தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம், மின்னூடகம், இவை செயல்படும் விதங்கள் குறித்த கருத்துப் பரிமாறல்களைத் தொகுத்து இப்படியொன்றை எழுதினால் பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது.

முன்னதாக – இது வலைப்பதிவுகள் செயற்பாட்டைக் குறித்த மதிப்பீடோ விமர்சனமோ இல்லை. வெறும் நுட்ப ரீதியான என் புரிதல்களைத் தொகுத்து எழுதுவதே இதன் நோக்கம். வலைபபதிவுகள் எப்படித் தோன்றின? (பத்து மதிப்பெண்கள்), தமிழின் முதல் வலைப்பதிவாளர் யார்? (இருபது மதிப்பெண்கள்) போன்ற கேள்விகளைத் தெரிவில் விட்டுவிடுகிறேன்.

வலைப்பதிவு எப்படி எழுதப்படுகிறது? பெரும்பாலான சமயங்களில் சமகால நிகழ்வுகளே வலைப்பதிவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. சில சமயங்களில் “சிகரெட்டைப் பத்தவைப்பது எப்படி?” என்று செய்குறிப்புகளும் வலைப்பதிவாக எழுதப்படுகிறது. இன்னும் வாழ்வியல் அனுபவங்கள், நனவோடை, பயணக்குறிப்பு இத்யாதி விஷயங்களும் வரலாற்றின் மின்னேடுகளில் பொறிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் பெரும்பாலான பதிவுகளுக்கு மிகச் சமீபத்திய நிகழ்வுகள் தூண்டுகோல்களாக அமைகின்றன. இதுமுற்றிலும் தனிப்பட்ட அனுபவமாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நாள் காலையில் நெக்ஸியம் முழுங்கியபின்னும் வயிற்றில் அமிலச்சுரப்பு கட்டுப்படாமல் போக அடுத்த இரண்டு நாட்களுக்கு அதைப்பற்றியே வாசித்து, அதையே எழுதியிருக்கிறேன்.

வலைப்பதிவுகளின் இன்னொரு முக்கிய திறப்பு சகபதிவாளர், வாசகரின் பதிவு/கருத்து/மின்னஞ்சல். உதாரணாமாக ‘ஞாநி’களுக்கு எதற்கு அறிவு? என்று பிரபு ராஜதுரை எழுதப்போக நான் எசப்பாட்டாக செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள் என்று எழுத, அதனடியில் நடந்த கருத்துப் பரிமாறல்கள் வலைப்பதிவுகள் செயல்படும் விதம் என்ற தொகுப்புப் பார்வையை எழுதத் தூண்ட, மறுகிளையாக அந்த விவாதங்களில் கவரப்பட்ட நாகர்ஜுனன் சோதனை முறையில் தன் வலைப்பதிவில் சிலகாலத்திற்குக் கருத்துக்களை அனுமதிக்கப் போவதாக எழுத… இப்படியாக வலைப்பதிவுகள் மிக இயற்கையாக உயிரூட்டமுள்ள நீண்ட உரையாடல்களாக நிகழ்வது கண்கூடு (இந்த உரையாடலில் இந்தியா, கனடா, அமெரிக்கா, இன்னும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் என்று பலரும் இடைத்தொலைவைப் பற்றிய பிரக்ஞையின்றி கலந்துகொள்வது நுட்பத்தின் கொடை).

நுட்பத்தின் பங்கைப் பிரித்துவிட்டு வலைப்பதிவுகளைத் தனியாகப் பார்க்க முடியாது. அதன் அடிப்படையில் வலைப்பதிவுக்கான அடிப்படைக்கூறுகளைப் பார்க்கலாம். முதலாவதும் முக்கியமானதும் பதிவு எழுதுபவரின் பங்கு. எழுத்தாளரின் பதிவுதான் உரையாடலைத் துவக்குகிறது. நிகழ்வின்/அனுபவத்தின் அடிப்படையில் அவர் தன் பார்வையை முன்வைக்கிறார். சில சமயங்களில் கதை, கவிதை, நிழற்படம் போன்ற படைப்புகளும் முன்வைக்கப்படுகின்றன. உரையாடலை ஏதுவாக்க பதிவர் சுட்டிகளைத் தருவது முக்கியம். மின்னூடகத்தின் அளப்பரிய வசதிகளில் இது மிக முக்கியமானது. வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு அலமாரி/நூலகம்/புத்தகக்கடை தேடிப் போய் ஏமாற வேண்டிய அவசியமில்லை. சுட்டெலியின் வலைப்பொறியைத் தட்டி இன்னொரு சாரளத்தில் தோற்றுவாயை அடைய முடியும். எனவே பதிவர் பார்வையில் முழுப் பின்புலத்தையும் பெறுவது மிக எளிதாகச் சாத்தியமாகிறது. இயன்ற அளவுக்குச் சுட்டிகளைத் தருவது வலைப்பதிவு உலகின் எழுதப்படாத நெறிமுறைக் கோட்பாடுகளுள் ஒன்று.

பதிவு, சுட்டிகளுக்கு அடுத்தபடியாக வருவது பின்னூட்டப் பெட்டி. இந்தப் புள்ளியில்தான் வழமையான படைப்பு/துய்ப்பு வழிமுறைகளிலிருந்து வலைப்பதிவுகள் தடம் மாறுகின்றன. வாசித்த அடுத்த நொடியில் வாசகர் படைப்பாளிக்குத் தன் கருத்தை அறியத்தருவது சாத்தியம். இந்த இடத்தில் காலம்-வெளி வித்தியாசங்கள் வழமையிலிருந்து மிகவும் குறுகிப்போகின்றன. இந்த நுட்பக் கண்டுபிடிப்புதான் வலைப்பதிவு என்ற ஒரு உலகையே திறந்துவிட்டிருக்கிறது. எனவேதான் பின்னூட்டப் பெட்டியை மூடுவது வலைப்பதிவு என்ற நுட்பத்தைச் சேதம் செய்வதாகிறது. பத்து வருடங்களுக்கு முன் என்ன நடந்துகொண்டிருந்தது? ஒரு பத்திரிக்கையில் சிறுகதை/கட்டுரை வரும். பெரும்பாலான சமயங்களில் இது எழுதப்பட்டு பல வாரஙக்ள்/மாதங்கள் கடந்துதான் காகிதத்தில் அச்சேறும். (பேனாவைக் கீழே வைத்துவிட்டு மசி காயுமுன்னர் தன் வாசகரைச் சேரவேண்டும் என்று விரும்பாத எழுத்தாளர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்?) பின்னர் தொடர்வண்டி, பேருந்து, பொதிவண்டி என்று பயணித்து பொட்டிக்கடையின் சணல் கயிற்றில் சில நாட்கள்/வாரங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும். ஆனால் வாசகி என்னமோ வாங்கி அடுத்த நொடியிலேயே கடைக்கு அருகிலேயே தன் ஆதர்ச எழுத்தாளரின் எழுத்துக்களை வாசித்து முடித்துவிடுவார். தன் கருத்தை எழுத்தாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் தடைகள் அதிகம் என்பதால் அதற்கான எத்தனமே இல்லாமல் போய்விடுவதான் வழக்கம். அப்படியே மீறி எழுதினாலும்… தன் படைப்பை நொடியில் வாசகனிடம் சேர்ப்பித்துவிடவேண்டும், ஆதர்ச எழுத்தாளர் எழுதியவுடன் வாசித்துவிடவேண்டும், வாசித்த உடன் ஆசிரியரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற மிக இயற்கையான உந்துதல்களுக்கு எந்தவிதமான சாத்தியங்களும் இல்லாத காலம் அது.

இதற்கான புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருப்பதுதான் வலைப்பதிவுகளின் அற்புதம். இந்த ஒரே காரணத்தினால்தான் இன்றைய தகவல் பரப்பில் வலைப்பதிவுகளுக்கு முதலிடம் இருக்கிறது. இதை நன்றாக அறிந்துகொண்ட பெயர் சொல்லத் தக்க அனைத்து அச்சு ஊடகங்களும் இன்றைக்கு வலைப்பதிவுகளை நடத்துகின்றன, வலைப்பதிவுகளைத் தங்கள் தகவல் ஊற்றுகளாக நம்பியிருக்கின்றன. பல முதல்தர இலக்கியப் படைப்பாளிகள், ஓவியர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலரும் மின்னூடகத்தைச் சார்ந்திருக்கத் தலைப்படுவது இன்றைய உலகில் அவற்றின் தவிர்க்க முடியாத இடத்தைக் காட்டுகிறது. இதைப் புறந்தள்ளி நிற்பவர்களின் எதிர்காலம் கட்டாயம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இன்றைக்குத் தகவலைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை, அது மடியில் வந்து கொட்டுகிறது. இன்றைய தலைமுறை இப்படி எத்தனமின்றி தகவல் பெறுவதால் தேடிச்சென்று வாசிக்கும் தேவையின்றி/திறனின்றி வளர்கிறது. அதேபோல இன்றைய தலைமுறை தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் காத்திருப்பதில்லை. நொடியில் பின்னூட்டப் பெட்டியை நிரப்புகிறது. வெறும் தகவல்களைக் கடந்த படைப்புகளும் பரிணாம மாற்றம் பெறுவது நிச்சயம். இதன் முதல் உதாரணங்களாக இசை, ஓவியம் போன்ற கலைகளில் இன்றைக்கு மின்னூடகத்தால் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள். இன்னும் ஐந்து வருடங்களில் நெகிழ்திரைகள் (Flexible Displays) பெருகிய பின்னர் காகிதத்திலும் திரைச்சீலையிலும் எத்தனை பேர் வரைவார்கள் என்பது கேள்விக்குறி (இதை வாசித்துவிட்டுத் துள்ளி எழுவதற்கு முன்பு பனையோலை/எழுத்தாணி வியாபாரி கூட இப்படி நம்பித் தன் வியாபாரத்தை இழந்ததை நினைவில் கொள்ளவும்). இதற்குத் தகவமையத் தயங்கும் யாரும் கீழடுக்கில் தள்ளப்பட்டு உறைந்துபோவது காலத்தின் கட்டாயம். நுட்பப் பெருவெடிப்பில் இதன் துரிதம் இன்னும் முடுக்கப்படுவது நிதர்சனம்.

பின்னூட்டம் என்பது அனைவருக்கும் தேவையானதாக இருக்கிறது. (எனவேதான் பதிவை மூடிவைப்பவர்களும் மின்னஞ்சலுக்குக் காத்திருக்கிறார்கள்). எதுவுமே தேவையில்லை என்பாட்டுக்கு எழுதிக்கொண்டு போகிறேன், ஆர்வமுள்ளவர் கட்டாயம் அதைத் தேடியடைவார் என்றும் ஒரு பிரிவினர் இருப்பது உண்மை. அப்படியிருப்பவர்கள் மின்னூடகத்திற்குப் பொதுவிலும், குறிப்பாக வலைப்பதிவுக்கும் வருவதில்லை. இங்கு வந்துவிட்டு அப்படியொரு தோரணையைக் காட்டினால் அவர்கள் நேர்மையைச் சந்தேகிக்க வேண்டியிருக்கும். இது வடிகட்டிய மறுவினை என்ற அடுத்த கேள்விக்கு நகர்கிறது.

வாகரின் முழு அடையாளத்துடன் மின்னஞ்சல் வழியாகத் தன் கருத்தைச் சொல்லட்டுமே என்ற வாதத்தைத் தொடருகிறேன். இப்பொழுதைக்கு தொடர்வண்டியில் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.