எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர அடைக்கலம் கீபோர்ட். விரைவில் இணையம் வழியே அவரைப் போல ஆர்வம் இந்திய மென்கலன் நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பாடல்களை வெளியிட்டார். இதில் முக்கியமான விஷயம் திரையிசையை ஒத்த பாடல்களை உருவாக்குவதற்கு பல பேர் ஒன்று சேர வேண்டியிருக்கிறது; பாடலாசிரியர், இசையமைப்பாளர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர், ஒலிப்பதிவு நுட்பர் என்று பலருடைய ஒத்துழைப்பு தேவை. முந்தைய நாட்களில் இவரகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே ஒலிப்பதிவுக் கூடத்தில் கூட வேண்டியிருந்தது. நவீன நுட்பம் இதைத் தேவையற்றதாக ஆக்கியிருக்கிறது. ஆரம்பகாலப் பாடகர் ஒருவரை வைத்துப் பாடலைப் பதிவு செய்து அனுப்பினால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவருக்குத் வசதிப்படும் நேரத்தில் அதே பாட்டையில் (track) தன் குரலில் பாடியதைப் பதிவு செய்து அனுப்பிவிடுவார். இதே முறையில் ஸ்ரீகாந்தும் அவர் நண்பர்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துகொண்டே பாடல்களை உருவாக்கினார்கள். இவற்றில் பல mp3.com, iTunes போன்ற தளங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. விரைவில் ஸ்ரீகாந்தின் திறமை அவரைப் புதிய இடங்களுக்கு இட்டுச் சென்றது. சென்னையில் ஸ்ரீநிதி சிதம்பரத்தின் க்ரியா கிரியேஷன்ஸ் ஸ்ரீகாந்தின் மாஹாகவி என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டது. இந்தத் தொகுப்பில் பாரதியாரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் மெட்டமைத்து இசை கோர்க்க எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீனிவாஸ் போன்ற முன்னணி திரையிசைப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு பாடல் இங்கே;

பாடல்: சின்னஞ்சிறு கிளியே…
இசை : ஶ்ரீகாந்த் தேவராஜன்
தொகுப்பு: மஹாகவி (2006)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : பாரதியார்
[audio:chinanchiru.mp3]


இதில் முக்கியமான விஷயம், ஸ்ரீகாந்துடன் இணைந்து பங்கு பெறும் இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் ஒருவருக்கொருவர் தூள்.காம், டிஎஃபெம்பேஜ்.காம் தளங்களில் வழியே ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள். அந்தத் தளங்களில் திரையிசை உரையாடல்களைத் தவிர இசைகோர்ப்பு, பதிவு நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. சென்ற பகுதியின் இறுதியாகப் பட்டியலிட்ட படைப்புகளை உருவாக்கத் தேவையான ஐந்து சாத்தியக்கூறுகளையும் இந்தத் தளங்கள் நிறைவேற்றுவதை எளிதில் பார்க்கமுடியும். தொடர்ந்து ஸ்ரீகாந்த் குழுவினர் வெளியிட்ட H1BEES என்ற இசைத் தொகுப்பு பிபிஸி, வாஷிங்கடன் போஸ்ட், ரேடியோ ப்ரான்ஸ் உள்ளிட்ட பல மிடையங்களில் (media) பாராட்டு விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது. இந்தத் தொகுப்பில் அமெரிக்காவின் நிரல் எழுதும் இந்தியர்களின் வாழ்க்கைச் சிக்கல்களும் நெருக்கடிகளும் நகைச்சுவையுடன் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.
[youtube]http://www.youtube.com/watch?v=xbBsDOzxZlU[/youtube]

மற்றொரு மூலையில் மலேஷியாவில் யோகி.பி, நட்சத்திரா குழுவின் வல்லவன் என்றொரு இசைத் தொகுப்பு 2006-ல் வெளியானது. தமிழில் முதல்முறையாக ஹிப்-ஹாப் என்ற அமெரிக்க நவஇசை வடிவத்தையொற்றி வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பு இது. இத் தொகுப்பின் இளையராஜாவின் மிகப் புகழ்பெற்ற மடைதிறந்து பாடலை இந்த இளைஞர்கள் மறுவடிவாக்கம் செய்திருக்கிறார்கள். ஹிப்-ஹாப் இசைவடிவத்தின் முக்கிய கூறான மறுகலவை (Remix) உத்தி இந்த இசைத்தொகுப்பு முழுவதும் மிகத் திறமையாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆங்கிலமும் தமிழும் வெகு நேர்த்தியாகச், சற்றும் செயற்கைத்தனமின்றி இன்றைய இளைஞர்கள் உலகில் கையாளப்படும் அதே வடிவில் வெளிப்பட்டிருக்கிறது. ஜெனிபர் லேபஸின் பாடலை கர்நாடக சங்கீதத்தில் பாடிப்பார்க்கிறார்கள், 50 செண்ட்ஸின் ராப் பாடல் தமிழ்ப்படுத்தப்படுகிறது, மேடைப்பேச்சு பாடலை முத்தாய்ப்பாக முடிக்கிறது. திருமூலரின் திருமந்திரம், டாக்டர் ட்ரே-யின் ராப், மஹாருத்ரம், சாவுமணி, காங்க்ஸ்டா ராப், காமசூத்ரா, இளையராஜா என்று கலவையான இந்த இசைத் தொகுப்பு என்னை பொருத்தவரை தமிழ் இசை உலகில் ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரமாகக் கையில் தொலையியக்கியை வைத்துக்கொண்டு உட்கார்ந்து தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் சமுதாயம் கலைகளைத் தம்முள்ளே மறு நிகழ்வாக நடத்திப் பார்க்க வேண்டிய அவசியத்திற்கு விழித்துக் கொண்டிருப்பது இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இளையராஜாவை வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இருபது வருடங்களுக்கு முன் வெளியான அவர் படைப்புக்கு இன்றைய வடிவத்தைச் சூட்டி தங்கள் உலகிற்கு அவரைக் கைகோர்த்து அழைத்துச் செல்கிறார்கள். யூட்ய்பூப் தளத்தில் எத்தனையோ தமிழ்த் திரையிசைப் பாடல்கள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டிருந்தாலும் வல்லவன் இசைத் தொகுப்பு பெற்ற வரவேற்பை எதுவும் பெறவில்லை என்றே தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் வல்லவன் குழு இளைஞர்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்வது. இங்கே படைப்பாளிகள் கைதொழுது வியக்க வேண்டிய வஸ்துக்கள் இல்லை, அவர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு சேர்ந்து பாடமுடியும்.

* * *

இசைக்கு அடுத்தபடியாக சலனப்படங்கள். குறும்படங்கள் இன்றைய நுகர்வோர்களில் சிலரைப் படைப்பாளிகள் தளத்திற்கு உயர்த்தியிருக்கிறது. வலைப்பதிவு நண்பர் டுபுக்கு தன் தினசரி வாழ்க்கையின் சில நிமிடங்களை கையளவுக் காமெராவின் உதவியுடன் குறும்படமாக மாற்றியிருக்கிறார். மிகச் சுலபமாக 1,500 முறை இந்த குறும்படம் பார்வையிடப்பட்டிருக்கிறது. இன்னொரு வலைப்பதிவர் அருண் வைத்தியநாதன் தன் அமெரிக்க நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய The Noose உள்ளிட்ட சில குறும்படங்கள் அவருக்கு சில விருதுகளுடன் மட்டுமலாமல் முழுநீளத் தமிழ்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறன. (இப்படத்திற்கு இசையமைப்பு ஸ்ரீகாந்த தேவராஜன்; இன்னொரு இணைய இணைப்பு). வழக்கமான துணை நடிகைக்கு உச்சரிப்பு சொல்லித்தருவது, கதாநாயகிக்கு சொம்பில் ஆப்பிள் ஜூஸ் வாங்கித் தருவது போன்ற துணை இயக்குநர் வழிகளிலிருந்து மாறுபட்டு நேரடியாக இணையத்திலிருந்து இயக்கத்திற்குச் செல்கிறார் அருண். நாளை அருணின் படம் எந்த அளவிற்கு வெற்றி பெறப்போகிறது என்பதை அவர் உட்பட யாராலும் சொல்ல முடியாது என்றாலும் ஒன்றை மட்டும் சர்வ நிச்சயாக என்னால் ஊகிக்க முடிகிறது; அருணின் அச்சமுண்டு அச்சமுண்டு வெற்றி பெற்றால் குண்ட்டூரில் மிளகாய் வித்த காசில் படமெடுக்கப் போகும் அடுத்த முதலாளி யூ டியூப்-ல் குறைந்த பட்சம் ஐந்து மணிநேரத்தையாவது தெலுகுதேச அருண் வைத்தியநாதனைக் கண்டுபிடிப்பதில் செலவிடுவார்.

* * *

மிக விரைவாக இசை, குறும்படம் போன்ற துறைகளில் நடந்திருக்கும் மாற்றங்கள் தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் இன்னும் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் திரைப்படம், இசை போன்ற துறைகளில் முதலீடுகளை கணினி இசைக்கோர்ப்பும், கையளவு காமெராக்களும் வெகுவாகக் குறைப்பதைப் போன்று புதிய படைப்பாளர்களின் வருகைக்கான தடை எழுத்து உலகில் அதிகம் இல்லை என்பதே. ஆனால் இன்னும் ஐந்து வருடங்களில் உலகைப் புரட்டிப் போடப்போகும் அடுத்த புதினமாக இருந்தாலும் புதிதாக உள்ளே வருவர் தலகாணி அளவு நோட்டுப் புத்தகத்தைக் காட்டினால் பதிப்பாளர் ”போய்க் கம்ப்யூட்டர்ல போட்டு ஒரு சி.டில எடுத்துக்கிட்டு வாங்க” என்று திருப்பியனுப்பும் சாத்தியம் இருக்கிறது.

முக்கியமான விஷயம்: இணையத்தின் வழியே இலக்கியப் படைப்புகள் உருக்கப்படும்பொழுது அது வழமையான இந்திய செவ்வியல் மரபுக்கூறுகளை உள்வாங்கிக் கொண்டு பண்டிதர்கள் புட்டியில் அடைத்து விற்கும் ‘சாமுத்ரிகா’ லட்சணங்களை கொண்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜப்பானியர்கள் இப்பொழுது செல்பேசிகளைப் பயன்படுத்தி நாவல்களை எழுதத் தொடங்கிவிட்டார்கள். பதினான்கு மாதங்களில் ஐந்து செல்பேசி நாவல்களை எழுதியிருக்கும் இருபது வயது சாக்கோ-ஸான் இன்றைக்கு ஜப்பானில் மிக அதிகமாக விற்கும் ஆசிரியர்களில் ஒருவர். அவருடைய ‘தேவதைகள் எனக்குக் கொடுத்தவை’ நாவல் ஒரு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டிருக்கிறது. ஆங்கில உலகமும் இப்பொழுது வரிவரியாக வலையாடும் ட்விட்டரைப் பயன்படுத்தி புதினங்களை எழுதத் தொடங்கிவிட்டது.

  • She had to be careful not to overdose, or the eggs would hatch prematurely. Roddy would kill her if she ruined this batch too. #t 07:25 PM February 02, 2008 from web
  • Barbara peered down into the glass. Her hand shook as she maneuvered the eyedropper above the first egg and released 2 drops of Manna. 07:23 PM February 02, 2008 from web
  • He turned his back on the urn, ignored the voices, and headed for the door. If only he could catch her before the eggs hatched. #L 08:39 AM February 01, 2008 from twitterrific
  • He knew he had to go see Barbara if he was ever going to get to the bottom of this. #t 09:39 PM January 30, 2008 from web

என்று பல நேரங்களில் இணையம், செல்பேசி என்று பல வழிகளில் எழுதப்படும் நாவல்களைத் தொடர்ச்சியாக 940 பேர் வரிக்கு வரி எழுதப்படும்பொழுதே படித்து வருகிறார்கள். இதுபோன்ற ட்விட்டர் நாவல்களில் ஆசிரியர் எழுதிய ஒரு வரிக்கு மாற்று உரையாடலை வாசகர் எழுத சில சமயங்களில் படைப்பு முழுக்க வேறு பாட்டையில் பயணிக்கத் தொடங்குகிறது.

ஏற்றம் இறைப்பவனின் பாட்டை களைபறிப்பவர் தொடருவதை போலத்தான்; ஏற்கனவே சொன்னதுபோல் இது உலகின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கும் பிரம்மாண்டமான எசப்பாட்டு.

* * *

இப்படி எழுதப்படுபவது எல்லாம் இலக்கியமாகாது என்று பல இடக்கைப் புறந்தள்ளல்கள் வருவது நிச்சயம். ஆனால் இவர்கள் ஒரு நிமிடம் நிதானித்து யோசித்தால் கொச்சகம், தரவு என்று கலிப்பா எழுதிய முதல் கவிஞனை வெண்பாக்காரர்கள் இப்படித்தான் நகையாடியிருக்கக் கூடும் என்று தோன்றலாம். கமலாம்பாள் சரித்திரத்திற்கும், பாரதியின் வசனகவிதைக்கும், சிறுகதைக்கும், நேரிலி புதினத்திற்கும், இன்னும் எல்லாவற்றுக்கும் இதே துவக்கங்கள்தான். ஈஸ்ட்மென்கலர்க்காரர்களைக் கருப்பு-வெளுப்புகாரர்கள்,….

இன்றைய ஊடகங்கள் தரும் சாத்தியங்கள் அளவிடமுடியாதவை. எல்லாவற்றையும்விட முக்கியானது இது வழக்கொழிந்துபோன உரையாடலுக்கும் மறுநிகழ்வுக்கும் மிகச் சுலபமாக வாசல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. ”பேப்பருல எழுதறத்தவுட கம்ப்யூட்டர்ல ரொம்ப ஈஸியா டைப்பண்ண முடியுது” என்பது மாத்திரமே கணினி/இணையத்தின் ஒட்டுமொத்த பயன்பாடு அல்ல. இந்த ஊடகத்தின் மாபெரும் பலமே உரையாடல்தான்.

கதவைத் திற, காற்று வரட்டும்.