டுக்கொண்டால் அதைத்தொடர்ந்து உடலில் என்னென்ன வேதிவினைகள் நடக்கின்றன? பாரசிடமால் வேதிப்பொருள் என்ன ஃபார்முலா? அதை எப்படி உருவாக்குகிறார்கள்? etc. etc.

    2. பத்மா அர்விந்த்
      March 8, 2008 at 12:01 pm

      அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இதில் பல புதைமண் விவகாரங்களை மேலோட்டமாக தொட்டிருக்கிறீர்கள்.
      1. மருந்து நிறுவனங்கள் லாபி செய்வதற்கும் மேலாளர்களை கவனிக்கவும் தரும் “கொடை”

      2. ஒரு காலத்தில் மருத்துவர் பரிந்துரை தேவையாக இருக்கும் மருந்துகள் பின் oTC யில் விற்கப்பட தேவையான அனுமதிக்காக தரப்படும் லஞ்சம்

      3. காப்புரிமை முடியும் தருவாயில் பல வேரு பலன்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காப்புரிமை பெற்று அடிக்கும் கொள்ளை

      4. மருந்து நிறுவனங்கள் தங்களுக்குள்ளே பகுதி பொருட்களை விற்று, வேறு பெயரில் மக்களிடியே சுரண்டும் செயல்பாடு (Pfizer and novartis on Lipitor)

      5. காப்பீடுகள் செய்யும் ஊழல்
      6. மருத்துவர்கள் இந்த மருந்தை எழுதித்தர பெரும் மிகப்பெரிய பங்கு,
      7.மருந்து FDA யின் பல படிகளில் அனுமதி பெற செய்யப்படும் ஆதார clinical trail ஆராய்ச்சி முடிவுகளை எழுத தரும் பணம்
      8.ஒரு மருந்தை பற்ரி பல ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்களிடம் கட்டுரை எழுதி அதை பரப்ப ஊடகங்கள் பெறும் முதல்
      9. விளம்பரங்கள், வழக்கறிஞர்கள்
      10. மருந்தின் தன்மையை எழுதி அதை மருந்துடன் போட்டு தரும் படிவத்தை எழுதும் clinical writer நிர்ப்பந்திக்கப்படுவது

      food supplements, diet pills என்று வரும் பல மாத்திரைகள் இன்னொரு பக்கம்.

      எந்த மருத்துவ புரிந்துணர்வும் இல்லாமல் விளம்பரங்களை பார்த்து மருந்தை கேட்டு வாங்கும் பாவப்பட்ட மக்கள், இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் இதை எடுத்து கொள்ளக்கூடாது என்ரு தெரியாமல் அவஸ்தை பட அதில் ஊதியம் பார்க்க விரும்பும் வழக்கறிஞர்கள் என்று எதை எழுத எதை விட. சமீபத்தில் நிறைய மருந்துகள் ஒன்ரோடொன்று வினையாற்றி மருத்துவ சிக்கல்களோடு மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகமாகி விட்டனர். சண்டிக்ஸ் என்று ஒரு புதிய மருந்து, புகை பிடிக்கும் பழகத்தை விட உதவுவது, பலரை தற்கொலைக்கு தள்ளி விடுவதும், மனநல நோயாளிகளாக மாற்றுவதையும் செய்கிறது. கடந்த வாரம் இதுகுரித்து ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது.

      கொமாடின் என்ற மருந்து எடுத்துக் கொள்ளும் போது லெட்யூஸ் சாப்பிடுவது ஆபத்து என்பதை மருத்துவர் சொல்லாமல் விட, ஒரு 40 வயதுக்காரர் சமீபத்தில் இறந்து போக அது மிக பெரிய செய்தியாக நண்பர்களிடையே வந்தது.
      மெர்க் சமீபத்தில் ஒரு மருந்தை கண்டுபிடித்தது. ஆனால் அந்த நரம்பியல் நோய் உள்ளவர்கள் மொத்தமே 400 பேர் என்பதால், மார்க்கெட்டிங் துறை அந்த மருந்தை விற்க வேண்டாம் என்ரு சொல்லிவிட, அது கிடைப்பில் போடப்பட்டது. அதற்கான r&D செலவு மற்ற மருந்துகலின் செலவுக்கணக்கில் ஏற்றப்படும். ஆனால் அந்த நோய் கொண்ட சிறுவனின் அம்மா இதை குறித்து படித்ததை நினைவில் கொண்டு, salt lake city மருத்துவர்களிடம் பேசி, மெர்க்கில் இருந்து அதை நிறைய விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். அந்த மருந்தை கொண்டுவர, இப்போதுநிதி சேர்க்கவும் ஆரம்பித்திருக்கிறார்.

      மருந்து நிறுவனங்கள் தாண்டி, கட்டுரையின் அறிவியல் குறித்து ஒரு கருத்து: prilosec is slow releasing drug. Nexium is not, and it reaches pharmacokinetics peak in short time, and hence is powerful in short term. as a friendly advice, stay away from both. eat every 1 hour, drink lots of buttermilk, and avoid high glycemic index fruits and vegetables. Please check up for H.Pylori. You might have an active vagus nerve, and that could cause excess acid secretion.

    3. வெங்கட்
      March 8, 2008 at 6:59 pm

      பத்ரி – இது ரொம்ப சிக்கலான விஷயம் இல்லையா? வெவேறு மருந்துகள் வேவ்வேறு வேதிவினைகள். அதைத் தவிர நோய் இருப்பவருக்கு ஒருவிதமான வினை, இல்லாதவருக்கு வேறுவகையில்.

      வேண்டுமானால் ஏதாவது ஒரு விஷயம் (இந்த அமில மேலேற்றத்தையே எடுத்துக் கொள்ளலாம்) பற்றியும் அதற்கு வெவ்வேறு மருந்துகள் எப்படி வினைபுரிகின்றன என்பதையும் பற்றி எழுதலாம். ஒரு நாள் முயற்சிக்கிறேன். அதற்கு முன்னால் இரண்டு புத்தக சமாச்சாரங்கள் ஒத்திப்போட்டவை இருக்கின்றன.

    4. வெங்கட்
      March 8, 2008 at 7:06 pm

      பத்மா – நீங்கள் சொன்னதைப் போல இதில் தொட்டது நுணியைத்தான் ஆணிவேர் வரை வியாதி வெகுவாகவே பரவிக் கிடக்கிறது. என்றைக்காவது ஊக்கம் வந்தால் கொஞ்சம் எழுதலாம்.

      மற்றபடி – நான் என்னுடைய பழக்கங்களை இதற்காக நிறையவே மாற்றி கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் மிச்சமிருந்த ஒரே கெட்டப்பழக்கம் (தொட்டில் பழக்கம் எங்க அம்மா எனக்கு இரண்டாவதாகக் கொடுத்தது இதைத்தான்) காப்பியை விட்டிருக்கிறேன். தினசரி பத்துமணிக்குப் படுத்துக் கொள்கிறேன் (இரவு கண்விழிக்கும் கல்லூரிகால பழக்கத்திற்கு முடிவு வந்திருக்கிறது) – இதனால் படிக்கும் புத்தகங்கள், எழுதுவது எல்லாம் குறைந்துவிட்டது. எப்பொழுதுமெஎ உறைப்பு, புளிப்பு, எண்ணை எனக்கு அதிகம் பிடிக்காது. இப்பொழுது கொஞ்ச நஞ்சம் இருந்ததும் போய்விட்டது. சோகமான விஷயம் ரொம்ப பிடித்த ஆப்பிளை சாப்பிட முடியாமல் இருப்பது. நெக்ஸியத்திலிருந்து சீக்கிரமே வெளியே வந்துவிடுவேன். இந்த வசந்தகாலம் வரட்டும் – Physical activity will increase.

    5. March 9, 2008 at 1:08 pm

      பயனுள்ள கட்டுரைக்கு நன்றி, முனைவர் வெங்கட்.

      வயிற்றெரிச்சலின் கீழ்படிதலுள்ள நிரந்தர நண்பனான அடியேனுக்கு, சில சமயங்களில் ஒரு சிறு கைபிடி வெந்தயமும் அதன் மேல் (வீட்டில் உறையூற்றிய) ஊற்றிக் கொண்ட மோரும் உதவியிருக்கிறது. மேலக்ஸ்,பிஸ்மால் வகையறாக்கள் எதிர்வினைகளைத்தான் அதிகமாய் தருகின்றன. போனவாரம் சுண்டைக்காய்+கத்தரிக்காய் வத்தக்குழம்பை பல ஆண்டுகள் கழித்து சாப்பிட்டுவிட்டு குட்டி போடாத பூனையாய் லைந்து கொண்டிருந்தேன். 1% பால் சேர்த்த தேநீரும், கொஞ்ச நாழி கழித்து ஒரு அப்பிளூம் சாப்பிட்டேன். கார எரிச்சல் நிறைய குறைந்தது. உங்களுக்கு அப்பிள் ஒத்துக் கொள்ளாது ஆனால் எனக்கு உதவுகிறது! கொலஸ்றாலுக்கு எடுத்துக் கொள்ளும் லோவாஸ்டேடின் (Lovastatin ) குளிகையின் குப்பியில், மறந்தும் Grape Fruit (பம்ப்ளிமாஸ்) சாப்பிடாதேன்னு எச்சரிக்கை போட்டிருக்கிறான்.

      நிற்க,

      டுப்யா புஷ் ஆனால் சரி, அதற்கு முன் இருந்த பெண்பித்தன் கிளிண்டனும் சரி, நாளைக்கு வரக்கூடிய “(உ)வொய்ட் வாடர்” புகழ் ஹிலரி அல்லது ஊருக்கு உபதேசம் செய்யும் ஒபாமாவும் சரி – ஓரளவுக்கு குறைந்த அளவில் – ஜான் மெக்கெயுனும் சரி – மருந்து நிறுவனங்களுக்கு ஒத்துதான் ஊதினார்கள்,ஊதுவார்கள் என நினைக்க முடிகிறது. ஃபைசர் போன்ற நிறுவனங்களை எதிர்த்தாட ஆர்வமோ, தைரியமோ யாருக்கும் உள்ளதா தோணலை ;(

    6. பத்மா அர்விந்த்
      March 9, 2008 at 4:21 pm

      பைசரைவிட மற்ற நிறுவனங்களின் நிலை இன்னும் மோசம் என சில உள் நிறுவன தகவல்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். எப்படி எந்த தலைவர் வந்தாலும் ஆயுத நிறுவனங்களின் சொல்லுக்கு கீழ்ப்படிவார்களோ அப்படியே மருந்து நிறுவனங்களும்.

      வாசன், சென்ற வாரங்களில் இன்னொரு அரசியல் முடிவில் இறைச்சி விலக்கிகொண்டதை பார்த்தீர்களா? இது விவசாய துறையின் மோதல்.

    7. March 10, 2008 at 3:59 am

      வெங்கட்,

      அருமையான கட்டுரை. பத்ரி சொன்னதுபோல எளிமையான தொடரோ/புத்தகமோ இந்த மருந்துகள் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி எழுதினால் தேவலை.

      சுமார் ஒரு வருட காலம் ஒமிபிரசோல் (வேறு வேறு வடிவங்களில்).. சாப்பிட்டு வந்தேன், ஸ்பெஷலிஸ்டுகளில் காண்பித்து, எண்டாஸ்கோபி எடுத்து, சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி என வந்தாலும் வயிற்றுபுண்/எரிச்சல் குறையாமல் (அதாவது மருந்து சாப்பிட்ட நேரம் மட்டும் ஒரு பரவாயில்லை உணர்வு இருக்கும்) கஷ்டப்பட்டு வந்தேன். பக்கத்துத்தெரு ரெகுலர் வைத்தியரிடம் சென்றபோது ஒன்று சொன்னார் – No worry – No curry – No hurry – இதில் Worry எனப்படும் கவலைகாரணமாகவே இந்த வயிற்றுப் பிரச்னை இருப்பதை கொஞ்சம் தாமதமாகவே உணர நேர்ந்தது. உறவினர் ஒருவரின் உதவியால் ரெய்கி எடுத்து செய்ய ஆரம்பித்ததில் கொஞ்சம் குறைந்தது. மருந்தை நிறுத்தி தினமும் 2 மணிக்கு ஒரு முறை ஏதேனும் ஃபில்லிங்காக சாப்பிடும் (எண்ணையற்ற, காரமற்ற) ஐட்டத்தை அலுவலகத்திற்கும் எடுத்துச் சென்றேன். காப்பி குடிப்பதை (வீட்டிலும், அலுவலக்த்திலும் முழுக்க நிறுத்தினேன் – அதற்குப் பதில் டீ அல்லது போர்ன்வீடா). அடிக்கடி மோர். (தினமும் ஒரு டம்ளராவது மோர் குடிப்பது). இவையெல்லாவற்றையும் விட க்வலைப் படுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி இப்போது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மோன நிலைக்கு மனதைக் கொண்டுவந்துள்ளேன். அதுவே பெரிய மாற்றத்தை உடலளவில் கொண்டுவந்துள்ளது. இப்போது மருந்துகள் எடுப்பதில்லை. அவ்வப்போது நெஞ்சரிச்சல் வந்தாலும் உணவை சரிப்படுத்தி வழிக்குக் கொண்டுவரமுடிகிறது. கவலையைக் குறைத்தால் இது நிச்சயம் சாத்தியம் என்றே தோன்றுகிறது.

      நன்றி
      அலெக்ஸ் பாண்டியன்.

    8. Soundar
      March 10, 2008 at 11:49 am

      Pfizer has been relying on the reputation of Dr. Robert Jarvik, one of the pioneers in designing artificial hearts, to bolster sales of Lipitor, its cholesterol-lowering drug. Now that a U.S. congressional committee is investigating the credibility of those ads, the company has dropped Jarvik as its pitchman.

    9. Pingback: வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *