இதன் முந்தைய பகுதிகள் : ஒன்று, இரண்டு

வலைப்பதிவுகள் இப்பொழுது பதின்ம வயதில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் மிகவும் சுவாரசியமான கட்டம். ஆர்வமும், சக்தியும் பொங்கியெழும் வயது. மூத்தவர்களை மதிக்காது தனக்கென ஒரு பாட்டை வகுத்துக்கொள்ளத் துடிக்கும் பிராயம். ஒருபுறம் கவர்ச்சிக்கான உறுப்புகள் வளர்ச்சியும் மறுபுறத்தில் ஒழுங்கற்ற ரோமங்கள், முகப்பருக்கள், உடைந்த குரல் என்று அருவருக்கத்தக்க வளர்மாற்றங்களும். எல்லாம் தெரிந்துவிட்டதைப் போல ஒரு மதப்பு, மறுபுறம் பயணிக்க வேண்டிய நீண்ட தூரத்தின் சுமை. பதின்மம்தான் எத்தனை அற்புதமானது!

(இந்தப் பகுதியில் வலைப்பதிவுகளைத் தனித்து நோக்கமால் இணையம் என்ற பெரு ஊடகத்தின் பல்வேறு சாத்தியங்களையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே பதிவுகள் என்று எழுதினாலும் அதைக் கடந்த பிற இணையப் படைப்புகளையும் அது உள்ளடக்கியது என்பதை மனதில் கொள்ளவும்.)

வருங்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுதல் மிகவும் சிக்கலானது. பல்வேறு மேதைகளும் வரலாற்றின் பல காலகட்டங்களில் எதிர்வுகூறி சில வருடங்களிலேயே தங்கள் அபத்தங்களைக் கண்டு தலைகுனிந்திருக்கிறார்கள். என்னை நானே முட்டாளாக்கிக்கொள்ளும் சாத்தியம் நிறையவே இருப்பதை உணர்ந்தாலும் ஆர்வக்கோளாறினால் கொஞ்சம் ஊகமீடு (ஊகம்+மதிப்பீடு – Guesstimate) செய்துதான் பார்க்கலாமே!

முதலாவதாக சில எளிய விஷயங்கள்: தகவல் ஊற்று இப்பொழுதைக்குப் பெரும்பாலும் பரவலாக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா குண்டு போட்டதால் என்ன நன்மை நடந்தது என்று பெருஊடகங்கள் பிம்பங்களைச் சித்தரிக்க ஆயத்தமாகும் முன்னரே இராக்கின் ஒரு மூலையிலிருந்து ஒருவர் செல்பேசியில் எடுத்த படங்களுடன் அவலத்தை வலைபரப்புகிறார். ஆழிப்பேரலை வந்த அடுத்த நிமிடமே தகவல் இணையத்தில் பெருக்கெடுக்கிறது. ஆறாவது பந்திலும் சிக்ஸர் அடித்தால் பந்து விழுந்த இடத்திலிருந்தே செல்பேசியில் படங்கள் வருங்கின்றன. மலேசியத் திரையங்கிலிருந்து சிவாஜியின் முதல் காட்சியின் அரைமணி நேரத்திற்குள்ளாக பல்லேலக்கா சூப்ப்ப்பர் என்று ஒரு வரிப் பதிவு வருகிறது. ஒரு காலத்தில் ஊடகங்கள் தங்களுக்கு வேண்டிய வடிவத்தில் செய்திகளைக் கட்டமைத்துக் கொண்டிருந்த நிலை போக இப்பொழுது பன்முகப் பார்வைகள் தொடர்ச்சியாக இணையத்தை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் அடியில்லா ஆழ்கடலைப்போல காந்தச் சேமிப்பின் அளவு பெருகிக் கொண்டே போவதால் வரும் அத்தனை தகவல்களும் சேமிக்கப்படுகின்றன. இதனால் எந்த ஒரு நிகழ்வைக் குறித்தும் துல்லியமான பார்வைகள் எப்பொழுதும் அகழ்ந்தெடுக்கக் கிடைக்கின்றன. துல்லியம் என்று சொல்வதால் இவை சார்பற்றவை என்று அர்த்தமில்லை. ஆனால் சார்புள்ளவை என்று வெளிப்படையாகத் தெரிவதாலும், பல்சார்புத் தகவல்களும் எளிதில் கிடைப்பதாலும் வாசகர்கள் தங்களுக்கான தகவல்களை இரைச்சலிருந்து வடிகட்டிக் கொள்ளமுடியும். செப்டம்பர் 1989 வரை கிழக்கு ஜெர்மனியின் வானொலி அங்கே எரிச் ஹானேக்கர்க்கர் ஆட்சி மிகத் திறம்பட நடக்கிறது என்று பெரஸ்த்ராய்க்காவின் தேவையின்மையைப் பரப்பிக் கொண்டிருக்க இரண்டே வாரங்களில் இரும்புக்கோட்டை சரிந்தது. இரண்டாவது பெரிய சோஷலிச நாடு இவ்வளவு சீக்கிரம் தர்ந்துபோனது ஒரு பெரும் வரலாற்று அதிர்ச்சி. இந்த நாட்களில் அது சாத்தியமில்லை. உலகின் எந்த மூலையானாலும் எதிர்குரல்கள் தொடர்ச்சியாக, உரக்க ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இதில் வலைப்பதிவுகளின் பங்கு மிக முக்கியமானது.

வெறும் தகவலைத் தாண்டி செறிவார்ந்த களஞ்சியங்களும் இன்றைக்கு இணையம் வழியே வளர்ந்துவருகின்றன. 1768 தொடங்கி இரு நூறாண்டுகளைத் தாண்டி வளர்க்கப்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவை முகம் தெரியாத ஆர்வலர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட விக்கிப்பீடியா ஐந்தே வருடங்களுக்குள்ளாக ஓரங்கட்டிவிட்டது. இதன் முக்கிய காரணம் படைப்போர்-துய்ப்போர் இடைக்கோடு அழிந்துபோவது. இங்கே நுகர்வோர் என்ற தனியினம் கிடையாது. இதையும் தவிர இன்றைக்குச் சந்தையில் வந்திருக்கும் புதிய தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கலாமா என்ற குழப்பம் இருக்கிறதா? இதற்காக ஒரு வல்லுநரின் கருத்து தேவையில்லை. ஒரு நூறு சக பயணாளர்களின் கருத்து இணையமெங்கும் விரவிக் கிடக்கிறது. இவற்றுள் பல சார்பானவை என்றாலும் பெரும அளவில் இவற்றைக் காண, துல்லியமான கணிப்பு சாத்தியமாகிறது. ஒன்றிரண்டு பண்டிதர்களின் இடத்தை ஒரு நூறு பாமரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். குழந்தை வளர்த்தல், மார்பகப் புற்றுநோய், சரியப் போகும் பங்கு, திரைப்படம், புத்தகம் என்று எல்லாவற்றிலும் பண்டிமர்கள் (பண்டிதப் பாமரர்கள்) கருத்து சொல்லத் தயாராக இருக்கிறார்கள். இந்த வைக்கோற்போரிலிருந்து ஊசியைத் தேடியெடுக்கவும் அவர்களே உதவுகிறார்கள். தொடர்ச்சியாக தவறான தகவல்களையும், சார்பான விமர்சனங்களையும் அடையாளம் கண்டு இந்தப் பண்டிமர்கள் முத்திரை குத்துகிறார்கள். இந்த சக-விமர்சனத்திலிருந்து தப்புவது யாருக்குமே சாத்தியமில்லை. இரைச்சலும் குழப்பமும் நிறைந்த இணைய உலகில் நம்பிகைத் திறத்தை சக-விமர்சனம் (peer review) உறுதி செய்கிறது. அறிவியலின் இன்றைய வளர்ச்சியில் சக-விமர்சனத்தின் இடம் மிகவும் முக்கியமானது.

இதைத் தொல்லூடகங்கள் (நாளிதழ்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி, வானொலி) உணரத் தொடங்கியிருப்பதன் அறிகுறி அவர்களையும் இதே முறைக்கு மாற்றிக் கொள்வது. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், டைம் உள்ளிட்ட முன்னணி சஞ்சிகைகள் தங்கள் ஆக்கங்களைப் பரிந்துரைக்கச் சொல்கின்றன. சில சஞ்சிகைகளின் தங்கள் ஆக்கங்களின் கீழேயே வாசகர்கள் கருத்தெழுதும் வசதியைத் தருகின்றன. பெரும்பாலானவை தங்கள் இணையத்தின் ஒரு பகுதியாக வலைப்பதிவுகளை உருவாக்கி அதன்கீழ் விவாதத்திற்கு வருமாறு வாசகர்களை அழைக்கின்றன. தொலைக்காட்சிச் செய்திகளில் நடுங்கும் கைகளுடன் வாசகர்கள் எடுத்த குழப்பமான செல்பேசிப் படங்கள் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்கின்றன. இப்பொழுது சந்தேகத்திற்கு இடமின்றி பயணர் பங்களிப்பு செய்தியில் முக்கிய இடத்தைப் பெறத் தொடங்கியிருக்கிறது.

* * *

இப்படி நொடி நேரத் தகவல் சொல்வதில் இவற்றின் பங்கைத் தவிர்த்து இவர்களால் ‘ஆழமாக’ ‘உருப்படியாக’ ஏதாவது சாதிக்க முடியுமா என்ற விமர்சனம் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கிறது. உற்பத்தியும், படைப்பும் இவற்றின் வழியே சாத்தியம்தானா? இதற்கும் ஆம் என்றுதான் தோன்றுகிறது. இதன் இடைக்கட்டம்தான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு ராண்டம் ஹவுஸ், பிக்க்டோர், உள்ளிட்ட பல முண்ணனி பதிப்பாளர்களின் முகவர்கள் தங்கள் அடுத்த நட்சத்திரத்தை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எழுதத் தொடங்கி நான்கே மாதங்களான வலைப்பதிவாளருக்கு ராண்டம் ஹவுஸிலிருந்து $300,000 முன் பணத்துடன் புத்தகம் எழுத ஒப்பந்தம் கிடைக்கிறது. Stuff White People Like என்ற வலைப்பதிவை புத்தகமாக்கக் கொடுக்கப்பட்ட இந்த முன்பணம் முன்னெப்பொழுதும் இல்லாத சாதனை. இதில் போட்ட பணத்தை ராண்டம் ஹவுஸ் எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது 75,000 பிரதிகளாவது அச்சிட்டாக வேண்டும். அது எடுத்த எடுப்பிலேயே அதிக விற்பனை பட்டியலில் இடத்தை உறுதி செய்கிறது. இன்னும் இரண்டே வருடங்களில் இப்படி வலைப்பதிவுகள் புத்தகமாதல் மிகச் சாதாரணமான தினசரி நிகழ்வாகிவிடும் என்று ராண்டம் ஹவுஸ் சொல்கிறது.

தமிழிலும் இது மிக தன்னிச்சையாக நிகழத் தொடங்கிவிட்டது. காஞ்சனா தாமாதரன், கோகுலக் கண்ணன், வெங்கட்ரமணன், ஜெயபாரதன், பத்ரி சேஷாத்ரி, சொக்கன், சுவடு சங்கர், ரஜினி ராம்கி, லிவிங் ஸ்மைல் வித்யா, சிறில் அலெக்ஸ் என்று இணையம் வழியே பரிச்சயமானவர்களின் எழுத்துக்கள் புத்தகங்களாக மாறியிருக்கின்றன. (இணைய செய்திக் குழுமங்களிலிருந்து பதிவுகள் வரை தொடர்ச்சியாக தமிழிணையப் பங்களிப்பாளரான பத்ரியின் கிழக்கு பதிப்பகம் இதில் முனைந்து நிற்பதில் வியப்பேதுமில்லை).

* * *

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பொழுது எனக்கு ஆறு அல்லது எட்டு வயது இருக்கும். எங்கள் ஊருக்கருகில் கோடைநாட்களில் கிராமம் கிராமமாக மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கும். ஒவ்வொரு ஊரிலும் காப்பு கட்டியதிலிருந்து தேர் நிலைக்கு வரும்வரை ஊரைவிட்டு யாரும் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு இருக்கும். அந்த நாட்களில் கரகம், சிலம்பாட்டம், குறவன் – குறத்தி, பொய்க்கால் குதிரை, பொம்ம்லாட்டம் என்று மாலையில் தொடங்கி பின்னிரவில் ஆர்.எஸ்.மனோகர், நவாப் ராஜமாணிக்கம் என்று விடியல் வரை மக்கள் கலைகள் நடைபெறும். இவற்றில் பலர் உள்ளூர்க் கலைஞர்களாகவும் இருப்பார்கள். மறுநாள் பகலில் என் பெரியண்ணன் ச்ிறுத்தொண்ட நாயனாராக மாறி சீராளனான என்னை வெட்டி விருந்து கொடுப்பான். சில சமயங்களில் என் அம்மா இந்த நாடகத்தில் பார்வையாளராக இருப்பார். ஒப்பனை உதவியாக சீராளன் எனக்குக் காவித் துண்டைக் கட்டிவிடுவதும் உண்டு. இப்படிக் கலைகள் அனைத்தையும் மறுநிகழ்வாகத் தனக்குள்ளே நிகழ்த்திக் கொள்வது வாசகனின் இயல்பு. பின்னர் ஒரு வருடம் அதே திருவிழாவில் வெள்ளை வேட்டியைத் திரையாகக் கட்டி இருபது நிமிடம் மோர்க்குழம்பாக அஸ்ஸாம் ஆளுநர் கொடியேற்றிய இந்திய செய்திப் பிரிவின் படத்தையும், குடும்பக் கட்டுப்பாடு குறித்த பத்து நிமிடப் பிரச்சாரத்தையும் காட்டினார்கள். இந்த முப்பது நிமிடத் திரையிடலுக்காக பொய்க்கால் குதிரையைக் காவு கொடுத்துவிட்டு நாங்கள் மூன்று மணிநேரம் காத்திருக்கத் தொடங்கினோம். எனக்கு நினைவு தெரிந்தவரை நான் ஒரு நாளும் அஸாம் கவர்னராகக் கொடியேற்றியதில்லை. நிகழ்கலைகள் மெல்ல மெல்லத் திருவிழாவை விட்டு விலக்கப்பட திருவிழாவே இரண்டு நாளாகச் சுருங்கிவிட்டது.

திரைப்படம் வந்தபின்னும் பார்வையாளர்கள் மறுநிகழ்வு செய்தல் தொடர்ந்து வந்தது. சிகரெட்காகிதங்களை ஒட்டிச் செய்யப்பட்ட வேலேந்தி நான் நிற்க அடுத்த வீட்டு அண்ணன் எட்டு நிமிடத்திற்கு சிவாஜி வசனங்களைச் சீறிப்பொழிவான். இருபது வயதில்கூட “எனக்கின்று புரிந்தது எவரென்று தெரிந்து, ஹேய்” என்று கத்திக் கொண்டு எட்டாவது மாடிப்படியிலிருந்து பொத்தென்று குதித்து குதிகாலைச் சுளுக்கிக் கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சி வந்தபிறகு இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துபோய்விட்டது. எல்லோரும் உறைந்துபோய் சித்தியையும் அண்ணியையும் பார்த்தாலும் அடுப்பில் பாலைப் பொங்கவிட்டுப் பிழியப் பிழிய அழுதாலும் தங்களுக்குத் தாங்களே முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டு வசனம் பேசியதாகத் தெரியவில்லை. கொஞ்சக் கொஞ்சமாக தானும் ஒரு பாத்திரம் என்ற உணர்வு விட்டுப் போய் தான் வெறும் பார்வையாளர், நுகர்வோர் மாத்திரமே என்று ஒதுங்கத் தலைப்பட்டனர். இவர்களில் மிகச் சிறுபான்மையினர் மாத்திரம் ஸ்லோகம் சொல்லும் குழந்தையாகவும், பாட்டுக்குப்பாட்டு பாடும் குமரியாகவும், அரட்டை அரங்கப் பேச்சாளினியாகவும் அவ்வப்பொழுது தலைகாட்டினாலும் இவர்களும் பெரு-ஊடக சக்கரத்தின் ஒரு ஆரக்கோலாக மாத்திரமே இருக்கிறார்கள். சராசரி வாசகன் ஊடகத்திலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக் கொண்டுவிட்டான். பத்து வயதாகும் என் தங்கை மகனுக்குப் பொழுது போக்கு கிரிக்கெட் பார்த்தல்; விளையாடுவது இல்லை.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள், ஒன்று ஓய்வு ஒழிச்சலில்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்ச்சியாகத் தாக்கிக் கொண்டிருப்பது. மற்றது பிரம்மாண்டம். பொம்மலாட்டத்தை திரும்ப நடத்திப் பார்க்க சிறுவனுக்கு ஒரு முகபவுடர் டின் போதும். திரைப்படத்தைத் திரைப்படமாக நிகழ்த்துவதற்குப் உயர்நுட்பங்களின் உதவி தேவை. தொலைக்காட்சிப் பெட்டியினுள் நுழைவது இயலாத காரியம்.

மீண்டும் புத்தகங்களுக்குத் திரும்புமுன் பிற துறைகளில் இணையம் வழி எசப்பாட்டுகளிலிருந்து எப்படி முழுப்படைப்புகள் உருவாகியிருக்கின்றன என்று கொஞ்சம் பார்க்கலாம். தனித்தன்மை வாய்ந்த முக்கியமான படைப்புகளை இணையம் வழியே உருவாக்க அது தரும் சாத்தியக்கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிடலாம்:

1. கலைப்படைப்புகளை வெளிப்படுத்தவும் அதற்கான வாசகர்களை உருவாக்கிக் கொள்ளவும் மிக எளிய, தடையற்ற அமைப்புகள்
2. படைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பரஸ்பர உதவி
3. பண்டிதத்தனத்தைக் காட்டிப் பயமுறுத்தாமல், சற்றே கூடுதல் அனுபவம் உள்ள சக-படைப்பாளர்/வாசகரின் தோழமை கலந்த வழிநடத்தல்
4. தங்கள் செயல்களிலும் படைப்புகளிலும் பிறருக்கு ஆர்வம் இருப்பதைக் காணும் வாய்ப்பு
5. ஒருவருக்கொருவர் தோழமையையும் முக்கியத்துவத்தையும் வெளிக்காட்டி உருவாக்கும் சமூக அமைப்பு

இந்தச் சாத்தியக்கூறுகளைப் பற்றி கொஞ்சம் அசைபோடுங்கள். சுவாரசியமான சில உதாரணங்களுக்கு வருகிறேன்.

(பி.கு: இந்தப் பகுதியுடன் முடித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். எதிர்பாராத வேலகளின் காரணமாக முழுவதையும் எழுத முடியவில்லை. வலைப்பதிவுகளில் தொடராக ஒரு கருத்தை எழுதும் பொழுது நீண்ட இடைவெளி கூடாது என்பதால் எழுதியவரை உள்ளிட்டிருக்கிறேன்.)